மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பெரிய போர் வெடிக்கப்போகிறதா?
மத்திய கிழக்கில் மீண்டும் போர் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக இரானிலிருந்தே கடும் எச்சரிக்கைகள் வெளியாகி வருகின்றன.
"எங்களின் கட்டுப்பாடு எப்போதும் நிலைக்காது." என இரான் அதிஉயர் தலைவரின் ஆலோசகர் மொஹமது மொக்பெர் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? இரானை மீண்டும் தாக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் தயாராகின்றனவா? இந்த காணொளியில் பார்க்கலாம்.
இரான் அதி உயர் தலைவரின் ஆலோசகர் மொஹமது மொக்பெர் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களின் மீதான சமீபத்திய தாக்குதல்களைக் குறிப்பிட்டு பேசினார்.
"சமீபத்திய போரின்போது வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதான இரானின் பதில் தாக்குதல்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்தன. இனி அந்த கட்டுப்பாடு தொடராமல் போகலாம்" என்று அவர் எச்சரித்தார்.
மேலும், "வளைகுடா நாடுகளை இரான் நீண்ட காலமாக நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் பார்த்து வந்தது.
ஆனால் அவர்கள் தங்களின் சுதந்திரத்தை விட்டுக்கொடுத்து, தங்களின் நாடு மற்றும் வீடுகளைப் பாலத்தீன மற்றுன் இரானின் எதிரிகளிடம் கொடுத்துவிட்டனர்" என்றும் குற்றம்சாட்டினார்.
இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் உடன் தொடர்புடைய ஊடகமான நூர்நியூஸ் சில மூத்த ராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஒரு செய்தி வெளியிட்டது. அதில் "இரான் மீண்டும் தாக்கப்பட்டால் 40 நாள் போரின்போது சில காரணங்களால் குறி வைக்கப்படாத இலக்குகளும் இந்த முறை முன்னுரிமை பட்டியலில் இருக்கும்." எனக் கூறியதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக மத்திய கிழக்கில் இருந்து இரண்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், இரானை மீண்டும் தாக்குவதற்கான சாத்தியத்திற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அந்தச் செய்தியின்படி, இந்த தாக்குதல்கள் அடுத்த வாரம் தொடங்கலாம்.
தேவைப்பட்டால் போரை மீண்டும் தொடங்குவதில் இருந்து பிராந்தியத்தில் உள்ள படைகளை திரும்ப பெறுவது வரை வெவ்வேறு வகையான சூழ்நிலைகளுக்குமான திட்டங்கள் பென்டகன் வசம் இருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.
டிரம்ப் மீண்டும் இரானை தாக்க முடிவு செய்தால் இரண்டு முக்கிய நடவடிக்கைகள் இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் நியூ யார்க் டைம்ஸிடம் தெரிவித்துள்ளனர்.
ஒன்று இரானின் ராணுவ தளங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் மீது பெரிய அளவிலான தாக்குதல் நடத்துவது.
மற்றொன்று இரான் சேமித்து வைத்துள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைப்பற்ற தரைவழி ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது.
இந்த யுரேனியம் கையிருப்புகள், 12 நாள் போரின்போது நடந்த தாக்குதல்களுக்கு பிறகு அணு தள இடிபாடுகளுக்குக் கீழே புதைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதற்கிடையில் டிரம்ப், ஷி ஜின்பிங் சந்திப்புக்கு பிறகும், இரான் போர் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை பிரச்னையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்ற யூகங்கள் அதிகரித்துள்ளன.
இதற்கிடையே பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இரான் சென்றிருப்பதாக இரானின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையான IRNA தெரிவிக்கிறது.
ஹோர்மூஸ் நீரிணை வழியாக தங்களின் கப்பல்கள் செல்ல அனுமதிப்பது தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் இரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரான் தொலைக்காட்சி செய்தி நெட்வொர்க் மற்றும் இரானிய ஒளிபரப்புக் கழகம் ஆகியவற்றால் இந்தச் செய்தி வெளியிடப்பட்டதாக பிபிசி பாரசீக மொழி சேவை தெரிவிக்கிறது.
எந்தெந்த ஐரோப்பிய நாடுகள் எனப் பெயர் குறிப்பிடப்படாமல் வெளியான அந்த செய்தியில், "கிழக்கு ஆசிய நாடுகள் குறிப்பாக சீனா, ஜப்பான் மற்றும் பாகிஸ்தானின் கப்பல்களை தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணை வழியாக தங்களின் கப்பல்களும் செல்ல அனுமதி பெறுவது தொடர்பாக கடற்படையிடம் ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



