"தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆளும் கட்சி அந்தஸ்தை இழந்தது. இந்த நிலையில், தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆராயப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, திமுக சார்பில் 36 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு மேற்கொள்வார்கள் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக பதிவிட்டுள்ள ஸ்டாலின் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன் எக்ஸ் பக்கத்தில், "தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை. நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது," என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பதிவில், "தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.