'கோலி அதிரடி' – லக்னெளவை அடியோடு சாய்த்த பெங்களூரு, சுலபமாக வெற்றி பெற்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
பெங்களூரு, லக்னெள இடையிலான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் ஆடிய லக்னெள அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய பெங்களூரு அணி 15.1 ஓவர்களில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னெள அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்சேல் மார்ஷ் மற்றும் மார்க்ரம் ஆகியோர் களம் இறங்கினர். நிதானமான தொடக்கத்தை லக்னெள அணி வெளிப்படுத்திய நிலையில், அணியின் ஸ்கோர் 32 ஆக இருந்தபோது, மார்க்ரம் 12 ரன்களுக்கு அவுட் ஆனார்.
இதிலிருந்தே லக்னெள அணியின் சரிவு தொடங்கியது. அடுத்து வந்த நிகோலஸ் பூரன் 7 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
ஆயுஷ் பதோனியுடன் சேர்ந்து மிட்சேல் மார்ஷ் கூட்டணி அமைத்து மெதுவாக ரன்களை சேர்க்க ஆரம்பித்தார். ஆனால் இந்த கூட்டணியை க்ருணால் பாண்ட்யா உடைத்தார். 40 ரன்கள் எடுத்திருந்த மிட்சேல் மார்ஷ் அவரது பந்தில் அவுட் ஆனார்.
அடுத்ததாக அப்துல் சமத் விரைவாக அவுட் ஆனார். பின்னர் முகுல் சௌத்ரியுடன் கூட்டணி சேர்ந்தார் ஆயுஷ் பதோனி. இருவரும் சேர்ந்து 35 ரன்கள் எடுத்த நிலையில், ஆயுஷ் பதோனி 38 ரன்களுக்கு அவுட் ஆனார். அதன் பின்னர் அனைவரும் அடுத்தடுத்து அவுட் ஆனனர்.
தனி ஆளாக போராடிய முகுல் சௌத்ரி, கடைசி ஓவரில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் லக்னெள அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ராஷிக் சலாம் தார் 4 விக்கெட்களையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஜோஷ் ஹேசில்வுட் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.


பட மூலாதாரம், Getty Images
பெங்களூரு ஆட்டம் எப்படி?
அடுத்து ஆடிய பெங்களூரு அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பிலிப் சால்ட் 7 ரன்களில் அவுட் ஆனார். தேவ்தத் படிக்கலுடன் நல்ல கூட்டணி அமைத்தார் கோலி. இருவரும் சேர்ந்து 34 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தனர். இதில் தேவ்தத் படிக்கல் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஒரு பக்கம் கோலி நிலைத்து அதிரடியாக ஆடிய நிலையில், மறுபக்கம் ரஜத் படிதார் ரன்களை வேகமாக ரன் எடுத்தார். ஆனால் கோலி 1 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை காட்டினார். இதற்கிடையில் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஜத் படிதார் அவுட் ஆனார்.
ஆட்டத்தை முடித்து வைப்பார் என கருதப்பட்ட ஜிதேஷ் சர்மா, 9 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
இறுதியாக டிம் டேவிட் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 14 ரன்கள் அடிக்க, பெங்களூரு அணி 15.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































