தூத்துக்குடி மாணவி பாலியல் கொலை வழக்கில் இரண்டரை மாதங்களில் தீர்ப்பு - குற்றவாளிக்கு இரட்டை தூக்கு

தூத்துக்குடி மாணவி பாலியல் கொலை வழக்கில் சுமார் இரண்டரை மாதங்களில் தீர்ப்பு - குற்றவாளிக்கு இரட்டை தூக்கு
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தூத்துக்குடி அருகே 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரன் என்பவர் குற்றவாளி என தீர்ப்பளித்த தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா, இரட்டை தூக்கு தண்டனை விதித்துள்ளார்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு கடந்த 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. பின்னர், தொடர்ந்து 3 முறை நேரில் தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு தர்ம முனீஸ்வரனை அழைத்து வந்து போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், இன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி பிரீத்தா தெரிவித்திருந்தார்.

அதன்படி, தர்ம முனீஸ்வரன் மதுரை மத்திய சிறையில் இருந்து காவல்துறை வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியில் அழைத்து வரப்பட்டார். அவரை காவல்துறையினர் சுற்றி வளைத்து பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்குள் அழைத்துச் சென்றனர்.

பின்னர், தர்ம முனீஸ்வரனை நீதிபதி பிரீத்தா முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். தர்ம முனீஸ்வரனிடம் வழக்கு குறித்து ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா என்றும், உங்களுக்கு என்ன மாதிரியான தண்டனை வேண்டும் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். தர்ம முனீஸ்வரன் எதுவும் பதில் சொல்லாத நிலையில், அவரிடம் குடிக்க தண்ணீர் எதுவும் வேண்டுமா என கேட்டார் நீதிபதி பிரீத்தா.

பின்னர், குற்றவாளி தர்ம முனீஸ்வரனை குற்றவாளி என்று அறிவித்தார் நீதிபதி ப்ரீத்தா.

மாணவியின் தந்தை கூறியது என்ன?

மாணவியின் தந்தை பிபிசியிடம் பேசுகையில், "என் மகள் இறந்த துயருக்கு நடுவே இந்த தீர்ப்பு என் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. குற்றவாளி செய்தது பெரிய தவறு, அவர் ஏற்கெனவே பல குற்றங்களில் ஈடுபட்டவர். எனவே, அவருக்கு விரைந்து தண்டனை கிடைக்கும் என நான் எதிர்பார்த்தேன். காவல்துறையினர், வழக்கறிஞர்கள் நன்றாக ஒத்துழைத்தனர். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய எஸ்.பி மதன் சிறப்பாக செயல்பட்டார். என் மகளை நினைக்காத நாளில்லை. அவளுக்கு நடந்ததற்கு இன்று நீதி, நியாயம் கிடைத்திருப்பதாக நினைக்கிறேன்" என்றார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பூமயில் இதுகுறித்து கூறுகையில், "தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுக்கு எதிரான தன்னெழுச்சியான போராட்டங்களும் நடக்கின்றன. இந்த சம்பவத்திலும் நாங்கள் குற்றவாளியை கைது செய்யக் கோரியும் அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் போராட்டங்களை நடத்தினோம். தேர்தல் நேரத்தில் இந்த போராட்டத்துக்கு கவனம் கிடைத்தது. பல அரசியல் கட்சிகளும் இதை கையில் எடுத்தார்கள். இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். இன்னும் இத்தகைய பல வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளிலும் விரைந்து தீர்வு காண வேண்டும். நீதிமன்றம் இத்தகைய வழக்குகளின் விசாரணையை முறையாக நடத்தி தீவிரப்படுத்த வேண்டும்" என்றார்.

தர்ம முனீஸ்வரன்
படக்குறிப்பு, தர்ம முனீஸ்வரன்

என்ன நடந்தது?

தூத்துக்குடி அருகே உள்ள கிராமம் ஒன்றில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி காவல்நிலையத்தில் பிளஸ்டூ மாணவியின் பெற்றோர் புகார் ஒன்றை அளித்தனர். சம்பவம் நடந்த நாளில் மாலை 6 மணியளவில் இயற்கை உபாதையை கழிக்கச் செல்வதாகக் கூறி அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற அந்த மாணவி இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பது அவரது புகார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

காவல் துறையினர் இந்த புகார் தொடர்பாக அலட்சியமாக பதில் அளித்ததாக, அந்த மாணவியின் பெற்றோர் அந்த சமயத்தில் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், மார்ச் 11-ஆம் தேதி மதியம் சுமார் 3 மணியளவில் அதே காட்டுப்பகுதியில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் கடந்த மார்ச் 16 அன்று இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக அரசுத் தரப்பில் சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

மாணவி கொலை தொடர்பாக ஐந்து பேரிடம் டிஎன்ஏ சோதனை நடத்துவதற்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த நேரத்தில் அந்த இடத்தில் பதிவான செல்போன் எண்களை சேகரித்து காவல்துறை விசாரித்து வருவதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனிடையே, மாணவி காணாமல் போய்விட்டதாக அளிக்கப்பட்ட புகாரை அலட்சியமாக கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் பிரவீணா இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

பாலியல் வன்கொடுமை

காவல்துறை கூறியது என்ன?

அதன் தொடர்ச்சியாக, மாணவி கொலை வழக்கில் தர்மமுனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக அப்போதைய தூத்துக்குடி எஸ்.பி மதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அறிவியல்பூர்வமாக புலன் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்களும் தடயவியல் நிபுணர்களும் தடயங்களைச் சேகரித்து தனித்தனியாக அறிக்கை கொடுத்தனர்." எனக் கூறினார்.

பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறிய மதன், "சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி இல்லையென்றாலும் சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம்." என்கிறார்.

"அந்தவகையில், 98 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். சம்பவம் நடந்த நாளில் பதிவான 2,574 செல்போன் எண்களை ஆராய்ந்தோம். சிறையில் இருந்து வெளியே வந்த நபர்கள் உள்பட குற்றப் பின்னணி கொண்ட நபர்களின் பட்டியலைச் சேகரித்து விசாரிப்பதற்கு குழுக்களை அமைத்தோம்." எனவும் தெரிவித்தார்.

பாலியல் வன்கொடுமை
படக்குறிப்பு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன்

"வழக்கின் விசாரணையில் குற்றப் பின்னணி கொண்ட 461 பேரை நேரடியாக விசாரித்தோம். அவர்கள் கூறிய தகவல்களை டிஜிட்டல் ஆதாரம் மூலமாக ஆய்வு செய்தோம். இவ்வளவு நாட்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் ஒருவரைக் கைது செய்தோம்." எனக் கூறினார் மதன்.

"சூழ்நிலை சாட்சிகள், செல்போன் அழைப்புகள், சிசிடிவி கேமரா காட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த நபரை நெருங்கினோம். எந்தவித அழுத்தத்துக்கும் ஆளாகாமல் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து கைது செய்துள்ளோம்," என்கிறார் அவர்.

கைதான நபர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும், "அந்த மாணவி பாலியல் துன்புறுத்தலைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டுள்ளார்" எனக் குறிப்பிட்டார்.

சம்பவம் நடந்து 9 நாட்கள் கழித்தே சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக அப்போது விமர்சனமும் எழுந்தது.

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த மதன், "கிராமத்தில் உள்ளவர்கள் கூறுவது உண்மையா.. கிராமத்துக்கு அருகில் வசிப்பவர்கள் கூறுவது உண்மையா என தனித்தனியாக ஆய்வு செய்தோம்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு