நடுவானில் 33,000 அடி உயரத்தில் விமான என்ஜின் வெடித்தும் பயணிகளை காப்பாற்றிய பெண் விமானி

பட மூலாதாரம், US Navy/PH2 Thomas P. Milne/Getty Images
டாமி ஜோ ஷல்ட்ஸ் போர் விமானங்களை இயக்க வேண்டும் என்று பெரிதும் கனவு கண்டார்.
அவர் 1960களில் அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள ஹாலோமேன் விமானப் படைத் தளத்துக்கு அருகிலுள்ள ஒரு பண்ணையில் வளர்ந்தார். பண்ணைக்கு மேலே விமானங்கள் சத்தம் எழுப்பிக்கொண்டு பறப்பதைப் பார்க்க அவர் மிகவும் விரும்பினார்.
பறப்பது என்பது அவருக்கு மாயாஜாலம் போலத் தோன்றியது. அவர் பண்ணையில் கடினமாக உழைத்தார், ஒன்பது வயதிலேயே டிராக்டர் ஓட்டத் தொடங்கினார்.
அவரது பெற்றோர் ஆண்களுக்கான வேலை, பெண்களுக்கான வேலை என்று பாகுபாடு காட்டவில்லை. அவருக்குப் பொருத்தமான ஒரு தொழிலைத் தேர்வு செய்யுமாறு ஷல்ட்ஸை ஊக்குவித்தனர்.
எனவே, ஷல்ட்ஸ் தனது தாயாரிடம், "நான் போர் விமானங்களை இயக்க விரும்புகிறேன்" என்று கூறினார். அதற்கு அவரது தாய், "டாமி, அவர்கள் மிகவும் புத்திசாலிகள்" என்று பதிலளித்தார்.
ஒரு விமானி ஆவதற்கான பாதை எளிதானதாக இருக்காது என்பதை ஷல்ட்ஸ் உணர்ந்துகொண்டதற்கான முதல் அறிகுறி அதுதான்.
தடைகள்
உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களின் எதிர்கால கல்விக்கான வழிகாட்டுதல் பயிற்சி வழங்கப்படும் நாளில், அவர் விமானப் போக்குவரத்து வகுப்புக்குச் சென்றார்.
அதற்குப் பொறுப்பாக இருந்த கர்னல், "இது தொழில் வழிகாட்டுதல் நாள், பொழுதுபோக்கு நாள் அல்ல. பெண்கள் செய்யக்கூடிய ஒன்றை நீ தேட வேண்டும்" என்று கூறினார். ஆனால் ஷல்ட்ஸ் தனது இருக்கையில் அமர்ந்தார், அதைக் கேட்கக் கேட்க, அவரது ஆர்வம் அதிகரித்தது.
"அது இறுதி வரை சிலிர்ப்பாக இருந்தது. பெண்ணின் அறிவாற்றலுக்கு அப்பாற்பட்ட எதையும் நான் அங்கு கேட்கவில்லை என்பதை நான் உணர்ந்துகொண்டேன்" என்கிறார் ஷல்ட்ஸ்.
அதன் பிறகு, ஒரு ராணுவ விமானியாக ஆக வேண்டும் என்ற, முன்னெப்போதையும்விட வலுவான உறுதியோடு அவர் அங்கிருந்து வெளியேறினார். ஷல்ட்ஸ் தனது கல்லூரிப் படிப்பை முடித்ததும், அமெரிக்க விமானப் படையின் ஆள் சேர்ப்பு அலுவலகக் கதவைத் தட்டினார்.
"அவர் பொறுமையாகக் கேட்டார். பின்னர், என்னை மன்னித்துவிடுங்கள். நாங்கள் பெண்களைச் சேர்ப்பதில்லை என்று அவர்கள் கூறினர்" என ஷல்ட்ஸ் நினைவு கூர்கிறார். அது, அவரது முகத்துக்கு நேராக மூடப்பட்ட பல கதவுகளில் முதல் கதவாக இருந்தது.
விமானங்களை இயக்கும் அமெரிக்க ராணுவத்தின் பிற பிரிவுகளான, ராணுவம் உள்பட மற்ற பிரிவுகளில் முயல அவர் முடிவு செய்தார். ஆனால் அவர்கள் அவர் தங்களுக்குப் பொருத்தமானவர் அல்ல என்று கூறினர். அதன் பின்னர் கடற்படையில் சேர முயன்றார். அங்கு குறைந்தபட்சம் விமானி தேர்வை எழுதுவதற்கான வாய்ப்பாவது அவருக்கு வழங்கப்பட்டது.
"அந்த ஆள்சேர்ப்பாளர், 'என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் ஓர் ஆணாக இருந்தால் இந்த மதிப்பெண் போதுமானது. ஆனால் நீங்கள் ஒரு பெண் என்பதால் இது போதுமானதல்ல. நீங்கள் ஒரு பெண் பைலட் ஆக விரும்பினால் இன்னும் அதிக மதிப்பெண் பெற வேண்டும்' என்று கூறினார்" என ஷல்ட்ஸ் நினைவுகூர்கிறார்.
அதன் பிறகு ஷல்ட்ஸ் மீண்டும் படிக்கச் சென்றார், ஆனால் தனது கனவுக்குக் கடைசியாக ஒருமுறை வாய்ப்பளித்துப் பார்க்க வேண்டும் என்று கருதினார். 1985இல் தனது படிப்பை முடித்த பிறகு, அவர் மற்றொரு அமெரிக்க கடற்படை ஆள்சேர்ப்பு அலுவலகத்துக்குச் சென்றார். பைலட்டாக ஒரு பெண்ணுக்குத் தேவையான போதுமான மதிப்பெண் பெறவில்லை என்றும் தான் அந்தத் தேர்வை மீண்டும் எழுத விரும்புவதாகவும் அங்கிருந்த ஆள் சேர்ப்பாளரிடம் அவர் கூறினார்.
அதற்கு அவர், 'நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? ஆண்களுக்கு வேறு, பெண்களுக்கு வேறு என எங்களிடம் தனித்தனி மதிப்பெண்கள் எதுவும் இல்லை' எனக் கூறினார்.
மேலும், 'நான் உங்கள் மதிப்பெண்ணைச் சரிபார்க்கிறேன்' என்றார். அவர் அதைச் சரிபார்த்துவிட்டு, 'நீங்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளீர்கள் ' என்றார்" என நினைவு கூர்கிறார் ஷல்ட்ஸ்.
சில மாதங்களுக்குப் பிறகு, அவர் தலைமுடியை மழித்துவிட்டு ஃப்ளோரிடாவில் உள்ள 'ஏவியேஷன் ஆஃபீசர் கேண்டிடேட் ஸ்கூல்' என்ற விமான அதிகாரி தேர்வுப் பள்ளியில் புஷ்-அப்ஸ் எடுத்துக்கொண்டிருந்தார்.

பட மூலாதாரம், Tammie Jo Shults
பறப்பது, ஷல்ட்ஸ் கனவு கண்டது போலவே மாயாஜாலமாக இருந்தது. அவர் ஒரு பைலட்டாக தகுதி பெற்று, 'கட்டுப்பாட்டை இழந்த விமானத்தை இயக்குவதில்' நிபுணத்துவம் பெற்ற ஒரு பயிற்றுவிப்பாளராக உயர்ந்தார்.
இதில் ஒரு விமானத்தை சுமார் 30,000 அடி (9.14 கி.மீ) உயரத்துக்குக் கொண்டு சென்று, அதைச் சுழல வைப்பதும் அடங்கும். அதை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது மாணவரின் கடமை, இல்லையெனில் ஷல்ட்ஸ் அதன் கட்டுப்பாட்டைத் தன் வசம் எடுத்துக்கொள்வார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஷல்ட்ஸின் சொந்த பயணிகள் விமானத்தின் என்ஜின் வெடித்த அந்த நாளுக்கு, இவை அனைத்தும் மிகச் சிறந்த பயிற்சியாக அமைந்தன.
அதற்குள் அவர் அமெரிக்க கடற்படையில் பத்தாண்டு காலமாக பைலட்டாக பணியாற்றியிருந்தார், அந்தக் காலகட்டத்தில்தான் அவர் தனது கணவரைச் சந்தித்தார். 1990களில், அவர்கள் இருவரும் கடற்படையை விட்டு வெளியேறி, ஒரு குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினர்.
அவர்கள் இருவரும் சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் என்ற அமெரிக்க பயணிகள் போக்குவரத்து நிறுவனத்தில் வணிக ரீதியிலான விமானங்களை இயக்கும் பணிகளைப் பெற்றனர். 2018 ஏப்ரல் 17-ஆம் தேதி, விமானம்-1380 ஒரு நீண்ட பயணத்துக்காக எரிபொருளுடன் தயாராக இருந்தது. அதிலுள்ள ஒவ்வொரு இருக்கையும் பயணிகளால் நிரம்பியிருந்தது. விமானம் 33,000 அடியை (10.06 கி.மீ) எட்டியபோது, ஷல்ட்ஸ் ஒரு வெடிப்புச் சத்தத்தைக் கேட்டார்.
அவரது முதல் எண்ணம், நடுவானில் ஏதேனும் மோதலுக்கு உள்ளாகிவிட்டோமோ என்பதாக இருந்தது. "[விமானம்] பக்கவாட்டில் சறுக்கி, தலைகீழாகக் கவிழ்ந்து, இடது பக்கமாக மிக வேகமாகச் சுழன்றது" என்று ஷல்ட்ஸ் விவரிக்கிறார்.
அவர் விமானத்தை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தார், ஆனால் விமானம் அதிரத் தொடங்கியதால் அவரால் தனது கட்டுப்பாட்டுக் கருவிகளை இயக்க முடியவில்லை.
உள்ளுணர்வு
விமானக் கட்டுப்பாட்டு அறை புகையால் நிரம்பியது. ஷல்ட்ஸும் அவரது முதல் அதிகாரியும் பேசுவதை ஒருவருக்கொருவர் கேட்க முடியாத அளவுக்கு அங்கு ஏற்பட்ட சத்தம் பலமாக இருந்ததது.
விசிறி பிளேட் ஒன்றின் சிறு பகுதி உடைந்து, என்ஜினுக்குள் ஆழமாகச் சென்று அதை வெடிக்கச் செய்திருந்தது என்பதை அவர் அறியவில்லை. என்ஜினின் மூடி துண்டுதுண்டாகக் கிழிந்துவிட்டதை அவர் பின்னர்தான் தெரிந்துகொண்டார்.
"அது இறக்கையின் அடிப்பகுதியுடன் இணைக்கப்பட்டு இருந்தவாறே, ஒரு வாழைப்பழத்தைப் போல பின்னோக்கி உரிக்கப்பட்டிருந்தது" என்று அவர் கூறுகிறார். ஜன்னல்களில் ஒன்று அதன் துண்டுகளால் தாக்கப்பட்டு உடைந்ததால், விமானப் பயணி அறையின் உள்ளே காற்றின் அழுத்தம் மிக வேகமாகக் குறைந்தது.
"அந்த உயரத்தில், காற்றின் அழுத்தம் மாறுபடும் வேகத்துக்கு ஏற்ப உங்கள் சைனஸால் சமநிலைப்படுத்த முடியாது. எனவே அது கடுமையான வலியை ஏற்படுத்தும்" என்று ஷல்ட்ஸ் நினைவு கூர்கிறார். அந்த வலி அவரது காதுகளில் இருந்து கழுத்து வரை பாய்ந்தது.
இவை அனைத்துக்கு மத்தியிலும், அவரது உள்ளுணர்வும் பயிற்சியும் செயல்படத் தொடங்கின. அவர் தனக்கு மிக அருகில் இருந்த ஃபிலடெல்பியா விமான நிலையத்தை நோக்கித் தனது பாதையை மாற்றியமைத்தார்.
"சரியான நேரத்துக்குள் விமானத்தை ஓடுதளத்துக்குக் கொண்டு போய்ச் சேர்க்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை என நினைத்தது எனக்கு நினைவிருக்கிறது. அதுவே நான் என்னை படைத்தவரைச் சந்திக்கும் நாள் இதுவாக இருக்கலாம் என்ற எண்ணத்துக்கும் என்னை இட்டுச் சென்றது" என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடன் ஷல்ட்ஸ் பேசும் பதிவுகளில், அவரது குரல் அமைதியாக இருக்கிறது.
அவர், "ஆமாம், விமானத்தின் ஒரு பகுதியைக் காணவில்லை, எனவே நாங்கள் வேகத்தை சற்று குறைக்க வேண்டியிருக்கும்" என்று கூறியதைக் கேட்க முடிகிறது.
பின்னர் ஓடுதளம் கண்ணில் பட்டபோது, விமானக் கட்டுப்பாட்டு அறையின் ஒலிப்பதிவில் அவர் "பரலோகத் தந்தையே" என்று முணுமுணுப்பதைக் கேட்க முடிகிறது. அந்த விமானம் ஒரேயொரு என்ஜினுடன் பக்கவாட்டில் பறந்துகொண்டிருந்தது. ஷல்ட்ஸ் ஓடுதளத்தைத் தாண்டிச் சென்றுவிட்டார்.
விமானத்தை நேர்கோட்டுக்குக் கொண்டு வந்து பாதுகாப்பாகத் தரையிறக்கவும், 148 பயணிகள் மற்றும் பணியாளர்களின் உயிரைக் காப்பாற்றவும் தான் அறிந்த ஒவ்வோர் உத்தியையும் அவர் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஜன்னல் உடைந்தபோது ஜெனிஃபர் ரியோர்டான் என்ற பயணி படுகாயமடைந்தார், பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். தான் அந்த இழப்பை இப்போதும் உணர்வதாக ஷல்ட்ஸ் கூறுகிறார்.
விமானம் தரையிறங்கிய பிறகு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அந்த மருத்துவ அதிகாரி, "உங்களுக்கு இரும்பு போன்ற இதயம் இருக்க வேண்டும். உங்கள் இதயத் துடிப்புகூட அதிகரிக்கவில்லை" என்றார். அப்படியென்றால், இத்தகைய அழுத்தமான சூழலிலும் ஷல்ட்ஸ் தனது அமைதியான மனநிலையை எவ்வாறு தக்கவைத்துக்கொண்டார்?
"நீங்கள் ஒரு பொறுப்பில் இருக்கும்போது, தலைமைத்துவத்தை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும் என உங்களிடம் எதிர்பார்க்கப்படும்போது, உங்கள் நிதானத்தைத் தக்க வைத்துக்கொண்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதே சரியான செயல்" என்று அவர் கூறுகிறார்.
தனது மன உறுதியை ஒருபோதும் இழக்காமலும், ஒருபோதும் கைவிடாமலும் இருந்த ஒரு பணி வாழ்க்கையின் மூலம் அவருக்கு இந்த மனப்பான்மை உருவாகியிருந்தது.
இது, பிபிசி உலக சேவையின் 'அவுட்லுக்' நிகழ்ச்சியின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































