நேரலை, இரான் - அமெரிக்கா பேச்சு பற்றி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இரான் - அமெரிக்கா பேச்சு பற்றி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன?

    பாகிஸ்தான்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்கா - இரான் இடையேயான பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இரு நாடுகளின் பேச்சுவார்த்தை குழுவினரும் பாகிஸ்தான் வந்தடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் நீடித்த பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதியை அடைவதில் அமெரிக்காவின் உறுதிப்பாட்டை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷக் தார் பாராட்டியுள்ளார்.

    இரானும் அமெரிக்காவும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என தான் நம்புவதாக அவரை மேற்கோள்காட்டி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    மேலும் அதில், "இந்த மோதலுக்கு நிலைத்த மற்றும் வலுவான தீர்வை கண்டடைவதை நோக்கி இரு தரப்புக்கும் தொடர்ந்து உதவ பாகிஸ்தானின் விருப்பத்தை வெளிப்படுத்தினார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  2. தமிழ்நாடு உள்துறை செயலாளரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு

    தமிழ்நாடு, தேர்தல் ஆணையம்

    பட மூலாதாரம், MDCRC, India

    படக்குறிப்பு, மணிவாசன் ஐ.ஏ.எஸ்

    தமிழ்நாட்டின் புதிய உள்துறை செயலாளராக மணிவாசனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    உள்துறை செயலாளர் தீரஜ் குமாரை மாற்றி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அவரை உடனடியாக நியமித்து இன்று (ஏப்ரல் 11) மாலை 5 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பணிமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி தேர்தல் முடிகின்ற வரையில் தேர்தல் தொடர்பான எந்தப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் ஏற்கெனவே தலைமைச் செயலாளர், காவல் துறை தலைவர், சென்னை மாநகர ஆணையர் மற்றும் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை டிஜிபி ஆகியோரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  3. "ஹெஸ்பொல்லா உடன் பேச்சுவார்த்தை இல்லை" - இஸ்ரேல் தகவல்

    இஸ்ரேல், லெபனான், அமெரிக்கா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, லெபனான்

    லெபனான் உடனான இஸ்ரேலின் பேச்சுவார்த்தை செவ்வாய்கிழமை தொடங்க உள்ள நிலையில் ஹெஸ்பொல்லா உடன் பேச்சுவார்த்தை இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    அடுத்த வாரம் வாஷிங்டனில் லெபனான் பிரதிநிதிகளுடன் அதிகாரப்பூர்வ அமைதிப் பேச்சுவார்த்தைகளை தொடங்க இஸ்ரேல் ஒப்புக்கொண்ட நிலையில் இந்தப் பேச்சுவார்த்தையில் ஹெஸ்பொல்லா இடம்பெறாது என அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார்.

    "இஸ்ரேலைத் தொடர்ந்து தாக்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பு உடன் போர்நிறுத்தம் பற்றி விவாதிக்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. இரு நாடுகள் இடையே அமைதிக்கு இந்த அமைப்பு தான் முக்கிய தடையாக இருக்கிறது," என இஸ்ரேல் தூரர் மைக்கேல் லெய்டர் கூறியுள்ளார்.

    அமெரிக்காவில் உள்ள லெபனான் மற்றும் இஸ்ரேல் தூதர்கள் மற்றும் லெபனானுக்கான அமெரிக்க தூதர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

    அமெரிக்க மத்தியஸ்தம் செய்து செவ்வாயன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தை இஸ்ரேல்-லெபனான் மோதலில் போர்நிறுத்தம் ஏற்படுத்துவதை மையப்படுத்தி இருக்கும் என லெபனான் அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. வணக்கம் நேயர்களே!

    இன்று (11-04-2026) பிற்பகல் வரையிலும் நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த தகவல்களை சுருக்கமாக வழங்குவது மோகன்.

  5. சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றம்

    சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றம்

    சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் மாற்றப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதில் அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ள அருண் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்த பணியிலும் ஈடுபட மாட்டார் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

  6. ஹோர்மூஸ் நீரிணையை கடந்த 18 கப்பல்கள்

    ஹோர்மூஸ் நீரிணையை கடந்த 18 கப்பல்கள்

    பட மூலாதாரம், Reuters

    இரான் உடனான அமெரிக்க - இஸ்ரேல் போரின் இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, ஹோர்மூஸ் நீரிணை வழியாக மொத்தம் 18 கப்பல்கள் மட்டுமே கடந்து சென்றுள்ளன (பிஎஸ்டி நேரப்படி வெள்ளிக்கிழமை 13:00 வரை) என்று மரைன் ட்ராஃபிக் கண்காணிப்பு இணையதளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

    மோதல் வெடிப்பதற்கு முன்பு, தினசரி சராசரியாகக் கடந்து சென்ற சுமார் 140 கப்பல்களோடு ஒப்பிடும்போது இது மிகக் குறைவு.

  7. காரைக்குடி பரப்புரையில் பேசாமல் திரும்பிய விஜய்

    காரைக்குடி பரப்புரையில் பேசாமல் திரும்பிய விஜய்

    பட மூலாதாரம், TVK

    காரைக்குடிக்கு பரப்புரைக்கு சென்ற தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் பேசாமல் திரும்பினர்.

    பிற்பகல் வேளையில் காரைக்குடி சென்றடைந்த விஜய், திடீரென தனது பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி சைக்கிளில் சென்றார். ஆனால், அவர் கூட்டத்தில் பேசவில்லை.

    பரப்புரைக்கு தங்கள் கட்சி சார்பில் மதியம் 12 முதல் 4 மணி வரை நேரம் கேட்டிருந்ததாகவும் ஆனால் 2.30 மணி வரை மட்டுமே நேரம் கொடுக்கப்பட்டதாக காரைக்குடி தவெக வேட்பாளர் பிரபு ஊடகங்களிடம் தெரிவித்தார்.

  8. 'அமெரிக்கக் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியாக செல்லலாம்' - இரான்

    'அமெரிக்கக் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியாக செல்லலாம்' - இரான்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்கக் கப்பல்கள் எந்தவிதமான விரோதப் போக்கிலும் நடந்துகொள்ளாத பட்சத்தில், அவையும் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லலாம் என்று இரானின் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் கதிப்சாதே தெரிவித்துள்ளார்.

    ஹோர்மூஸ் நீரிணை திறந்துள்ளது. ஆனால் கப்பல்கள் இரானியப் படைகளுடன் தொடர்பைப் பேண வேண்டும்," என்று கதிப்சாதே இரானிய ஊடகங்களிடம் கூறியதாக பிபிசி பாரசீக சேவை தெரிவித்துள்ளது

  9. காரைக்குடி: தொண்டர்கள் சூழ்ந்ததால் சைக்கிளில் தடுமாறிய விஜய்

    காரைக்குடி, விஜய் பிரசாரம், சைக்கிளில் விஜய், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்

    பட மூலாதாரம், YT/TVK

    காரைக்குடியில் பிரசாரத்திற்கு சென்ற விஜய் திடீரென சைக்கிளில் செல்ல முயல, தொண்டர்கள் சூழ்ந்ததால் அவர் நிலைதடுமாறிப் போனார்.

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்கிறார். அவரது வருகைக்காகவே தவெகவினர் ஏராளமானோர் திரண்டு மணிக்கணக்கில் காத்திருந்தனர்.

    பிற்பகல் வேளையில் காரைக்குடி சென்றடைந்த விஜய், திடீரென தனது பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி சைக்கிளில் சென்றார். விஜயை காணும் ஆவலில் ஏற்கனவே மணிக்கணக்கில் காத்திருந்த தவெக தொண்டர்கள், அவரது சைக்கிளை சூழ்ந்து கொண்டனர். மெய்க்காவலர்களையும் தாண்டி நெருங்கிய தொண்டர்களால் விஜய் சைக்கிளை ஓட்ட முடியாமல் தடுமாறினார்.

    காரைக்குடி, விஜய் பிரசாரம், சைக்கிளில் விஜய், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்

    பட மூலாதாரம், YT/TVK

    இதையடுத்து, சிறிது நேரத்தில் விஜய் சைக்கிளை விடுத்து, மீண்டும் தனது வாகனத்தில் ஏறி பிரசாரத்தை தொடர்ந்தார்.

    கடந்த செப்டம்பரில் கரூரில் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்த இளைஞர்கள் விபத்தில் சிக்கும் நிகழ்வு அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது.

    இன்றும் கூட காரைக்குடி நோக்கிச் சென்ற விஜயை பைக்கில் பின்தொடர்ந்த இளைஞர்கள் அவரது வாகனத்தின் மீதே உரசி கீழே விழுந்த காட்சி வெளியாகியுள்ளது. விஜயின் வாகனத்தை பின் தொடர வேண்டாம் என்றும் பிரசாரத்திற்கு கர்ப்பிணிகள், சிறுவர், சிறுமியரை அழைத்து வர வேண்டாம் என்றும் அக்கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    காரைக்குடி, விஜய் பிரசாரம், சைக்கிளில் விஜய், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்

    பட மூலாதாரம், YT/TVK

  10. 'லெபனானுடன் போர் நிறுத்தம் இல்லை' - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுவது என்ன?

    பெஞ்சமின் நெதன்யாகு

    பட மூலாதாரம், Ronen Zvulun / POOL / AFP via Getty

    லெபனானுடன் 'போர் நிறுத்தம் எதுவும் நடைமுறையில் இல்லை' என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

    முன்னதாக, லெபனானுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு தனது அமைச்சரவைக்கு அறிவுறுத்தியதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

    இஸ்ரேலியப் பிரதமரின் அலுவலகம், நெதன்யாகுவின் காணொளி ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. இந்தக் காணொளியில், நெதன்யாகு வடக்கு இஸ்ரேல் மக்களிடம் உரையாற்றுவது காணப்படுகிறது.

    அவர், "லெபனானில் போர் நிறுத்தம் எதுவும் இல்லை என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நாங்கள் ஹெஸ்பொலா மீது முழு பலத்துடன் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறோம், உங்கள் பாதுகாப்பை மீட்டெடுக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்" என்று கூறினார்.

    முன்னதாக, பிரதமரின் அலுவலகம் நெதன்யாகுவின் மற்றோர் அறிக்கையை வெளியிட்டது. "நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு லெபனான் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், லெபனானுடன் கூடிய விரைவில் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நான் உத்தரவிட்டேன்," என நெதன்யாகு கூறினார்.

    "ஹெஸ்பொலா ஆயுதங்களைக் கைவிடுவதிலும், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் அமைதியான உறவுகளை ஏற்படுத்துவதிலும் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும்" என்று கூறி, 'பெய்ரூட்டை ஆயுதமற்றதாக்க வேண்டும்' என்ற லெபனான் பிரதமரின் அழைப்பையும் அவர் பாராட்டினார்.

  11. மார்கோ ரூபியோவுடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் சந்திப்பு

    மார்கோ ரூபியோ

    பட மூலாதாரம், X/@USAmbIndia

    இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோவை சந்தித்தார்.

    இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் இந்த சந்திப்பு குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    இந்த சந்திப்பின் போது உடனிருந்த செர்ஜியோ கோர், அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோவுடனான சந்திப்பு "பயனுள்ளதாக" இருந்தது என்று கூறினார்.

    செர்ஜியோ கோர் தனது பதிவில், "வெள்ளை மாளிகைக்கு விக்ரம் மிஸ்ரியை வரவேற்கிறோம். ரூபியோவுடன் பயனுள்ள சந்திப்பு நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், குறிப்பாக வர்த்தகம், முக்கிய கனிமங்கள், பாதுகாப்பு மற்றும் குவாட் அமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது" என்று எழுதியுள்ளார்.

    இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வெளியுறவு அமைச்சகத்தின்படி, விக்ரம் மிஸ்ரி தனது பயணத்தின் போது இந்தியா-அமெரிக்கா இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  12. "இரான் மோசமாக செயல்படுகிறது" - ஹோர்மூஸ் நீரிணை பற்றி டிரம்ப் கூறியது என்ன?

    டொனால்ட் டிரம்ப், ஹோர்மூஸ் நீரிணை

    பட மூலாதாரம், Brendan SMIALOWSKI/AFP via Getty

    ஹோர்மூஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்களைச் செல்ல அனுமதிப்பதில் இரான் "மிகவும் மோசமாகச் செயல்படுவதாக" அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

    மேலும், இது அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான 'ஒப்பந்தத்திற்கு இணங்கவில்லை' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    "ஹோர்மூஸ் நீரிணை வழியாக எண்ணெய் செல்ல அனுமதிப்பதில் இரான் மிகவும் மோசமாகச் செயல்படுகிறது; சிலர் இது கண்ணியமான செயல் அல்ல என்றும் கூறுவார்கள். நாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தம் இதுவல்ல," என்று டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    இதற்குச் சற்று முன்னதாக, மற்றொரு பதிவில், சில செய்திகளை குறிப்பிட்டு, ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் கப்பல்களிடம் இரான் 'கட்டணம் வசூலிக்கக் கூடாது' என்று டிரம்ப் கூறியிருந்தார்.

    "ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் கப்பல்களிடம் இரான் கட்டணம் வசூலிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் இவ்வாறு செய்யக்கூடாது; ஒருவேளை அவர்கள் அவ்வாறு செய்து கொண்டிருந்தால், அதை உடனடியாக நிறுத்த வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.

  13. வணக்கம் நேயர்களே!

    இன்று (10-04-2026) பிற்பகல் வரையிலும் நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த தகவல்களை சுருக்கமாக வழங்குவது சங்கரநாராயணன் சுடலை.

  14. புதுச்சேரி தேர்தலில் வரலாறு காணாத வாக்குப்பதிவு - எவ்வளவு சதவீதம்?

    புதுச்சேரி தேர்தலில் வரலாறு காணாத வாக்குப்பதிவு - எவ்வளவு சதவீதம்?

    பட மூலாதாரம், Getty Images

    கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளன.

    அசாமில் உள்ள 126 தொகுதிகளிலும், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

    தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, அசாமில் 85.38 சதவீதமும், புதுச்சேரியில் 89.83 சதவீதமும் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதியிலும் இதுவரை இல்லாத அதிகபட்ச வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

    முன்னதாக, 2016 அசாம் சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதமும், 2011 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 86.19 சதவீதமும் வாக்குப்பதிவு பதிவானது.

    இருப்பினும், இந்த முறை, வாக்குப்பதிவு சாதனை அளவை எட்டியுள்ளது. அதே சமயம், கேரளாவில் 78.03 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

  15. 'ஹோர்மூஸ் நீரிணையை இரான் பணயமாக வைத்திருக்க கூடாது' - பிரிட்டன் பிரதமர்

    'ஹோர்மூஸ் நீரிணையை இரான் பணயமாக வைத்திருக்க கூடாது' - பிரிட்டன் பிரதமர்

    பட மூலாதாரம், PA Media

    வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் கியர் ஸ்டார்மர், ''ஹோர்மூஸ் நீரிணையை இரான் பணயமாக வைத்திருக்க கூடாது'' என்று தெரிவித்தார்.

    ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஒரு தீர்வைக் காண நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கூறினார்.

    இரானும் அமெரிக்காவும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட நிலையில், இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தனது அனுமதியின்றி ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் எந்தக் கப்பல்களும் இலக்கு வைக்கப்பட்டு "அழிக்கப்படும்" என்று கூறியது.

  16. புதுச்சேரி திருக்கனூர் வாக்குச்சாவடியில் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் மோதலால் பதற்றம்

    புதுச்சேரி

    புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மண்ணாடிபட்டு தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக நேரடியாக களம் காண்கின்றன.

    புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் துணை சபாநாயகர் செல்வம் போட்டியிடுகிறார். அங்குள்ள திருக்கனூர் அரசு உயர்நிலை பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

    அங்கு இரு கட்சியினரும் திரண்டிருந்த நிலையில் வாக்காளர்கள் மட்டும் தான் இருக்க வேண்டும் மற்றவர்கள் இருக்கக்கூடாது என இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் மோதலாக மாறியதால் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருக்கனூர் காவல்துறையினர் இரு தரப்பினரையும் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. காவல்துறையினர் அதிகளவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

  17. லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஐரோப்பிய நாடுகள் கண்டனம்

    இஸ்ரேல், லெபனான்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, லெபனான்

    இரான் - அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இஸ்ரேலின் தாக்குதல்கள் "முற்றிலும் தவறானது" என பிரிட்டன் வெளியுறவு செயலாளர் யவெட் கூப்பர் தெரிவித்திருந்தார்.

    லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜான் - நோயல் பேரட் கூறியுள்ளார். அணு ஆயுதங்கள் பெறுவதற்கான வழி மற்றும் ஹெஸ்பொல்லா மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கான ஆதரவை இரான் கைவிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    "இஸ்ரேலின் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது, ஏனென்றால் அவை நேற்று இரான் மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட போர்நிறுத்தத்தை மட்டுப்படுத்துகிறது," என அவர் தெரிவித்தார்.

    "திரும்பவே முடியாத நிலைக்கு மிக அருகில் நாம் வந்துள்ளோம். மிகவும் சிக்கலான நிலையில் உள்ள அமைதியை நாம் உறுதியுடன் தொடர வேண்டும்," என இத்தாலி பிரதமர் ஜியொர்ஜியா மெலோனி தெரிவித்தார்.

    இந்நிலையில் தெஹ்ரானில் உள்ள ஸ்பெயின் தூதரத்தை மீண்டும் திறக்கப்படுவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவேல் அல்ப்ரேஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் இஸ்ரேல் போர்நிறுத்தத்தை மீறுவதோடு சர்வதேச சட்டத்தையும் மீறுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

  18. "கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள்" - நேட்டோவை விமர்சித்த டிரம்ப்

    நேட்டோ, டிரம்ப்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, மார்க் ருட் மற்றும் டிரம்ப் (கோப்புப் படம்)

    நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டை வெள்ளை மாளிகையில் சந்தித்த பிறகு மீண்டும் அந்த அமைப்பை தாக்கிப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். கடந்த காலங்களில் நேட்டோ தன்னை ஆதரிக்கவில்லை எனக் கூறும் டிரம்ப் எதிர்காலத்திலும் ஆதரிக்காது எனத் தெரிவித்தார்.

    இது தொடர்பாக ட்ரூத் சோசியல் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "நமக்கு அவர்கள் தேவைப்பட்டபோது நேட்டோ நம்மிடம் இல்லை. மீண்டும் நமக்கு தேவைப்படுகிறபோதும் அவர்கள் நம்முடன் இருக்க மாட்டார்கள். பெரிய, மோசமாக நிர்வகிக்கப்படும் பனிப் பகுதியான கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள்." எனத் தெரிவித்திருந்தார்.

    கிரீன்லாந்தை அமெரிக்கா உடன் இணைக்கும் ஆசையை வெளிப்படுத்திய தனது முந்தைய கருத்தைக் குறிப்பிட்டு டிரம்ப் பேசியிருந்தார். நேட்டோ கூட்டாளிகளில் பலரும் கூட இதனை எதிர்த்திருந்தனர்.

    இதற்கிடையே டிரம்ப் உடனான சந்திப்பு வெளிப்படையாகவும் திறந்தமனதோடும் நடந்ததாக நேட்டோ தலைவர் மார்க் ருட் சி.என்.என் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பிறகு உலகம் பாதுகாப்பாக இருக்கிறது என முற்றிலும் நம்பிக்கை உடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

  19. அசாமில் 126 தொகுதிகளுக்கு நடைபெறும் வாக்குப்பதிவு

    அசாம், சட்டப்பேரவைத் தேர்தல்

    பட மூலாதாரம், Dilip Sharma

    படக்குறிப்பு, இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது

    அசாமில் 126 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அனைத்து இடங்களுக்குமான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

    அசாமில் சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 2.49 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

    இதில் 1,24,82,213 ஆண் வாக்காளர்கள், 1,24,75,583 பெண் வாக்காளர்கள் மற்றும் 343 திருநர் சமூக வாக்காளர்களும் அடங்குவர்.

    இந்த முறை அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வ சர்மா மற்றும் காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் இடையேயான போட்டியாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.

    ஹிமாந்தா பிஸ்வ சர்மா ஜலுக்பாரி தொகுதியில் போட்டியிடுகையில் கௌரவ் கோகோய் ஜோர்ஹாட் தொகுதியில் களம் காண்கிறார். வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

  20. போர்நிறுத்தத்திற்கு மத்தியில் லெபனானில் தொடரும் தாக்குதல்கள்

    லெபனான்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, லெபனான்

    இரான் - அமெரிக்கா இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லெபனானில் தனது போர் இன்னும் முடிவடையவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    புதன்கிழமை அன்று இந்த மோதல் காலத்தின் மிகப் பெரிய குண்டுவீச்சை எதிர்கொண்டது லெபனான். சுமார் 182 பேர் கொல்லப்பட்டதாகவும் 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பெய்ரூட்டில் மிகப்பெரிய தாக்குதல் நடந்த இடத்தில் முன்களப் பணியாளர்கள் சேதமடைந்த கட்டடங்களில் பாதிக்கப்பட்டவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வடக்கு இஸ்ரேலை ராக்கெட் மூலம் தாக்கியதாக ஹெஸ்போலா அமைப்பு தெரிவிக்கிறது. இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்போலா அமைப்பு போர்நிறுத்த மீறல்களுக்கான பதிலாக தனது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என சமூக ஊடகப் பதிவின் மூலம் கூறியுள்ளது.

    லெபனானுக்கு எதிரான “இஸ்ரேலிய - அமெரிக்கா ஆக்கிரமிப்பு” நிற்கும் வரை தாக்குதல்களைத் தொடர்வதாகவும் ஹெஸ்போலா எச்சரித்துள்ளது.