You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மகள் முகம் காண விரும்பினேன்': ஹோர்மூஸில் தாக்கப்பட்ட கப்பலில் தமிழக பொறியாளரின் திகில் அனுபவம்
"கப்பல் மீது தாக்குதல் நடந்த நிமிடங்களில் மகளின் முகத்தைப் பார்க்கவே விரும்பினேன். வீடியோ காலில் பேசிய பிறகே எதையும் எதிர்கொள்ளும் மனநிலை வந்தது," எனக் கூறுகிறார், காஞ்சிபுரத்தில் வசிக்கும் சசிகுமார்.
மார்ச் 5 ஆம் தேதி ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து இரான் - இராக் நடுவில் நங்கூரமிட்டிருந்த வர்த்தக கப்பல் மீது ஆளில்லா படகு ஒன்று நடத்திய தாக்குதல் குறித்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"கப்பலில் இருந்த 22 மாலுமிகளின் உயிருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், கப்பல் பெரும் சேதத்தை எதிர்கொண்டது." என்கிறார் சசிகுமார்.
இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரைத் தொடர்ந்து, இரான் படைகள் வளைகுடா முழுவதுமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. உலகின் முக்கிய கடல் வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணையை இரான் மூடியது.
நீரிணை மூடப்படுவதாக அறிவிப்பு வெளியான ஓரிரு நாட்களில் பஹாமாஸ் தீவைச் சேர்ந்த வர்த்தக கப்பல் ஒன்று தாக்குதலுக்கு இலக்கானது. இந்தக் கப்பலில் பயணித்த இந்திய மாலுமி பிபிசி தமிழிடம் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
உயிர் தப்பிய 22 மாலுமிகள்
மார்ச் 5-ஆம் தேதி நள்ளிரவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த 22 மாலுமிகளும் உயிர் தப்பினர். இவர்களில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சசிகுமாரும் ஒருவர்.
"கப்பலுக்கு அதிக சேதம் ஏற்பட்டதால் அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டோம். இந்தப் பணிகள் நிறைவடைய இரண்டு மாதங்கள் தேவைப்பட்டன," எனக் கூறுகிறார் சசிகுமார்.
"கோவையில் மரைன் பொறியியல் படித்த பிறகு ஜப்பானிய நிறுவனம் ஒன்றில் சுமார் பத்தாண்டுகள் பணிபுரிந்தேன். தற்போது பஹாமாஸ் தீவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கூடுதல் தலைமைப் பொறியாளராக வேலை பார்த்து வருகிறேன்," என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
"இராக்கில் கச்சா எண்ணெயை ஏற்றுவதற்காக கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து சென்றுவிட்டோம். கச்சா எண்ணெயை ஏற்றுவதற்கான அனுமதி கிடைப்பதற்காக கடலில் காத்திருந்தோம்," என்கிறார் அவர்.
சசிகுமாரின் கூற்றுப்படி, வளைகுடாவின் உள்ளே இவர்களின் கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. இராக்கிலிருந்து 20 கி.மீ தொலைவில் தங்கள் கப்பல் இருந்ததாக அவர் கூறினார்.
"போர் அறிவிக்கப்பட்டதால் மாலுமிகளின் குடும்பத்தினரை தொடர்பு கொள்வதற்கு வசதியாக வாட்ஸ்ஆப் குழு (Office operational centre) ஒன்று அமைக்கப்பட்டது," என்கிறார் சசிகுமார்.
கடந்த மார்ச் 4-ஆம் தேதி இலங்கை தெற்குக் கடற்கரையில் இருந்து சுமார் 25 மைல் தொலைவில் இரான் போர்க்கப்பலான 'ஐஆர்ஐஎஸ் தேனா' மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இந்த ஏவுகணை வீசப்பட்டிருந்தது.
இந்தத் தாக்குதலில் 104 மாலுமிகள் கொல்லப்பட்டனர். இந்திய அரசால் நடத்தப்பட்ட கூட்டு ராணுவ பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியபோது, 'ஐஆர்ஐஎஸ் தேனா' தாக்கப்பட்டது.
"அதற்கு அடுத்த நாள், அதாவது மார்ச் 5-ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் எங்கள் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நாங்கள் சென்ற கப்பலில் பஹாமாஸ் கொடி கட்டப்பட்டிருந்தது," என்கிறார் சசிகுமார்.
"இரவு நேரத்தில் அதிகாரி (Duty officer) ஒருவர் பணியில் இருப்பார். அப்போது ஆள் இல்லாத படகு ஒன்று எங்கள் கப்பலை நோக்கி வந்தது" எனக் கூறுகிறார்.
'ஆளில்லா படகு மூலம் தாக்குதல்'
தொடர்ந்து பேசும்போது, "கப்பலின் இடதுபுறத்தில் வேறொரு படகில் இருந்த நபர்கள், ஆளில்லா படகைக் கண்காணித்தனர். அந்தப் படகு கப்பலின் மீது மோதி வெடிக்கும் வரை காத்திருந்துவிட்டுச் சென்றனர். அவர்கள் செல்வதை நான் பார்த்தேன்" என்கிறார்.
கப்பல் மீது நடந்த தாக்குதலை விவரித்த சசிகுமார், "மிகப் பெரிய அதிர்வு சத்தம், எங்கள் காதுகளைக் கடுமையாக துளைத்தது. கப்பலின் இடதுபக்கம் இருந்தவர்கள் அதிக அதிர்வை உணர்ந்தனர்" எனக் குறிப்பிட்டார்.
"கப்பலில் உள்புற மேற்கூரைகள் பெயர்ந்து கீழே விழுந்தன. கடற்பயணத்துக்குத் தேவையான கருவிகள் அதிர்வின் காரணமாக சேதம் அடைந்தன," என்கிறார் அவர்.
கப்பலின் இடதுபுறத்தின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இரும்புத் துகள்கள் தீப்பிழம்பாக, மாலுமிகள் இருந்த இடத்தில் இருந்து சுமார் 120 மீட்டர் தொலைவில் சிதறிக் கிடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
'மகளின் முகத்தை காண விரும்பினேன்'
"தாக்குதல் காரணமாக எண்ணெய் தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டிக்கு இடையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை," எனக் குறிப்பிட்டார்.
"அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் பதற்றத்தில் இருந்தோம்" எனக் கூறும் சசிகுமார், "அப்போது மகளின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. உடனே வாட்ஸ்ஆப் கால் செய்தேன். அப்போது இந்திய நேரப்படி அதிகாலை சுமார் நான்கு மணி இருக்கும்." என்கிறார்.
"மகளிடம், நான் நன்றாக இருக்கிறேன். நீ தூங்கு எனக் கூறினேன். இனி என்ன நடந்தாலும் எதிர்கொள்வோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன்" எனக் கூறுகிறார் சசிகுமார்.
இதன்பிறகு, 'யாரும் வெளியில் செல்ல வேண்டாம். உள்ளேயே இருங்கள்' என மாலுமிகளுக்கு அறிவித்துவிட்டு என்ஜின் துறையில் தானும் டெக் துறையில் இன்னொரு பொறியாளரும் சூழலைக் கண்காணித்ததாக அவர் குறிப்பிட்டார்.
"கப்பலின் எண்ணெய்த் தொட்டியில் ஆக்சிஜன் இல்லாமல் திரவ வாயுவை நிரப்பி வைத்திருப்போம். இது மந்த வாயு (Inert Gas System - IGS இந்த வாயுக்கள் மற்ற தனிமங்களுடன் எளிதில் வினைபுரியாது) என்கிறோம். தாக்குதல் காரணமாக திரவ வாயு வெளியேறி ஆக்சிஜன் உள்ளே சென்றுவிட்டது" என்கிறார் சசிகுமார்.
கப்பல்களில் எண்ணெய், ரசாயனங்களை ஏற்றிச் செல்லும்போது காற்றில் ஆக்சிஜன் அளவு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால் எளிதில் தீப்பற்றுவதற்கான வாய்ப்புள்ளதால், அதனைத் தடுப்பதற்கு இந்த மந்த வாயு (Inert Gas) பயன்படுத்தப்படுகிறது.
"இன்னொரு தாக்குதல் தொடுக்கப்பட்டால் விளைவு தீவிரமாக இருக்கும் என்பதால் திரவ வாயுவை நிரப்புவதற்கான இயந்திரங்களை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டது," என சசிகுமார் குறிப்பிட்டார்.
காணொளிகளால் கலங்கிய குடும்பத்தினர்
தொடர்ந்து பேசும்போது, "கப்பல் தகர்க்கப்பட்ட தகவலை குடும்பத்தினருக்குத் தெரிவிக்கவில்லை. கப்பலில் இருந்த அனைவரும் மனஉளைச்சலில் இருந்ததால் குடும்பத்தினரின் அழுத்தமும் வந்துவிடக் கூடாது என்பது தான் காரணம்." என்கிறார்.
அதேநேரம், குடும்பத்தினரை தொடர்பு கொள்வதற்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் குழுவில் கப்பலின் நிலை குறித்த காணொளிகளை சில மாலுமிகள் பகிர்ந்துள்ளனர்.
"கப்பலின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, வீட்டுக்கு வந்துவிடுமாறு குடும்பத்தினர் கதறி அழுதனர். மற்ற மாலுமிகளும் ஊர் திரும்ப விரும்புவதாக கப்பல் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்தனர். கப்பலை சீர்செய்யும் பணி இருந்ததால் என்னால் நகர முடியாத நிலை ஏற்பட்டது" என்கிறார் சசிகுமார்.
கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து இராக் கடலோர பாதுகாப்புப் படைக்கும் கப்பலின் காப்பீட்டு நிறுவனத்துக்கும் தகவல் தெரிவித்ததாகக் கூறும் அவர், "இராக் அதிகாரிகளின் ஒப்புதலுக்குப் பிறகு மறுநாள் மதியம் கப்பலை மிதமான வேகத்தில் இயக்கினோம்" எனத் தெரிவித்தார்.
"ஐக்கிய அரபு அமீரகத்துக்குள் இருக்கும் ஒரு துறைமுகத்துக்கு எங்கள் கப்பலைக் கொண்டு வந்தோம். மூன்று தலைமை அதிகாரிகள் தவிர்த்து மற்றவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பிவிட்டோம்" என்கிறார் சசிகுமார்.
கப்பலில் அங்கோலா நாட்டைச் சேர்ந்த நான்கு பேரும் இந்தியாவைச் சேர்ந்த எட்டு பேரும் பணிபுரிந்துள்ளனர். கப்பலின் தலைமை சமையல் கலைஞராக சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவர் பணிபுரிந்து வந்ததாகவும் சசிகுமார் தெரிவித்தார்.
'சேதத்தை சரிசெய்ய 130 மெட்ரிக் டன் இரும்பு'
கப்பலை சீரமைப்பது மிகப் பெரிய சவாலாக இருந்ததாகக் கூறும் அவர், "கப்பல் உரிமையாளர்கள், காப்பீடு நிறுவன அதிகாரிகள், கப்பல் தகுதிச் சான்று கொடுக்கும் அமைப்பினர் ஆகியோரின் துணையுடன் கப்பல் மேலும் சேதம் அடையாமல் இருப்பதற்கான பணிகளில் ஈடுபட்டோம்" என்கிறார்.
"கப்பலின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த பலாஸ்ட் நீர்த் தொட்டியை (ballast tank) நிரப்பி வைப்போம். அது பிரதான பகுதியாக எண்ணெய்த் தொட்டிக்கு அருகில் இருந்தது. இவை இரண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன" என சசிகுமார் கூறினார்.
கப்பலைச் சரிசெய்வதற்கு சுமார் இரண்டு மாதங்கள் தேவைப்பட்டதாகக் கூறும் அவர், "சேதத்தை சரிசெய்வதற்கு சுமார் 130 மெட்ரிக் டன் அளவுக்கு இரும்புகள் தேவைப்பட்டன." என்கிறார்.
கப்பல் சீரடைந்த பிறகு கடந்த மே 14-ஆம் தேதி காஞ்சிபுரம் வந்துள்ளார். "நான்கைந்து மாத ஓய்வுக்குப் பிறகு மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும்" எனக் கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சூனாம்பேடு அருகில் உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமாரின் பெற்றோர் விவசாயம் செய்து வருகின்றனர். இவரது மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மகள் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
"சோமாலிய கடற்கொள்ளையர்களின் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களுடன் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஆனால், இரான் போர்ச் சூழலில் இப்படியொரு பதற்றத்தை வாழ்நாளில் மறக்க முடியாது." என்கிறார் சசிகுமார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு