புயல் உருவாகிறது: தமிழ்நாட்டில் நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - சென்னை நிலவரம் என்ன?

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அக்டோபர் 26ஆம் தேதி புயலாக மாறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
படக்குறிப்பு, வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அக்டோபர் 26ஆம் தேதி புயலாக மாறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

( இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது )

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவெடுத்திருப்பதாகவும், அக்டோபர் 26ஆம் தேதி புயலாக மாறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (அக். 24) நீலகிரி மாவட்டத்திலும், நாளை (அக்.25) தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புயல் எந்த இடத்தை நோக்கி நகரும்?

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக் 24) வெளியிட்ட அறிக்கையின்படி, மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.

தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் இந்த அமைப்பு, அக்டோபர் 25ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 26ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாகவும் மாறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேலும் வலுப்பெறும் இந்த அமைப்பு, அக்டோபர் 28ஆம் தேதி காலை ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிக்கு அருகே நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாள் ரெட் அலெர்ட் எச்சரிக்கை

இன்று நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, இன்று நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 24ஆம் தேதி ( இன்று ) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களிலும், தமிழகத்தின் பல்வேறு உள்மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

மழையின்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 25ஆம் தேதி (நாளை) தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 26ஆம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழை நிலவரம் என்ன?

நாளைதேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, நாளை தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று (அக்டோபர் 24) வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடனே காணப்படுகிறது. நகரின் சில பகுதிகளில் மிதமான மழை வரை பெய்தது.

நாளை (அக்டோபர் 25) சென்னையின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் எங்கு அதிக மழை?

நீலகிரி மாவட்டம் பர்லியாரில் அதிகபட்சமாக 25 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
படக்குறிப்பு, நீலகிரி மாவட்டம் பர்லியாரில் அதிகபட்சமாக 25 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.

24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பர்லியாரில் 25 செமீ மழை பதிவாகியுள்ளது.

அதே மாவட்டத்தில் கீழ்கோத்தகிரி எஸ்டேட்டில் 20 சென்டிமீட்டரும், குன்னூரில் 17 சென்டிமீட்டரும், அழகரை எஸ்டேட்டில் 16 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 15 சென்டிமீட்டரும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 14 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

அக்டோபர் 27ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அக்டோபர் 28ஆம் தேதி முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழையின் தீவிரம் குறையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு