தென் கொரியா: கோவிலில் டேட்டிங் செய்யும் இளைஞர்கள், காதலில் விழ உதவும் பௌத்த துறவிகள்

பட மூலாதாரம், BBC/ Hosu Lee
- எழுதியவர், ஜேக் க்வோன்
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
அடர் ஆரஞ்சு நிற உடையில் இருக்கும் ஒரு பௌத்த துறவி, தன் முன் இருக்கும் இளம் ஆண்கள், பெண்களைப் பார்த்து, அவர்கள் தங்கள் நாட்டைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இங்கு வந்திருப்பதாகக் கூறுகிறார்.
ஒரு துணையைத் தேடிக் கண்டுபிடித்து, ஒரு நாள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதே அந்த நோக்கம். அங்கு வந்திருப்பவர்கள் தங்களுக்கு அமையப் போகும் இணையைப் பார்த்தபடி, ஒருவித பதற்றத்துடன் சிரிக்கிறார்கள். இது ஏதோ புதிய பிரபலமான ரியாலிட்டி ஷோவின் தொடக்கம் அல்ல.
தென்கொரியாவின் பால்கோங்சன் மலையின் பசுமையான சூழலுக்கு நடுவில் அமைந்துள்ள, 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த கோவில் ஒன்றில் நடத்தப்படும் ஒரு நிஜ வாழ்க்கை டேட்டிங் முகாம் இது.
இந்த நிகழ்வு தொடர்ந்து 30 மணிநேரம் நடைபெறுகிறது. இதில் அடுத்தடுத்துப் பல செயல்பாடுகளும், தொடர்ச்சியான சில சங்கடமான தருணங்களும் இருக்கும். இவை அனைத்துமே அவர்களுக்குள் இருக்கும் தயக்கத்தை உடைத்து, காதலைக் கண்டறிவதற்காக செய்யப்படுகின்றன.
"நம் நாடு ஆபத்தில் இருக்கும்போதெல்லாம், பௌத்தர்கள்தான் எப்போதும் முதலில் களத்தில் இறங்கிச் செயல்பட்டு இருக்கிறார்கள்," என்று இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் யூ சியோல்-ஜூ கூறுகிறார்.
கடந்த 1500களில் ஜப்பானிய படையெடுப்பாளர்களிடம் இருந்து கொரியாவை பாதுகாப்பதற்காக, இந்த டோங்வாசா கோவில், துறவிப் படைகளின் முகாமமாகப் பயன்படுத்தப்பட்டதை அவர் குறிப்பிடுகிறார்.
ஆனால், இந்த முறை வெளிநாட்டில் இருந்து அச்சுறுத்தல் வரவில்லை. "குறைந்த பிறப்பு விகிதம் என்பது ஒரு தேசிய நெருக்கடி. இதற்கு நாங்கள் ஏதாவது செய்தாக வேண்டும்" என்கிறார் யூ.
உலகின் பிற இடங்களைப் போலவே, தென்கொரியாவும் அதிக செல்வம் மிக்க நாடாக மாறியதால், அங்கு பிறப்பு விகிதம் கடுமையாகக் குறைந்துள்ளது. 2023ஆம் ஆண்டில், ஒரு தென்கொரிய பெண் தனது வாழ்நாளில் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை (மொத்த கருவுறுதல் விகிதம்) 0.72 என்று இதுவரை இல்லாத வகையில் சரிவைச் சந்தித்தது.
இது மக்கள் தொகை நிலையாக இருப்பதற்குத் தேவையான 2.1 என்ற விகிதத்தைவிட மிகக் குறைவு. இதற்குக் காரணம் மிக வேகமாக உயர்ந்து வரும் அன்றாடச் செலவுகளும், குழந்தைகளைப் பராமரிப்பதற்கான நிதி உதவி இல்லாததும்தான் என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

பட மூலாதாரம், BBC/ Hosu Lee
மற்றவர்களோ, பெண்கள் தங்களது வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அல்லது தங்கள் சுய விருப்பத்தைத் தேர்வு செய்வதாகக் கூறுகிறார்கள்.
தற்போதைய தென்கொரிய இளைஞர்கள் முன் எப்போதையும்விட வெளியில் செல்வதையும், டேட்டிங் செய்வதையும் குறைத்துக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
சிலர் தனிமையில் வாழ விரும்பினாலும், பலர் தங்களுக்கான துணையைத் தேடிக் கண்டுபிடிக்கவே சிரமப்படும் சூழலும் இருக்கிறது. இது திருமண விகிதங்களைக் குறைத்து வருகிறது.
அரசாங்கம் இப்போது நீண்டகால பெற்றோர் விடுப்பு, குழந்தை வளர்ப்புக்கான போனஸ், புதிதாகத் திருமணமான தம்பதிகளுக்கு மானிய விலையில் குடியிருப்புகள் போன்றவற்றை வழங்கத் தொடங்கியுள்ளது.
உள்ளூர் அரசுகளும் குடிமை அமைப்புகளும் இதற்கும் ஒரு படி மேலே சென்று, டோங்வாசா கோவிலில் நடப்பது போன்ற அரசாங்க ஆதரவு பெற்ற வரன் தேடும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றன.
இந்த நிகழ்ச்சிகள், நீங்கள் கற்பனை செய்வதைவிட மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கின்றன.

பட மூலாதாரம், BBC/ Hosu Lee
பௌத்த பெயரான சுன்ஹேஜி என்ற பெயரால் அழைக்கப்படும் கிம் ஆ-க்யுங், அங்கு முதலில் வந்தவர்களில் ஒருவர். சுறுசுறுப்புடன் இருக்கும் 28 வயது பெண்ணான அவர், கோவில் வளாகத்தில் உள்ள ஒரு பங்களாவின் திண்ணையில் அமர்ந்து, அறைக்குள் வரத் தொடங்கும் மற்ற பெண்களுக்கு வணக்கம் சொல்கிறார்.
இவர்கள் அனைவரும் திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள் என்பதை மதிப்பிடுவதற்கான கேள்வித்தாள்கள் மற்றும் செல்ஃபி வீடியோக்களை உள்ளடக்கிய, நம்ப முடியாத அளவுக்குக் கடினமான ஒரு தேர்வு முறையில் தகுதிபெற்று இங்கு வந்துள்ளனர்.
மத வேறுபாடின்றி அனைவருக்குமான ஒன்றாக நடக்கும் இந்த முகாமில் கலந்துகொள்ள, 1,580க்கும் மேற்பட்டோரைத் தோற்கடித்து இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சுன்ஹேஜி, சியோல் பகுதியை விட்டு வெளியேறி தென்கிழக்கு மாகாணங்களில் உள்ள ஓர் அலுவலகப் பணிக்குச் சென்ற பிறகு, தனக்கு ஏற்ற ஒரு துணையைத் தேடிக் கண்டுபிடிப்பதில் சிரமத்தைச் சந்தித்துள்ளார்.
"ஆண்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பே உண்மையில் அங்கு இல்லை" என்று கூறும் அவர், "நான் வேலைக்கும் வீட்டுக்கும் மட்டுமே சென்று வருகிறேன். எனக்கென எந்தப் பொழுதுபோக்கும் இல்லை. ஒன்றை உருவாக்க முயன்றேன், ஆனால் அவை எல்லாமே தனிநபர் சார்ந்த செயல்பாடுகளாக மட்டுமே இருந்தன" என்கிறார். அதோடு, அவரது அலுவலகத்தில் இருக்கும் மற்ற அனைவரும் அவரைவிட மிகவும் வயதானவர்களாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தென் கொரியாவில் டேட்டிங் செய்வது கடினமாக இருக்கலாம். மக்கள் பொதுவாக பள்ளி, வேலை அல்லது 'சொகேடிங்'(அறிமுகமில்லா சந்திப்புகள்) மூலமாகவே தங்களது காதல் துணையைச் சந்திக்கிறார்கள்.
'சொகேடிங்' என்பது நண்பர்கள் அல்லது குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புகள். அதுவும் சாத்தியமில்லாதபோது, பெரிய நகரங்களில் சாதாரண பேச்சுவார்த்தைகள்கூட அரிதாகிவிடுகின்றன. மது அருந்தும் பழக்கமும் குறைந்துவிட்டது. டேட்டிங் செயலிகள் இங்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

பட மூலாதாரம், BBC/ Hosu Lee
கடந்த 2015ஆம் ஆண்டில், பல ஆண்டுகள் தேக்க நிலையில் சென்ற வளர்ச்சிக்குப் பிறகு, டிண்டர் செயலி இளைஞர்களைக் கவரும் வகையில், தன்னை ஒரு நண்பர்களைக் கண்டறியும் செயலியாக விளம்பரப்படுத்தத் தொடங்கியது.
பௌத்த பெயரான என்யோ என்ற பெயரால் அழைக்கப்படும் 30 வயது ஆணான குவோன் சியுங்-ஓ, இணையத்தில் அறிமுகமில்லாத ஒரு நபரைச் சந்திப்பது என்ற யோசனையை எப்போதுமே தவிர்த்து வந்துள்ளார்.
அவரது நண்பர்கள் அவரை சுமார் 10 முறை அறிமுகமில்லாத நபர்களுடன் டேட்டிங் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் அவை அனைத்தும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத, மேலோட்டமான உரையாடல்களாக மட்டுமே இருந்ததாக அவர் கருதினார்.
மேலும், டேகு நகரத்திற்கு வெளியே உள்ள ஒரு பெரிய பால் பண்ணைத் தொழிற்சாலையில் அவருடன் பணிபுரிபவர்களில் 97% பேர் ஆண்கள் தான். எனவே இப்போது, அவரும் டோங்ஹ்வாசா கோவிலுக்கு வந்துள்ளார்.
அந்த நாள் தொடங்குவதற்கு முன்பே ஆண்களின் கண்ணியம் வெளிப்படத் தொடங்குகிறது. பெண்கள் அந்த வளாகத்திற்கு வந்ததும், அவர்களைச் சந்திக்க விரும்பும் ஆண்கள் விரைந்து வந்து, அவர்களின் பொருட்களை அறைகளுக்கு எடுத்துச் செல்ல உதவ முன்வருகிறார்கள்.
என்யோ தனக்கான ஒரு துணையைத் தேடிக் கண்டுபிடிப்பதில் உறுதியாக இருக்கிறார். அன்றைய நாளின் முதல் செயல்பாடான அறிமுகச் சுற்றின்போது, அவர் தான் சொந்தமாகத் தயாரித்த பிரெஞ்சு பலகாரங்களை அங்கு இருப்பவர்களுக்கு வழங்குகிறார். இது அங்கிருந்த கூட்டத்தினரிடம் இருந்து பாராட்டுகளைப் பெற்றுத் தருகிறது.

பட மூலாதாரம், BBC/ Hosu Lee
அதன்பின், முதல் சந்திப்புக்கான நேரம் வருகிறது. சுன்ஹேஜி, 32 வயதான சாதுவான குணம் கொண்ட அரசு ஊழியரான மின்ஹோ என்பவருடன் இணைகிறார். இருவரும் கோவிலைச் சுற்றியுள்ள மரங்கள் நிறைந்த பாதையில் உலா வந்து, தனிப்பட்ட முறையில் உரையாடுகிறார்கள்.
பின்னர், மதிய உணவு நேரத்தில் தாங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் பெண்ணிடம் ஒரு பிளாஸ்டிக் ரோஜா பூவை வழங்குமாறு ஆண்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மின்ஹோ, தன்னைப் போலவே மென்மையான குணம் கொண்ட 28 வயது வடிவமைப்பாளரான ரூபியை தேர்வு செய்கிறார். உணவு உண்ணும்போது அங்கு மென்மையான புன்னகைகளும், லேசான சிரிப்பொலிகளும் நிறைந்துள்ளன.
அந்த ஜோடிகள் ஒருவருக்கொருவர் தங்கள் பொழுதுபோக்குகள், வேலைகள் மற்றும் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்கள். உரையாடல் சுமூகமாகத் தொடர்கிறது, அனைவரும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வது போலத் தெரிகிறது.
அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு, பாத்திரங்களைக் கழுவுவதற்காக ஒன்றாகக் கூடும்போது, அவர்கள் முன்பு இருந்ததைவிட ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக நிற்பதைக் காண முடிகிறது.
ஆனால், அன்றைய நாளின் சங்கடமான, சற்றே தடுமாற்றங்கள் நிறைந்த உச்சகட்ட நிகழ்வான 'திறமை வெளிப்பாட்டுச் சுற்றை' அடையும்போது இவை எல்லாமே தலைகீழாக மாறுகின்றன.

பட மூலாதாரம், BBC / Hosu Lee
மின்ஹோ முதலில் செல்கிறார்.
"ஐ வான்ன டேக் யூ டு மை ஹவுஸ்" என்ற புகழ்பெற்ற பல்லவியைக் கொண்ட 2பிஎம் குழுவின் வைரல் பாடலான 'மை ஹவுஸ்'-இன் வரிகளை நினைவுகூர்ந்து, கவனமாக ஆடுகிறார்.
சுன்ஹேஜி புத்தம் புதிய பாப் ஹிட் பாடலான 'கேட்ச் கேட்ச்' பாடலுக்கு சிரமமின்றி நடனமாடுகிறார். அதே நேரத்தில் என்யோ ஒரு மெல்லிசைப் பாடலை உரக்கப் பாடுகிறார்.
ரூபி தனது ஸ்பானிஷ் மொழித் திறனைக் காட்டுகிறார். அவரது சற்றே தடுமாற்றமான அறிமுக உரை மின்ஹோவை கவர்கிறது.
ஒரு பெண் 'கே-பாப் டீமன் ஹன்டர்ஸ்' என்ற தொடரின் பாடலை வாசிப்பதற்காக ஒரு புல்லாங்குழலை வெளியே எடுக்கிறார். இடைவிடாத இந்தச் செயல்பாடுகள் அங்கு வந்திருப்பவர்களை சோர்வடையச் செய்கின்றன.
கிரீன் டீ அருந்தியபடி நடக்கும் ஸ்பீட்-டேட்டிங் சுற்று தொடங்குவதற்கு முன், ஓய்வெடுக்க சில நிமிடங்கள் மட்டுமே உள்ளன (ஆனால் அந்தத் தேநீரை உண்மையில் யாரும் குடிப்பதில்லை).
அதற்குப் பிறகு, தங்கள் இரவு உணவு சந்திப்புக்காக பெண்கள் ஒரு ஆணைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சுன்ஹேஜி தனது ரோஜாவை மின்ஹோவுக்கு தருகிறார், இது ரூபிக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துகிறது.
என்யோ எந்தப் பெண்ணாலும் தேர்வு செய்யப்படவில்லை, இதனால் அவர் ஜோடி சேராத மற்றவர்களுடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிடச் செல்கிறார்.
இறுதியாக, அன்றைய நாளை நிறைவு செய்யும் விதமாக, ஒரு மூத்த துறவி எழுச்சியூட்டும் உரையை நிகழ்த்துகிறார். அங்கு வந்திருப்பவர்களுக்குக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் கடமையை நினைவூட்டிய பிறகு, அவர் தேசிய கீதத்தைப் பாடத் தொடங்குகிறார்.
தேச பக்தியைக் காட்டிலும் தங்கள் காதலைப் பற்றி அதிகம் கவலைப்படும் அந்த இளம்பருவத்தினர், அதன் வரிகளை முணுமுணுக்கிறார்கள்.

பட மூலாதாரம், BBC/ Hosu Lee
கொரிய அதிகாரிகள் 2000களின் தொடக்கத்தில் இருந்தே வரன் தேடும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறார்கள். மரவேலை செய்யும் டேட்டிங் முதல் ஆற்றங்கரை டிஜே இரவுகள் வரை எல்லாவற்றையும் அவர்கள் செய்துள்ளனர்.
கடந்த 2006 முதல் சுமார் 250 பில்லியன் டாலர் செலவில் அரசாங்கம் செயல்படுத்திய குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் திட்டங்களுடன் சேர்த்து இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பிறப்பு விகிதம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சரிந்து வந்தது.
அதாவது, எண்கள் மெதுவாக உயரத் தொடங்கிய 2024ஆம் ஆண்டு வரை இந்தச் சரிவு நீடித்தது. இந்த ஆண்டில், ஒரு பெண் சராசரியாக 1.0 குழந்தையைப் பெற்றெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2025இல் இருந்த 0.8 என்ற விகிதத்தைவிட அதிகம்.
இது அரசு மேற்கொண்ட முயற்சிகளின் நேரடி விளைவா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. பெருந்தொற்றுப் பேரிடர் காரணமாகத் திருமணங்களும் பிரசவங்களும் தாமதமானதும், பேபி பூமர் தலைமுறையினருக்குப் பிறந்த ஒரு பெரிய தலைமுறையினர் தங்களுக்குச் சொந்தமாகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் வயதை எட்டியதும்தான் இதற்குக் காரணம் என அதிகாரிகள் கவனமாகக் குறிப்பிடுகிறார்கள்.
ஆனால் மக்களின் அணுகுமுறையிலும் ஒரு மாற்றம் ஏற்படலாம்.
மார்ச் மாதம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு, திருமணமாகாதவர்கள் இரு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது திருமணம் செய்து கொள்வதற்கும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் கிட்டத்தட்ட 10% அதிக சாதகமாக இருப்பதாகத் தெரிவித்தது.

பட மூலாதாரம், BBC/ Hosu Leee
இது கோவிலில் இருக்கும் சில பெண்களின் கருத்துகளுடன் ஒத்துப்போகிறது. திருமணம் செய்து கொள்வது, குழந்தைகளைப் பெற்றெடுப்பது போன்ற நண்பர்களின் சமூக ஊடகப் பதிவுகளை அதிகமாகப் பார்த்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
அந்த மாலை நேரத்தில், இன்னும் ஒரேயொரு இறுதிச் சுற்று டேட்டிங் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், மற்றவர்களுடன் நேரம் செலவிட அவர்களுக்கு இருக்கும் ஆற்றல் குறையத் தொடங்குகிறது. ஆனால், ஒரு துணையைத் தேடிக் கண்டுபிடிக்க இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்று நிகழ்ச்சித் தொகுப்பாளரான யூ உறுதியாகக் கூறுகிறார்.
இரவு 10 மணிக்குத் தூங்கச் செல்ல வேண்டும் என்பது ஒரு பரிந்துரை மட்டுமே என்று கூறும் அவர், இந்த இரவு "ஆச்சரியங்கள் நிறைந்ததாக" இருக்கலாம் என்கிறார்.
அவர் சொல்வதை நிரூபிப்பது போல, அந்த நிகழ்வின் பொறுப்பாளர் ஒருவர் அங்கு வந்திருந்த ஒரு பங்கேற்பாளரிடம் பேச முயல்கிறார்.
தனக்கு ஏற்கெனவே காதலன் இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டாலும், அந்த உறவு எப்படியும் நீடிக்கப் போவதில்லை என்றும் கூறுகிறார்.
ரூபி இறுதியாக மின்ஹோவுடன் நடைபயிற்சிக்குச் செல்கிறார். சுன்ஹேஜி சோர்வாகத் தெரிகிறார். துணையைத் தேடிக் கண்டுபிடிக்காத என்யோவும் மற்றவர்களும் ஒவ்வொருவராக வெளியேறுகிறார்கள்.

பட மூலாதாரம், BBC/ Hosu Lee
மறுநாள் காலையில், அனைவரும் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் தாங்கள் தேர்ந்தெடுத்த இறுதி முடிவுகளை யூ-வுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்புகிறார்கள்.
இந்த முகாமின் முடிவில், நிகழ்வின் ஊழியர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட இரண்டு பொருத்தங்கள் உள்பட, மொத்தம் எட்டு ஜோடிகள் உருவாயின.
அந்தக் குழுவினர் தங்கள் இறுதிப் புகைப்படத்திற்காக ஒன்றாகக் கூடுகிறார்கள். தனக்கு எந்தத் துணையும் அமையாத ஏமாற்றத்துடன் என்யோ இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர் தனது நம்பிக்கையைக் கைவிடவில்லை.
"அவர்கள் என்னை மீண்டும் அனுமதித்தால்" இந்த முகாமில் மற்றொரு முறை முயற்சி செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறுகிறார்.
சன்ஹேஜி இப்போது உற்சாகமடைந்துள்ளார். அவர் அதிகாலை 3 மணி வரை தனது அறையில் மற்ற பெண்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தார்.
"எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள்" என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார், அனைவரும் ஒன்றாக காலை உணவு சாப்பிட ஒரு திட்டம் ஏற்கெனவே தீட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, இந்த அனுபவம் ஒரு வேடிக்கையான 'ஸ்லீப்ஓவர்' (நண்பர்கள் வீட்டில் தங்குவது) போல் இருந்தது. இது அவரை மீண்டும் பதின்பருவத்தினரைப் போல உணர வைத்ததுடன், எந்தத் தயக்கமும் இன்றி தன்னிச்சையாக நடந்து கொள்ளவும், துணிச்சலான முடிவுகளை எடுக்கவும் அவருக்குத் தன்னம்பிக்கையை அளித்துள்ளது.
திருமணமாகாத ஆண்களும் இதை ஒப்புக்கொள்கிறார்கள். இதுவரை ஒன்றாக நேரம் செலவிட்ட அவர்களது சந்திப்புகளில், இனி மதுபானமும் அசைவ உணவுகளும் இடம்பெறவுள்ளன. கோவிலில் இருந்து வெளியேறும் எல்லோருக்குமே ஒரு துணை கிடைத்துவிடுவதில்லை.
ஆனால், அங்கிருந்து புறப்படும் அனைவரும், தங்களிடம் முன்பு இல்லாத ஒரு விஷயத்துடன்தான் வெளியேறுகிறார்கள். அது புதிய நண்பர்களாகவோ அல்லது புதிய தன்னம்பிக்கையாகவோ இருக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































