தமிழ்நாட்டில் தொடரும் பட்டாசு ஆலை விபத்து – வழக்கு அதிகரித்த போதும் தீர்வு கிடைக்காதது ஏன்?

தொடரும் பட்டாசு ஆலை விபத்து உயிரிழப்புகள் – வழக்குகள் அதிகரித்த போதும் தீர்வு கிடைக்காதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து வரும் நிலையில், ஆலை உரிமையாளர்களுக்கு உரிய நேரத்தில் தண்டனை கிடைக்காதது, அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாதது போன்றவையே இவை தொடரக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இழப்பீடு பெறுவதே கடினமாக இருப்பதால் வழக்கு, தண்டனை பற்றி யாரும் கவனிப்பதில்லை என்கிறார், பட்டாசு வழக்குகளை நடத்தி வரும் வழக்கறிஞர் அழகுமணி.

பட்டாசு ஆலையில் உயிரிழந்த குடும்பங்கள் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ள சமூக செயற்பாட்டாளர் விடியல் வீரபெருமாள், முந்தைய வழக்குகள் தொடர்பாக பல்வேறு தரவுகளைத் திரட்டி, வழக்குகளை விரைவுபடுத்த புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்யப் போவதாகத் தெரிவித்தார்.

கட்டனார்பட்டி விபத்தில் 60 நாட்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுமென பிபிசியிடம் கூறிய விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, முந்தைய வழக்குகளின் தற்போதைய நிலை பற்றி எதுவும் தெரியவில்லை என்றார்.

'1,124 பட்டாசு ஆலைகள், 3 ஆயிரம் கடைகள்'

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில்தான் பெரும்பான்மையான பட்டாசு ஆலைகள் அமைந்துள்ளன.

விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திடம் பிபிசி பெற்ற தகவலின்படி, அந்த மாவட்டத்தில் மட்டும் 1,124 பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. இவை தவிர்த்து 250க்கும் மேற்பட்ட தீப்பெட்டித் தொழிற்சாலைகள், 60 ரசாயனக் கிடங்குகள், 3000க்கும் அதிகமான பட்டாசுக் கடைகள் இயங்கி வருகின்றன.

வெடிபொருட்கள் சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில், பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம், மாவட்ட வருவாய் அலுவலருக்கு உள்ளது. பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நடந்து உயிரிழப்பு ஏற்படும்பட்சத்தில் அந்த உரிமம் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படுகிறது. விசாரணைக்குப் பின்பு நிரந்தரமாக ரத்து செய்யப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதியன்று, விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்களில் ஒருவரான முத்து மாணிக்கம், ஏப்ரல் 21 அன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். மற்றொரு உரிமையாளரான அவரது மனைவி ஈஸ்வரியும், ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த முத்து கிருஷ்ணகுமாரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வெடிபொருட்களைக் கையாளுதல், சட்டவிதிகளை மீறுதல், கொலை அல்லாத மரணத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் செயல்படுதல் எனப் பலவித குற்றப்பிரிவுகளை உள்ளடக்கி 6 பிரிவுகளில் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு விடக்கூடாது, ஞாயிற்றுக்கிழமை ஆலைகளை இயக்கக்கூடாது என்ற விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது.

இன்னும் என்னென்ன விதமான விதிமீறல்கள், இத்தனை உயிரிழப்புக்குக் காரணமாக இருந்தன என்பது விசாரணையில் தெரிய வருமென பிபிசியிடம் தெரிவித்தார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா.

தொடரும் பட்டாசு ஆலை விபத்து உயிரிழப்புகள் – வழக்குகள் அதிகரித்த போதும் தீர்வு கிடைக்காதது ஏன்?

'பல விபத்துகளில் யாருமே தண்டிக்கப்பட்டதில்லை'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஆனால் எத்தனை விதிமீறல்கள் இருந்தாலும், எவ்வளவு உயிரிழப்புகள் நிகழ்ந்தாலும் எந்த வழக்கிலும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உரிய நேரத்தில் தண்டிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு அழுத்தமாக முன்வைக்கப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் நடந்த பெரியளவிலான பட்டாசு ஆலை விபத்துகள் எதிலுமே சம்பந்தப்பட்ட ஆலை உரிமையாளர்கள் யாருமே தண்டிக்கப்பட்டதில்லை என்கிறார், சமூக செயற்பாட்டாளர் விடியல் வீரபெருமாள். அதேபோன்று, பல சம்பவங்களில் உரிய இழப்பீடும் கிடைக்கவில்லை என்கிறார் இவர்.

இந்த கூற்றை பிபிசி தமிழால் உறுதிப்படுத்த முடியவில்லை.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பான பல்வேறு தகவல்களையும் அரசின் வெவ்வேறு துறைகளில் இருந்து சேகரித்து ஏராளமான தரவுகளை வைத்துள்ள இவர், அதன் அடிப்படையில் பல வழக்குகளையும் தொடுத்து நிவாரணங்களைப் பெற்றுத் தந்திருக்கிறார்.

கட்டனார்பட்டி பட்டாசு ஆலை விபத்தைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இவர் தாக்கல் செய்த மனு ஏப்ரல் 27 அன்று முதல் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முதல்கட்ட விசாரணைக்குப் பிறகு வரும் ஜூன் 8ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கட்டனார்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்துள்ள 25 பேருடைய குடும்பங்களுக்கு, மாநில அரசின் சார்பில் தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு முன் ஏப்ரல் 13 அன்று வெம்பக்கோட்டையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேருடைய குடும்பங்களுக்கு இதுவரை எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை என்கிறார் வீரபெருமாள்.

இந்த 29 குடும்பங்களுக்கும் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதுடன், பட்டாசு ஆலைகள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் இவரது மனு முக்கியக் கோரிக்கையாக முன்வைத்துள்ளது.

தொடரும் பட்டாசு ஆலை விபத்து உயிரிழப்புகள் – வழக்குகள் அதிகரித்த போதும் தீர்வு கிடைக்காதது ஏன்?
படக்குறிப்பு, விடியல் வீரபெருமாள்

'உரிய இழப்பீட்டைப் பெறுவதே பெரும்பாடு'

பட்டாசு ஆலைகள் வெடிபொருட்கள் சட்ட விதிகளின் அடிப்படையில் முறையாக இயங்குகின்றனவா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும், வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கு முரணாக செயல்படும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

பிபிசியிடம் பேசிய விடியல் வீரபெருமாள், ''ஒவ்வொரு பட்டாசு ஆலை விபத்தையும், உயிரிழப்பையும் அரசு அதிகாரிகள் சாதாரணமாகக் கடந்து செல்கின்றனர். இதன் காரணமாகத்தான் கடந்த 15 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்துகள் எதிலுமே ஆலை உரிமையாளர்கள் யாருக்குமே சட்டப்படியான தண்டனை கிடைக்கவில்லை.'' என்றார்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பகிர்ந்த தகவலின்படி, கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து 2023 வரை, அந்த மாவட்டத்திலுள்ள பட்டாசு ஆலைகளில் 190 விபத்துகளில் 337 பேர் உயிரிழந்துள்ளனர். 303 பேர் காயம் அடைந்துள்ளனர்.

கடந்த 2024ஆம் ஆண்டில் 12 வெடிவிபத்துகளில் 47 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 27 பேர் காயமடைந்திருந்தனர். 2025ஆம் ஆண்டில் நடந்த விபத்து, உயிரிழப்புகள் தெரியவில்லை.

இந்நிலையில்தான் தற்போது ஏப்ரல் மாதத்தில் 2 பட்டாசு ஆலை விபத்துகளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோன்று, கடந்த 15 ஆண்டுகளில் விருதுநகர் மாவட்டத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்துகள், உயிரிழந்தவர்கள் விவரங்களையும், உரிமம் ரத்தான ஆலைகள் போன்ற விவரங்களையும் வீரபெருமாள் வாங்கி வைத்துள்ளார்.

இதுபற்றிப் பேசிய வீரபெருமாள், ''பட்டாசு ஆலை முக்கிய வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் விருதுநகர் மாவட்டத்தில் வெடி மூலப்பொருள் விதிமீறல் உச்சத்துக்குப் போய்விட்டது. தொழில் போட்டியால் குத்தகைதாரர்கள் அதிகமாகிவிட்டனர். ஒரு நாளுக்கு 10 கிலோ வெடிமருந்துதான் கலக்க வேண்டுமென்று விதி இருந்தால் அதைவிடப் பல மடங்கு அதிகமாகப் பயன்படுத்தி அவசர அவசரமாக விதிகளை மீறி பட்டாசு தயாரிக்கின்றனர்'' என்றார்.

பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நடக்கும்போது, இழப்பீடு தருவதையே இழுத்தடிப்பதால் அதை எதிர்த்துப் போராடுவதே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இயலாத விஷயமாகவுள்ளது என்கிறார், தலித் விடுதலை இயக்கத்தின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் பீமாராவ்.

கடந்த 2021ஆம் ஆண்டில் அச்சங்குளத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 27 பேர் உயிரிழந்தபோது, அந்த வழக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளை தாமாக முன் வந்து வழக்காகப் பதிவு செய்தது.

தீர்ப்பாயம் அமைத்த ஆணையம், இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடும், 50 சதவிகிதத்துக்கு மேல் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.15 லட்சமும், 25–50% காயமடைந்தோருக்கு தலா ரூ.10 லட்சமும், 5–25% காயமடைந்தோர்க்கு தலா ரூ.5 லட்சமும், சிறுகாயமடைந்தோருக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்க வேண்டுமென்று பரிந்துரைத்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்குப் பின் பல ஆண்டுகளாகப் போராடிய பின்பே அந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

அதை விளக்கிய பீமாராவ், ''இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் மாநில அரசும், தலா ரூ.16 லட்சம் சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளரும் தர வேண்டுமென்று உத்தரவிட்டபோது, அதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது பட்டாசு ஆலை உரிமையாளர்களைக் காப்பாற்றவே. ஆனால், எங்களுடைய தொடர் போராட்டத்தால் அந்த இழப்பீட்டைப் பெற்றுத் தந்தோம். இழப்பீட்டுக்கே போராட வேண்டியிருப்பதால் ஆலை விதிமீறல்கள் பற்றிய பேச்சே எழாததால் விபத்து, உயிரிழப்புகள் தொடர்கின்றன'' என்றார்.

விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ள பல்வேறு பட்டாசு வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வாதாடி வரும் வழக்கறிஞர் அழகுமணி, கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக விருதுநகர் மாவட்டத்தில் நடந்த பெரிய பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பான எந்த வழக்கும் முடிவுக்கு வரவில்லை என்கிறார்.

பிபிசியிடம் பேசிய அழகுமணி, ''அந்த அளவுக்கு அதிகாரிகள் இந்த வழக்குகளைப் பாதுகாக்கின்றனர். பல வழக்குகளில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதே தாமதமாகிவிடும். குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. சில வழக்குகளில் தீர்ப்பு வந்தாலும் மேல் முறையீடு செய்து தாமதப்படுத்துகின்றனர். இதில் காவல்துறை, வருவாய்த்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, கனிமவளத்துறை எனப் பல்வேறு துறை அதிகாரிகள் தங்கள் பங்குக்கு வழக்கை இழுத்தடிக்கின்றனர். இதில் காவல்துறை பங்கு மிக அதிகம்'' என்றார்.

தொடரும் பட்டாசு ஆலை விபத்து உயிரிழப்புகள் – வழக்குகள் அதிகரித்த போதும் தீர்வு கிடைக்காதது ஏன்?
படக்குறிப்பு, அழகுமணி

பட்டாசு ஆலைகளுக்கு தனி வளாகம் சாத்தியமா?

கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த அச்சங்குளம் பட்டாசு ஆலை விபத்து, சிப்பிப்பாறை பட்டாசு ஆலை விபத்து உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்த வழக்கின் நிலையையும் அவர் விளக்கினார். இதுபோன்று பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பான வழக்குகள், ஆலைகள் மீதான நடவடிக்கை விவரங்களையும் சேகரித்துள்ள வீரபெருமாள், அதை வைத்து பட்டாசு ஆலை வழக்குகளை விரைவாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்யப்போவதாக தகவல் பகிர்ந்தார்.

இதற்கிடையில், விடியல் வீரபெருமாளின் மனுவை, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, விசாரணைக்கு எடுத்து, தமிழக அரசுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் சகா, ''மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், 'பட்டாசு ஆலைகள் தொடர்பாக இன்னும் எத்தனை வழக்குகள் தாக்கல் செய்வீர்கள்? சிப்காட், சிட்கோ, ஓஎன்ஜிசி போன்று ஒரே வளாகத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஆலைகள் அனைத்தையும் அமைக்க முடியாதா?' என்று கேள்வி எழுப்பி, அடுத்த விசாரணையில் இதுபற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொழில்துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார்'' என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெம்பக்கோட்டை மற்றும் கட்டனார்பட்டி பட்டாசு ஆலை விபத்துகளில் 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் துவக்கி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதைத் தொடர்ந்து, வருவாய்த்துறை, கனிம வளத்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, காவல்துறை ஆகிய அதிகாரிகள் அடங்கிய 6 தனிப்படைகள் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், மாவட்ட ஆட்சியரும் நேரடியாக சில ஆலைகளை ஆய்வு செய்துள்ளார்.

கட்டனார்பட்டி பட்டாசு ஆலை விபத்துக்குப் பிறகு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து பிபிசி தமிழிடம் கூறிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, ''பட்டாசு ஆலைகள் என்னென்ன விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து நிரந்தரமான விதிமுறைகள் இருக்கின்றன. அவை எப்படிச் செயல்படுத்தப்படுகின்றன என்பதை ஆய்வு செய்ய சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன'' என்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து 2025 வரை மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளின் உரிமங்களை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ரத்து செய்துள்ள நிலையில், அந்த ஆலைகளில் முன் வாசல்களை மூடி பின் வாசலைத் திறந்து பட்டாசு உற்பத்தி நடப்பதாக பரவலாக புகார்கள் உள்ளன.

இதனால் பட்டாசு ஆலைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெடிபொருளின் அளவு, பணியாற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடரும் பட்டாசு ஆலை விபத்து உயிரிழப்புகள் – வழக்குகள் அதிகரித்த போதும் தீர்வு கிடைக்காதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

ஆனால், வெம்பக்கோட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வுக்குச் சென்றபோது, ஆலைகளை மூடி ஆய்வுக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். அந்த ஆலை நிர்வாகங்கள் 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென்று ஆலைகள் முன்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

உரிய விளக்கம் அளிக்கத் தவறும்பட்சத்தில் பட்டாசு ஆலைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க, தற்போது வெயில் கடுமையாக இருப்பதால் பட்டாசு ஆலைகளில் மூலப்பொருள் கலப்புப் பணியை காலை 6 மணியிலிருந்து 9 மணிக்குள் முடிக்க வேண்டுமென மத்திய அரசு சார்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

''பட்டாசு மூலப்பொருள் அளவுக்கு அதிகமாக இருப்பதும், அவற்றைக் கலப்பதில் காட்டப்படும் வேகமும்தான் பல விபத்துகளுக்குக் காரணம். ஆனால் விபத்து, உயிரிழப்பு தொடர்பான வழக்குகள் தேக்கமடைவதால் யாருக்கும் அச்சமில்லாமல் இந்த விதிமீறல்களைத் தொடர்கின்றனர். இந்த வழக்குகளில் புலன் விசாரணை நடந்தது பற்றி எந்தத் தகவலும் வெளிவருவதில்லை. நாங்கள் தாக்கல் செய்யப்போகும் புதிய மனுவில் இந்த வழக்குகளை விரைவாக முடிப்பதையே ஒரே கோரிக்கையாக வைக்கப் போகிறோம்'' என்றார் விடியல் வீரபெருமாள்.

பட்டாசு ஆலை விபத்துகளில் உரிமையாளர்களுக்கு உரிய நேரத்தில் தண்டனை கிடைத்து, சொத்துகள் முடக்கப்பட்டிருந்தால் இத்தகைய விதிமீறலும் விபத்தும் தொடர்வதற்கு வாய்ப்பில்லை என்கிறார் வழக்கறிஞர் அழகுமணி.

முறையாக ஆய்வு செய்து, அவ்வப்போது விதிமீறல்களைக் கண்டறிந்து, ஆலை உரிமங்களை ரத்து செய்தால் இந்த உயிரிழப்புகள் தொடர வாய்ப்பில்லை என்கிறார் அவர்.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரத்திலுள்ள மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தியிடம் ஆலை உரிமங்கள், விபத்துகள், விதிமீறல்கள், அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு குறித்த பல கேள்விகளையும் பிபிசி முன் வைத்தது.

அதற்கு பதிலளித்த அவர், ''டிஆர்ஓ-வுக்கு மட்டுமே இந்த அதிகாரமில்லை. தொழிலக பாதுகாப்பு, தீயணைப்புத் துறை எனப் பல துறைகளுக்கும் இந்த அதிகாரம் பகிரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஆலை உரிமங்கள், மரணங்கள், நடவடிக்கைகள் பற்றி இ பிரிவு கண்காணிப்பாளர் விவரம் தருவார்'' என்றார்.

தொடரும் பட்டாசு ஆலை விபத்து உயிரிழப்புகள் – வழக்குகள் அதிகரித்த போதும் தீர்வு கிடைக்காதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

மாவட்ட நிர்வாகத்தின் இ பிரிவு கண்காணிப்பாளர் குமாரிடம் பேசியபோது, பட்டாசு ஆலை விபத்து காரணமாகப் பல்வேறு பணிகள் இருப்பதால் உடனடியாக எந்த விவரத்தையும் பகிர முடியாது என்று கூறினார்.

அதேபோன்று, பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்யும் பொறுப்பிலுள்ள சிவகாசி தனி வட்டாட்சியர் விஜயராஜிடம் கேட்டபோது, தனக்கு ஒரேயொரு உதவியாளர் மட்டுமே இருப்பதால் ஆலைகளை முழுமையாக ஆய்வு செய்ய முடியாது என்றார்.

பிபிசியிடம் பேசிய அவர், ''மாவட்டத்தில் 1,124 பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. 60 கெமிக்கல் குடோன்கள், 4 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. எனக்கு ஒரேயொரு அசிஸ்டென்ட் மட்டுமே இருக்கிறார். இத்தனை இடங்களை ஆய்வு செய்வது சாத்தியமே இல்லை. அதனால் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கும் ஆலைகளை மட்டுமே ஆய்வு செய்ய முடிகிறது. நாங்கள் ஆய்வுக்கு வருவது முன்கூட்டியே தெரிந்து ஆலையை மூடிவிட்டு தொழிலாளர்கள் எல்லோரும் ஓடிவிடுகின்றனர்'' என்றார்.

பட்டாசு ஆலை விபத்துகளில் குற்றப் பத்திரிக்கை மற்றும் வழக்கு விசாரணை தாமதமாவது குறித்து, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் பிபிசி பேசியது.

அப்போது அவர், ''கட்டனார்பட்டி வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும், வழக்கு விசாரணையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய வழக்குகள் தொடர்பாக என்னிடம் எந்த விவரமும் இல்லை'' என்றார்.

இதுதொடர்பாக கருத்துப் பெறுவதற்காக விருதுநகர் மாவட்டத்திலுள்ள பல்வேறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அமைப்புகளைத் தொடர்புகொண்டபோது, யாரிடம் இருந்தும் பதில் பெற முடியவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு