மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தவெக அரசின் முதல் அக்னிப்பரீட்சை - நேரலை

பட மூலாதாரம், MKStalin/Getty/Edappadi Palanisamy
(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.)
தமிழ்நாட்டில் பெரும் அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்குமான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால், இது தவெக அரசின் சுமார் 4 மாத கால ஆட்சிக்கான முக்கிய மதிப்பீடாகப் பார்க்கப்படுகிறது.
தாராபுரம் நிலவரம்: மீண்டும் சத்யபாமா முன்னிலை
தாராபுரம் தொகுதியில் நான்கு சுற்றுகளின் முடிவில், தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதி 13,213 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தவெக வேட்பாளர் சத்யபாமா 12,489 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக மற்றும் தவெக வேட்பாளர் இடையே 724 வாக்குகள் வித்தியாசம் உள்ளது.
திமுக வேட்பாளர் சுகன்யா 11,554 வாக்குகளைப் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா 898 வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன் 260 வாக்குகள் பெற்றுள்ளார்.

மதுராந்தகம் நிலவரம்
மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தவரை, முதல் சுற்றின் முடிவில், 12,075 வாக்குகளைப் பெற்று தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலையில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் பரந்தாமன் 8,914 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் கனிதாசம்பத் 6,759 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் 500 வாக்குகள் பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தி 312 வாக்குகள் பெற்றுள்ளார்.
தட்டாஞ்சாவடி நிலவரம்
மொத்தமுள்ள நான்கு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அஷோக் ஆனந்த் 13,358 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விநாயகம் 4,876 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்திலும், திமுக வேட்பாளர் சேதுசெல்வம் 2,664 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள்
இன்று காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில், அதைத் தொடர்ந்து காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மதுராந்தகம் தொகுதி: செங்கல்பட்டுக்கு அடுத்ததாக ஆத்தூர் ஒருங்கிணைந்த சமூக முன்னேற்ற பயிற்சி மையத்தில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இங்கு தபால் வாக்குகளுக்கு 2 மேஜைகளும், இயந்திர வாக்குகளுக்கு 14 மேஜைகளும் அமைக்கப்பட்டு, மொத்தம் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
தாராபுரம் தொகுதி: திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இங்கு 14 மேஜைகளில் மொத்தம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இரு மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதுடன், சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை அறைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மதியத்திற்குள் முன்னிலை நிலவரங்கள் மற்றும் பின்னர் இறுதி முடிவுகள் அதிகாரபூர்வமாகத் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் இந்த இடைத்தேர்தல்?
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலுவும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் வெற்றி பெற்றிருந்தனர்.
இருப்பினும், அவர்கள் இருவரும் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, இவ்விரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இடைத்தேர்தலின் முடிவுகளின் முக்கியத்துவம்
"காலையில் எட்டு மணிக்குத் தொடங்கிய தபால் வாக்குகளை எண்ணும் பணி முடிந்து, வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மொத்தம் 21 சுற்றுகளாக நடந்து வருவதாக" மதுராந்தகம் தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தின் முன்பாக இருக்கும் பிபிசி தமிழ் செய்தியாளர் விஜயானந்த் ஆறுமுகம் தெரிவித்தார்.
மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, அதிமுக வேட்பாளராகக் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்து, பிறகு இடைத்தேர்தலில் தவெக சார்பாகப் போட்டியிட்டார்.
இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் நடந்து வருகிறது. விஜய் தலைமையிலான தவெக-வின் ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு நடந்துள்ள முதல் இடைத்தேர்தல் என்பதால், இந்த இரு தொகுதிகளின் முடிவுகளும் தமிழக அரசியல் களத்தில் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
பதிவான வாக்குகள் எவ்வளவு?
கடந்த பொதுத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலுமே வாக்குப்பதிவு சதவிகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் 86.26% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த பொதுத் தேர்தலின்போது பதிவான 93.22 சதவிகிதத்தைவிட 7.23% குறைவு.
தாராபுரம் தொகுதியில் 80.31% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த பொதுத் தேர்தலில் இங்கு 89.9% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது 9.58% வாக்குப் பதிவு சரிந்துள்ளது.


களம் காணும் முக்கிய வேட்பாளர்கள் யார்?
மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, இடதுசாரிகள் என முக்கிய அரசியல் கட்சிகள் நேரடியாக மோதும் 5 முனைப் போட்டி நிலவியது.
ஆளும் தவெக கூட்டணி சார்பில், ஏற்கெனவே இத்தொகுதியில் வெற்றி பெற்று தவெக-வில் இணைந்த மரகதம் குமரவேல் மீண்டும் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து திமுக சார்பில் இ. பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி ஆகியோர் களம் கண்டனர்.
மறுபுறம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியிலும் பலப்பரீட்சை தீவிரமாக உள்ளது.
தவெக சார்பில் இத்தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வான சத்தியபாமா போட்டியிட்டார்.
இவருக்குப் போட்டியாக திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் க. பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் லட்சுமணன் ஆகியோர் போட்டியிட்டனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































