You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பிரிட்டிஷாரை வெல்ல முடியாது' என்ற புனைவுகளை தகர்த்த லக்னௌ ரெசிடென்சி போர்
- எழுதியவர், சையத் மோஜிஸ் இமாம்
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
பிரிட்டிஷார் அவத் சமஸ்தானத்தை ஆக்கிரமித்தது இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். அவத் பகுதி, கங்கை-யமுனை நதிகளுக்கு இடையேயான சமவெளியான தோவாப் பகுதியை உள்ளடக்கியிருந்தது. அதன் தலைநகரம் லக்னௌ ஆகும்.
இன்று, இதே லக்னௌதான், மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் தலைநகராக உள்ளது.
1856 பிப்ரவரியில் பிரிட்டிஷார் அவத்தின் நவாப் வாஜித் அலி ஷாவை அதிகாரத்திலிருந்து அகற்றியபோது, அவர் லண்டனுக்குச் சென்று விக்டோரியா மகாராணியிடம் முறையிட முடிவு செய்தார்.
லண்டனை அடைவதற்காக, அவர் 1856 மார்ச்சில் லக்னௌவிலிருந்து கல்கத்தாவிற்குப் புறப்பட்டார். (கொல்கத்தா முன்பு கல்கத்தா என்று அழைக்கப்பட்டது.)
வரலாற்றாசிரியர் ரோஷன் தாகியின் முதல் சுதந்திரப் போர் குறித்த நூலான "லக்னௌ 1857 - லக்னோவின் இரு போர்கள்: ஒரு சகாப்தத்தின் முடிவு" என்பதிலும் இந்தச் சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்றாசிரியர் ரோஷன் தாகி பிபிசி நியூஸ் ஹிந்தியிடம், "அக்காலத்தில், அவத் பகுதியிலிருந்து பலர் நவாப் வாஜித் அலி ஷாவுக்கு பிரியாவிடை அளிக்க கான்பூருக்குச் சென்றனர். அவர்களில் பலர், 'ஹஸ்ரத் லண்டன் செல்கிறார், எங்கள் மீது கருணை காட்டுங்கள் ரகுநந்தன்' என்று பாடிக் கொண்டிருந்தனர்," எனக் கூறினார்.
ரோஷன் தாகியின் கூற்றுப்படி, "தன் குடிமக்களின் உணர்வுகளை அறிந்த நவாப், அவர்களுக்கு மேலும் தொல்லை கொடுக்க விரும்பவில்லை. தன்னுடன் வந்தவர்களிடம், தான் லக்னௌவுக்குத் திரும்பி விடுவதாக அவர் உறுதியளித்தார். இதைக் கேட்ட மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் லக்னௌவுக்குத் திரும்பி, நவாபின் வருகைக்காகக் காத்திருந்தனர்."
நவாப் லக்னௌவுக்குத் திரும்பவே இல்லை என்பது வேறு விஷயம்.
இது கங்கா-யமுனைப் பண்பாட்டின் ஒரு தனித்துவமான உதாரணமாகும்; இதில், இஸ்லாத்தைப் பின்பற்றிய ஓர் ஆட்சியாளரின் உரிமைகளுக்காக, அவரது இந்து குடிமக்கள் தங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்தனர்.
கல்கத்தாவில் குடியேறிய நவாப்
வரலாற்றாசிரியர் ரவி பட் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசுகையில், "நவாப் வாஜித் அலி ஷா 'தகுதியற்றவர்' என அறிவிக்கப்பட்டு, 1856 பிப்ரவரியில் டல்ஹௌசியால் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டார்" என்று கூறுகிறார்.
நவாப் வாஜித் அலி ஷா கல்கத்தாவிலிருந்து லண்டனுக்குக் கப்பலில் செல்ல விரும்பினார், ஆனால் அவரால் செல்ல முடியவில்லை.
வரலாற்றாசிரியர் ரோஷன் தாகியின் கூற்றுப்படி, "அவருடைய சில பிரதிநிதிகள் அவரது தாயார் மல்கா கிஷ்வருடன் லண்டனுக்குச் சென்றனர், ஆனால் அவரால் அவத்தில் மீண்டும் அதிகாரத்தைப் பெற முடியவில்லை. பின்னர் வாஜித் அலி ஷா கல்கத்தாவில் குடியேறினார்."
ரோஷன் தாகியின் கூற்றுப்படி, "அவருடைய தாயார் மல்கா கிஷ்வர் பாரிஸில் இறந்தார், அங்குதான் அவரது கல்லறையும் அமைந்துள்ளது. நவாப் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார் என்பதும் பொய்; மாறாக, அவரே கல்கத்தாவுக்குச் சென்றார்." என்கிறார்.
நவாப் கல்கத்தாவுக்குப் புறப்பட்ட பிறகு, அவத்தின் கட்டுப்பாடு நேரடியாக பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கைகளுக்கு வந்தது.
வரலாற்றாசிரியர் ரோஷன் தாகியின் கூற்றுப்படி, "ஓராண்டுக்குள், கம்பெனி மீது மக்களிடையே ஆழ்ந்த அதிருப்தி வளர்ந்திருந்தது."
"இந்த நேரத்தில், புதிய என்ஃபீல்ட் துப்பாக்கியின் தோட்டாக்களில் பசு மற்றும் பன்றிக் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக வதந்திகள் பரவின." என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்தச் செய்தி இந்திய வீரர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி, மீரட் இராணுவ முகாமில் ஒரு கிளர்ச்சியைத் தூண்டியது.
மங்கள் பாண்டேயின் கிளர்ச்சி மனப்பான்மைக்குப் பின்னணியில் இந்தத் தோட்டாப் பிரச்னையும் இருந்ததாக நம்பப்படுகிறது. 1856-க்கு முன்பு, இந்திய வீரர்கள் 'பிரவுன் பெஸ்' என்றழைக்கப்பட்ட ஒரு துப்பாக்கியைப் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றாசிரியர் அம்ரேஷ் மிஸ்ராவின் "நாகரிகங்களின் போர் - இந்தியா கி.பி. 1857" என்ற புத்தகத்தின்படி, "புதிய என்ஃபீல்ட் பி-53 துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதன் தோட்டாவைக் கடிக்க வேண்டியிருந்தது. 1857, மே 10 அன்று மீரட்டில் கிளர்ச்சி தொடங்கியது, மேலும் வீரர்கள் டெல்லியை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்."
2026 ஆம் ஆண்டு, 1857 கிளர்ச்சி நடந்து 169 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கிறது.
லக்னௌவில் ஏற்கனவே மூண்டு கொண்டிருந்த கிளர்ச்சி
ரோஷன் தாகி தனது 'லக்னௌ 1857 - லக்னௌவின் இரு போர்கள்: ஒரு சகாப்தத்தின் அந்தி' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், "கம்பெனிக்கு எதிரான பொதுமக்களின் கோபம் வளர்ந்து வந்தது. மீரட்டில் நடந்த கிளர்ச்சியைத் தொடர்ந்து, லக்னௌ அருகே உள்ள மடியாவோன் பகுதியில் இருந்த பிரிட்டிஷ் இராணுவ முகாமில் நிலைநிறுத்தப்பட்டிருந்த வீரர்களும் கிளர்ச்சி செய்து லக்னௌவில் ஒன்று கூடத் தொடங்கினர்."
சுவாரஸ்யமாக, லக்னௌ பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தது இது முதல் முறையல்ல.
ஓராண்டுக்கு முன்னர், 1856-ல், லக்னௌவில் பிரிட்டிஷாரை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான ஒரு பெரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ரோஷன் தாகியின் கூற்றுப்படி, "அக்காலத்தில், அவத் இணைக்கப்பட்டதை எதிர்த்துப் போராடுவதற்காகப் பல மதத் தலைவர்கள் லக்னௌவில் ஒன்று கூடினர். சூஃபி துறவியான காதிர் அலி ஷா, கம்பெனிக்கு எதிரான கிளர்ச்சிக்கான தேதியாக செப்டம்பர் 11, 1856-ஐ நிர்ணயித்திருந்தார். அவர் சுமார் 12,000 பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்ட ஒரு பெரிய படையையும் தயார் செய்திருந்தார்."
ரோஷன் தாகி மேலும் விளக்குகையில், "காதிர் அலி ஷா உதவி கோரி காபூல் ஷாவுக்கு ஒரு கடிதம் கூட அனுப்பினார். சமூகத்தின் கீழ்மட்டப் பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்த பலர் காதிர் அலி ஷாவின் இரகசிய அமைப்பில் ஈடுபட்டிருந்தனர். இது அந்த இயக்கத்திற்கு ஒரு மக்கள் திரள் வடிவத்தைக் கொடுத்தது. இருப்பினும், இந்தத் திட்டமிட்ட கிளர்ச்சி வெற்றிபெறத் தவறியது. ஆங்கிலேயர்கள் இதைப் பற்றி அறிந்தனர்." என்கிறார்.
"அவர்கள் சரியான நேரத்தில் அதை அடக்கினர். அதைத் தொடர்ந்து, லக்னோவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மச்சி பவனுக்கு அருகில் பல மதகுருக்கள் தூக்கிலிடப்பட்டனர். 1857 கிளர்ச்சிக்கு முன்பே அவத்தில் அதிருப்தி ஆழமாகப் பரவியிருந்தது என்பதை இந்தச் சம்பவம் தெளிவாகக் காட்டுகிறது." என்கிறார் தாகி.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் உஷாரானார்கள். அவர்கள் உணவுப் பொருட்கள் மற்றும் இராணுவ உபகரணங்களுக்கு ஏற்பாடு செய்யத் தொடங்கினர்.
ரோஷன் தாகி கூற்றின் படி, "ஒரு கிளர்ச்சிக்கு அஞ்சி, பிரிட்டிஷ் அதிகாரிகள் ஒரிடத்தில் தஞ்சம் புகுந்து அத்தியாவசியப் பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கினர். யாரும் கவனிக்காதபடி, இந்த வேலை இரவின் இருளில் செய்யப்பட்டது."
இந்த ரெசிடன்சி என பெயரிடப்பட்ட இந்த இடம், இன்றைய லக்னௌவில் உள்ள கைசர்பாக் அருகே கோம்தி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இது சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு வளாகமாகும். பிரிட்டிஷ் அதிகாரிகள் இங்கு வசித்தனர். இது 1774-ல் அவத்தின் மூன்றாவது நவாபான நவாப் ஷுஜா-உத்-தௌலாவால் கட்டப்பட்டது.
லக்னௌ ரெசிடென்சியின் பிரதான வாயில் பெய்லி கார்ட் என்று அழைக்கப்படுகிறது. இது நவாப் ஷுஜா-உத்-தௌலாவின் மகனான நவாப் சாதத் அலி கானால், லக்னௌவின் ரெசிடென்டாக இருந்த கேப்டன் பெய்லியின் நினைவாகக் கட்டப்பட்டது.
1857-ல், இந்த வாயில் மண்ணால் நிரப்பப்பட்டது. பெய்லியின் பெயரின் காரணமாக, லக்னௌவின் உள்ளூர் மக்களும் இதை பெய்லி கார்ட் என்றே அழைக்கின்றனர்.
வரலாற்றாசிரியர் ரவி பட் கூற்றின் படி, "அவத் நவாப்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு விருந்தோம்பல் அளித்தனர், அதை அவர்கள் தங்களின் அரசியல் தலையீட்டை அதிகரிக்கப் பயன்படுத்திக் கொண்டனர். 1856, பிப்ரவரி 7 அன்று, வாஜித் அலி ஷா பதவியிலிருந்து அகற்றப்பட்டார்."
இன்று, இந்தப் பாதுகாக்கப்பட்ட கட்டடம் இடிபாடுகளாகக் கிடக்கிறது. துப்பாக்கிக் குண்டுத் தடங்களை இன்றும் காணலாம்.
இதில் ஒரு தேவாலயம், ஒரு மசூதி மற்றும் ஒரு இமாம்பாராவும் உள்ளன. சுற்றுலாப் பயணிகளும் இந்த இடத்திற்கு அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். இந்த ரெசிடென்சிக்குள் 1857 புரட்சியின் வரலாற்றைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம் உள்ளது.
சின்ஹாட் போரில் பிரிட்டிஷார் தோல்வி
அவத்தின் இரண்டாவது மன்னரான நசிருதீன் ஹைதரின் மனைவியான பேகம் விலாயத், மக்தாரா ஆலியா என்றும் அறியப்பட்டவர், இந்த ரெசிடென்சியில் வசித்தார்.
அவர் பேகம் கோத்தியில் வசித்தார். இங்குள்ள ஒரு கல்வெட்டு, "அவர் ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரது ஒன்றுவிட்ட சகோதரி அஷ்ரஃபுன்னிசா, மசூதியையும் இமாம்பாராவையும் கட்டினார்" என்று குறிப்பிடுகிறது.
ரவி பட் கூறுகிறார், "இன்று அது சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இருப்பினும், 1857 புரட்சிக்குப் பிறகு இருந்தபடியே அனைத்து கட்டடங்களும் அப்படியே இருக்கின்றன. பாதுகாப்புப் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன."
வரலாற்றாசிரியர் ரோஷன் தாகியின் கூற்றுப்படி, "பிரிட்டிஷார் தங்களைப் பாதிக்கப்பட்டவர்களாகக் காட்டிக்கொள்வதற்காக ரெசிடென்சியை இருந்தபடியே விட்டுச் சென்றனர். உண்மையில், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, அவர்கள் நகரத்தின் பெரும் பகுதியை அழித்தனர்."
இருப்பினும், ரெசிடென்சி முற்றுகைக்கு முன்பு, சின்ஹாட் போரில் பிரிட்டிஷார் தோல்வியைச் சந்தித்திருந்தனர்.
1857 ஜூன் 30 அன்று நடந்த சின்ஹாட் போர், நன்கு திட்டமிடப்பட்ட ஒரு வியூகத்தின் விளைவாகும்.
ரோஷன் தாகியின் கூற்றுப்படி, இந்தியக் கிளர்ச்சித் தலைவர்களான பர்கத் அகமது மற்றும் ஷஹாபுதீன் ஆகியோர் பிரிட்டிஷாரைத் தவறாக வழிநடத்தி, அவர்களைச் சிக்க வைத்தனர்.
"கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கிவிட்டதாக கம்பெனி அதிகாரி ஹென்றி லாரன்ஸ் நம்பினார். உண்மையில், இந்தியக் கிளர்ச்சிப் படை முழுமையாகத் தயாராகி, பதுங்கியிருந்து தாக்குவதற்காகக் காத்திருந்தது." என்கிறார் தாகி.
அவர் எழுதுகிறார், "இந்தப் படையில் வீரர்களும், ராஜா ஜெயிலால் சிங் மற்றும் ராணா பெனி மாதோ போன்ற உள்ளூர் மன்னர்களும் இருந்தனர். பிரிட்டிஷார் முன்னேறிய போது, அவர்கள் எண்ணிக்கையிலும் ஆயுத பலத்திலும் பின்தங்கியிருந்தனர். இந்தியக் கிளர்ச்சிக் குதிரைப்படைக்கு, முன்னர் அவத் படையில் அதிகாரியாகப் பணியாற்றிய ஷ்மிட் என்ற இளம் ஜெர்மானியர் தலைமை தாங்கினார்."
இராணுவ அதிகாரி ஹென்றி லாரன்ஸின் சுமார் 600 வீரர்களைக் கொண்ட படைப்பிரிவு பீதியடைந்து பின்வாங்கத் தொடங்கியது. "பிரிட்டிஷார் தோற்கடிக்கப்பட்டனர்." என்கிறார் வரலாற்றாசிரியர் ரோஷன் தாகி.
வரலாற்றாசிரியர் அம்ரேஷ் மிஸ்ரா தனது 'நாகரிகங்களின் போர் - இந்தியா கி.பி. 1857' என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிடுகிறார்.
"லாரன்ஸின் இராணுவம் அவசரமாக லக்னௌவுக்குப் பின்வாங்கி, ரெசிடென்சியில் தஞ்சம் புகுந்தது." என்று ரோஷன் தாகி கூறுகிறார்.
சின்ஹட்டில் கிடைத்த வெற்றி, பிரிட்டிஷ் இராணுவத்தை வெல்லமுடியாது என்கிற கட்டுக்கதையைத் தகர்த்தது. லக்னௌ மற்றும் அவத்தின் கதவுகள் கிளர்ச்சியாளர்களுக்குத் திறக்கப்பட்டன.
வரலாற்றாசிரியர் ரவி பட் கூறுகிறார், "பிரிட்டிஷ் பதிவுகளின்படி, இந்தப் போரில் 112 ஐரோப்பிய வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 44 பேர் காயமடைந்தனர். கர்னல் கெய்ன்ஸ் மற்றும் கேப்டன் மெக்லீன் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் கர்னல் ஐன்ஸ் மற்றும் மேஜர் பேங்க்ஸ் காயமடைந்தனர். இந்தியத் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தெளிவான பதிவு இல்லை."
சில ஆதாரங்களின்படி, "11 கிளர்ச்சியாளர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர்; மௌல்வி அஹமதுல்லா ஷா காயமடைந்தார்."
ரெசிடென்சி முற்றுகை
சின்ஹாட் போரில் தோல்வியடைந்த பிறகு, பிரிட்டிஷார் ரெசிடென்சியில் தஞ்சம் புக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வரலாற்றாசிரியர் ரவி பட் கூற்றின்படி, "இந்தக் கிளர்ச்சிக்கு பேகம் ஹஸ்ரத் மஹால் மற்றும் மௌல்வி அஹ்மதுல்லா ஷா ஆகியோர் தலைமை தாங்கினர்."
இதற்குப் பிறகு, "புரட்சியாளர்கள் வாஜித் அலி ஷா மற்றும் பேகம் ஹஸ்ரத் மஹாலின் மகனான பிர்ஜிஸ் கத்ரை அவத்தின் நவாபாக அறிவித்தனர்" என்று அவர் விளக்குகிறார்.
ரவி பட்டின் கூற்றுப்படி, "இந்த முற்றுகை சுமார் ஐந்து மாதங்கள் நீடித்தது. நவம்பரில், பிரிட்டிஷார் தப்பிச் சென்றனர். அதற்கு முன்பு, குண்டுவீச்சில் பல பிரிட்டிஷ் வீரர்கள் உயிரிழந்திருந்தனர்."
முற்றுகையின் போது, ரெசிடென்சியில் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் சுமார் 1,500 பேர் போரிட்டுக் கொண்டிருந்தனர். மறுபுறம், 1,200 பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர். பிரிட்டிஷாரிடம் 30 பீரங்கிகளும் 23 லட்சம் ரூபாயும் இருந்தன. வெளியே, சுமார் 8,000 முதல் 15,000 வரையிலான இந்திய வீரர்கள் முற்றுகையைத் தொடர்ந்தனர். இந்தப் பீரங்கிகள் இன்றும் ரெசிடென்சிக்குள் உள்ளன, அவை ரெசிடென்சிக்குள் உள்ள அருங்காட்சியகக் கட்டடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளன.
டாக்டர் ஃபேரர் அந்த ரெசிடென்சியின் நிரந்தர அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார். அவரது இல்லத்தின் முன்புள்ள ஒரு பலகையில், "முற்றுகையின் போது, இராணுவத் தளபதியான சர் ஹென்றி லாரன்ஸ், ஜூலை 2 ஆம் தேதி காயங்களுடன் இங்கு கொண்டுவரப்பட்டு, ஜூலை 4 ஆம் தேதி இறந்தார்" என்று எழுதப்பட்டிருந்தது.
முற்றுகை செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்தது. ஆனால் 1857 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி, கான்பூரிலிருந்து முதல் பிரிட்டிஷ் மீட்புப் படை ரெசிடென்சிக்கு வந்து சேர்ந்தது.
சர் ஹென்றி ஹேவ்லாக் தலைமையிலான இந்தப் படை, முற்றுகையிலேயே சிக்கிக்கொண்டது.
வரலாற்றாசிரியர் ரோஷன் தாகியின் கூற்றுப்படி, "பிரிட்டிஷார் இந்த நாளை 'முதல் மீட்பு' என்று நினைவுகூர்கின்றனர். இருப்பினும், கர்னல் நீல் செப்டம்பர் 25 ஆம் தேதி ஷேர் தர்வாசா அருகே முற்றுகையை உடைக்க முயன்றபோது கொல்லப்பட்டார்."
இன்றும் கூட, கைசர்பாக்கில் உள்ள 'நீல் கேட்' இந்த நிகழ்வை நினைவுகூர்கிறது என்று அவர் விளக்குகிறார். இந்த வாயில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையால் (ASI) பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ரோஷன் தாகி விளக்குகிறார், "இந்த ஐந்து மாதங்களில், பிரிட்டிஷார் நவம்பர் 22 அன்று ரெசிடென்சியிலிருந்து தப்பிச் சென்றனர். சிறிது காலத்திற்கு, இந்தியர்கள் அவத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்."
இருப்பினும், இந்த நிலைமை நீண்ட காலம் நீடிக்கவில்லை. மார்ச் 1858-ல், பிரிட்டிஷார் அவத்தை மீண்டும் கைப்பற்றினர்.
பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி சர் கொலின் கேம்ப்பெல், சீக்கிய மற்றும் கூர்க்கா துருப்புகளின் உதவியுடன் இந்த வெற்றியை அடைந்தார்.
மார்க்சிஸ்ட் இணைய ஆவணக் காப்பகத்தின்படி, ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ், நியூயார்க் டெய்லி ட்ரிப்யூனின் ஏப்ரல் 30, 1858 இதழில், "லக்னௌவின் வீழ்ச்சி" என்ற தலைப்பில் இந்தியக் கிளர்ச்சி குறித்து ஒரு தலையங்கத்தை எழுதினார்.
அதில் கூறப்பட்டிருந்த தகவல்படி, "இந்தியக் கிளர்ச்சியின் இரண்டாவது நெருக்கடியான காலகட்டம் முடிவுக்கு வந்துள்ளது. முதல் நெருக்கடி டெல்லியை மையமாகக் கொண்டிருந்தது. தாக்குதலுக்குப் பிறகு அந்த நகரம் கைப்பற்றப்பட்டதன் மூலம் அது முடிவுக்கு வந்தது. இரண்டாவது நெருக்கடி லக்னௌவை மையமாகக் கொண்டிருந்தது, இப்போது அதுவும் வீழ்ந்துவிட்டது." என எழுதப்பட்டுள்ளளது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு