உர்வில் பட்டேல் சாதனை அரைசதம் - ஹாட்ரிக் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

உர்வில் பட்டேல் அதிரடி அரைசதம் - ஹாட்ரிக் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம், ANI

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

ஐபிஎல் 2026 தொடரின் 53வது போட்டியில் இன்று (மே 10) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. லக்னௌ அணியில் ஜாஷ் இங்லிஸ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்படுவதாக ரிஷப் பன்ட் டாஸில் தெரிவித்தார்.

முதலில் பேட்டிங் செய்த எல்எஸ்ஜி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் இங்லிஸ் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 85 ரன்கள் விளாசினார். சிஎஸ்கே தரப்பில் அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.2 ஓவர்களில் 208 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. உர்வில் பட்டேல் 13 பந்துகளில் அரைசதம் அடித்து ஐபிஎல் அரங்கின் அதிவேக அரைசதத்தைப் பதிவு செய்தார்.

இந்தப் போட்டிக்கு முன்னதாக, சிஎஸ்கே அணி 2019ம் ஆண்டிலிருந்து 180-க்கும் அதிகமான இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்யவே இல்லை. அப்படி சேஸ் செய்த 14 போட்டிகளிலுமே சூப்பர் கிங்ஸ் தோல்வியையே சந்தித்திருந்தது. அந்தத் தோல்விப் பயணத்துக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது சிஎஸ்கே.

இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 6 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்றிருக்கிறது சிஎஸ்கே. அந்த அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது. 11 போட்டிகளில் விளையாடியிருக்கும் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி அதில் 3 மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. 6 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணி கடைசி இடத்தில் இருக்கிறது.

இங்லிஸ் கொடுத்த அதிரடி தொடக்கம்

33 பந்துகள் சந்தித்த ஜாஷ் இங்லிஸ் 85 ரன்கள் விளாசினார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 33 பந்துகள் சந்தித்த ஜாஷ் இங்லிஸ் 85 ரன்கள் விளாசினார்

முதலில் பேட்டிங் செய்த எல்எஸ்ஜி அணிக்கு ஜாஷ் இங்லிஸ் அதிரடியான தொடக்கம் கொடுத்தார். முதல் ஓவர் முதலே அவர் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக அடித்தார். அகீல் ஹொசைன் வீசிய முதல் ஓவரிலேயே 16 ரன்கள் வந்தது. அந்த ஓவரின் கடைசி 3 பந்துகளில் 1 சிக்ஸரும், 2 பவுண்டரிகளும் அடித்தார் இங்லிஸ்.

முகேஷ் சவுத்ரி வீசிய 2வது ஓவரில் இங்லிஸ் ஒரு சிக்ஸர் அடிக்க 8 ரன்கள் வந்தது. அன்ஷுல் கம்போஜ் வீசிய ஆட்டத்தின் 3வது ஓவரில் இங்லிஸ், மிட்செல் மார்ஷ் இருவரும் தலா 1 சிக்ஸர் அடித்தனர். அந்த ஓவரில் 16 ரன்கள் எடுக்கப்பட்டன. முகேஷ் சவுத்ரி மற்றும் அகீல் ஹொசைன் ஆகியோர் வீசிய அடுத்த இரு ஓவர்களில் தலா 3 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடித்தார் இங்லிஸ்.

தொடர்ச்சியாக அதிரடி காட்டிய அவர் 17 பந்துகளிலேயே தன்னுடைய அரைசதத்தை நிறைவு செய்தார்.

அன்ஷுல் கம்போஜ் வீசிய ஆறாவது ஓவரில் 10 ரன்கள் எடுத்திருந்த மிட்செல் மார்ஷ் ஆட்டமிழந்தார். விக்கெட் விழுந்த பிறகும்கூட அந்த ஓவரில் தலா 1 சிக்ஸரும், 1 பவுண்டரியும் அடித்தார் இங்லிஸ். அவரது இடைவிடாத அதிரடியின் காரணமாக பவர்பிளேவில் 1 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ். இந்த சீசனில் எல்எஸ்ஜி அணி எடுத்த அதிகபட்ச பவர்பிளே ஸ்கோர் இதுதான்.

இங்லிஸ் மட்டுமே அந்த பவர்பிளேவில் 77 ரன்கள் (25 பந்துகள்) எடுத்தார்.

பவர்பிளேவுக்குப் பின் மாறிய ஆட்டம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பவர்பிளே முடிந்த 2வது பந்திலேயே பூரன் ஆட்டமிழந்தார். 1 ரன் மட்டுமே எடுத்திருந்த அவர், நூர் அஹமது பந்துவீச்சில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த இங்லிஸ், ஜேமி ஓவர்டன் பந்துவீச்சில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 33 பந்துகளில் 85 ரன்கள் எடுத்த இங்லிஸ், 10 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் விளாசினார்.

அதே ஓவரில் ரிஷப் பன்ட் விக்கெட்டையும் வீழ்த்தினார் ஓவர்டன். 'ஹார்ட் லென்த்தில்' ஓவர்டன் பிட்ச் செய்த பந்தை பன்ட் சரியாக அடிக்காமல் போக 'இன்சைட் எட்ஜ்' ஆகி போல்டானது.

13வது ஓவரில் முன்னணி வீரர் எய்டன் மார்க்ரம் இரண்டாவது ரன் ஓட முற்பட்டு டெவால் பிரெவிஸ் அடித்த டைரக்ட் ஹிட் காரணமாக ரன் அவுட் ஆனார். ஓரளவு தாக்குப்பிடித்து ஆடி 18 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த அக்‌ஷத் ரகுவன்ஷி ஓவர்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனால் 147/6 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது எல்எஸ்ஜி.

பவர்பிளே முடிவில் 91/1 என்ற நிலையில் இருந்த லக்னௌ அணி, அடுத்த 56 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹபாஸ் அஹமது மற்றும் ஹிம்மத் சிங் ஓரளவு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அந்த அணி 200 ரன்களைக் கடக்க உதவி செய்தனர். இந்த ஜோடி 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தது. ஹிம்மத் சிங் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் (25 பந்துகள்) எடுத்தார் ஷாபாஸ் அஹமது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ். சிஎஸ்கே பௌலர்களில் அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார் ஜேமி ஓவர்டன்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார் ஜேமி ஓவர்டன்

அதிவேக அரைசதம் அடித்த உர்வில் பட்டேல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாம்சன் - ருதுராஜ் கூட்டணி அதிரடியான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. மொஹம்மது ஷமி மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோரின் ஓவர்களில் அவர்கள் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக அடிக்க, 3 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே. அதனால் நான்காவது ஓவரிலேயே திக்வேஷ் ராதியைப் பயன்படுத்தினார் ரிஷப் பன்ட். அதிலும் முதல் மூன்று பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார் சாம்சன். ஆனால், நான்காவது பந்தில் சாம்சனை போல்டாக்கினார் திக்வேஷ். 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார் சாம்சன்.

அடுத்து களமிறங்கிய உர்வில் பட்டேல் சிக்ஸர் மழையாகப் பொழிந்தார். ஆவேஷ் கான் வீசிய ஆட்டத்தின் 5வது ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் அடித்தார் அவர். அடுத்ததாக திக்வேஷ் ராதி வீசிய 6வது ஓவரில் 3 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் அடித்தார் உர்வில். ஷமி வீசிய அடுத்த ஓவரிலும் 1 சிக்ஸர் அடித்தார்.

உர்வில் பட்டேலின் அதிரடி காரணமாக பவர்பிளேவில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் விளாசியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

தொடர்ந்து சிக்ஸர் மழையாகப் பொழிந்த உர்வில் பட்டேல், 13 பந்துகளில் தன் அரைசதத்தை நிறைவு செய்தார். ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிவேக (இணைந்து) அரைசதம் இது. இதற்கு முன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 13 பந்துகளில் அரைசதம் அடித்திருக்கிறார்.

ஷாபாஸ் அஹமது வீசிய எட்டாவது ஓவரில் 1 பவுண்டரியும், 1 சிக்ஸரும் அடித்த உர்வில், 10வது ஓவரில் ஷாபாஸ் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தார். அவர் 23 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார். இந்த இன்னிங்ஸில் 2 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் அடித்தார் அவர்.

தடுமாறி கடைசி கட்டத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே

உர்வில் பட்டேல் ஆட்டமிழந்ததும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரன் வேகம் சற்று குறையத் தொடங்கியது. மேலும், அவர்களால் மீண்டுமொரு பெரிய பார்ட்னர்ஷிப்பையும் அமைக்க முடியவில்லை. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 42 ரன்களில் ஷாபாஸ் அஹமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கார்த்திக் ஷர்மா 20 பந்துகளில் 20 ரன்களுக்கும், டெவால் பிரெவிஸ் 12 பந்துகளில் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அவர்கள் மெதுவாக ஆடியதால் சிஎஸ்கே அணிக்குத் தேவைப்பட்ட ரன்ரேட் அதிகமானது.

கடைசி 3 ஓவர்களுக்கு 30 ரன்கள் தேவை என்ற நிலையில், பிரின்ஸ் யாதவ் வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார் பிரஷாந்த் வீர். இருந்தும் அந்த ஓவரில் 9 ரன்களே எடுக்கப்பட்டன.

இரண்டு ஓவர்களில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆவேஷ் கான் 19வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதலிரு பந்துகளிலுமே பிரஷாந்த் வீர் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டார்கள் எல்எஸ்ஜி ஃபீல்டர்கள். முதலில் ஃபைன் லெக் திசையில் நின்றிருந்த திக்வேஷ் கேட்சைத் தவறவிட, அடுத்த பந்தில் மிட்விக்கெட் திசையில் நின்றிருந்த பூரன் கேட்சைத் தவறவிட்டார். அதைப் பயன்படுத்திக்கொண்ட பிரஷாந்த் வீர் ஒரு சிக்ஸரும் அடிக்க, அந்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது.

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில், தொடர்ச்சியாக 2 வைட்கள் வீசினார் மார்க்ரம். அடுத்த 2 பந்துகளையும் சிக்ஸர்களாக்கி ஆட்டத்தை முடித்து வைத்தார் ஷிவம் துபே. இதன்மூலம், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இது சூப்பர் கிங்ஸ் தொடர்ச்சியாகப் பெறும் 3வது வெற்றி. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கும் முன்னேறியது சிஎஸ்கே.

23 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார் உர்வில் பட்டேல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 23 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார் உர்வில் பட்டேல்

டாஸில் கேப்டன்கள் சொன்னது என்ன?

டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். இதற்கு எளிய காரணம், ஆடுகளம் நீண்ட நேரமாக மூடப்பட்டிருந்தது மற்றும் மழையும் பெய்து கொண்டிருந்தது, எனவே இதில் விசேஷமாக ஒன்றுமில்லை. இதற்கு முந்தைய பகல் நேரப் போட்டியில் நாங்கள் எதிர்பார்த்ததை விட ஆடுகளம் மிகவும் மாறுபட்டு இருந்ததாக நான் கருதினேன். ஆனால் எங்கள் வேலை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதற்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொண்டு மற்றவற்றைச் செய்வதுதான். முதலில் பந்துவீசுவதால், ஆரம்ப ஒரு சில ஓவர்களைக் கவனித்துவிட்டு, அதன்பிறகு அவர்களை எவ்வளவு சீக்கிரம் சுருட்ட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சுருட்டப் பார்ப்போம்." என்று கூறினார்.

லக்னௌ கேப்டன் பன்ட், "நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்திருந்தோம். இங்கிருந்து ஒவ்வொரு போட்டியையும் நாங்கள் முக்கியமானதாகவே கருதுகிறோம். அதே நேரத்தில், நாங்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் மற்றும் சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். தற்போதைக்குத் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். பல போட்டிகளில் எங்களுக்குச் சாதகமான தருணங்களும் வாய்ப்புகளும் கிடைத்தன, ஆனால் எங்களால் வெற்றிகரமாகப் போட்டியை முடிக்க முடியவில்லை. அதுதான் நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் - தொடரில் அடுத்தடுத்த நிலைக்குச் செல்லும்போது, நான் மும்பையில் சொன்னது போல, ஒவ்வொரு போட்டியிலும் முடிவைப் பொருட்படுத்தாமல் எங்களது 200% உழைப்பைக் கொடுப்போம். அதைத்தான் நாங்கள் செய்ய முயல்கிறோம்." என்றார்.

பிளேயிங் லெவனில் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தப் போட்டிக்கான சிஎஸ்கே அணியில்

பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் பட்டேல், கார்த்திக் ஷர்மா, டெவால் பிரெவிஸ், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், அகீல் ஹொசைன், நூர் அஹமது, அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சவுத்ரி.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: மேத்யூ ஷார்ட், பிரஷாந்த் வீர், குர்ஜப்னீத் சிங், சர்ஃபராஸ் கான், ஆகாஷ் மத்வால்.

லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்

இந்தப் போட்டிக்கான எல்எஸ்ஜி அணியின் பிளேயிங் லெவனுக்கு ஜாஷ் இங்லிஸ் மீண்டும் திரும்பினார்.

பிளேயிங் லெவன்: மிட்செல் மார்ஷ், ஜாஷ் இங்லிஸ், நிகோலஸ் பூரன், எய்டன் மார்க்ரம், ரிஷப் பன்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), அக்‌ஷத் ரகுவன்ஷி, ஹிம்மத் சிங், ஷபாஸ் அஹமது, மொஹம்மது ஷமி, பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ராதி.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: எம்.சித்தார்த், ஆவேஷ் கான், மயாங்க் யாதவ், முகுல் சவுத்ரி, அப்துல் சமத்.