உலகப் புகழ்பெற்ற பந்தய குதிரையை கடத்திய ஆயுத கும்பல் - 43 ஆண்டுகளாக தீராத மர்மம்

பட மூலாதாரம், Alamy
- எழுதியவர், கிரெக் ஹோக்விட்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மதிப்புமிக்க ஆண் குதிரையாக ஷெர்கார் திகழ்ந்தது.
1983-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி அன்று, அயர்லாந்தின் குதிரை வளர்ப்புப் பண்ணையிலிருந்து ஆயுதம் ஏந்திய நபர்கள் அந்தக் குதிரையைக் கடத்திச் சென்றபோது, பிபிசி ஒரு பரபரப்பான குற்றச் சம்பவத்தைப் பற்றி செய்தி வெளியிட்டது.
ஒரு குளிர்கால இரவில் ஷெர்கார் என்ற அந்தப் பரிசு பெற்ற ஆண் குதிரை, அயர்லாந்தில் உள்ள ஒரு குதிரை வளர்ப்புப் பண்ணையிலிருந்து திருடப்பட்டது.
"குதிரைப் பந்தய உலகில் அவ்வப்போது ஊக்கமருந்து அல்லது போட்டி முறைகேடு போன்ற சர்ச்சைகள் ஏற்படுவது புதிதல்ல. ஆனால், இது முற்றிலும் வேறுபட்ட சம்பவம்" என்று கூறிய பிபிசியின் நிக்கோலஸ் விட்செல், "ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று குதிரையை கடத்தி சென்றது " என்றார்.
அப்போது, விளையாட்டு உலகில் அபார சாதனைகளை நிகழ்த்தியிருந்த ஷெர்கார், இனப்பெருக்கக் குதிரையாக தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருந்தது.
ஓர் ஆண் குதிரை எவ்வளவு அதிக வெற்றிகளைப் பெற்றிருக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் இனப்பெருக்கச் சேவைக்கான விலையும் அதிகமாக இருக்கும்.
1981-ஆம் ஆண்டின் எப்சம் டெர்பி போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக ஷெர்காருக்கான தேவை அதிகமாக இருந்தது.
அப்போட்டியின் 246 ஆண்டுகால வரலாற்றில், மிகச்சிறந்த தருணங்களில் ஒன்றாக அது இன்றும் கருதப்படுகிறது.
அந்தப் பந்தயத்தில், மற்ற குதிரைகளை விட சாதனை அளவான 10 லென்த்ஸ் முன்னிலையில் ஷெர்கர் வெற்றியை நோக்கிப் பாய்ந்தபோது, பிபிசி வர்ணனையாளர் பீட்டர் புரோம்லி ஆச்சரியத்துடன், "அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்கிறது. மற்றவற்றைப் பார்க்க உங்களுக்குத் தொலைநோக்கி தேவை"என விவரித்தார்.
ஷெர்கர் அணிந்திருந்த மரகதப் பச்சை நிற உடையும், சிவப்பு தோள்பட்டைகளும், அதன் உரிமையாளரான கோடீஸ்வர ஆன்மிகத் தலைவரும் குதிரைப் பந்தய ஆர்வலருமான ஆகா கானின் அதிகாரப்பூர்வ பந்தய நிறங்களாகும்.
2011-ஆம் ஆண்டு பிபிசியிடம் பேசிய ஆகா கான், ஷெர்கரின் அந்த மறக்க முடியாத வெற்றி இன்னும் தனது நினைவில் பசுமையாக இருப்பதாகக் கூறினார்.
"என்னை மிகவும் வியக்க வைத்த இரண்டு விஷயங்கள் இருந்தன. ஒன்று, அந்தக் குதிரை மிக எளிதாக ஓடிய விதம். மற்றொன்று, இறுதிக் கட்டத்தில் அது தொடர்ந்து முன்னேறிக்கொண்டே போனது. மற்ற குதிரைகளிடம் இருந்து மேலும் மேலும் விலகிச் சென்றது. அது உண்மையிலேயே அசாதாரணமானது."
ஐரிஷ் டெர்பி மற்றும் கிங் ஜார்ஜ் VI சேஸ் ஆகிய போட்டிகளில் அடுத்தடுத்து பெற்ற வெற்றிகள், ஷெர்காரின் உலகளாவிய பந்தய சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தை உறுதிப்படுத்தின.
அந்த அற்புதமான பந்தயப் பருவத்திற்குப் பிறகு, ஷெர்கர் இனப்பெருக்கக் குதிரையாக தனது புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக அயர்லாந்து அனுப்பப்பட்டது.
வேகமாக வளர்ந்து கொண்டிருந்த அயர்லாந்தின் உயர்தர குதிரை வளர்ப்புத் துறைக்கு இது ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.
உலகின் மிக உயர்ந்த மதிப்புடைய இனப்பெருக்கக் குதிரையாக இருந்த ஷெர்கர், 1982-ஆம் ஆண்டில் 44 பெண் குதிரைகளுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டது. ஒவ்வொரு முறைக்கும் 80,000 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
1983-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அயர்லாந்தின் கில்டேர் கவுண்டியில் உள்ள ஆகா கானின் பாலிமேனி ஸ்டட் பண்ணையில் ஷெர்கரின் இரண்டாவது பருவத்திற்கான அனைத்து முன்பதிவுகளும் நிரம்பிவிட்டன

பட மூலாதாரம், Getty Images
ஆனால், 1983 பிப்ரவரி 8-ஆம் தேதி, கைத்துப்பாக்கிகளுடன் வந்த முகமூடி அணிந்த கடத்தல்காரர்கள் அந்தப் பண்ணைக்குள் புகுந்தனர்.
இவ்வளவு மதிப்பு மிக்க சொத்தான அந்த குதிரைக்கு, மிகக் குறைவாகவே பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
தலைமைப் பராமரிப்பாளர் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்டின் குடும்பத்தினர் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டனர், அதே நேரத்தில் ஷெர்காரை ஒரு டிரெய்லரில் ஏற்றுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.
ஃபிட்ஸ்ஜெரால்டை தனியாக மற்றொரு வேனில் ஏற்றி, சில மணி நேரம் பல இடங்களுக்கு சுற்றிக்கொண்டு சென்றனர்.
சுமார் 40 மைல் தொலைவில் அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பு, கடத்தல்காரர்கள் அவருக்கு "கிங் நெப்டியூன்" என்ற கடவுச்சொல்லைக் கொடுத்தனர்.
பின்னர் மீட்புத் தொகை கோரும் பேச்சுவார்த்தைகளில், தாங்களே உண்மையான கடத்தல்காரர்கள் என்பதை நிரூபிக்க அந்தக் கடவுச்சொல்லைப் பயன்படுத்துவதாக அவர்கள் கூறினர்.
மேலும், நடந்த சம்பவத்தை உடனடியாக யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று அவர்கள் அச்சுறுத்தியதால், அவர் பல மணி நேரம் கழித்தே தகவல் அளித்தார்
அதன் காரணமாக ஏற்பட்ட குழப்பத்தில், பல அவசர தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
விசித்திரமாக, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே, அயர்லாந்து அமைச்சரவையின் இரண்டு அமைச்சர்களுக்கு இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து தெரியவந்திருந்தது.
அதற்குள், ஆரம்பகட்டத்தில் ஏற்பட்ட முக்கியமான தாமதம் காரணமாக, கடத்தல்காரர்களின் தடயங்கள் மறைந்துவிட்டன.
இந்த விசாரணையின் பொதுமுகமாக காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் மர்ஃபி செயல்பட்டார்.
ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளிப்படையாகக் கூறிய ஒரு பதில் மிகவும் பிரபலமானது:
"தடயமா? அது எங்களிடம் இல்லாத ஒன்றுதான்."எனக் கூறினார்.
இயந்திரத் துப்பாக்கிகளுடன் வந்த முகமூடி அணிந்த நபர்கள்
கடத்தலுக்கான காரணங்களைப் பற்றிய ஊகங்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தன.
பிபிசி பந்தயச் செய்தியாளர் ஜூலியன் வில்சன், 'ஸ்போர்ட்ஸ்நைட்' நிகழ்ச்சியின் டெஸ் லைனமிடம் இதுகுறித்து கூறுகையில், " குதிரையைத் திருடுபவர்கள் யாராக இருந்தாலும், ஷெர்காரை தங்கள் பெண் குதிரையுடன் இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். ஆனால் இப்போது குதிரைக் குட்டிகளை அடையாளம் காணும் முறையும், ரத்தப் பரிசோதனை முறையும் மிகவும் துல்லியமாக இருப்பதால், ஷெர்காரின் சட்டவிரோத குட்டிக் குதிரையை அயர்லாந்து குதிரைப் பந்தய உலகில் யாருக்கும் தெரியாமல் சேர்ப்பது மிகவும் கடினம் " என்றார்.
மற்றொரு நம்ப முடியாத வதந்தி என்னவென்றால், ஐ.ஆர்.ஏ அமைப்பிற்கு ஆயுதங்கள் பெறுவதற்கு, இந்தக் குதிரை அயர்லாந்திலிருந்து லிபியாவின் கர்னல் கடாஃபிக்குக் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
அந்தக் காலத்தில், நிதி நெருக்கடியில் இருந்த ஐ.ஆர்.ஏ, தனது ஆயுதப் போராட்டத்திற்கான நிதியை திரட்ட மனிதர்களைக் கடத்தி மீட்புத் தொகை வசூலித்த சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததால், முதன்மை சந்தேக நபர்களாகக் கருதப்பட்டது.
ஆனால் பின்னர், கடத்தலின் நோக்கம் வெறும் பணம் என்பதே தெரியவந்தது..
ஷெர்கார் கடத்தப்பட்டு 24 மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில், கடத்தல்காரர்கள் 2 மில்லியன் பவுண்டுகள் (இன்றைய மதிப்பில் 7 மில்லியன் பவுண்டுகள்) மீட்புத் தொகையைக் கோரி, 'கிங் நெப்டியூன்' குறியீட்டைப் பயன்படுத்தி பாலிமேனி பண்ணையைத் தொடர்புகொண்டனர்.
பணத்தைக் கொடுக்க வேண்டுமா என்பதில் பங்குதாரர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தது. அமெரிக்கப் பயிற்சியாளர் பிரையன் ஸ்வீனி பணத்தைக் கொடுப்பதற்கு ஆதரவாக இருந்தார்.
அதுகுறித்து அவர் பிபிசியிடம், "குழந்தையைக் பறிகொடுத்த ஒரு தாயிடம் மீட்புத் தொகை கொடுக்கப்பட வேண்டுமா இல்லையா என்று கேட்டால், ஆம், விரைவாகக் கொடுக்க வேண்டும் என்றுதான் பதில் வரும் என நினைக்கிறேன்" என்றார்.
ஆனால், புகழ்பெற்ற டெர்பி பந்தயத்திற்கு பெயர் தந்த ஆங்கில பிரபுவின் வாரிசான லார்டு டெர்பி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
"மீட்புத் தொகை வழங்கப்பட்டால், எதிர்காலத்தில் மேலும் பல குதிரைகள் கடத்தப்படும் அபாயம் உள்ளது. அதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது." என்றார்.
ஷெர்கரைத் தேடும் முயற்சி, கடத்தல் நடந்த மறுநாளில் எதிர்பாராத திருப்பத்தை எடுத்தது.
ஷெர்கர் கடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 130 மைல் வடக்கே உள்ள பெல்ஃபாஸ்டில் இருக்கும் பிபிசி செய்தியகத்திற்கு ஒரு மர்மத் தொலைபேசி அழைப்பு வந்தது.
அந்த அடையாளம் தெரியாத நபர், பிரிட்டனின் மூன்று பிரபல குதிரைப் பந்தய பத்திரிகையாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
அடுத்த நாள் மாலைக்குள், அவர்கள் வட அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் உள்ள யூரோபா ஹோட்டலுக்கு வர வேண்டும் என்றும் கூறப்பட்டது. வட அயர்லாந்து மோதல்கள் காலத்தில், உலகிலேயே அதிக முறை குண்டுவெடிப்புக்கு இலக்கான ஹோட்டலாக யூரோபா ஹோட்டல் அறியப்பட்டது.
அங்கு சென்றவர்களில் ஒருவராக இருந்தவர் ஐடிவி குதிரைப் பந்தய நிகழ்ச்சி தொகுப்பாளர் டெரெக் தாம்சன்.
2013இல் பிபிசியின் 'விட்னஸ் ஹிஸ்டரி' நிகழ்ச்சியில் அவர், தங்களது வருகைக்குப் பிறகு உடனடியாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகக் கூறினார். அது கடத்தல்காரர்களிடம் இருந்து வந்ததாகக் கூறப்பட்டது.
பெல்ஃபாஸ்டிற்கு வெளியே சுமார் 30 மைல் தொலைவில் உள்ள டவுன்பாட்ரிக் அருகே அமைந்துள்ள, பந்தயக் குதிரை வளர்ப்பாளரான ஜெரெமி மேக்ஸ்வெல்லின் தனிமைப்படுத்தப்பட்ட பண்ணை வீட்டுக்குச் செல்லும்படி அவர்களுக்கு வழிகாட்டப்பட்டது.
செல்லும் வழியில் கிராமப்புறப் பகுதியில், இயந்திரத் துப்பாக்கிகளை ஏந்திய ஐந்து முகமூடி அணிந்த நபர்கள் அவர்களின் காரை மறித்தனர்.
தாம்சன் தனது காரின் கண்ணாடியை இறக்கியபோது, அவர்களில் ஒருவர் அவர் டெரெக் தாம்சனா என்று கேட்டதாகக் கூறினார்.
"நான் அவரைப் பார்த்து, 'ஆம்' என்றேன். அதற்கு அவர், 'நாங்கள் காவல்துறை' என்றார். அதற்கு நான், ' கடவுளுக்கு நன்றி' என்று பதிலளித்தேன்"என்றார்.
அடுத்த எட்டு மணிநேரத்தில், காவல்துறை அந்த அழைப்புகளைக் கண்காணிக்க முயன்ற வேளையில், தாம்சன் மேலும் 10 முதல் 12 தொலைபேசி அழைப்புகளைப் பெற்றார்.
ஒவ்வொரு அழைப்பும் வெவ்வேறு கடவுச்சொல்லுடன் தொடங்கியது.

பட மூலாதாரம், Getty Images
கடத்தல்காரர்களின் ஆரம்பக் கோரிக்கையான 40,000 பவுண்டு மற்றும் ஷெர்கார் உயிருடன் உள்ளது என்பதற்கான புகைப்பட ஆதாரத்தைக் கோரிய தாம்சனின் கோரிக்கை ஆகியவற்றைத் தாண்டி பேச்சுவார்த்தை நகரவே இல்லை.
பல மணிநேர அமைதிக்குப் பிறகு, அடுத்த நாள் காலை 06:55 மணிக்கு கடைசி அழைப்பு வந்தது.
"குதிரைக்கு ஒரு விபத்து நேர்ந்துவிட்டது. அது இறந்துவிட்டது" என்று கூறிவிட்டு, அழைத்தவர் இணைப்பைத் துண்டித்தார்.
2018 ஆம் ஆண்டு வெளியான 'சர்ச்சிங் ஃபார் ஷெர்கார்' என்ற பிபிசி ஆவணப்படத்தின்படி, இந்த தொலைபேசி அழைப்புகள் வேறொரு இடத்தில் நடந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தைகளை மறைப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட போலி நாடகமாகக் கருதப்பட்டன.
உண்மையான கடத்தல்காரர்கள் ஆகா கானின் அலுவலகத்துடன் நேரடியாகத் தொடர்பில் இருந்தனர், ஆனால் பேச்சுவார்த்தைகள் எந்த முன்னேற்றமும் இன்றி முடங்கிக் கிடந்தன.
காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட ஒரு அழைப்பில் பேசியிருந்த ஒரு நபர், "இன்று இரவு ஒன்பது மணிக்கு இந்தத் தொலைபேசி எண்ணுக்குப் பதிலளிக்கவில்லை என்றால், நீங்கள் குதிரையை மறந்துவிடலாம். அதை இனி நீங்கள் பார்க்கவே முடியாது" என்று கூறுகிறார்.
கடத்தப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, மீட்புத் தொகைக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், "அவ்வளவு தான்"எனக் கூறி ஒரு பயமுறுத்தும் செய்தி வந்தது.
ஷெர்காரைத் தொடர்ந்து காவல்துறை தேடிக்கொண்டிருந்த நிலையில், பொதுமக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய பத்திரிகையாளர்களுக்கு இந்தக் கதையில் புதிய கோணங்கள் தேவைப்பட்டன.
தலைமை கண்காணிப்பாளர் மர்பியும் செய்திகளை வழங்கிக்கொண்டே இருந்தார்.
அந்த நேரத்தில் பிபிசியின் அயர்லாந்து செய்தியாளராக இருந்த நிக்கோலஸ் விட்செல், 2018 ஆவணப்படத்தில் இதுகுறித்து கூறுகையில், "கண்காணிப்பாளர் மர்பி ஒரு மகிழ்ச்சியான மனிதராக மாறினார். தினமும் காலையில் தனது டிரில்பி தொப்பியை அணிந்துகொண்டு வருவார், எதுவும் பேச மாட்டார், ஆனால் அதை ஒரு வசீகரமான மற்றும் மகிழ்ச்சியான வழியில் செய்வார். மேலும் எந்தவொரு குறிப்பிட்ட தகவலும் இல்லாத நிலையில், இதைக் குறித்து எவ்வாறு செய்தி சேகரிப்பது என்பது பற்றி நாங்கள் எங்கள் கற்பனையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்" என்றார்.
ஷெர்கர் காணாமல் போய் ஒரு வாரம் ஆனபோது, மர்ஃபி செய்தியாளர்களிடம் நகைச்சுவையாக, "எனக்கு உதவ முன்வருபவர்கள் பெரும்பாலும் ஜோதிடர்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் மனவள சக்தி கொண்டவர்கள் தான். இப்போது அவர்களின் எண்ணிக்கை 50-ஐத் தாண்டியிருக்கும்." என்று கூறினார்.
இந்த வழியைப் பின்பற்றி, விட்செல் மேற்கே உள்ள கவுண்டி கால்வேக்குச் சென்றார்.
அங்கு, பாழடைந்த ஒரு மடாலயத்தில் ஷெர்காரின் தரிசனம் கிடைத்ததாக ஆவிகளுடன் தொடர்புகொள்ள முடியும் என்று கூறும் நபர்களானபாப் மற்றும் எய்லீன் ஐசன் கூறினர்.
அவர்கள் குறிப்பிட்ட கிராமப்புறப் பகுதிக்குச் சென்ற விட்செல், அங்கு உண்மையிலேயே ஒரு பாழடைந்த மடாலயத்தைக் கண்டார்.
ஆனால், "அங்கே குதிரைக்கான எந்தச் சுவடும் இல்லை." என்று பின்னர் குறிப்பிட்டார்.
காலப்போக்கில், ஷெர்கரின் இருப்பிடம் உலகின் புகழ்பெற்ற தீர்க்கப்படாத மர்மங்களில் ஒன்றாக மாறியது.
இந்தச் சம்பவம் மர்மத்திற்கும், இருண்ட நகைச்சுவைக்கும் ஒரு ஆதாரமாக மாறியது.
முன்னாள் ஐ.ஆர்.ஏ உறுப்பினரும் பின்னர் தகவல் அளிப்பவருமாக மாறிய ஷான் ஓ'கலகான் தனது சுயசரிதையில், குதிரையைக் கையாள முடியாமல் போனதால், கடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே கடத்தல்காரர்களால் அது கொல்லப்பட்டதாக எழுதியிருந்தார்.
ஆனால் ஷெர்கார் கடத்தப்பட்ட வழக்கில் இதுவரை யாரும் குற்றவாளியாக நிரூபிக்கப்படவில்லை. இந்த வழக்கு இன்றுவரை முடித்துவைக்கப்படாமல், தீர்க்கப்படாமலேயே உள்ளது.
கடத்தப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, ஆகா கான் தனது அன்பிற்குரிய குதிரையின் நினைவாக தனது புதிய அதிவேக சொகுசுப் படகுக்கு ஷெர்கார் என்று பெயரிட்டார்.
டெர்பி போட்டியில் ஷெர்கார் அசாதாரணமாக வெற்றி பெற்றிருந்தது. அந்தக் காணொளியை நூற்றுக்கணக்கான முறை பார்த்ததாக பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கூறினார்.
"அது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவு"என்றும் ஆகா கான் பகிர்ந்து கொண்டார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































