இரான் துறைமுக முற்றுகை: அமெரிக்கா தப்புக்கணக்கு போடுகிறதா? சாதகமும் சவாலும்

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், பால் ஆடம்ஸ்
- பதவி, வெளியுறவு செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
வளைகுடாவுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்கும் கப்பல்களை முற்றுகையிடும் திறன் அமெரிக்க ராணுவத்திடம் உள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், அதன் இறுதி இலக்கு என்ன என்பதே இங்கு எழும் கேள்வியாகும்.
"இதை செய்ய முடியும் என்றே நான் நினைக்கிறேன்," என ஓய்வுபெற்ற அமெரிக்க கடற்படை உயரதிகாரி மார்க் மாண்ட்கோமெரி பிபிசியிடம் தெரிவித்தார். "மற்ற மாற்றுவழிகளை விட இது நிச்சயமாகக் குறைவான ஆபத்து கொண்டதாகும்."
சமீப வாரங்களில் அதிபர் டிரம்ப் முன்மொழிந்த சில வாய்ப்புகள், அதாவது கார்க் தீவைக் கைப்பற்றுவது அல்லது ஹோர்மூஸ் நீரிணையை கடக்கும் சரக்கு கப்பல் தொகுதிகளுக்கு ராணுவப் பாதுகாப்பு அளிப்பது ஆபத்தானவையாகவும், பெரும் விலையைக் கோரும் சாத்தியம் கொண்டவையாகவும் அமைந்திருக்கும்.
இந்த முயற்சியில் அமெரிக்கப் படைகள், இரானிய ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் அதிவேகப் படகுகளின் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடும். நீரில் கண்ணிவெடிகள் இருப்பதற்கான சாத்தியமும் ஆபத்தை அதிகரிக்கும்.
மாறாக, ஒரு முற்றுகையானது அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஓமன் வளைகுடாவில், கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் பாதுகாப்பாக நிலைத்திருக்கவும், இரானியத் துறைமுகங்களிலிருந்து வெளியேறும் கப்பல்களைக் கண்காணிக்கவும், அவற்றை தேவையானபோது இடைமறிக்கவும் வழிவகுக்கிறது.
"நீரிணையின் மிகக் குறுகிய பகுதியில் இருப்பதைவிட, இதில் ஆபத்து குறைவு," என்று அட்மிரல் மாண்ட்கோமெரி கூறினார்.
சிறப்புப் படைகள் மற்றும் அதிவேக படகுகள் என இத்தகைய நடவடிக்கைக்கு தேவையான அனைத்தும் அமெரிக்க கடற்படையிடம் உள்ளன.
வெனிசுவேலா மற்றும் கியூபாவில் ஏற்படுத்திய சமீபத்திய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அதன் திறனை நிரூபித்துள்ளது. ஜனவரி மாத தொடக்கத்தில் ரஷ்ய எண்ணெய் கப்பலான மேரினெராவை வட அட்லாண்டிக் கடல் பகுதியின் தொலை தூரத்தில் கைப்பற்றியது, இத்தகைய நடவடிக்கையை வேறு எங்கும் செய்ய முடியும் என்பதை காட்டியது.
அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம், "இரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் நுழையும் அல்லது புறப்படும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கு எதிராகவும் பாரபட்சமின்றி இந்த முற்றுகை செயல்படுத்தப்படும்," என்றும் ஆனால் இரானிய துறைமுகங்களை பயன்படுத்தாத கப்பல்கள் தடுத்து நிறுத்தப்படாது என்றும் தெரிவித்தது.
மனிதாபிமான உதவிப்பொருட்கள் அடங்கிய கப்பல்கள் அனுமதிக்கப்படும் என்றும், "ஆனால் அவை பரிசோதனைக்கு உட்பட்டவை," என்றும் அது தெரிவித்துள்ளது.
ஆனால், இது பலனளிக்குமா?

பட மூலாதாரம், Reuters
இதற்கான தர்க்கம் தெளிவாக இருப்பதாக தோன்றுகிறது. இந்த போர் தொடங்கியதிலிருந்து இரான், வளைகுடா வாயிலாக தன்னுடைய சொந்த பெட்ரோலிய வேதிப்பொருட்களை வெற்றிகரமாக தொடர்ந்து ஏற்றுமதி செய்துவருகிறது, மேலும் மற்ற வளைகுடா நாடுகள் தங்களின் ஹைட்ரோகார்பன்களை ஏற்றுமதி செய்வதை தடுத்துக்கொண்டே, பில்லியன்கணக்கான டாலர்கள் வருமானம் ஈட்டியது.
அமெரிக்கா வெற்றிகரமாக இந்த முற்றுகையை செயல்படுத்தி இரானை தடுத்து நிறுத்தினால், இரானிய ஆட்சியின் மிக அவசியமான வருவாயை பறிப்பதுடன், அதன் பொருளாதாரத்தையும் மேலும் பலவீனப்படுத்தக்கூடும்.
அமெரிக்கா தப்புக்கணக்கு போடுகிறதா?
ஆனால் ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மிகப்பெரும் அளவில் எதிர்த்து நிற்கும் திறனை வெளிப்படுத்தியுள்ள இரான், மற்றொரு கடினமான சூழலையும் தன்னால் தாங்கி நிற்க முடியும் என உணரக்கூடும். குறிப்பாக, எந்தவித புதிய முற்றுகையும் எண்ணெய் விலைகளை மேலும் உயர்த்தக்கூடும்.
"இதை சமாளிக்க முடியும் என அவர்கள் நம்புகின்றனர்," என்கிறார் மத்திய கிழக்குக்கான மனிதாபிமான விவகாரங்களுக்கான அமெரிக்க முன்னாள் சிறப்பு தூதர் டேவிட் சேட்டர்ஃபீல்ட் பிபிசியிடம் தெரிவித்தார். மேலும், "எண்ணெய் விலை அதிகரிப்பால் அமெரிக்காவும் பின்விளைவுகளை சந்திக்கும், இதையடுத்து (ஹோர்மூஸ்) நீரிணையை மீண்டும் திறக்க வளைகுடா நாடுகள் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும்." என்றார்.
இரானின் கடினமான உறுதிப்பாட்டை கணக்கில் எடுத்துக்கொள்ள அமெரிக்கா தவறிவிட்டது என்கிறார் அவர். "அவர்கள் வென்றுவிட்டதாக நினைக்கின்றனர்," என்கிறார் அவர். "தங்களுடைய எதிரிகளைவிட நீண்ட காலத்துக்கு தங்களால் வலியை தாங்கி நிற்க முடியும் என இரானியர்கள் நம்புகின்றனர்."
அமெரிக்க முற்றுகையின் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதை பார்ப்பதற்காக கப்பல் போக்குவரத்து நிபுணர்கள் இரானிய துறைமுகங்களிலிருந்து வெளியேறி ஹோர்மூஸ் நீரிணை வழியாக மிகக் குறைந்த அளவில் நகரும் கப்பல்களின் வருகையை கண்காணித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
"அதன் வழியாக பயணிக்கும் கப்பல்களை நான் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்," என கடல்சார் உளவு ஆய்வாளர் மிச்செல் வியெஸ் போக்மேன் கூறுகிறார்.
"நான் கடல் பயணியாக இருந்திருந்தால் மிகவும் கவலையுற்றிருக்கக் கூடும்."
"இரவு டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து சில கப்பல்கள் அப்படியே திரும்பியதை கண்டோம்," என்கிறார் லாய்ட்'ஸ் லிஸ்ட் இணையதளத்தின் முதன்மை ஆசிரியர் ரிச்சர்ட் மீட்.
அவரின் கூற்றுப்படி, பிப்ரவரி மாத இறுதியில் போர் தொடங்கியதிலிருந்து, கடந்த 48 மணி நேரமே ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்தில் மிகவும் பரபரப்பான காலகட்டமாக அமைந்தது; இக்காலகட்டத்தில் சுமார் 30 கண்காணிக்கத்தக்க பயணங்கள் (அதாவது, தங்கள் தானியங்கி அடையாளக் கருவிகளை இயக்கிய நிலையில் பயணித்த கப்பல்கள்) பதிவு செய்யப்பட்டன.
"திரளான கப்பல்கள் அங்கிருந்து வெளியேற முயற்சிப்பது போன்று தோன்றியது," என்கிறார் அவர்.
தற்போதைய சூழலில் செயல்பாடுகள் மிகக் குறைவாகவே இருப்பதால், இரானியத் துறைமுகங்களுக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ பயணிக்கும் கப்பல்களை அமெரிக்கக் கடற்படை இடைமறிப்பதைப் பார்க்க, இன்னும் சிறிது காலம் ஆகலாம் அல்லது அத்தகைய ஒரு நிகழ்வு நடைபெறாமலே கூடப் போகலாம்.

சீனா பற்றிய அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என்ன?
போர் நிறுத்தம் இன்னும் அமலில் இருக்கும் நிலையில், இரானியப் போர் தற்போதைக்கு இரு போட்டி முற்றுகைகளுக்கிடையேயான மோதலாக உருமாறியுள்ளது; இதில் உலகப் பொருளாதாரம் நடுவே சிக்கிக் கொண்டுள்ளது.
இந்த வார இறுதியில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க இரானை சம்மதிக்க வைப்பதில் சீனா ஒரு பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. தனது சமீபத்திய நடவடிக்கை, சீனாவிடம் இருந்து மேலும் அதிக அழுத்தமாக உருவெடுக்கும் என்று வாஷிங்டன் நம்பக்கூடும்.
இரானிய எண்ணெயின் உலகின் மிகப்பெரிய இறக்குமதியாளராக சீனா உள்ளது. பரந்த அளவிலான உத்திசார் இருப்புகளைக் கொண்டுள்ள போதிலும், விநியோகத்தில் ஏற்படும் நீண்டகாலத் தடையைத் தாங்கிக்கொள்ளும் நிலையில் சீனா இல்லை.
டொனால்ட் டிரம்பின் சமீபத்திய நடவடிக்கை ஒரு சூதாட்டம். அதன் விளைவுகள் விரைவில் உணரப்படக் கூடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































