சிஎஸ்கே பிளேஆஃப் முன்னேற முடியுமா? மும்பையை கேகேஆர் வீழ்த்தியதால் மாறும் நிலவரம்

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், நிதீஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பில்லாத அணியாக சில கிரிக்கெட் விமர்சகர்களால் கணிக்கப்பட்ட அணி கொல்கத்தா நைட்ரைடர்ஸ். இதற்கு காரணம் அந்த வல்லுநர்கள் கொல்கத்தா அணியின் வீரர்களை குறைத்து மதிப்பிட்டார்கள் என்பதல்ல. இத்தனைக்கும் இந்த சீசனுக்கான ஏலம் முடிந்தபின் பவுலிங்கில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டது கொல்கத்தா நைட்ரைடர்ஸ். ஆனால் அரசியல் காரணம், காயம் உள்ளிட்டவற்றால் அந்த அணியின் வீரர்கள் ஒவ்வொருவராக தொடரில் பங்கேற்க முடியாமல் போக, இருக்கும் வீரர்களை வைத்து சமாளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது கொல்கத்தா.
நிபுணர்கள் பலரும் கணித்தது போலவே முதல் ஆறு ஆட்டங்களில் ஒரு வெற்றி கூட இல்லை. ரஹானேவின் தலைமைப் பண்பும் பேட்டிங்கும் கடும் விமர்சனத்துக்குள்ளானது. பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட கேமரூன் க்ரீனின் மோசமான ஃபார்ம் கண்டு கொல்கத்தா ரசிகர்களே கொதித்துப் போனார்கள். ஒரே போட்டியில் நான்கு விக்கெட் வீழ்த்திய முஸரஃபானி அதற்கடுத்து இன்றுவரை ஆடவே இல்லை. இப்படியான ப்ளேயிங் லெவன் குழப்பங்களால் அணி நிர்வாகமும் கேள்விகளுக்கு உள்ளானது.
இதெல்லாம் தொடரின் முதல் பாதிக்கதை. இரண்டாம் பாதியில் அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஓப்பனிங்கில் ஃபின் ஆலன் ரன்களை குவிக்கத் தொடங்கினார். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சொல்லி வைத்தது போல ஃபார்முக்கு வந்தார் கேமரூன் க்ரீன். ரகுவன்ஷி மிடில் ஆர்டரில் ஸ்திரத்தன்மை கொடுத்தார். கார்த்திக் தியாகி தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் தொடரின் இரண்டாம் பாதியில் ஆடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முன்னேறியது கொல்கத்தா.
மும்பையுடனான ஆட்டத்தில் வென்றால் சென்னையையும் தாண்டி ஆறாவது இடத்துக்கு சென்றுவிடலாம் என்கிற நிலையில் நேற்று ஈடன் கார்டனில் களமிறங்கியது கொல்கத்தா.

பட மூலாதாரம், ANI
வீழ்ந்த மும்பை பேட்டிங்... சாதித்த கொல்கத்தா பவுலர்கள்
இந்த ஆட்டத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிட்ச்சில் இதற்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோடு மோதி சேஸ் செய்து வெற்றி பெற்றிருந்தது கொல்கத்தா. மழை வேறு பெய்துகொண்டே இருந்ததால் டாஸ் ஜெயிக்கும் அணி நிச்சயம் சேஸ் தான் செய்யும் என்பது நிச்சயமானது. டாஸ் வென்ற ரஹானேவும் பவுலிங் தேர்வு செய்தார்.
மும்பை அணியில் கடந்த சில போட்டிகளில் விளையாடியிராத ஹர்திக் பாண்டியா கேப்டனாக அணிக்குத் திரும்பினார். காயம் காரணமாக கடந்த போட்டியை தவறவிட்ட சூர்யகுமாரும் அணிக்குள் இருந்தார். ஸ்லோ விக்கெட் என்பதால் முதல் ஓவரே அனுகுல் ராய். அந்த ஓவரிலும் சவுரப் தூபே வீசிய இரண்டாவது ஓவரிலும் மொத்தமாய் சேர்த்து பத்து ரன்களே. க்ரீன் வீசிய மூன்றாவது ஓவரை பவுண்டரியோடு தொடங்கினார் ரோஹித் சர்மா. அதே ஓவரின் மூன்றாவது பந்தில் டாப் எட்ஜாகி ரிக்கெல்டன் அவுட். ஒன் டவுன் (One down) இறங்கிய நமன் தீரும் அதே ஓவரில் டக் அவுட்.

பட மூலாதாரம், ANI
விக்கெட்களை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல் அடுத்த ஓவரில் மிட்விக்கெட் திசையில் ஓடி ஒரு அபாரமான கேட்ச்சும் எடுத்தார் க்ரீன். ரோஹித் சர்மாவும் அவுட். மும்பை நான்கு ஓவர்களில் 24/3 என்கிற கடினமான நிலைக்கு சென்றது. இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய சூர்யகுமாரும் பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் துபே பந்துவீச்சில் போல்ட்டானார். மும்பை அணியின் ஸ்கோர் பவர்ப்ளே முடிவில் 46/4.
களத்திலிருந்த பாண்டியாவும் திலக் வர்மாவும் விக்கெட்களை விட்டுக்கொடுக்காமல் இருப்பதிலேயே கவனம் செலுத்த, ரன்ரேட் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்துகொண்டே இருந்தது. போதாக்குறைக்கு மழையும் வந்து 45 நிமிடங்களுக்கு ஆட்டத்தை தடைசெய்ய பேட்டிங் செய்வது இன்னும் சிரமமானது. ஒரு கட்டத்தில் இது டி20யா இல்லை ஒருநாள் போட்டியா என சந்தேகம் எழும் அளவுக்கு மிகக்குறைந்த ரன்ரேட். இருவரும் அடுத்த 8 ஓவர்களில் 43 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். 14வது ஓவரில் திலக் வர்மா அவுட்டானபோது அவரின் பங்களிப்பு 32 பந்துகளில் 20 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 62.5
நரைன் வீசிய 16வது ஓவரில் ஹர்திக் பாண்டியாவும் அவுட். அவரின் பங்கு 27 பந்துகளில் 26 ரன்கள். பாண்டியாவின் விக்கெட்டை நரைன் வீழ்த்துவது இதுவே முதல்முறை. யாராவது ஒருவர் வந்து அதிரடியாக ஆடினால் மட்டுமே மும்பைக்கு கவுரவமான ஸ்கோர் சாத்தியம் என்கிற நிலையில் அந்தப் பொறுப்பை கையிலெடுத்துக் கொண்டார் கார்பின் போஷ்.
அவரோடு தீபக் சஹாரும் இணைந்துகொள்ள இந்த இணை கடைசி 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தது. அதுவும் இந்த சீசனில் கொல்கத்தா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியிருக்கும் கார்த்திக் தியாகியின் ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 19 ரன்கள் எடுத்தார் போஷ். 20 ஓவர்கள் முடிவில் மும்பை 147/8.

பட மூலாதாரம், ANI
நீண்ட இடைவெளிக்குப் பின் மணிஷ் பாண்டே
கொல்கத்தா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஃபின் ஆலன் அதிரடியாக ஆடினால் மட்டுமே நல்ல ரன்ரேட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற முடியும் என்பதுதான் நிலைமை. ஆனால் அவரோ தீபக் சஹாரின் முதல் ஓவரிலேயே அவுட். ஒன் டவுன் இறங்கியது மணிஷ் பாண்டே.
2014ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் அதிரடியாக 94 ரன்கள் குவித்து கொல்கத்தா கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த மணிஷ் பாண்டே மீண்டும் நேற்று ஒருமுறை தன் மீதான அணியின் நம்பிக்கையை காப்பாற்றினார். ஒருபக்கம் ரஹானே, க்ரீன் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் ரோவ்மன் பவுலுடன் இணைந்து 15வது ஓவர் வரை நிலைத்து நின்று ஆடினார். இந்த இணை 41 பந்துகளில் 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொல்கத்தாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. மணிஷ் பாண்டே 33 பந்துகளில் 45 ரன்களும் பவுல் 30 பந்துகளில் 40 ரன்களும் எடுக்க 18.5 ஓவர்கள் முடிவில் இலக்கை அடைந்தது கொல்கத்தா. மணிஷ் பாண்டே தான் ஆட்டநாயகனும். ஆறு ஆண்டுகளுக்குப் பின் அவர் வாங்கிய ஆட்டநாயகன் விருது இது.

பட மூலாதாரம், ANI
சிஎஸ்கே பிளேஆஃப் முன்னேற முடியுமா?
இந்த வெற்றியுடன் கொல்கத்தா 13 புள்ளிகளோடு ஆறாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தன் இறுதி லீக் போட்டியில் டெல்லி அணியை சந்திக்க உள்ளது. டெல்லி அணியை கொல்கத்தா வீழ்த்தி, பஞ்சாபும், ராஜஸ்தானும் தங்களின் இறுதி லீக் போட்டிகளில் தோற்றால் கொல்கத்தா பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும்.
ஒருவேளை பஞ்சாப் தன் இறுதி லீக் போட்டியில் வென்று கொல்கத்தாவும் ராஜஸ்தானும் தங்களது லீக் இறுதிப்போட்டிகளில் தோற்றால் பஞ்சாப் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை அந்த அணி வென்றால் மட்டுமே போதும். 16 புள்ளிகளுக்கு சென்றுவிடும். அதன்பின் பஞ்சாப், கொல்கத்தா அணிகள் வெற்றி பெற்றாலும் அந்த இரண்டு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை சென்னை இறுதி லீக் போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வெல்ல வேண்டும். பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா ஆகிய மூன்று அணிகளும் தோற்க வேண்டும். அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டும். இதெல்லாம் நடந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற ஒரு வாய்ப்பிருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























