இஸ்ரேலுடன் 'ஆப்ரஹாம் ஒப்பந்தம்' செய்ய அரபு நாடுகளை டிரம்ப் வலியுறுத்துவது ஏன்?

இஸ்ரேல்-அரபு நாடுகள் உறவை மாற்றிய 'ஆபிரகாம் ஒப்பந்தம்' பற்றி டிரம்ப் மீண்டும் பேசுவது ஏன்?

பட மூலாதாரம், Anadolu via Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இஸ்ரேலுடனான ராஜ்ஜீய உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒப்பந்தங்களின் தொகுப்பான "ஆபிரகாம் ஒப்பந்தங்களில்" (Abraham Accords) அனைத்து நாடுகளும் உடனடியாக இணையுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஒப்பந்தங்களில் இணைவது, இரானுடனான எதிர்கால அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவும் அமையக் கூடும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த முந்தைய காலத்தில், அதாவது, 2020ஆம் ஆண்டில், இந்த ஆபிரகாம் ஒப்பந்தங்கள் முதன்முதலில் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்களின் மூலம், பல அரபு நாடுகள் இஸ்ரேலுடனான உறவுகளை அதிகாரப்பூர்வமாக மேம்படுத்தவும், இயல்பான ராஜ்ஜீய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் ஒப்புக்கொண்டன.

தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில் இதுகுறித்து டிரம்ப் வெளியிட்ட பதிவில், "அனைத்து நாடுகளும் ஆபிரகாம் ஒப்பந்தங்களில் உடனடியாகக் கையெழுத்திடுமாறு நான் கோரிக்கை விடுக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இரானும் அமெரிக்க அதிபரான தன்னுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், "ஒப்பற்ற இந்த உலகக் கூட்டணியில் அவர்களும் அங்கம் வகிப்பது ஒரு பெருமையாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பாகிஸ்தான், துருக்கி, ஜோர்டான், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்ட பின்னரே டிரம்ப் இந்த கருத்துகளைத் தெரிவித்தார். இந்த நாடுகளில் சில, ஏற்கெனவே ஆபிரகாம் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

இதுவரை, டிரம்பின் இந்த முன்மொழிவுக்குப் பகிரங்கமாகப் பதிலளித்த ஒரே நாடு பாகிஸ்தான் மட்டுமே. இந்த ஒப்பந்தத்தில் இணையும் யோசனையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.

பாகிஸ்தானின் "அடிப்படை சித்தாந்தங்களுக்கு" முரணாக அமையும் எந்த ஒப்பந்தத்திலும் தங்கள் நாடு அங்கம் வகிக்காது என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்தார். இஸ்ரேலின் வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் "நம்ப முடியாது" என்றும் அவர் கூறினார்.

ஒருபுறம் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளுக்கும், மறுபுறம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக முரண்பாட்டை ஏற்படுத்தி வரும் ஒரு முக்கியப் பிரச்னையாக, தனி பாலத்தீன நாட்டை உருவாக்குவது தொடர்பான கேள்வி நிலவி வருகிறது.

காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல்களால் இந்தப் பிராந்தியத்தில் உள்ள ராஜ்ஜீய உறவுகள் மேலும் சிக்கலான நிலையை அடைந்துள்ளன.

காஸாவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியதில் இருந்து இதுவரை 72,300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்தே இந்தப் போர் மூண்டது. அந்தத் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 251 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர்.

ஆபிரகாம் ஒப்பந்தங்கள் என்றால் என்ன?

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், அந்தத் திட்டத்தை "நூற்றாண்டின் மிகப்பெரிய அவமதிப்பு" என்று நிராகரித்தார்.

ஆபிரகாம் ஒப்பந்தங்கள் என்றால் என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கடந்த 2020ஆம் ஆண்டில், இஸ்ரேலுக்கும், பஹ்ரைன், மொராக்கோ, சூடான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நான்கு நாடுகளுக்கும் இடையே அதிகாரபூர்வ ராஜ்ஜீய உறவுகளை ஏற்படுத்துவதற்கான தொடர் ஒப்பந்தங்களை ஏற்பாடு செய்ய அமெரிக்கா உதவியது.

பல ஆண்டுகளாக, மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகளுடன் இஸ்ரேல் கடினமான உறவுகளையே கொண்டிருந்தது. அந்தப் பிராந்தியத்தில் அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் அது இருந்தது. இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக இந்த ஒப்பந்தங்கள் கருதப்பட்டன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தின்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தங்களில் முதன்முதலில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட பிறகு, சுற்றுலா, வர்த்தகம், பாதுகாப்பு போன்ற துறைகளில் இந்த நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்தது.

பின்னர், 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கையெழுத்தான தனித்தனி ஒப்பந்தங்கள் மூலம் மொராக்கோ, சூடான் ஆகிய நாடுகளும் இதில் இணைந்தன. மிகச் சமீபத்தில், 2025ஆம் ஆண்டில் கஜகஸ்தானும் இந்தச் செயல்முறையின் ஒரு பகுதியாக மாறியது.

கடந்த 2020ஆம் ஆண்டில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த ஒப்பந்தத்தை "நூற்றாண்டின் வாய்ப்பு" என்று வர்ணித்தார். பாலத்தீனர்களுடனான எதிர்கால அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு இதுவொரு தொடக்கப் புள்ளியாக அமையக்கூடும் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், இந்தத் திட்டம் பாலத்தீன தலைவர்களிடம் இருந்து கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது.

பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இதை "நூற்றாண்டின் மிகப்பெரிய அவமதிப்பு" என்று குறிப்பிட்டார்.

மேற்குக் கரையிலிருந்து தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், "டிரம்ப் மற்றும் நெதன்யாகுவிடம் நான் ஒன்றைச் சொல்கிறேன். ஜெருசலேம் விற்பனைக்குரியது அல்ல; எங்கள் உரிமைகளும் விற்பனைக்குரியதல்ல. அவை பேரம் பேசுவதற்கு உரியவையும் அல்ல. உங்கள் ஒப்பந்தம், அந்தச் சதித்திட்டம், ஒருபோதும் நிறைவேறாது" என்று அப்பாஸ் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் இரானிய தலைமையாலும் விமர்சிக்கப்பட்டு, கண்டிக்கப்பட்டது.

ஆபிரகாம் ஒப்பந்தங்கள் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images

முக்கிய முரண்பாடுகள் என்ன?

இஸ்ரேலுக்கும் பல அரபு நாடுகளுக்கும் இடையிலான மிகப்பெரிய கருத்து வேறுபாடாக, ஒரு சுதந்திர பாலத்தீன அரசு குறித்த பிரச்னை தொடர்கிறது.

பல ஆண்டுகளாக, பெரும்பாலான அரபு நாடுகள் ஒரு பொதுவான நிலைப்பாட்டைப் பின்பற்றி வந்தன. பாலத்தீனர்களுக்கு முதலில் தங்களுக்கென ஒரு சுதந்திர நாடு வழங்கப்பட்டால் மட்டுமே, இஸ்ரேலுடன் இயல்பான தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள ஒப்புக் கொள்வோம் என்று அவை கூறி வந்தன.

இருப்பினும், ஆபிரகாம் உடன்படிக்கைகள் இந்த நீண்டகால அணுகுமுறையை மாற்றின. பாலத்தீன சுதந்திரப் பிரச்னை இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலையிலும், இந்த ஒப்பந்தங்களின் கீழ் சில அரபு நாடுகள் இஸ்ரேலுடன் முறையான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள ஒப்புக்கொண்டன.

பாலத்தீனர்களின் உரிமைகள் மற்றும் இறையாண்மை குறித்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், மேற்குக் கரையின் பெரும் பகுதிகளை இணைத்துக் கொள்ளும் அல்லது அதிகாரப்பூர்வமாகத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் தன் திட்டத்தை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்திற்கான ஒரு முக்கிய நிபந்தனை என்று கூறியிருந்தார்.

தற்போது மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ள சுமார் 160 குடியிருப்புகளில் ஏறத்தாழ 7 லட்சம் இஸ்ரேலிய யூதர்கள் வசித்து வருகின்றனர்.

பல நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் இந்தக் குடியிருப்புகளை சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானவை எனக் கருதுகின்றன. இருப்பினும், இஸ்ரேல் இந்தக் கூற்றை நிராகரித்து, இந்தக் குடியிருப்புகள் சட்டப்பூர்வமானவை என வாதிடுகிறது.

இஸ்ரேல்-அரபு நாடுகள் உறவை மாற்றிய 'ஆபிரகாம் ஒப்பந்தம்' பற்றி டிரம்ப் மீண்டும் பேசுவது ஏன்?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப், 2020 ஆகஸ்ட் மாதம் வெள்ளை மாளிகையில் "ஆபிரகாம் ஒப்பந்தங்களை" அறிவித்தார்

ஆபிரகாம் ஒப்பந்தங்களின் தாக்கம்

கடந்த 2020ஆம் ஆண்டில், இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான வர்த்தகம், சில ஆண்டுகளுக்குள் ஆண்டுதோறும் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகரிக்கக் கூடும் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் மதிப்பிட்டனர். இது 15,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாகும் என்றும் அவர்கள் நம்பினர்.

இஸ்ரேலின் மத்திய புள்ளியியல் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இஸ்ரேலுக்கும் 'ஆபிரகாம் ஒப்பந்தங்களில்' கையெழுத்திட்ட நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், 2023ஆம் ஆண்டில் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்தது. இது 2022ஆம் ஆண்டின் வர்த்தக அளவுடன் ஒப்பிடுகையில் சுமார் 16% அதிகம்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் அந்நாடு தனது ராணுவ ஒத்துழைப்பையும் வர்த்தக வாய்ப்புகளையும் விரிவுபடுத்திக் கொள்ள உதவியது. உலகின் மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் உயர் தொழில்நுட்ப தொழில்துறைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழும் இஸ்ரேலுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பஹ்ரைனும் வெளிப்படையாக வர்த்தகம் செய்ய முடிந்தது.

மொராக்கோவும் இஸ்ரேல் உடனான தனது ராஜ்ஜீய உறவுகளில் தெளிவான முன்னேற்றங்களைக் கண்டதுடன், இந்த ஒப்பந்தத்தின் மூலம் சில பொருளாதார பயன்களையும் அடைந்தது.

இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் சூடானின் பங்கேற்பு பெரும்பாலும் மந்தமடைந்து இருப்பதுடன், பெரிய அளவில் முன்னேற்றம் எதையும் காணவில்லை. கஜகஸ்தான் 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தது. ஆனால் அதன் பங்கேற்பு இதுவரை பெரும்பாலும் 'அடையாள ரீதியிலானதாகவே' இருந்து வருகிறது.

மொத்தத்தில், 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையிலான குழு நடத்திய தாக்குதலும், அதைத் தொடர்ந்து காஸாவில் மூண்ட போரும், மத்திய கிழக்கு நாடுகளின் ராஜ்ஜீய உறவுகளில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தன.

இந்த மோதலின் காரணமாக, இஸ்ரேலுக்கும் அந்தப் பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மந்தமடைந்தது. அதேவேளையில், இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களும் அரசியல் கருத்து வேறுபாடுகளும் அதிகரித்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு