எல் மாயோ: 19 வயதில் கஞ்சா பயிரிட்டு, சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனாக வளர்ந்தது எப்படி?

சினாலோவா போதைப் பொருள் கடத்தல் கும்பலின் இணை நிறுவனரும் தலைவருமான இஸ்மாயில் எஸ் மாயோ ஜம்பாடாவுக்கு அமெரிக்காவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, சினாலோவா போதைப் பொருள் கடத்தல் கும்பலின் இணை நிறுவனரும் தலைவருமான இஸ்மாயில் எஸ் மாயோ ஜம்பாடாவுக்கு அமெரிக்காவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
    • எழுதியவர், ஜெரார்டோ லிஸ்ஸார்டி
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

அமெரிக்காவில் திங்கள் கிழமையன்று இஸ்மாயில் 'எல் மாயோ' ஜம்பாடாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, வயதான அந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் தனது எஞ்சிய வாழ்நாளை எப்படி கழிக்கப் போகிறார் என்பதை முடிவு செய்வதையும் தாண்டி, மிகவும் முக்கியமான ஒரு செய்தியை உணர்த்துகிறது.

நிபுணர்களின் கருத்துப்படி, இது மெக்சிகோவின் போதைப் பொருள் கடத்தல் வரலாற்றில் ஒரு தனித்துவமான சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.

சினலோவா கார்டெல் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் மற்றொரு இணை நிறுவனரான ஜோவாகின் 'எல் சாப்போ' குஸ்மானுடன் இணைந்து, ஜம்பாடா மெக்சிகன் போதைப் பொருள் கடத்தல் மன்னர்களின் ஒரு தலைமுறையையே பிரதிநிதித்துவம் செய்தார். இவர்கள் வன்முறை, பணம், துல்லியமான திட்டமிடல் ஆகியவற்றின் மூலம் பல தசாப்தங்களாக மிகப்பெரிய அதிகாரத்தைக் கட்டமைத்தனர். இவர்களின் செல்வாக்கும், பிடிபடாமல் தப்பிக்கும் திறனும் உலகெங்கிலும் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தின.

அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை ஆகஸ்ட் 2025இல் ஒப்புக்கொண்டபோது, தனது குற்றவியல் பயணம் எவ்வாறு தொடங்கியது என்பதைப் பற்றி ஜம்பாடா பேசினார்.

கடந்த 1969ஆம் ஆண்டு, தனக்கு 19 வயது இருந்தபோது, தானும் தனது நண்பர் ஒருவரும் சினலோவா மலைப் பகுதிகளில் கஞ்சா பயிரிடத் தொடங்கியதாக அவர் கூறினார்.

யாருடைய கண்காணிப்பிலும் சிக்காமல் இருப்பதற்காக, அவர்கள் சட்டவிரோதமான அந்தப் பயிரை சோளப் பயிர்களுக்கு மத்தியில் பயிரிட்டனர். முதல் அறுவடை பெரிய அளவில் வெற்றிகரமாக அமையாவிட்டாலும், அவர்களால் 27 கிலோ கஞ்சாவை உற்பத்தி செய்ய முடிந்தது. அதை அவர்கள் சுமார் 400 அமெரிக்க டாலர்களுக்கு விற்றதாக, இந்த மாதத் தொடக்கத்தில் அவரது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த ஆவணம் தெரிவிக்கிறது.

காலப்போக்கில் ஜம்பாடா தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, உலகின் மிகவும் சக்தி வாய்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக உயர்ந்தார்.

'எல் சாப்போ' குஸ்மானுடன் இணைந்து தென்னமெரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் முக்கிய கொக்கைன் கடத்தல் பாதைகளை அவர் கட்டுப்படுத்தினார். பின்னர் அமெரிக்க அரசு சினலோவா கார்டெல் குற்றக் கும்பலை உலகின் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் அமைப்பு என்று வர்ணித்தது.

இருப்பினும், 2024இல் நிகழ்ந்த அவரது வழக்கத்துக்கு மாறான கைது, குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டது ஆகியவற்றுக்குப் பிறகு, தனது எழுபதுகளில் இருக்கும் ஜம்பாடாவுக்கு அமெரிக்க ஃபெடரல் நீதிபதி பிரையன் கோகன் ஆயுள் தண்டனை விதித்தார்.

நீதிபதி பிரையன் கோகன், குறிப்பிடத்தக்க வகையில், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, எல் சாப்போ குஸ்மானுக்கும் ஆயுள் தண்டனையை விதித்திருந்தார்.

மேலும், 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தொகை அந்தக் கடத்தல் கும்பலின் லாபத்தைக் குறிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த மதிப்பீடு சரியானது என்பதை ஜம்பாடா முன்னரே ஒப்புக் கொண்டிருந்தார். ஜம்பாடா மற்றும் பிற மூத்த மெக்சிகன் போதைப் பொருள் கடத்தல் தலைவர்களின் வீழ்ச்சியுடன், சர்வ வல்லமை படைத்த போதைப் பொருள் மன்னர்களின் சகாப்தம் முடிவுக்கு வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

"எல் சாப்போ" குஸ்மான் ஆயுள் தண்டனை பெற்று அமெரிக்க சிறையில் இருக்கிறார்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, "எல் சாப்போ" குஸ்மான் ஆயுள் தண்டனை பெற்று அமெரிக்க சிறையில் இருக்கிறார்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சிறிய அளவிலான கஞ்சா சாகுபடியில் தங்கள் குற்றச் செயல்களைத் தொடங்கிய இவர்கள், காலப்போக்கில் சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகத்தின் அனைத்து முக்கியப் பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அத்துடன், அரசின் அதிகாரத்தையே சவால் விடும் அளவுக்கு வலிமை பெற்றவகளாகவும் திகழ்ந்தனர்.

சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group) என்ற அமைப்பின் மெக்சிகோ விவகாரங்களுக்கான மூத்த ஆய்வாளரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து ஆய்வு செய்து வருபவருமான டேவிட் மோரா பிபிசி முண்டோவிடம் பேசியபோது, "குற்றக் கும்பல் தலைவர்களின் பழைய தலைமுறை இப்போது ஒன்று முடிந்துவிட்டது அல்லது முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று கூறலாம்," எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், "அந்தப் பெரிய தலைவர்கள் மறைந்து வருவது போன்ற ஒரு சூழல் இது" என்று குறிப்பிட்ட அதேவேளையில், "போதைப் பொருள் கடத்தல் மற்றும் வன்முறை சார்ந்த சிக்கல்கள் இத்துடன் மறைந்துவிடப் போவதில்லை, அது தொடர்கிறது. அவர்களின் இடங்களை நிரப்ப மேலும் புதிய நபர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்" என்று எச்சரித்தார்.

மாறி வரும் சகாப்தங்கள்

சாட்சி வாக்குமூலங்கள் மற்றும் நீதிமன்ற ஆவணங்களின்படி, 1990களில் எல் சாப்போ, டிஜுவானா கார்டெல் ஆகியவற்றுக்கு இடையே நடந்த ஒரு வன்முறை மோதல் உள்பட, பல்வேறு போதைப் பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே மோதல்கள் வெடித்ததைத் தொடர்ந்து, இஸ்மாயில் 'எல் மாயோ' ஜம்பாடா, ஜோவாகின் 'எல் சாப்போ' குஸ்மான் ஆகியோர் கைகோர்த்தனர்.

அதேநேரத்தில், கொலம்பியா மற்றும் மெக்சிகோவை சேர்ந்த போதைப் பொருள் கும்பல்கள், அமெரிக்காவுக்குள் கொக்கைனை கடத்துவதற்காக கூட்டாண்மைகளை உருவாக்கி வந்தன.

ஜம்பாடாவும் குஸ்மானும் தத்தமது சொந்தக் குழுக்களையும் செயல்பாடுகளையும் நிர்வகித்தபோதிலும், அவர்கள் பல டன்கள் கொக்கைனின் பெரும் சரக்குகளை அனுப்புவதில் ஒன்றிணைந்து முதலீடு செய்து செயல்பட்டனர். மேலும் அமெரிக்காவின் முக்கிய நகரங்களுக்குள் போதைப் பொருட்களைக் கொண்டு செல்லப் பல்வேறு வழிகளை அவர்கள் ஒழுங்கமைத்தனர்.

முன்பு சக்தி வாய்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலாக இருந்த ஜுவாரெஸ் கார்டெலின் தலைவர் விசென்டே கரில்ல்லோ ஃபுவென்டெஸ்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, முன்பு சக்தி வாய்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலாக இருந்த ஜுவாரெஸ் கார்டெலின் தலைவர் விசென்டே கரில்ல்லோ ஃபுவென்டெஸ்

கடந்த 2018இல் 'எல் சாப்போ' குஸ்மானின் விசாரணையின்போது, அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தண்டனைக்காகக் காத்திருந்த வேளையில், 'எல் மாயோ'வின் சகோதரரான ஜேசுஸ் ஜம்பாடா ஒரு சாட்சியாக ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

லாரிகள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், அதிவேகப் படகுகள், கப்பல்கள் உள்பட போதைப் பொருட்களைக் கடத்துவதற்கு அந்த இரு தலைவர்களும் பல வழிமுறைகளைப் பகிர்ந்து கொண்டதாக அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

'எல் மாயோ' மற்றும் 'எல் சாப்போ' இடையிலான கூட்டாண்மைதான் சினலோவா கார்டெலின் அடித்தளமாக அமைந்தது.

காலப்போக்கில், இந்த கார்டெல், கடத்தல்காரர்கள், வெவ்வேறு பகுதிகளைக் கட்டுப்படுத்திய பிராந்திய தலைவர்கள், பண மோசடி செய்பவர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளிகள் ஆகியோருடன் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பை உருவாக்கியது.

இருப்பினும், இந்தக் குற்ற அமைப்பு மேலே இருந்து கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. ஜம்பாடா, குஸ்மான் ஆகியோரே மிகவும் உயர்மட்டத்தில் தலைவர்களாக இருந்து, முழு போதைப் பொருள் கடத்தல் கும்பலையும் மேற்பார்வையிட்டு, அனைத்து இறுதி முடிவுகளையும் எடுத்தனர்.

சினலோவா போதைப் பொருள் கடத்தல் கும்பல் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது, போட்டிக் கும்பல் உறுப்பினர்களைக் கொலை செய்தது, பல நாடுகளில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியது.

அது மெக்சிகோவின் மிகவும் சக்திவாய்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலாக மாறியிருந்தாலும், அது மட்டுமே அப்படியான ஒன்றாக இருக்கவில்லை. அதே காலகட்டத்தில் மற்ற முக்கிய கார்டெல்களும் சக்தி வாய்ந்த நபர்களால் வழிநடத்தப்பட்டு இயங்கி வந்தன; அந்த நபர்கள் பின்னர் கொல்லப்பட்டனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர்.

அந்த முன்னாள் கார்டெல் தலைவர்களில் சிலர் இப்போது அமெரிக்காவில் நீதியை எதிர்கொள்ளக் காத்திருக்கின்றனர். மேலும் சிலர் அரசு வழக்கறிஞர்களுடன் சாத்தியமான குற்ற ஒப்புதல் ஒப்பந்தங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அவர்களில் ஒருவர் ஜுவாரெஸ் கார்டெல்லின் தலைவரான விசென்டே கரில்லோ ஃபுயென்டெஸ். அவர் முதலில் சினலோவா கார்டெல் அமைப்பில் பணியாற்றினார்; ஆனால் குற்றவியல் குழுக்களுக்கு இடையிலான வன்முறை மோதலின்போது அதன் போட்டியாளரான லாஸ் ஜெட்டாஸ் குழுவில் இணைந்தார்.

எல் சாப்போ உலகம் முழுவதும் பிரபலமாகத் தொடங்கிய பிறகு சினாலோவாவில் விற்கப்பட்ட அவரது புகைப்படத்துன் கூடிய டி-சர்ட்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, எல் சாப்போ உலகம் முழுவதும் பிரபலமாகத் தொடங்கிய பிறகு சினாலோவாவில் விற்கப்பட்ட அவரது புகைப்படத்துன் கூடிய டி-சர்ட்

நன்கு அறியப்பட்ட மற்றுமொரு போதைப் பொருள் கடத்தல் மன்னன் ரஃபேல் கரோ குயின்டெரோ. இஸ்மாயில் 'எல் மாயோ' ஜம்பாடாவை போலவே, இவரும் கஞ்சா பயிரிடுவதில் தொடங்கி, பிறகு மற்ற சட்டவிரோத போதைப் பொருட்களின் கடத்தலிலும் ஈடுபட்டார். காலப்போக்கில் அவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக உருவெடுத்ததால், 'நார்கோ இன் நார்கோஸ் (போதைப் பொருள் கடத்தல்காரர்களின் போதைப் பொருள் கடத்தல்காரர்)' என்ற புனைப்பெயரைப் பெற்றார்.

கடந்த 1985இல் அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு அமலாக்க நிர்வாகத்தின் ஏஜென்டான என்ரிக் கமரேனாவை கொலை செய்ய உத்தரவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, என்ரிக் கமரேனா கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பிறகு கொலை செய்யப்பட்டார். அவரது கொலை மெக்சிகோ, அமெரிக்கா என இரு நாடுகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது, போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கும் அவற்றின் சக்தி வாய்ந்த தலைவர்களுக்கும் எதிரான தங்கள் நடவடிக்கைகளை இரு நாடுகளும் தீவிரப்படுத்த வழிவகுத்தது.

இருப்பினும், குற்றக் கும்பல்கள் அரசுக்குத் தொடர்ந்து சவாலாக இருந்து வந்தன. 2006இல் மெக்சிகோ அரசாங்கம் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராகப் போரை அறிவித்து, கும்பல்களை எதிர்த்துப் போராட ராணுவத்தை அனுப்பியபோதும்கூட, வன்முறை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அன்று முதல், நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டனர்.

பழைய போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டதாலும் கொல்லப்பட்டதாலும், போதைப் பொருள் கடத்தல் குழுக்கள் தங்கள் செயல்பாட்டு முறைகளை மாற்றிக்கொண்டன. மேலும், அவர்கள் தங்கள் வர்த்தகத்தை மெத்தம்பெட்டமைன், ஃபென்டானில் போன்ற புதிய செயற்கை போதைப் பொருட்களை உள்ளடக்கி விரிவுபடுத்தினர்.

காலப்போக்கில், பெரிய போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்தன. அதேவேளையில், எல்லாம் வல்ல போதைப் பொருள் மன்னனின் சகாப்தமும் படிப்படியாக முடிவுக்கு வந்தது.

ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் என்ற குற்றக் கும்பலின் தலைவரான நெமேசியோ 'எல் மென்சோ' ஒசெகுவேராவின் மரணத்துக்குப் பிறகு, அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு அமலாக்க நிர்வாகத்தின் முன்னாள் செயல்பாட்டுத் தலைவரான ரே டோனாவன், பிபிசி முண்டோவிடம் "ஒற்றைத் தலைமையாகச் செயல்படும், எல்லாம் வல்ல தலைவரின் சகாப்தத்தில் இருந்து தற்போதைய சூழல் விலகிச் செல்வதாக" கூறினார்.

"எல் மென்சோ, பிப்ரவரி மாதம் மெக்சிகோவில் நடந்த ஒரு ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டார்; அந்த நேரத்தில் அவர் அந்நாட்டின் மிகவும் தேடப்படும் நபராக இருந்தார்."

கடந்த 2016இல் மெக்சிகோவில் 'எல் சாப்போ' குஸ்மானின் கைதுக்கு வித்திட்ட நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட ரே டோனாவன், இன்றைய போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் சக்தி வாய்ந்த ஒற்றைத் தலைவரைச் சார்ந்து இருப்பதற்குப் பதிலாக, பரவலாக்கப்பட்ட கட்டளை முறையை உள்ளடக்கிய செயல்பாட்டு வடிவங்களைப் பயன்படுத்தி, "மேலும் நெகிழ்வான, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தலைமைத்துவக் கட்டமைப்புகளை" உருவாக்க முயல்வதாகக் கூறினார்.

சினாலோவா கார்டெல் எதிர்கொண்ட உள்போர் கடுமையான வன்முறைக்கு வித்திட்டது

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, சினாலோவா கார்டெல்உள்ளுக்குள்ளேயே எதிர்கொண்ட பிரச்னைகள் கடுமையான வன்முறைக்கு வித்திட்டன.

எல் மாயோ, எல் சாப்போவின் மாறுபட்ட பாணி

நீண்டகாலம் கூட்டாளிகளாக இருந்தபோதிலும், போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவர்களாக ஜம்பாடா, குஸ்மான் இடையே மாறுபட்ட பாணிகளையும் அணுகுமுறைகளையும் கொண்டிருந்தன.

"எல் சாப்போ" பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார், மெக்சிகோவில் திரைப்படங்களில் பார்ப்பதைப் போன்ற இரண்டு முறை சிறையில் இருந்து தப்பியுள்ளார். அவை அவரது உலகளாவிய புகழை வளர்த்து, அவரைச் சந்தைப்படுத்தி, தொலைக்காட்சித் தொடர்களில் ஒரு பழம்பெரும் கதாபாத்திரமாக மாற்றின. இது அவருக்கு மேன்மேலும் ஈர்ப்பாக அமைந்தது.

"உலகில் வேறு யாரையும்விட நான் அதிக ஹெராயின், மெத்தம்பெட்டமைன், கொக்கைன், மரிஜுவானாவை விநியோகிக்கிறேன்" என்று அவர் தனது இறுதி கைதுக்கு முன்பு, தலைமறைவாக இருந்தபோது, ரோலிங் ஸ்டோன் பத்திரிகைக்காக அமெரிக்க நடிகர் ஷான் பென்னுக்கு அளித்த ஒரு நேர்காணலில் பெருமையாகக் கூறினார்.

இதற்கு மாறாக, "எல் மாயோ" மறைவில் இருந்தபடி, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலே செயல்பட்டார். பொதுவெளியில் அவரது முகம் அரிதாகவே அறியப்பட்டது என்பதுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர் கைது செய்யப்பட்டதே இல்லை.

"எல் சாப்போ"வின் மகன்களில் ஒருவரான ஜோகுயின் குஸ்மான் லோபஸ், அவரைக் கடத்தி, விமானத்தில் எல் பாசோவின் புறநகர்ப் பகுதிக்கு அழைத்துச் சென்று, வணிகக் கூட்டத்திற்கு அழைத்ததன் மூலமாக அமைக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு வலையில், அவர் டெக்சாஸில் அமெரிக்க உளவாளிகளால் பிடிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையே அவநம்பிக்கையைத் தூண்டியது. "எல் மாயோ"வை ரகசியமாக இடமாற்றம் செய்ய அண்டை நாட்டின் பாதுகாப்பு ஏஜென்டுகள் உதவினார்களா என்பதை மெக்சிகோ கண்டறிய முயன்று வருகிறது.

ஜம்பாடாவின் வீழ்ச்சி, "லாஸ் மாயோஸ்" என்று அழைக்கப்படும் அவரது ஆட்களுக்கும், "லாஸ் சாபிடோஸ்" என்று அழைக்கப்படும் குஸ்மானின் குழுவினருக்கும் இடையே ஒரு உள்போரைத் தூண்டியது, இது சினாலோவாவை உலுக்கியுள்ளது.

சினாலோவா கார்டெல் எதிர்கொண்ட உள்போர் கடுமையான வன்முறைக்கு வித்திட்டது

பட மூலாதாரம், Getty Images

அந்த மெக்சிகன் மாகாணத்தில் தான் மேற்கொண்ட களப் பணியின்போது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, தங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைப்பதற்காக பலத்தைப் பயன்படுத்துவதுடன் மட்டுமின்றி, சுகாதாரம், நீதித்துறை போன்ற பல்வேறு துறைகளிலும் அரசாங்கப் பணிகளைச் செய்து வந்த பழைய தலைவர்களின் பங்குக்கு முற்றுப்புள்ளி வைத்ததைத் தான் கவனித்ததாக மோரா சுட்டிக்காட்டுகிறார்.

மலைப்பகுதி சமூகங்களில் வசிக்கும் மக்களிடம் பேசும்போது, கடந்த காலத்தின் சக்தி வாய்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவர்கள் இப்போது இல்லை என்று அவர்களில் பெரும்பாலோர் கூறுவதாக அந்த ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.

"மலைப்பகுதி மக்களிடம் பேசும்போது, அந்தப் பெரிய ஆளுமை இப்போது இலை. அவர் ஒரு 'தலைவர்' போன்றவராக இருந்தார். யாராவது கொல்லப்பட்டால் அவர் நேரில் வந்து உதவிகளைச் செய்வார்" என்று அவர்கள் தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்குப் பதிலாக, இப்போது சிறு அளவிலான உள்ளூர் தலைவர்கள் செயல்படுவதாகவும், இவர்கள் பிற குற்றக் குழுக்களுடன் அதிகாரப் போட்டியில் ஈடுபட்டு ஒப்பந்தங்கள் மூலம் போதைப் பொருள் வர்த்தகத்தைத் தொடர்வதாகவும் அவர் விளக்கினார்.

இந்த மாதம், சர்வதேச நெருக்கடிக் குழு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சினலோவா பகுதியிலுள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையிலான வன்முறை மோதல்களோ அல்லது கிளாடியா ஷெய்ன்பாம் தலைமையிலான அரசாங்கம் உத்தரவிட்ட பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கையோ, ஃபென்டானில் விநியோகத்தைக் குறைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை அழிக்கவும், சட்டவிரோத போதைப் பொருட்களைக் கைப்பற்றவும், சந்தேக நபர்களைக் கைது செய்யவும் அமெரிக்காவுடைய அழுத்தத்தின் பேரில் மெக்சிகோ அரசு இந்த நடவடிக்கையைத் தொடங்கியது.

டேவிட் மோராவின் கருத்துப்படி, புதிய குழுக்களும் புதிய இடங்களும் இப்போது போதைப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன என்பதை இது உணர்த்துகிறது. மற்ற சட்டவிரோத போதைப் பொருட்களைக் கையாண்டதைப் போலவே, தேவைக்கு ஏற்ப ஃபென்டானிலை விநியோகிக்க கடத்தல்காரர்கள் புதிய வழிகளைக் கண்டறிந்து இருக்கக்கூடும் என்பதையும் இது குறிக்கலாம்.

மேலும், "அமெரிக்காவில் பிடிபட்ட, கொல்லப்பட்ட அல்லது தண்டனை பெற்ற மெக்சிகோவின் முக்கிய போதைப் பொருள் கடத்தல் தலைவர்களின் பட்டியலை நாம் தயாரிக்கலாம். அதன் முடிவு மிகவும் ஏமாற்றம் தருவதாகவே இருக்கும் என்று நான் துணிச்சலாகக் கூறுவேன். ஏனெனில், இந்தப் பிரச்னையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை" என்றும் மோரா கூறினார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு