இந்தியாவில் இந்த ஆற்றில் தங்கம் தேடும் மக்கள் தினசரி எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்?

ஜார்க்கண்டில் தங்க இருப்புக்குப் பெயர் பெற்ற ஒரு நதி பாய்கிறது. அந்த நதியின் பெயர் ஸ்வர்ணரேகா.
படக்குறிப்பு, 20 கிலோமீட்டர் சுற்றளவில் பரவியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஒவ்வொரு காலையிலும் ஆற்றங்கரையில் கூடுகிறார்கள்.
    • எழுதியவர், முகமது சர்தாஜ் ஆலம்
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ஜார்க்கண்டில் தங்கம் கிடைக்கும் ஆற்றுக்குப் பெயர் பெற்ற ஒரு நதி பாய்கிறது. அந்த நதியின் பெயர் ஸ்வர்ணரேகா. தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் அந்த ஆற்றில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

சிலருக்குத் தங்கம் கிடைக்கிறது. ஆனால், ஆயிரக்கணக்கிலோ அல்லது லட்சக்கணக்கிலோ ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு விற்பனை செய்யக்கூடிய தங்கம் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அவர்களின் வருமானம் சில நூறு ரூபாயுடன் நின்றுவிடுகிறது.

ராஞ்சி மாவட்டத்தின் நாக்ரி கிராமத்தில் உள்ள 'ராணி சுவான்' என்ற இடத்தில் உற்பத்தியாகி, வங்காள விரிகுடாவில் கலக்கும் ஸ்வர்ணரேகா நதி, சுமார் 474 கிலோமீட்டர் தூரம் பாய்கிறது.

உண்மையில், இந்த நதியின் ஒரு பகுதியில் மட்டுமே தங்கத் துகள்கள் கிடைப்பதாக அறியப்படுகிறது. ஜாம்ஷெட்பூர் நகரிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில், அண்டை மாவட்டமான செராய்கேலா-கர்சவான் மாவட்டத்தின் சண்டில் வட்டாரத்தில் ஸ்வர்ணரேகா நதிக்கரையோரம் இந்தப் பகுதி அமைந்துள்ளது.

இந்த நதியின் கரையோரத்தில் பல இடங்களில், ஆற்றில் அடித்துவரப்பட்ட மணல் மற்றும் சேற்றிலிருந்து தங்கத் துகள்களைப் பிரித்தெடுத்து, கிராம மக்கள் பல ஆண்டுகளாகத் தங்களது வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர்.

அத்தகைய இடங்களில் ஒன்று தான் கௌரி கிராமம்.

இங்கு, 20 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், தினமும் காலையில் நதிக்கரையில் கூடுகின்றனர்.

உள்ளூர் சமூக ஆர்வலர் துகு மஹாலி கூறுகையில், "சுமார் ஐநூறு கிராம மக்களுக்கு இந்தத் தங்கத் துகள்கள் தான் வாழ்வாதாரமாக உள்ளன" என்றார்.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில், மக்களில் ஒரு பிரிவினர் காய்கறி விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர்.

ஆனால், நிலம் இல்லாதவர்கள் வேறு வேலைவாய்ப்புகள் கிடைக்காதபோது, இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

இந்தத் தங்கத் துகள்களின் பளபளப்பிற்குப் பின்னால், கடுமையான உடல் உழைப்பு மற்றும் நிலையற்ற வருமானம் ஆகியவற்றின் நீண்ட, வேதனையான சுழற்சி ஒன்று மறைந்துள்ளது என்று துக்கு மஹாலி கூறுகிறார்.

தங்கம் தேடும் கிராமவாசிகளின் அனுபவம்

இந்தத் தங்கத் துகள்களின் பளபளப்பிற்குப் பின்னால், கடுமையான உடல் உழைப்பு மற்றும் நிலையற்ற வருமானம் ஆகியவற்றின் நீண்ட, வேதனையான சுழற்சி ஒன்று மறைந்துள்ளது என்று துக்கு மஹாலி கூறுகிறார்.
படக்குறிப்பு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் தங்க இருப்புக்குப் பெயர் பெற்ற ஒரு நதி உள்ளது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தங்கம் எடுக்கும் இந்த வேலை பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், உண்மையில் இது மிகவும் கடினமானது.

சுட்டெரிக்கும் வெயிலில், ஆற்றங்கரையில் உள்ள குழிகளில் பல மணி நேரம் முழங்காலிட்டு அமர்ந்து, மண்ணை சலிப்பது உடலை மிகவும் சோர்வடையச் செய்யும்.

புடிசிலி கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான தங்கி சர்தார், பல ஆண்டுகளாக இந்த வேலையைச் செய்து வருகிறார்.

நாங்கள் அவரைச் சந்தித்தபோது, ​​நாவல் மரத்தால் செய்யப்பட்ட ஆழமான கிண்ண வடிவ அச்சில் மண்ணிலிருந்து தங்கத் துகள்களைப் பிரித்தெடுக்கும் கடினமான பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

தங்கி சர்தார் கூறுகையில், "நாங்கள் மண்ணைத் தோண்டி எடுத்து, இந்தக் கிண்ணம் போன்ற அச்சில் போட்டு, அதைச் சிறிது அசைத்தால், இறுதியில் சிறிது தங்கம் கிடைக்கும்" என்றார்.

இந்தப் பாத்திரம், நடுப்பகுதியில் சற்று ஆழமாக இருக்கும் செவ்வக வடிவிலான மர அச்சைக் கொண்டுள்ளது. தண்ணீரைப் பாய்ச்சி, மண்ணைக் கலக்கும்போது, எடை குறைந்த மண்ணும் மணலும் அடித்துச் செல்லப்படுகின்றன. அதேவேளையில், அதிக எடையுள்ள தங்கம் பாத்திரத்தின் அடிப்பகுதியில் தங்கிவிடுகிறது.

ஒரு நாள் முழுவதும் கடுமையாக உழைத்துவிட்டு, மாலையில் இந்தக் கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும்போது, அவர்களது உடலின் ஒவ்வொரு பகுதியும் வலியால் துடிக்கிறது.

தங்கி சர்தார் மேலும் கூறுகையில், "கால்கள், முதுகு மற்றும் கைகளில் அதிக வலி ஏற்படுகிறது. மருந்து எடுத்துக்கொண்ட பிறகுதான் வலி குறைகிறது" என்றார்.

இந்தப் பகுதியில் தங்கத் துகள்கள் காணப்படுவதற்கான காரணம் என்ன?

தங்கி சர்தார் மேலும் கூறுகையில், "கால்கள், முதுகு மற்றும் கைகளில் அதிக வலி ஏற்படுகிறது. மருந்து எடுத்துக்கொண்ட பிறகுதான் வலி குறைகிறது" என்றார்.
படக்குறிப்பு, மண்ணைத் தோண்டி எடுத்து, கிண்ணம் போன்ற இந்த அச்சில் இட்டு, லேசாகக் குலுக்கும்போது, ​​இறுதியில் தங்கம் வெளிப்படுகிறது.

இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள, பிபிசி நியூஸ் ஹிந்தி, செராய்கேலா-கர்சவான் மாவட்டத்தின் சுரங்கத் துறை அதிகாரியான ஜோதி சங்கர் சத்பதியிடம் பேசியது.

அதுகுறித்து அவர் கூறுகையில், "ஸ்வர்ணரேகா நதி தமர் பகுதி வழியாகப் பாயும்போது, சிறிய அளவிலான தங்கத்தைக் கொண்ட பல பாறைகள் உள்ளன. இந்தப் பாறைகளிலிருந்து அரிக்கப்பட்டு வெளியேறும் மண்ணும் வண்டல் படிவங்களும் நீரோட்டத்துடன் அடித்துச் செல்லப்பட்டு, ஆற்றங்கரையின் பல இடங்களில் படிந்துவிடுகின்றன. இது 'பிளேசர் படிவு' என்று அழைக்கப்படுகிறது" என்றார்.

கௌரி கிராமத்துக்கு அருகே, ஆற்றங்கரையோரமாக சுமார் ஒன்றரை கிலோமீட்டர் பரப்பளவில் இதுபோன்ற பிளேசர் படிவங்கள் காணப்படுகின்றன.

சுரங்கத் துறை அதிகாரி சத்பதியின் கூற்றுப்படி, இங்குள்ள தங்கம் முற்றிலும் தூய்மையான நிலையில் உள்ளது.

அதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தத் தங்கம் ஒருபோதும் வேறு எந்தத் தனிமத்துடனும் இணைந்திருப்பதில்லை. அதனால் தான் இது தூய்மையான நிலையில் கிடைக்கிறது. நீரோட்டத்துடன் அடித்துச் செல்லப்படுவதால், கௌரியை வந்தடையும்போது இதன் அளவு கணிசமாகக் குறைந்துவிடுகிறது" என்றார்.

கடுமையான போராட்டம் மற்றும் நிலையற்ற வருமானம்

ஸ்வர்ணரேகா நதிக்கரையில் தங்கம் தேடும் கிராம மக்களுக்குச் சில நாட்கள் சிறப்பானதாக அமைகின்றன. ஆனால், கடுமையாக உழைத்தும் எதுவும் கிடைக்காமல் போகும் நாட்களும் உள்ளன.

பல மணி நேரம் வியர்வை சிந்தி உழைத்த பிறகும், இறுதியில் ஏதாவது கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

கௌரி கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான முதியவர் போகா கும்ஹார் , தனது வாழ்நாளின் இந்த நீண்ட போராட்டத்தை விவரிக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய அவர், "சில நேரங்களில் தங்கம் கிடைக்கும், சில நேரங்களில் கிடைக்காது. ஆனாலும், நாள் முழுவதும் கடுமையாக உழைக்கிறோம்" என்றார்.

சில தங்கத் துகள்களைப் பிரித்தெடுத்த போகா கும்ஹார் கூறுகையில், "அச்சில் கிடைத்த இந்தத் தங்கத் துகள்களை ஒரு கிண்ணத்தில் தனியாகப் பிரித்தெடுத்துள்ளேன். இன்றைய கடின உழைப்பின் பலன் இதுதான்" என்றார்.

இந்தப் போராட்டம் கௌரி அல்லது புடிசிலி கிராமங்களுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. தொலைதூரக் கிராமங்களில் இருந்தும் மக்கள் பல கிலோமீட்டர் பயணம் செய்து ஆற்றங்கரைக்கு வருகின்றனர்.

சாலியாவா கிராமத்தைச் சேர்ந்த 41 வயதான மில்ஹாட் சிங், இந்த வேலையின் மூலம் தினமும் ஒரு நிலையான வருமானத்தை ஈட்டுவது சாத்தியமில்லை என்று கருதுகிறார்.

கடுமையாக உழைத்துப் பிரித்தெடுத்த தங்கத்தைக் காட்டியபடி மில்ஹாட் சிங் கூறுகையில், "இவ்வாறு பிரித்தெடுத்த தங்கத்தின் மதிப்பு சுமார் 300 ரூபாய். ஆனால், ஒவ்வொரு நாளும் 300 ரூபாய் வருமானம் கிடைக்கும் என்பது உறுதியில்லை" என்றார்.

இந்த தங்கம் எப்படி விற்கப்படுகிறது?

வளங்களின் பற்றாக்குறையும், வருமானத்தில் நிச்சயமற்ற தன்மையும் இருந்தபோதிலும், தங்கம் தேடுவதில் இந்தக் கிராம மக்களிடையே போட்டியோ பரஸ்பரப் பகைமையோ இல்லை.

20 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து தங்கம் எடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் ஒருவருக்கொருவர் மரியாதை அளிப்பதுடன், தங்கத்தைக் கண்டறிவதற்கான முயற்சிகளையும் பகிர்ந்துகொள்கின்றனர்.

அவர்களில் ஒருவரான, சலியாவா கிராமத்தைச் சேர்ந்த 42 வயதான குருபதோ சிங், தங்கச் சுரங்க இடங்களை அவர்கள் எவ்வாறு அடையாளம் காண்கிறார்கள் என்பதை விளக்குகிறார்.

"கிராமவாசிகள் முதலில், நீரோட்டம் கற்களையும் மணலையும் மண்ணுடன் சேர்த்து கரைகளில் படியவைக்கும் இடத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்" என்கிறார் அவர்.

கிராம மக்கள் முதலில் கற்களை அகற்றுகின்றனர். பின்னர், மணல் அடுக்கைத் தோண்டி, அதன் கீழே உள்ள மண் பரப்பைக் கண்டறிகின்றனர்.

தண்ணீருடன் தங்கத் துகள்களைக் கொண்டுவந்து சேர்க்கும் மண் இதுதான்.

அந்த மண்ணைச் சுட்டிக்காட்டியபடி குருபடோ கூறுகையில், "இந்த மண்ணை ஒரு சல்லடையில் போட்டு, தண்ணீரால் மெதுவாகக் கழுவ வேண்டும். இதனால் மண் தண்ணீருடன் அடித்துச் செல்லப்படும். அதே நேரத்தில், தங்கம் சல்லடையின் அடிப்பகுதியில் தங்கிவிடும்" என்றார்.

தண்ணீரின் உதவியுடன் இந்தத் தங்கத் துகள்களை அலுமினியக் கிண்ணத்தில் சேகரிக்கும் கிராம மக்கள், முதலில் அவற்றை வெயிலில் உலர்த்துகின்றனர்.

"கிண்ணத்தில் உள்ள ஈரப்பதம் ஆவியாகிவிடும். தங்கம் மட்டும் எஞ்சியிருக்கும். பின்னர் இந்தத் தங்கத் துகள்களை ஒரு காகிதத்தில் சேமித்து வைப்போம்" என்று போகா கும்ஹார் கூறுகிறார்.

இங்கு அதிக அளவில் தங்கம் கிடைப்பதில்லை என்றும், சில நேரங்களில் பிரித்தெடுக்கப்பட்ட தங்கம் வெறும் 100 அல்லது 200 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுவதாகவும் குருபடோ தெரிவிக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய அவர், "300 ரூபாய் அல்லது அதற்கு மேல் கிடைப்பது மிகவும் அரிது" என்றார்.

இங்கு பிரித்தெடுக்கப்படும் தங்கத் துகள்களை விற்பனை செய்யும் முறையும் வித்தியாசமானது என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து விரிவாகப் பேசத் தயங்கும் குருபடோ, "இதன் விற்பனை புள்ளிகளின் அடிப்படையில் அமைகிறது. கடைக்காரர்கள் ஒரு புள்ளிக்கு 120 ரூபாய் வழங்குகின்றனர். அதாவது, தங்கத்தின் புள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் கிடைக்கும்" என்றார்.

வருமானம் நிச்சயமில்லை என்றாலும் இந்தப் பணியில் ஈடுபடுவது ஏன்?

இங்கு பிரித்தெடுக்கப்படும் தங்கத் துகள்களை விற்பனை செய்யும் முறையும் வித்தியாசமானது என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.
படக்குறிப்பு, சுமார் ஐநூறு கிராமவாசிகளுக்கு, இந்தத் தங்கத் துகள்களே வாழ்வாதாரமாக உள்ளது.

இந்த வேலையில் ஈடுபடும் கிராம மக்களுக்கு ஒவ்வொரு நாளும் தங்கம் கிடைப்பதில்லை. அப்படியிருக்க, இவ்வளவு நிச்சயமற்ற ஒரு வேலையில் ஏன் அவர்கள் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள்?

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த கிராமவாசி ரோஹின் சிங், "இங்கு வேலைவாய்ப்புகள் எதுவும் இல்லை. எனவே, இந்தத் திறமை இருக்கும்போது வீட்டில் உட்கார்ந்திருப்பதால் என்ன பயன்? இங்கு வந்து 200-300 ரூபாய் சம்பாதிக்க முடிந்தால், வீட்டில் உட்கார்ந்திருப்பதைவிட அது மேல்" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "இந்தச் சிறிய வருமானம், கிராம மக்களின் எண்ணெய், சோப்பு, ரேஷன் பொருட்கள் மற்றும் தண்ணீருக்கான செலவுகளைச் சமாளிக்க உதவுகிறது" என்றார்.

தங்கம் எடுப்பவர்களில் வயதான பெண்களும் ஆண்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

ரோஹின் சிங் கூறுகையில், "60 வயதானவர்கள் தொலைதூர நகரங்களுக்குச் சென்று ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்ய முடியாது. உயிர்வாழ்வதற்கு அவர்களுக்கு ஏதாவது ஒரு வாழ்வாதாரம் தேவை. அதற்காகத் தங்கள் மகன்களையும் மகள்களையும் சார்ந்திருக்க முடியாது;

அவர்களுக்கென்று சொந்தக் குடும்பங்கள் உள்ளன. எனவே, உடல் ஒத்துழைக்கும் வரை அவர்கள் தொடர்ந்து வேலை செய்வார்கள்" என்றார்.

எழுத்தறிவின்மை மற்றும் வேலையின்மை போன்ற காரணங்கள்

ஆனால், கௌரி கிராமத்தைச் சேர்ந்த 51 வயதான சமூக ஆர்வலர் துகு மஹாலி, இப்பகுதியில் வேலைவாய்ப்பும் கல்வியும் இல்லாததே கிராம மக்களை இந்தக் கடினமான போராட்டத்தை நோக்கித் தள்ளுவதாகக் கருதுகிறார்.

"இது ஒரு கிராமப்புறப் பகுதி. யாருக்கும் வேலைவாய்ப்பு இல்லை; மக்களிடையே கல்வியறிவும் பெரிதாக இல்லை. அதனால்தான் கிராம மக்கள் தங்கம் தேடித் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுகின்றனர்" என்று துகு மஹாலி கூறுகிறார்.

உண்மையில், மழைக்காலத்தைத் தவிர்த்து, ஆண்டின் எஞ்சிய மாதங்களில் இந்த வேலைதான் வயதானவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புக்கான ஒரே ஆதாரமாக மாறுகிறது.

நிர்வாகம் என்ன கூறியது?

வங்காள விரிகுடாவில் பாயும் ஸ்வர்ணரேகா நதி
படக்குறிப்பு, வங்காள விரிகுடாவில் பாயும் ஸ்வர்ணரேகா நதி, சுமார் 474 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது.

இங்கு தங்கம் தேடும் பணியில் ஈடுபடுபவர்கள் இதற்காக எங்கும் அனுமதி பெற வேண்டியதில்லை.

இதுகுறித்து அறிந்துகொள்வதற்காக, சண்டில் வட்டார அதிகாரியும் மாஜிஸ்திரேட்டுமான நிதின் சிவம் குப்தாவிடம் பேசினோம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தப் பகுதியில் தங்கம் எடுப்பவர்களுக்கு இடையே ஏதேனும் தகராறு ஏற்பட்டதாக இதுவரை எந்த வழக்கும் பதிவாகவில்லை" என்றார்.

இந்தக் கருத்துடன் உடன்படும் உள்ளூர் மாவட்டச் சுரங்கத் துறை அதிகாரி ஜோதி சங்கர் சத்பதி, இங்கு கிடைக்கும் தங்கத்தின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், அரசால் அதைச் சுரங்கம் அமைத்து வெட்டி எடுப்பது சாத்தியமில்லை என்கிறார்.

"இத்தகைய சூழலில், கிராம மக்கள் இந்தப் பிளேசர் படிவங்களிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுத்தால், அதைத் திருட்டு என்று கூற முடியாது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

வணிக ரீதியான சுரங்கத் தொழிலில் அரசு ஏன் ஈடுபடுவதில்லை?

இந்தக் கருத்துடன் உடன்படும் உள்ளூர் மாவட்டச் சுரங்கத் துறை அதிகாரி ஜோதி சங்கர் சத்பதி, இங்கு கிடைக்கும் தங்கத்தின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், அரசால் அதைச் சுரங்கம் அமைத்து வெட்டி எடுப்பது சாத்தியமில்லை என்கிறார்.
படக்குறிப்பு, இந்தத் தங்கச் சுரங்க வேலை பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், உண்மையில் இது மிகவும் பதற்றமூட்டும் ஒரு வேலையாகும்.

ஸ்வர்ணரேகா நதியையும் அதன் துணை நதிகளையும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் நந்திதா நாக், ஜாம்ஷெட்பூர் கூட்டுறவுக் கல்லூரியின் நிலவியல் துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.

தங்கம் இருக்கும்போது, ஏன் அதை வணிக ரீதியாகச் சுரங்கம் அமைத்து எடுப்பதில்லை என்று அவரிடம் கேட்கப்பட்டது.

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அவர், "இங்கு தங்கம் எடுப்பதற்கெனத் தனிப்பட்ட சுரங்கம் எதுவும் இல்லை. இங்கு இருக்கும் தங்கத்தின் அளவுகூட மிகவும் குறைவாக இருப்பதால், அதைச் சுரங்கம் அமைத்து எடுப்பதன் மூலம் அரசுக்கு இழப்புதான் ஏற்படும். அதனால் தான் அரசு இதில் கவனம் செலுத்துவதில்லை" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "கிராம மக்களுக்குக் கிடைக்கும் தங்கத்தின் அளவு எவ்வளவாக இருந்தாலும், அவர்கள் அதில் திருப்தியடைகிறார்கள். அதனால்தான் அவர்கள் தங்கத்தைப் பிரித்தெடுக்கின்றனர்" என்றார்.

இந்த நதி அதிக அளவில் தங்கத்தைத் தராமல் இருக்கலாம். கிராம மக்கள் மணிக்கணக்கில் கடுமையாக உழைத்தும் சில நேரங்களில் எதுவும் கிடைக்காமல் போகலாம்.

ஆனாலும், இந்த முறை கடுமையாக உழைத்தால் சில தங்கத் துகள்கள் கிடைக்கலாம் என்று இந்த நதி மக்களிடம் மீண்டும் மீண்டும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதன் மூலம் எண்ணெய், சோப்பு மற்றும் ரேஷன் பொருட்களுக்கான செலவுகளையாவது சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையை அது அவர்களுக்குத் தருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு