தொகுதி மறுவரையறை மசோதா: ஸ்டாலினுடன் சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் சந்திப்பு - திமுகவின் நிலைப்பாடு என்ன?

பட மூலாதாரம், ANI
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக அரசியல் பரபரப்பு நீடிக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சமாதானப்படுத்தும் முயற்சியாகச் சென்னை வந்துள்ளனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முன்னதாக ஸ்டாலின் ராகுல் காந்தியை ஆரத்தழுவி வரவேற்றார். சோனியா உள்ளிட்ட தலைவர்களை வாசல் வரை வந்து ஸ்டாலின் வரவேற்றார்.
ஒருமணிநேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பு நிறைவடைந்து சுமார் 6 மணியளவில் தலைவர்கள் ஸ்டாலின் இல்லத்திலிருந்து புறப்பட்டனர். அவர்களை ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்.
இந்நிலையில் திமுகவின் தொழில்நுட்ப அணி தன் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், திமுக தான் எடுத்த நிலைப்பாடில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?
தலைவர்கள் சந்திப்புக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மமதா பானர்ஜி, எம்.ஏ.பேபி, மூன்று மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் இன்று என்னை சந்தித்தனர். அவர்களின் கோரிக்கைகளை என்னிடம் எடுத்து சொன்னார்கள். திமுகவின் கோரிக்கைகள் புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டிருப்பதாக அவர்களிடம் சொன்னேன். அவர்களும் வேறு சில விஷயங்களை பேசினார்கள். நாங்கள் அவற்றை கேட்டுக்கொண்டோம். இப்போது இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டால் தமிழகத்தின் அரசியல் வலிமைக்கான குறைந்தபட்ச பாதுகாப்பை கூட இழந்துவிடுவோம். இதை தடுக்கவோ, தவிர்க்கவோ இரண்டில் மூன்று பங்கு நாடாளுமன்ற வலிமை நம்மிடம் இல்லை.
1971ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடந்தாலும் தமிழகம் பாதிக்கப்படும். தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். தென் மாநில கட்சிகளுக்கு இது வாழ்வா, சாவா போராட்டம். எனவே, மசோதாவை ஆதரிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. வந்திருந்த தலைவர்களிடம் வேறு மாற்று திட்டம் இல்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் வலிமையை காக்க வேண்டும். இதில் ஆபத்தான முடிவை எடுக்க முடியாது." என்றார்.
இந்த சந்திப்பையடுத்து கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுமா என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, "அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் எங்களின் ஒரே நிலைப்பாடு தமிழ்நாட்டுக்கே முன்னுரிமை என்பதுதான்" என தெரிவித்தார்.
இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பதற்கு ஆதரவை கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழ்நாட்டின் நலனையும் தமிழ்மக்களின் நலனையும் முதன்மையாகக் கருத்தில் கொண்டே ஒவ்வொரு முடிவையும் திமுக எடுத்துள்ளதாக கூறியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இந்த பாதையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக திமுக அறிவித்துள்ளது.
ராகுல் கூறியது என்ன?
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "தொகுதி மறுவரையறை மசோதா பற்றிய எங்களின் பார்வையை மு.க.ஸ்டாலினிடம் கூறினோம். இந்த மசோதா நிறைவேறின ஒட்டுமொத்த இந்தியா மட்டுமல்லாமல், தென்னிந்தியா குறிப்பாக தமிழ்நாடு பாதிக்கப்படும். பாஜக நினைப்பதுபோன்று 850 தொகுதிகளாக நாடாளுமன்றத்தை மறுவடிவமைத்தால் இந்தியாவில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும். அதனால், பாஜக நினைப்பதை செய்வதற்கு திமுக அனுமதிக்கக் கூடாது. மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை காக்க வேண்டும்." என்றார்.

பட மூலாதாரம், ANI
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
ஞாயிற்றுக்கிழமை காலை சென்னைக்குப் புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'பார்க்கலாம்' என்று மட்டும் கூறினார்.
ராகுல் காந்தியும் எக்ஸ் தளத்தில் இதுகுறித்துத் தகவல் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பதற்காகத் தான் சென்னை செல்வதாக அவர் கூறியுள்ளார்.
சென்னையில் ஸ்டாலினைச் சந்தித்த பிறகு மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் மும்பையில் சரத் பவாரையும் சந்திக்கவுள்ளனர்.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக அறிவித்துள்ளது.
பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே, கபில் சிபல், எம்.ஏ. பேபி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் இரண்டு விமானங்களில் சென்னைக்குச் செல்கின்றனர். அங்கு அவர்கள் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பார்கள். அதன்பிறகு சரத் பவாரைச் சந்திப்பதற்காக மும்பை செல்வார்கள்" என்று எழுதியுள்ளார்.
ராகுல் காந்தி கூறியது என்ன?

பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களும் நானும் சென்னைக்குச் சென்று மு.க. ஸ்டாலினைச் சந்திக்கவுள்ளோம். தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்களை எதிர்க்குமாறு அவரிடமும் திமுகவிடமும் கோரிக்கை விடுக்கவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
''மக்களவையின் இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது இந்தியாவில் ஜனநாயகத்தை அழித்துவிடும். பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தங்களுக்குச் சாதகமாக இந்தியாவின் ஒட்டுமொத்த தேர்தல் வரைபடத்தையும் புதிதாக வரைவதற்கு இது தடையற்ற வாய்ப்பை வழங்கும்.''
"ஸ்டாலின் எப்போதும் தமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக உறுதியாக நின்று வந்துள்ளார். தேசிய நலன், தமிழ்நாட்டின் நலன் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காக நாம் ஒன்றிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும்," என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்திக்கு ஸ்டாலினின் பதில்

பட மூலாதாரம், M.K.Stalin/X
ராகுல் காந்தியின் பதிவுக்கு பதிலளித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அரசியலமைப்பையும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுக ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை அங்கீகரித்ததற்காக ராகுல் காந்திக்கு மனமார்ந்த நன்றிகள் என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் நலனையும் தமிழ்மக்களின் நலனையும் முதன்மையாகக் கருத்தில் கொண்டே நாங்கள் எப்போதும் ஒவ்வொரு முடிவையும் எடுத்துள்ளோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தப் பாதையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றும் வரலாறு தங்களை எட்டப்பர்களாக அல்ல, கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































