மீண்டும் சூர்யவன்ஷி அதிரடி - குஜராத்துக்கு எதிராக 214 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான்

பட மூலாதாரம், ANI
ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று (மே 29) எதிர்கொள்கிறது குஜராத் டைட்டன்ஸ். இந்தப் போட்டி நியூ சண்டிகர் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஞாயிற்றுக்கிழமை (மே 31) ஆமதாபாத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும்.
முன்னதாக ஆர்சிபி அணிக்கெதிராக விளையாடிய முதல் குவாலிஃபயர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் தோல்வியடைந்தது. அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எலிமினேட்டரில் வீழ்த்தி இந்தப் போட்டிக்குள் வெற்றி முகத்தோடு நுழைகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.
இந்த இரு அணிகளும் இந்த சீசனின் லீக் சுற்றில் இரண்டு முறை மோதின. அதில் இரு அணிகளும் தலா 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் தாங்கள் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். முன்னதாக நடந்த இரண்டு பிளே ஆஃப் போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 240+ ஸ்கோர்கள் எடுத்து வெற்றியும் பெற்றிருப்பதால், ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
முதலில் பேட்டிங் செய்த ராயல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. வைபவ் சூர்யவன்ஷி 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தது.
சரிவிலிருந்து மீட்ட சூர்யவன்ஷி & ஜடேஜா
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. முதல் ஓவரிலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்தினார் மொஹம்மது சிராஜ். 1 ரன் அடித்திருந்த ஜெய்ஸ்வால், தன் சந்தித்த இரண்டாவது பந்திலேயே டீப் பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த துருவ் ஜுரெல், இரண்டாவது ஓவரில் அவுட் ஆனார். 7 ரன்கள் அடித்திருந்த அவரது விக்கெட்டை வீழ்த்தினார் ககிஸோ ரபாடா.
9/2 என்று தடுமாறிய நிலையில் யாரும் எதிர்பாராத விதம் ரவீந்திர ஜடேஜாவை நான்காவது வீரராகக் களமிறக்கியது ராஜஸ்தான் ராயல்ஸ். அது அந்த அணிக்கு நல்ல முடிவைக் கொடுத்தது. ஜடேஜா - வைபவ் சூர்யவன்ஷி ஜோடி ராயல்ஸை சரிவிலிருந்து மீட்டதோடு, நல்ல நிலைக்கும் எடுத்துச் செல்லத் தொடங்கியது.
சிராஜ் வீசிய 3வது ஓவரிலிருந்து தன் வழக்கமான அதிரடியைத் தொடங்கினார் சூர்யவன்ஷி. அந்த ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்த அவர், ரபாடா வீசிய 4வது ஓவரில் தலா 1 பவுண்டரியும், 1 சிக்ஸரும் விளாசினார். அதன்பிறகு ஜடேஜாவும் அதிரடியில் இறங்க, பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது ராயல்ஸ்.
பவர்பிளே முடிந்த அடுத்த இரு ஓவர்களில் ரன் விகிதம் சற்று குறைந்தது. அந்த இரு ஓவர்களிலும் தலா 6 ரன்களே எடுக்கப்பட்டன. மொத்தமே ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டது. மேலும், 8வது ஓவரின் முடிவில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக களத்திலிருந்து வெளியேறினார் ஜடேஜா. அவர் வெளியேறியபோது ராயல்ஸ் ஸ்கோர் 8 ஓவர்களில் 82/2.

பட மூலாதாரம், ANI
நிலைத்து நின்று ஆடிய சூர்யவன்ஷி
ஜடேஜாவுக்குப் பதில் களமிறங்கிய கேப்டன் ரியான் பராக், வந்துவுடனேயே அதிரடி காட்டினார். தான் சந்தித்த முதல் பந்திலேயே ரஷித் கான் வீசிய சற்றே ஷார்ட் லென்த் பந்தை பவுண்டரியாக்கினார் பராக். அதற்கடுத்த பந்தில் சிக்ஸரும் விளாசினார். மூன்றாவது பந்தில் அவர் சிங்கிள், எடுக்க, நான்காவது பந்தில் சூர்யவன்ஷி சிக்ஸர் அடித்தார். அந்த ஓவரில் 18 ரன்கள் வந்தது.
ஹோல்டர் வீசிய அடுத்த ஓவரில் ரியான் பராக் கேட்சாகி வெளியேறினார். அவர் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து களமிறங்கிய தஷுன் ஷனகா ரன்கள் சேர்க்கத் தடுமாறினார். 9 பந்துகள் சந்தித்து 3 ரன்கள் மட்டுமே எடுத்த அவரை ஹோல்டர் வெளியேற்றினார். 13வது ஓவரில் ஆர்ச்சர் (9 ரன்கள்) விக்கெட்டைக் கைப்பற்றினார் பிரசித் கிருஷ்ணா. 13 ஓவர்கள் முடிவில் 120/5 என்ற நிலையில் இருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
நிலைத்து நின்று ஆடியிருந்த சூர்யவன்ஷி 31 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். இந்த சீசனில் அவர் அடித்த 6வது 50+ ஸ்கோர் இது. அதேசமயம் ஐபிஎல் அரங்கில் அவர் அடிக்கும் மெதுவான அரைசதம் இதுதான்.
ஆனால், அடுத்த ஓவரிலிருந்து தன் ஆட்டத்தை மாற்றினார் அந்த 15 வயது பேட்டர். காயத்தால் வெளியேறியிருந்த ஜடேஜா மீண்டும் களமிறங்கி நிதானமாக ஆட, சூர்யவன்ஷி தன் வேகத்தைக் கூட்டினார். ரபாடா வீசிய 14வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர், சிராஜ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலும் சிக்ஸர் அடித்தார். ஹோல்டர் வீசிய 16வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த அவர், அந்த ஓவரில் மேலும் 1 சிக்ஸரும், பவுண்டரியும் அடித்தார். வாஷிங்டன் சுந்தர் வீசிய 17வது ஓவரிலோ 2 சிக்ஸர்கள் விளாசினார்.
மிகச் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த சூர்யவன்ஷி சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் 96 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் களமிறங்கிய டானவன் ஃபெரீரா, ரஷித் கான் வீசிய கடைசி ஓவரில் 4 சிக்ஸர்கள் விளாசினார். அதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் எடுத்தது. ஃபெரீரா 11 பந்துகளில் 38 ரன்களும், ஜடேஜா 35 பந்துகளில் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். டைட்டன்ஸ் சார்பில் அதிகபட்சமாக ரபாடா மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பிளேயிங் லெவனில் யார்?
ராஜஸ்தான் ராயல்ஸ்
இந்தப் போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக் (கேப்டன்), டானவன் ஃபெரீரா, தசுன் ஷனகா, ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், நாந்த்ரே பர்கர், பிரிஜேஷ் ஷர்மா, யஷ் ராஜ் புஞ்சா.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஷுபம் துபே, சுஷாந்த் மிஷ்ரா, அமன் ராவ், ரவி பிஷ்னாய், துஷார் தேஷ்பாண்டே.
குஜராத் டைட்டன்ஸ்
இந்தப் போட்டிக்கான டைட்டன்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. குல்வந்த் கெஜ்ரோலியாவுக்குப் பதிலாக சாய் கிஷோர் சேர்க்கப்பட்டார்.
பிளேயிங் லெவன்: சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், சாய் கிஷோர், ககிஸோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, மொஹம்மது சிராஜ்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ராகுல் திவேதியா, கிளென் ஃபிலிப்ஸ், அனுஜ் ராவத், குமார் குஷாக்ரா, அர்ஷத் கான்.































