இரு சுற்றறிக்கைகளால் சர்ச்சை: தவெக அரசை நோக்கி கேள்விகளை அடுக்கும் இடதுசாரிகள் - என்ன நடக்கிறது?

தமிழ்நாடு, இடதுசாரி கட்சிகள், தவெக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் அண்மையில் அடுத்தடுத்து வெளியான இரு சுற்றறிக்கைகள் தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் இடதுசாரிகளை அதிருப்தியடையச் செய்துள்ளன. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ள போதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் இறங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இருக்கிறார்களா அல்லது அதிகாரிகள் கட்டுப்பாட்டில் தான் தமிழ்நாடு அரசு இருக்கிறதா என்கிற கேள்வி எழுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது.

தலைமைச் செயலாளர் பற்றி இடதுசாரி கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய அவசியமுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இரு சுற்றறிக்கைகள் தொடர்பாகவும் விளக்கம் அளித்துள்ள அமைச்சர் நிர்மல்குமார், இதுதொடர்பாக முதலமைச்சர் ஆலோசித்து தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்பார்" என்று கூறியுள்ளார்.

என்ன நடக்கிறது?

சர்ச்சைக்கு உள்ளான இரண்டு சுற்றறிக்கைகள்

தமிழ்நாடு, இடதுசாரி கட்சிகள், தவெக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
படக்குறிப்பு, குஜிலியம்பாறை வட்டாட்சியர் பெயரில் வெளியான சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முதலாவதாக கடந்த 17-ஆம் தேதி கல்லூரி கல்வி இயக்ககத்தின் சார்பில் வெளியான சுற்றறிக்கையில், "இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே துறை இடைத்தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை உடன் அலுவலகத்திற்கு அனுப்புமாறும் அந்தக் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்தச் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது.

இரண்டாவதாக கடந்த 18-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் பெயரில் சுற்றறிக்கை ஒன்று வெளியானது.

அதில், "திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளில் உள்ள நபர்களின் பெயர், முகவரி, ஆகியவற்றைச் சேகரித்து வருவாய் ஆய்வாளர்கள் வட்டாட்சியரிடம் இன்று (18.08.2026) மாலைக்குள் நேரடியாக சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு அனைத்து கிராம நிர்வாக உதவியாளர்களும் வருவாய் அலுவலகர்களும் உதவிட அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்த அந்த சுற்றறிக்கை, அவ்வாறு செய்யத் தவறும் கிராம நிர்வாக உதவியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கும் வகையில் இருந்தது.

இந்தச் சுற்றறிக்கை விவாதப் பொருளான நிலையில் அது திரும்பப் பெறப்படுவதாகவும் அதனை வெளியிட்ட வட்டாட்சியர் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பேசியது என்ன?

தமிழ்நாடு, இடதுசாரி கட்சிகள், தவெக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, கோப்புப் படம்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த விவகாரம் சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர்களும் பதிலளித்தனர்.

குஜிலியம்பாறை வட்டாட்சியர் வெளியிட்ட சுற்றறிக்கை தொடர்பாக பதிலளித்த வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், "அந்த வட்டாட்சியர் சர்வே செய்வதற்காக அங்கு அனுப்பப்பட்டார். அவர் தேவையில்லாமல் இதுபோன்ற கடிதங்களை எழுதியுள்ளார். எனக்கு தகவல் கிடைத்த உடனேயே அவர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் மீது இப்போது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்." என்று தெரிவித்தார்.

கல்லூரி கல்வி இயக்ககத்தின் சுற்றறிக்கை சர்ச்சை தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் விளக்கமளித்தார்.

அப்போது அவர், "மாணவர்களின் போராட்டங்கள் சம்பந்தமான நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாநில அளவில் சில நேர்வுகளில் நடைபெறும் ஒழுங்கு அமைதி பராமரிக்க வேண்டியது குறித்து உயர் கல்வித்துறை மூலம் கல்லூரி கல்வி இயக்ககத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இச்சுற்றறிக்கையில் தவறுதலாக சில வாசகங்கள் குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த சுற்றறிக்கை உடனடியாக திரும்பப் பெறப்பட்டது. இந்தச் சுற்றறிக்கை கல்லூரியில் ஒழுங்கு, அமைதியை பராமரிக்கும் நோக்கத்திலானது." என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் எழுப்பும் கேள்விகள்

தமிழ்நாடு, இடதுசாரி கட்சிகள், தவெக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்,

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், "அரசியலமைப்புக்கு உட்பட்டு ஜனநாயகப் பூர்வமாக செயல்படும் இடதுசாரி கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கும் வகையிலும் இடதுசாரி மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்கும் வகையிலும் தலைமைச் செயலாளர் உத்தரவின் பேரில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது." என்றார்.

கடந்த ஜூலை 28-ஆம் தேதி தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு தொடர்புடைய கூட்டத்தின் அடிப்படையில் தான் அந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் .

மேலும் அவர், "அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியே உயர்கல்வி துறை செயலாளர் இதேபோன்ற சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார். இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் கண்டனத்துக்குரியது. தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும். சட்டமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றபோது உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்த பதில் ஏற்புடையது அல்ல. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

"திண்டுக்கல் சம்பவத்தில் வருவாய்த் துறை அமைச்சர் அந்த வட்டாட்சியரை சர்வே எடுப்பதற்காக அனுப்பியதாகக் கூறினார். ஆனால் மாவட்ட ஆட்சியர் அவர் பயிற்சிக்காக வந்ததாகவும் தற்போது இடமாறுதல் செய்யப்பட்டதாகவும் சென்றதாகவும் கூறினார். இதில் யார் சொல்வது உண்மை என்பதை தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும்." என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இருக்கிறார்களா அல்லது அதிகாரிகள் கட்டுப்பாட்டில் தான் தமிழ்நாடு அரசு இருக்கிறதா என்கிற கேள்வி இருக்கிறது. இதை சரி செய்யக்கூடிய வகையில் அரசாங்கத்தின் அணுகுமுறை இருக்க வேண்டும். மூடி மறைப்பதாக இருக்கக்கூடாது." என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், "அரசுக்கு முதலமைச்சர் தான் பொறுப்பு. அவர்தான் பதிலளிக்க வேண்டும். தலைமைச் செயலாளர் அதிகாரத்தை தனது கையில் வைத்திருப்பவர். அமைச்சர்களிடம் இல்லாத அதிகாரம் தலைமைச் செயலாளரிடம் உள்ளது. எனவே அதிகாரம் குவிந்திருக்கக் கூடிய அந்த இடத்தை நோக்கி தான் முதல் குற்றச்சாட்டு.

ஆனால் முழு பொறுப்பும் தமிழ்நாடு அரசையும் முதலமைச்சரையும் தான் சாரும். முதல்வர் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும். தலைமைச் செயலாளரும் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும்." என்றார்.

"ஏபிவிபி பெயர் ஏன் இல்லை?" - மார்க்சிஸ்ட் கம்யூ. கேள்வி

இந்தச் சர்ச்சையை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி செல்வா.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இரண்டு சம்பவங்களும் அடுத்தடுத்த நாட்களில் நடந்துள்ளன. அதற்கு முன்பாக தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி கலந்து கொண்ட சட்டம் ஒழுங்கு கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு தான் இந்த நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. எனவே இதனைத் தனித்துப் பார்க்க முடியாது. அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி இடதுசாரி இயக்கங்கள் மற்றும் மாணவ அமைப்புகளைக் குறிவைக்க முயற்சி நடந்துள்ளது," என்றார் அவர்.

இந்தச் சூழலில் முதலமைச்சர் விஜய் வெறும் பார்வையாளராக மட்டும் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தும் செல்வா, அவருக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்புள்ளது என்றும் தெரிவிக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஏன் இடதுசாரி கட்சிகளை மட்டும் குறிவைக்க வேண்டும். வலதுசாரி அமைப்பான ஏபிவிபி மாணவர் அமைப்பின் பெயர் ஏன் குறிப்பிடப்படவில்லை. இதை தனித்த செயலாகப் பார்க்க முடியாது. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தலைமைச் செயலாளரை மாற்ற வேண்டும்." என்றார்.

இந்த நிகழ்வுகள் தவெகவின் அரசியல் அனுபவமின்மையையே காட்டுகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன்.

அரசியல் தலைமையின் பார்வைக்கு வராமல் இவ்வளவு சிக்கலான சுற்றறிக்கைகள் செல்லும் சிக்கலான சூழலையும் இது உணர்த்துவதாக அவர் தெரிவிக்கிறார்.

"இடதுசாரி கட்சிகள் இந்த அரசுக்கு ஆதரவளிக்கின்றன என்பது தலைமைச் செயலாளருக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் தெரியாதா? பிறகு எப்படி அந்தக் கட்சிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு இப்படி ஒரு சுற்றறிக்கையை அனுப்ப முடியும். இது கல்லூரிகள் வரை சென்றிருக்கிறது. எத்தனை பேரின் பார்வையைக் கடந்து இது சென்றிருக்க வேண்டும். இது முதலமைச்சரின் பார்வைக்கு வராமல் சென்றிருப்பது மிகப்பெரிய குறைபாடு.

அமைச்சர்களின் விளக்கம் போதுமானதாக இல்லை. இது அரசாங்கத்திற்கு தெரிந்து நடந்திருந்தாலும் சரி அல்லது தெரியாமல் நடந்திருந்தாலும் சரி தவறு தான். இதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கோரிக்கை வைப்பதில் தவறில்லை. அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படும் போக்கு அரசு நிர்வாகத்தைக் கடுமையாகப் பாதிக்கும்." என்றார்.

தலைமைச் செயலாளர் பற்றி இடதுசாரி கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய அவசியமுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "இதில் அரசியலையும் கடந்து இடதுசாரி கட்சிகள், குறிப்பாக மாணவர்களின் ஜனநாயக உரிமை பற்றியது. ஒரு சுற்றறிக்கை மூலம் எவ்வாறு அதனைக் கட்டுப்படுத்த முடியும். ஓர் அரசியல் கட்சிக்கு இருப்பதைப் போலவே மாணவர்களுக்கும் அனைத்து விதமான ஜனநாயக உரிமைகளும் உள்ளன. ஜென் ஸி தலைமுறையின் போராட்டங்களை நாம் பார்த்து வரும் சூழலில் இது மோசமான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். " என்றார்.

தமிழ்நாடு, இடதுசாரி கட்சிகள், தவெக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்

ஆனால் இடதுசாரி கட்சிகள் ஏன் முதலமைச்சரை நோக்கி நேரடியாக கேள்வி கேட்கவில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

"இந்தச் சம்பவங்கள் அதிகாரிகளால் நிகழ்ந்திருந்தாலும் முதலமைச்சர் தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இடதுசாரி கட்சிகள் தங்களின் ஆர்ப்பாட்டங்களில் தலைமைச் செயலாளரை மட்டுமே ஏன் குறிவைத்து விமர்சிக்க வேண்டும். முதலமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டிருக்கலாம்.

கடந்த திமுக ஆட்சியில் வேலை நேரத்தை 12 மணி நேரம் ஆக மாற்றுவதற்கான முன்மொழிவு வந்தபோது அரசை எதிர்த்து தான் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. தவெக அரசு மீது அந்த அளவுக்கு கடுமையான விமர்சனங்களை வைக்கவில்லை. இந்த விவகாரத்தில் தவெக அரசையும் சரிசமமாக விமர்சித்திருக்க வேண்டும். தவெக தரப்பிலும் அதிகாரிகள் மற்றும் அரசு இடையே ஒருங்கிணைவு இல்லை என்பதையே இது காட்டுகிறது." என்றார்.

தமிழ்நாடு, இடதுசாரி கட்சிகள், தவெக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

பட மூலாதாரம், CPIM

படக்குறிப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் விஜய் (கோப்புப் படம்)

வட்டாட்சியருக்கு நோட்டீஸ்

இந்த நிலையில் குற்றச் சாட்டுக்கு உள்ளான குஜிலியம்பாறை வட்டாட்சியராக இருந்த அய்யாசாமி மீது தமிழ்நாடு குடிமைப்பணி விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறும் அவரிடம் கேட்கப்பட்டுள்ளது.

சட்டத்துறை அமைச்சரின் பதில் என்ன?

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் இரண்டு சர்ச்சைகள் தொடர்பாகவும் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், "குஜிலியம்பாறை வட்டாட்சியர் அவருடைய சொந்த விருப்பு வெறுப்பின் பேரில் அதைச் செய்துவிட்டார். அவர் ஆறு மாதங்களில் பணி ஓய்வு பெற இருக்கிறார். மாவட்ட ஆட்சியருக்கே தெரியாமல் அந்த சுற்றறிக்கை அனுப்பிவிட்டார். உடனடியாக திரும்பப் பெறப்பட்டு அவரும் இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் மீது, தேவையான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர் போராட்டங்கள் தொடர்பான சுற்றறிக்கையிலும் அரசாங்கத்திற்கு உடன்பாடு இல்லை. ஒரு சிலர் அவ்வாறு தவறாக அனுப்பிவிட்டார்கள். முதலமைச்சரைப் பொருத்தவரை, அது தொடர்பாக ஆலோசித்து தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்பார். " என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு