ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் அதிகம் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்

உணவு, ஊச்சச்சத்து, ஆரோக்கியம், உடல்நலம், தாதுக்கள், வைட்டமின்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜெசிகா பிராட்லி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

நமது அன்றாடச் சமையலில் பயன்படுத்தும் சில சாதாரணப் பொருட்கள், நமது ஆரோக்கியத்தில் மிகப்பெரிய ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். அவ்வாறு நாம் நமது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஏழு உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

முன்பை விட இப்போது நாம் தேர்ந்தெடுத்து உண்பதற்குப் ஏராளமான உணவு வகைகள் உள்ளன. இருப்பினும், ஒவ்வொரு நாளும் எந்த ஊட்டச்சத்துகளுக்கு முன்னுரிமை அளிப்பது? புரதச்சத்தா, நார்ச்சத்தா அல்லது வைட்டமின் சி-யா? என்பதை அறிவது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம்

இதை எளிதாக்குவதற்காக, ஆராய்ச்சியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூல உணவுகளை ஆய்வு செய்து, அன்றாட ஊட்டச்சத்துத் தேவைகளைச் சீராக வழங்கக்கூடிய சிறந்த உணவுகளைப் வரிசைப்படுத்தியுள்ளனர்.

அவற்றில் முக்கியமான ஏழு உணவுகள் மற்றும் அவற்றை ஏன் உங்கள் அடுத்த மளிகைப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதற்கான உண்மையை தெரிந்துக் கொள்ளுங்கள்.

பாதாம்

இந்தக் கொட்டை வகையில் 'மோனோஅன்சாச்சுரேட்டட்' கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ அதிகளவில் உள்ளன. இதைத் தொடர்ந்து உட்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, கெட்டக் கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஓர் ஆய்வில், நாட்பட்ட நோய்களுக்கான (இதய நோய் அல்லது வகை 2 நீரிழிவு போன்றவை) ஆபத்துக் காரணிகளைக் கொண்ட 77 பெரியவர்களைக் கொண்டு 12 வாரங்களுக்குச் சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் சிலருக்கு தினமும் 320 கலோரிகள் கொண்ட பாதாம் கொடுக்கப்பட்டால், பிறருக்கு அதே அளவு கலோரிகள் கொண்ட பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டன. 12 வாரங்களுக்குப் பிறகு, பாதாம் சாப்பிட்டவர்களுக்குக் கெட்ட கொழுப்பு குறைந்ததுடன், குடல் ஆரோக்கியம் மேம்பட்டு, உடலில் ஏற்படும் வீக்கங்களும் குறைந்திருந்தன.

உணவு, ஊச்சச்சத்து, ஆரோக்கியம், உடல்நலம், தாதுக்கள், வைட்டமின்கள், பாதாம்

பட மூலாதாரம், Getty Images

2022-ஆம் ஆண்டில் 87 பேரை உள்ளடக்கி நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், நான்கு வாரங்களுக்குத் தினமும் முழு பாதாம் அல்லது அரைத்த பாதாம் சாப்பிட்டவர்களுக்கு மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகரித்திருப்பது தெரியவந்தது.

குறிப்பாக, பாதாம் சாப்பிடுபவர்களிடம் பியூட்டிரேட் அளவு கணிசமாக அதிகமாக இருந்தது. இது பெருங்குடலில் உள்ள செல்களுக்கு எரிபொருளாகச் செயல்படும் ஒரு கொழுப்பு அமிலமாகும். இந்தச் செல்கள் குடல் நுண்ணுயிரிகள் செழிப்பதற்கும், குடல் சுவர் வலுவாக இருப்பதற்கும், ஊட்டச்சத்துக்களைச் சிறப்பாக உறிஞ்சுவதற்கும் உகந்த சூழலை உருவாக்குகின்றன.

கூடுதலாக, பிற குழுக்களுடன் ஒப்பிடும்போது, முழு பாதாம் சாப்பிடுபவர்களுக்கு வாரத்திற்கு 1.5 முறை கூடுதலாக மலம் கழித்தல் நிகழ்ந்தது.

உணவு, ஊச்சச்சத்து, ஆரோக்கியம், உடல்நலம், தாதுக்கள், வைட்டமின்கள், பீட்ருட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பீட்ரூட் கீரை ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் ரத்த நாளங்களின் உட்புற அடுக்கைக் குணப்படுத்துகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்

பெரும்பாளைக் கீரை

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பெரும்பாளைக் கீரை, 'பீட்டாலைன்ஸ்' எனப்படும் ஒரு அரிய வகை தாவர வேதிப்பொருள் கொண்ட உணவாகும். இது நரம்பு மண்டலத்தைப் பாதிப்புகள் மற்றும் முதுமையின் விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் "நியூரோபுரோடெக்டிவ்" பண்புகளைக் கொண்டுள்ளது.

"பெரும்பாளைக் கீரையில் நைட்ரேட்டுகள் உள்ளன. இவை உடலில் 'நைட்ரிக் ஆக்சைடு' உற்பத்தியாக உதவுகின்றன. இந்த மூலக்கூறு நமது ரத்த ஓட்ட மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது," என்று சொல்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ஆஞ்சியோஜெனிசிஸ் அறக்கட்டளையின் தலைவர் வில்லியம் லி.

பெரும்பாளைக் கீரையில் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முதுமையின் காரணமாகச் சேதமடையக்கூடிய ரத்த நாளங்களின் உட்புறச் சுவர்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது என்று வில்லியம் லி கூறுகிறார்.

இதில் உள்ள குவெர்செடின், கேம்ப்ஃபெரால் போன்ற பாலிஃபீனால்கள், "நமது செல்களைப் பாதுகாக்கும் மற்றும் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கும் வலிமைமிக்க ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாகச் செயல்படுகின்றன" என்கிறார் அவர்.

நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமான இதில், ஆற்றலுக்குத் தேவையான மெக்னீசியம், ரத்தம் உறைவதற்குத் தேவைப்படும் வைட்டமின் கே மற்றும் கண் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான லூடின் ஆகியவையும் உள்ளன.

ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், கண் பார்வையைப் பராமரிக்கவும், மூளை, இதயம் மற்றும் ஒட்டுமொத்த ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் விரும்பும் முதியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பெரும்பாளைக் கீரையை உட்கொள்வதற்கான சிறந்த வழி, அதை அதிகமாக வேக வைக்காமல் இருப்பதுதான், ஏனெனில் அதிக வெப்பத்தில் வேக வைக்கும்போது சில ஊட்டச்சத்துக்கள் போய்விடும் என்று லி கூறுகிறார். அதிக வெப்பம் அதன் ஊட்டச்சத்துக்களை அழித்துவிடும். மேலும், இதன் இலைகளில்தான் பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

நீர்க்கடுகுக் கீரை

இந்த இலைக் காய்கறி 'பிராசிகா' குடும்பத்தைச் சேர்ந்தது (இதில் ப்ரக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் கேல் ஆகியவையும் அடங்கும்).

நீர்க்கடுகுக் கீரையில் பி வைட்டமின்கள் (பி1, பி2, பி3, பி6, சி, இ), கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பாலிஃபீனால்கள் போன்றவை அதிகளவில் உள்ளன. இதில் உள்ள லூடின் மற்றும் பீட்டா-கரோட்டின் ஆகியவை கண் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்புச் சக்திக்கும் உதவுகின்றன.

நீர்க்கடுகுக் கீரையை வழக்கமாக உண்பது உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க உதவும். நீண்ட கால அடிப்படையில் இதய நோய் மற்றும் நீரிழிவு அபாயத்தைக் குறைப்பதோடு, ஆரோக்கியமற்ற கொழுப்பின் அளவையும் இது குறைக்கிறது.

புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட 'பினெத்தில் ஐசோதியோசயனேட்' என்ற இயற்கைக் கலவை நீர்க்கடுகுக் கீரையில் உள்ளது. ப்ரக்கோலிக்கு அடுத்தபடியாக, இந்தச் சத்து அதிகமுள்ள சிறந்த ஆதாரமாக இது கருதப்படுகிறது.

2018-ஆம் ஆண்டில் 'வேர்ல்ட் ஜர்னல் ஆஃப் சைக்கியாட்ரி' நடத்திய ஆய்வில், நீர்க்கடுகுக் கீரையில் சிறந்த மன அழுத்த எதிர்ப்புத் தாவரங்களில் முதலிடம் பிடித்தது. இரும்புச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் இதில் மிக அதிகமாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.

உணவு, ஊச்சச்சத்து, ஆரோக்கியம், உடல்நலம், தாதுக்கள், வைட்டமின்கள், பீட்ருட்

பட மூலாதாரம், Getty Images

ஊட்டச்சத்து பொக்கிஷம் பீட்ரூட் கீரைகள்

பீட்ரூட்டை நாம் அனைவரும் விரும்பி உண்டாலும், அதன் இலைகளை பயன்படுத்தாமல் குப்பையில் எறிந்துவிடுகிறோம். பீட்ரூட் கீரையில் ஒளிந்துள்ள அபரிமிதமான சத்துக்களைப் பற்றி பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை.

பீட்ரூட் என்றாலே அதன் கிழங்கு பகுதிதான் உணவு என்று நாம் பழகிவிட்டோம். பொதுவாக, பீட்ரூட் மட்டுமே விற்கப்படுகிறது, அதன் இலைகளான ஊட்டச்சத்துமிக்க கீரைகள் உண்ணத் தகுதியற்றவை அல்லது இரண்டாம் தரமானவை என்ற தவறான புரிதலால் விற்கப்படுவதில்லை.

பீட்ரூட் கீரையில் நன்மை பயக்கும் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் கே மற்றும் பி குழு வைட்டமின்கள் அதிலும் குறிப்பாக ரிபோஃப்ளேவின் நிறைந்துள்ளன.

அதிக அளவிலான புரதங்கள் மற்றும் தாதுக்களைக் கொண்ட பீட்ரூட் கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட் செயல்பாட்டுடன் தொடர்புடைய ஃபீனாலிக் சேர்மங்களையும் கொண்டுள்ளன என கேம்பினாஸ் மாகாணப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரும், பாலிஸ்டா பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக மையத்தின் பேராசிரியருமான லூயிஸ் குஸ்டாவோ சபோயா போன்டே கூறுகிறார்.

2019-ஆம் ஆண்டில், அதிக எடை மற்றும் உடல் பருமன் கொண்ட, அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் உள்ள பெரியவர்கள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பங்கேற்பாளர்கள் உலர்த்தப்பட்ட பீட்ரூட் கீரைகளை நான்கு வாரங்களுக்கு சாப்பிட்டனர், அவர்களின் எல்.டி.எல் கொலஸ்ட்ரால் குறைந்ததைக் கண்டனர்.

கடந்த ஆண்டு, பீட்ரூட் கீரைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உயிரியல் ரீதியாகக் கிடைக்கக்கூடியவையா என்பதை நிரூபிக்க போன்டே முயன்றார். அதாவது, அவற்றின் உள்ளடக்கங்களை நம்மால் செரித்து பயனடைய முடியும் என்பதை இது குறிக்கும்.

"ஆய்வகத்தில் செரிமானத்தைப் போன்ற செயற்கை சூழலுக்கு உட்படுத்தப்பட்ட பிறகும், பீட்ரூட் இலைகள் உயிரியல் ரீதியாக வீரியத்துடன் இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. செரிக்கப்பட்ட அந்த இலைகள் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டிருந்ததோடு, டி.என்.ஏ ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் சேதமடையாமல் பாதுகாக்கவும் உதவின.

போன்டே, செரிக்கப்பட்ட இலைகளை பெருங்குடல் புற்றுநோய் செல்களிலும் சோதித்தார். செல் வளர்ச்சி மற்றும் காலனி உருவாக்கம் குறைந்திருப்பதை அவர் கண்டார்.

இருப்பினும், சில எச்சரிக்கையான அணுகுமுறை அவசியம் என்று அவர் கூறுகிறார். இலைகளில் உள்ள சில சேர்மங்கள் செரிமானத்திற்கு பிறகும் அப்படியே இருந்தபோதிலும், வைடெக்சின் மற்றும் அபிஜெனின் உள்ளிட்ட மற்ற சில சத்துக்கள் செரிமானத்திற்குப் பிறகு குறைந்த அளவிலேயே கண்டறியப்பட்டன.

பீட்ரூட் இலைகளில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் நம்மால் பெற முடியும் என்பதை முழுமையாக உறுதிப்படுத்த, முழுமையான செரிமான செயல்முறையைக் கருத்தில் கொள்ளும் மனித மற்றும் ஆய்வக ஆய்வுகள் தேவைப்படும் என போன்டே கூறுகிறார்.

இருப்பினும், பீட்ரூட் இலைகள் சாத்தியமான மதிப்புமிக்க ஓர் உணவாகும் என்பதை நிரூபிக்கத் தனது கண்டுபிடிப்புகள் உதவியதாகப் பொன்டே கூறுகிறார்.

உணவு, ஊச்சச்சத்து, ஆரோக்கியம், உடல்நலம், தாதுக்கள், வைட்டமின்கள், சியா விதைகள்

பட மூலாதாரம், Getty Images

சியா விதைகள்

சிறிய கருப்பு நிற விதைகளான சியா விதைகள் நார்ச்சத்து, புரதம், ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம், பீனாலிக் அமிலம் மற்றும் வைட்டமின் B போன்ற சத்துக்களின் சுரங்கமாக விளங்குகின்றன.

இதயத்தையும் கல்லீரலையும் பாதுகாக்க உதவும் தாவர ரசாயனங்களைக் கொண்டுள்ள சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன.

இதய நோயின் அபாயத்தைக் குறைத்தல், ஆரோக்கியமான கொழுப்பின் அளவை மேம்படுத்துதல், ரத்த அழுத்தத்தைக் குறைத்தல், நீரிழிவு நோயில் வகை 2 மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைத்தல் உள்ளிட்ட எண்ணற்ற உடல்நலப் பலன்களை சியா விதைகள் தருகின்றன.

சியா விதைகளில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், நாம் அவற்றைச் சாப்பிடும் முறை நமக்கு முழுப் பலனையும் தருவதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ரேச்சல் பர்டன், இது குறித்து 2023-இல் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். இணையத்தில் சியா விதைகள் பற்றிச் சொல்லப்படும் பல தகவல்களுக்குப் பின்னால் போதிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்பதை அவர் கண்டறிந்தார்.

"சியா விதைகளை உட்கொள்வது தொடர்பாக, குறிப்பாக நமது குடல் நுண்ணுயிரிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து, இணையம் முழுவதும் பல உடல்நலக் கூற்றுகள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றை ஆதரிக்க உறுதியான அறிவியல் சான்றுகள் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை" என்கிறார் அவர்.

"உணவு நார்ச்சத்து ஒரு முக்கிய உணவுப் பொருளாகும், நம்மில் பெரும்பாலோர் அதை போதுமான அளவு சாப்பிடுவதில்லை. சியா பற்றிய கூற்றுகள் தவறாக இருந்து, மக்கள் இந்த அடிப்படையில் ஒரு விலையுயர்ந்த உணவுப் பொருளுக்குப் பணம் செலுத்துகிறார்கள் என்றால், இதைத் தெரிந்துகொள்வது முக்கியம்" என்கிறார் அவர்.

தனது 2023 ஆய்வில், பர்ட்டன் தொடர்ச்சியான ஆய்வக சோதனைகளை மேற்கொண்டார். நாம் வழக்கமாக உட்கொள்ளும் முழு சியா விதைகளையும், அரைத்த சியா விதைகளையும் அவர் ஒப்பிட்டுப் பார்த்தார். முழு சியா விதைகளைச் சாப்பிடுவது, அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை நாம் முழுமையாக உறிஞ்சுவதைத் தடுக்கக்கூடும் என்று அவர் ஆய்வகத்தில் கண்டறிந்தார்.

சியா விதைகள் இரண்டு கூறுகளால் ஆனவை. விதையின் வெளிப்புறத்தில் உள்ள ஜெல் போன்ற படலம், இதில் நார்ச்சத்து உள்ளது, மற்றும் விதைக்குள் இருக்கும் ஒமேகா கொழுப்புகள், குறிப்பாக ஒமேகா-3.

"முழு சியா விதைகளைச் சாப்பிடுவதன் மூலம், அதில் இருப்பதாகக் கூறப்படும் ஊட்டச்சத்துக்கள் உண்மையில் நமக்குக் கிடைப்பதில்லை" என்கிறார் அவர்.

சியா விதையின் உட்புறம் உள்ள ஜெல் போன்ற படலம் விதையிலிருந்து பிரிந்து வருவதில்லை என்பதுடன் ஒமேகா கொழுப்புகள் விதைக்குள்ளேயே சிக்கிக்கொள்கின்றன.

"எனவே, சியா விதைகளை நீண்ட நேரம் மென்று உண்ணாவிட்டால் அவை நமது குடலில் எந்த மாற்றமும் இன்றி கடந்து சென்றுவிடும்" என்கிறார் பர்டன்.

எனவே சியா விதைகளை அரைத்து பயன்படுத்துவது ஒமேகா கொழுப்புகள் சுலபமாக நமது உடலுக்கு கிடைக்க உதவுகிறது. எனவேதான், சியா விதையைப் போன்றே ஆளி மற்றும் லின்சீட் உள்ளிட்ட பிற விதைகளையும் அரைக்குமாறு பர்டன் அறிவுறுத்துகிறார்.

பூசணி விதை, உணவு, ஊச்சச்சத்து, ஆரோக்கியம், உடல்நலம், தாதுக்கள், வைட்டமின்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கான அருமருந்து பூசணி விதைகள்

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. இவை பல நோய்களின் அபாயத்தைக் குறைப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகின்றன.

ஆனால், விதையில் உள்ள கொழுப்பின் அளவு பூசணியின் வகைகளுக்கு ஏற்ப மாறுபடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகளவில் சுமார் 150 வகையான பூசணிகள் உள்ளன.

பூசணி விதைகளில் உள்ள லினோலிக் அமிலம், ஒலிக் அமிலம் மற்றும் பால்மிடிக் அமிலம் ஆகியவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

பூசணி விதைகளுக்கு நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் ஆற்றல் உண்டு. அதாவது, ஈயம் மற்றும் பாதரசம் உள்ளிட்ட நச்சுப் பொருட்கள், சில மருந்துகள், விவசாயப் பூச்சிக்கொல்லிகள் மற்றும் மதுபானங்களால் மூளை, நரம்புகள் அல்லது மன ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க பூசணி விதை உதவுகின்றன.

ஆய்வில், விஞ்ஞானிகள் 50 எலிகளை ஐந்து குழுக்களாகப் பிரித்தனர். இரண்டு வாரங்களுக்கு, ஒரு குழுவிற்கு அடிப்படை உணவு வழங்கப்பட்டது, மற்ற குழுக்களுக்கு வறுத்த அல்லது பச்சை பூசணி விதைகள் இரண்டு வெவ்வேறு அளவுகளில் துணை உணவாகக் கொடுக்கப்பட்டன.

50 எலிகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு 2025-ல் வெளியிடப்பட்டது. அதன்படி, எலிகளுக்கு வறுத்த மற்றும் பச்சையான பூசணி விதைகள் உணவாக வழங்கப்பட்டன.

பூசணி விதைகளை உட்கொண்ட எலிகள் அனைத்திற்கும் கவலை குறைந்து, அறிவுத்திறன் மற்றும் நினைவாற்றல் அதிகரித்தது கண்டறியப்பட்டது. அதிலும் வறுத்த பூசணி விதைகள் அதிகபட்ச நன்மைகளைக் காட்டின ஒருவேளை, வறுக்கும் செயல்முறையானது விதைகளின் செல்களை உடைத்து, அவற்றின் சுவர்களுடன் இணைக்கப்பட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்களை வெளியிடுவதன் மூலம், விதைகளின் ஊட்டச்சத்துக்களை உயிரியல் ரீதியாக எளிதில் கிடைக்கச் செய்வதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது

டேன்டேலியன் கீரைகள், உணவு, ஊச்சச்சத்து, ஆரோக்கியம், உடல்நலம், தாதுக்கள், வைட்டமின்கள்

பட மூலாதாரம், Getty Images

டேன்டேலியன் கீரைகள்

ஆரோக்கியமான மற்றும் பலதரப்பட்ட உணவுகளை உண்பதற்கு ஒரு முக்கியத் தடையாக இருப்பது, அந்த உணவுகள் நமக்கு எளிதில் கிடைப்பதே இல்லை என்பதுதான். ஆனால் அதிர்ஷ்டவசமாக, வசந்த காலம் வந்துவிட்டால் டேன்டேலியன் கீரைகள் நம் அனைவருக்குமே மிக எளிதாக, தாராளமாகக் கிடைக்கின்றன.

முதல் பார்வையில் டேன்டேலியன் கீரைகள் ஒரு சமையலறை உணவாகத் தெரியாமல் போகலாம். ஆனால், இதில் வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் கொண்ட சேர்மங்கள் நிறைந்துள்ளன.

சில ஆய்வுகள், இதய நோய் அபாயத்தைக் குறைப்பதோடு இதற்கும் தொடர்பு இருப்பதாகக் காட்டுகின்றன; இருப்பினும், மனிதர்களிடம் இது குறித்து இன்னும் விரிவான ஆராய்ச்சிகள் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதில் 'பீனாலிக்' அமிலங்கள், ஃபிளாவனாய்டுகள், வைட்டமின் ஏ, சி, இ, கே, பி மற்றும் கால்சியம், சோடியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு என தாதுக்கும் நிறைந்துள்ளது.

டேன்டேலியன் இலைகள் உலகம் முழுவதும் பல்வேறு முறைகளில் பயன்படுத்தப்படுகின்றது. சாலட்கள் மற்றும் சூப்களில் பயன்படுத்தப்படுகின்றன. உணவுகளில் பிரத்யேகச் சுவையைச் சேர்க்கவும், சிரப்கள் தயாரிக்கவும் இவை உதவுகின்றன.

ஒயின் தயாரிப்பிலும், தேநீர் மற்றும் காபிக்கு மாற்றாகவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு