தேனி: தப்பிய கைதி ஆட்டோவில் மீண்டும் சிறைக்கு வந்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, ஆட்டோவில் பயணித்தபோது பிடிபட்ட சிறைக்கைதி
தேனி: தப்பிய கைதி ஆட்டோவில் மீண்டும் சிறைக்கு வந்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகளில் ஐந்தாவது நபரான லிங்க பிரசாத் என்பவர் பிற்பகலில் பிடிபட்டார்.

சிறையில் இருந்து நேற்று இரவு தப்பிய லிங்கபிரசாத், கண்டமனூர் செல்லும் சாலையில் தனது ஆட்டோவில் ஏறியதாக சின்னக்காளை என்பவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், "ஆட்டோவில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருந்தார். கண்டமனூர் சாலை வழியாக சென்றபோது ஒருவர் கை காட்டி ஆட்டோவில் ஏறினார். கானாவிலக்கு அரசு ஆஸ்பத்திரி முன்பாக இறக்கிவிடுமாறு கூறினார்" எனத் தெரிவித்துள்ளார்.

அப்போது தன்னிடம், '300 ரூபாய் பணம் இருந்தால் கொடுங்கள். செல்போனில் போட்டுவிடுகிறேன்' என அந்த நபர் கூறியதாகக் குறிப்பிட்ட சின்னக்காளை, ஆட்டோவுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டதால் பணம் இல்லை எனக் கூறிவிட்டேன்" என்கிறார்.

அப்போது, ஆட்டோவைச் சோதனை செய்வதற்காகக் காவலர் ஒருவர் வழிமறித்துள்ளார். ஆட்டோவில் இருந்தவர் தப்பியோடிய கைதி என்பது தெரியவந்ததும், அதே ஆட்டோவில் அவரைச் சிறைக்குக் காவலர் அழைத்துச் சென்றார். பின்னர், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

விசாரணைக் கைதியான லிங்க பிரசாத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர் மாற்றுத்திறனாளி என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தேனி சிறையிலிருந்து தப்பிய 17 பேரில் மாலை 6 மணி நிலவரப்படி 13 பேர் இதுவரை பிடிக்கப்பட்டுள்ளனர்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு