You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதின் - ஜின்பிங் நட்பு பாராட்டிய போதும், இரு நாட்டு ஒப்பந்தங்களில் தாமதம் ஏற்படுவது ஏன்?
- எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க்
- பதவி, ரஷ்யா ஆசிரியர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ஒரு கணம் நீங்கள் சீனாவை ரஷ்யா என்று தவறாக நினைத்திருக்கக் கூடும்.
விளாடிமிர் புதினும் ஷி ஜின்பிங்கும் கிரேட் ஹால் ஆப்ஃ தி பீப்பிள் நோக்கி சிவப்புக் கம்பளத்தில் நடந்து சென்றபோது, ஒரு சீன ராணுவ இசைக்குழு 'மாஸ்கோ நைட்ஸ்' என்ற ரஷ்ய செவ்வியல் இசையை வாசித்தது.
"இந்த மாஸ்கோ இரவுகள் எனக்கு எவ்வளவு பிரியமானவை என்று உங்களுக்குத் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்" என்று அந்தப் பாடலின் பல்லவி அமைகிறது.
அந்த இசைக்குறிப்புகளுக்குள், ஏதேனும் அரசியல் சார்ந்த அன்பு மலர்ந்ததற்கான ஒரு குறிப்பு ஒளிந்திருந்ததா?
இன்னும் சொல்லப்போனால், ப்ரோமேன்ஸ்(ஆண்களுக்கு இடையிலான நெருங்கிய நட்பு)...ஒளிந்திருந்ததா?
புதின் ஷி ஜின்பிங்கிடம், "எனது அன்பான நண்பரே" என்றார்.
ஷி ஜின்பிங் புதினிடம், "எனது பழைய நண்பரே" என்றார்.
தாங்கள் ஒரு சிறப்பு வாய்ந்த உறவைக் கட்டியெழுப்பியுள்ளோம் என்பதைக் காட்ட விரும்பும் இரு தலைவர்களின் மொழி இது.
இதைச் செய்வதற்கு அவர்களுக்குப் போதிய நேரம் கிடைத்துள்ளது. பல ஆண்டுகளாக புதினும் ஷி ஜின்பிங்கும் 40 க்கும் மேற்பட்ட முறை சந்தித்துள்ளனர்.
தங்களது பொது அறிக்கைகளில், அவர்கள் தங்களது நாடுகளுக்கு இடையிலான "உத்திசார் ஒத்துழைப்பு", "கூட்டாண்மை", "பரஸ்பர மரியாதை", "நட்பு" மற்றும் "நம்பிக்கை" ஆகியவற்றைப் பற்றிப் பேசினர்.
அவர்கள் இருவரும் இணைந்து அமெரிக்காவின் "பொறுப்பற்ற" அணுசக்திக் கொள்கையைக் கடுமையாக எதிர்த்ததுடன், டொனால்ட் டிரம்பின் 'கோல்டன் டோம்' ஏவுகணை பாதுகாப்பு அமைப்பிற்கான திட்டத்தையும் கண்டித்தனர்.
அவர்களது சந்திப்புக்கு முந்தைய நாள், ரஷ்ய அரசாங்க செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இரண்டு பெரிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
கடந்த வாரம் தனது சீனப் பயணத்தின் முடிவில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தின் படிக்கட்டுகளில் தனியாக ஏறும் டொனால்ட் டிரம்பின் புகைப்படம் ஒருபுறம் இடம்பெற்றிருந்தது. அதன் அருகில் புதினும் ஷி ஜின்பிங்கும் ஒன்றாக நடந்து செல்லும் ஒரு பழைய புகைப்படம் மறுபுறம் இடம்பெற்றிருந்தது.
அந்தக் காட்சி வழி கடத்தப்பட்ட செய்தி மிகவும் தெளிவானதாக இருந்தது. உலக அரங்கில் ரஷ்யாவும் சீனாவும் தோளோடு தோள் நிற்கின்றன என்பது தான் அது.
ஆனால், இது காதல் பாடல்கள், அன்பு மற்றும் ஆண் நட்பு ஆகியவற்றைக் கொண்ட உலகம் அல்ல.
இது அரசியல் சார்ந்த உலகம்.
மேலும், உலக அரசியல் உலகில் உறவுகள் அரிதாகவே அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையில் அமைகின்றன. இது பெரும்பாலும் சுயநலம் சார்ந்ததாகவே அமைகிறது.
ஷி-புதின் உச்சிமாநாட்டில், அந்த அன்பிற்கு சில எல்லைகள் இருப்பது தெளிவாகத் தெரிந்தது.
உதாரணத்துக்கு, எரிசக்தித் துறையை எடுத்துக் கொள்வோம்.
'பவர் ஆஃப் சைபீரியா 2' என்ற புதிய எரிவாயுக் குழாய் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ரஷ்யா ஆர்வமாக உள்ளதுடன், சீனாவில் இதில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் நம்பியிருந்தது.
இந்தக் குழாய் வழித்தடம் மேற்கு சைபீரியாவிலிருந்து கூடுதல் அளவிலான ரஷ்ய எரிவாயுவை மங்கோலியா வழியாக வட சீனாவிற்கு கொண்டு வரும், அதேபோல் ஐரோப்பிய சந்தைகளின் இழப்பை ஈடுசெய்ய ரஷ்யாவுக்கு உதவி செய்யும்.
கடந்த ஆண்டு ரஷ்யாவும் சீனாவும் இத்திட்டம் குறித்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன, ஆனால் இந்த ஒப்பந்தத்தை முடிப்பதில் சீனா எந்த அவசரமும் காட்டுவதாகத் தெரியவில்லை.
விலை நிர்ணயப் பிரச்னைகளுடன், ரஷ்யாவின் புதைபடிவ எரிபொருட்களை அளவுக்கு அதிகமாகச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க சீனா விரும்புவதாகவும் சில விமர்சகர்கள் கருதுகின்றனர்.
புதன்கிழமை அன்று கிரெம்ளின் மாளிகை, ரஷ்யாவும் சீனாவும் இத்திட்டத்தின் "அளவீடுகள் குறித்த பொதுவான புரிதலை" எட்டியுள்ளதாகக் கூறியது.
ஆனால், இறுதி ஒப்பந்தம் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
ரஷ்ய அதிகாரிகள் ஏமாற்றம் அடைவார்கள். ஆனால் அவர்கள் ஆச்சரியப்பட மாட்டார்கள்.
"ரஷ்யா மற்றும் சீனாவின் சூழல் ஒரே மாதிரியானவை அல்ல. அவர்களின் நலன்கள் எப்போதும் ஒத்துப்போவதில்லை" என்று ரஷ்ய அரசாங்க நாளிதழ் குறிப்பிட்டிருந்தது. புதினும் ஷி ஜின்பிங்கும் அருகருகே இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அதே பதிப்பில் தான் இச்செய்தியும் வெளியானது.
"இவ்வளவு பெரிய இரு நாடுகள், அந்த இரு நாடுகளுமே வல்லரசு மனப்பான்மையைக் கொண்டிருக்கையில், இது வேறு விதமாக இருக்க முடியாது"என்றும் கூறப்பட்டிருந்தது.
ரஷ்யாவும் அமெரிக்காவும் தங்களது உறவுகளைச் சீர்செய்ய உறுதியளித்த நிலையில், "புரோமேன்ஸ்"(ஆண்களுக்கு இடையிலான நெருங்கிய நட்பு) என்ற சொல் மற்றொரு உயர்மட்ட உறவுக்கு, அதாவது புதின்-டிரம்ப் உறவுக்குப் பயன்படுத்தப்பட்டு அதிக காலம் ஆகவில்லை.
கடந்த கோடையில் இரு அதிபர்களும் அலாஸ்காவில் சந்தித்த பிறகு, ரஷ்ய அதிகாரிகள் "நல்லிணக்க உணர்வு " என்று குறிப்பிடத் தொடங்கி, யுக்ரேன் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒரு பரஸ்பர புரிதலை எட்டியுள்ளதாக (மாஸ்கோவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிபந்தனைகளின் அடிப்படையில்) மறைமுகமாக உணர்த்தினர்.
ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை.
இன்று "நல்லிணக்க உணர்வு" மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.
"சீனாவின் ஆன்மா நிலைத்திருக்கிறது" என்று உச்சிமாநாட்டின் இடையே புதினின் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவ் கூறினார்.
"ஆனால் நல்லிணக்க உணர்வு? நான் அந்த சொல்லை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை".
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு