You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நேரலை, "தொகுதி மறுவரையறை" - முன்மொழியப்பட்ட மசோதா நகலை எரித்த ஸ்டாலின்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. "தொகுதி மறுவரையறை" - முன்மொழியப்பட்ட மசோதா நகலை எரித்த ஸ்டாலின்

    மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று அறிமுகம் செய்ய உள்ள தொகுதி மறுவரையறை சட்ட முன்வடிவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.

    தேர்தல் பிரசாரத்திற்காக நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்தார்.

    இதனை தமது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டாலின்,"தமிழர்களை அவர்களின் சொந்த நிலத்திலேயே அகதிகளாக்கும் மசோதாவின் நகலை எரித்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.

  2. இரானுடன் பேச்சுவார்த்தை - பாகிஸ்தானின் பங்கு பற்றி வெள்ளை மாளிகை கூறியது என்ன?

    இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியுற்றது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் கருத்து தெரிவித்துள்ளார்.

    "பாகிஸ்தானிய மத்தியஸ்தர்கள் மகத்தான பங்காற்றியுள்ளனர். இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான அவர்களின் நட்பையும் முயற்சிகளையும் நாங்கள் உண்மையிலேயே பாராட்டுகிறோம்," என்று அவர் கூறினார்.

    "பாகிஸ்தானியர்கள் மூலம் இந்த உரையாடலை சுமூகமாகத் தொடர்வது முக்கியம் என்று அதிபர் டிரம்ப் நம்புகிறார்," என்று லெவிட் கூறினார்.

    இரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் மீண்டும் தொடங்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தன, அதன் பிறகு அமெரிக்கா இரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டது.

    வளைகுடா பிராந்தியம், பாகிஸ்தான் மற்றும் இரான் அதிகாரிகள், அமெரிக்க மற்றும் இரானிய குழுக்கள் இந்த வார இறுதியில் பாகிஸ்தானுக்கு பேச்சுவார்த்தைக்காக திரும்பக்கூடும் என்று கூறியுள்ளனர், இருப்பினும் அதற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  3. 'உதயநிதியின் சொத்து விவரத்தில் முரண்பாடு'- நீதிமன்றம் கூறியது என்ன?

    வேட்புமனு தாக்கலின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் முரண்பாடுகள் இருப்பதாகக் கோரி தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2021 ஆம் ஆண்டு உதயநிதி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்துக்கும் 2026 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்துக்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளதாகக் கூறி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த குமரவேல் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அவர் தனது மனுவில், '2021 ஆம் ஆண்டு உதயநிதி தாக்கல் செய்த வேட்புமனுவில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் 7.36 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால், 2026 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் இதுதொடர்பாக எந்த விவரங்களும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.

    ''உதயநிதியின் மனைவி கிருத்திகா, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் 2.63 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய விளக்கங்கள் எதுவும் இல்லை' என மனுவில் குமரவேல் கூறியுள்ளார்.

    மேலும், தனியார் நிறுவனத்துக்கு 11 கோடியே 6 லட்ச ரூபாயைக் கடன் கொடுத்துள்ளதாக 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் உதயநிதி தெரிவித்துள்ளதாகக் கூறும் குமரவேல், 'ஆனால், 2026 ஆம் ஆண்டு தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இதுதொடர்பான விவரங்களில் முரண்பாடுகள் உள்ளன' என்கிறார்.

    'உதயநிதியின் வருமானம் 2020 ஆம் ஆண்டில் 2 கோடி ரூபாயாக இருந்துள்ளது. தற்போது 10.98 கோடியாக உயர்ந்துள்ளது. வருமானம் அதிகரித்தது குறித்து அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை' என மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    வேட்பாளர்கள் தங்களின் சொத்துகள் குறித்து தவறான தகவல்களைத் தெரிவிப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது எனக் கூறியுள்ள குமரவேல், 'இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு வருமான வரித்துறை தலைமை இயக்குநர் (புலனாய்வு) மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறைக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.

    தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் புதன்கிழமையன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, உதயநிதி ஸ்டாலினின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை வரும் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசனுக்கு உத்தரவிட்டது.

  4. இரான் சென்ற பாகிஸ்தான் ராணுவ தலைவர் ஆசிம் முனீர்

    அமெரிக்கா - இரான் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக செயல்பட்டு வரும் பாகிஸ்தானின் பிரதிநிதி குழு இரான் சென்றுள்ளது.

    இந்த குழுவில், டிரம்ப் தனக்கு பிடித்த பீல்டு மார்ஷல் என கூறிய பாகிஸ்தான் ராணுவ தலைவர் பீல்டு மார்ஷல் அசிம் முனீர் மற்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த குழு அமெரிக்காவின் செய்தியை கொண்டு வரவும், இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையை திட்டமிடவும் வருவதாக இரானின் அரசு ஊடகமான ஐஆர்ஐபி செய்தி வெளியிட்டு இருந்தது.

  5. 'இரானுக்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என சீனா ஓப்புக்கொண்டது' - டிரம்ப்

    சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு தான் கடிதம் எழுதி இரானுக்கு ஆயுதங்கள் அனுப்ப வேண்டாம் என்று கேட்டதையடுத்து சீனா அதற்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ''ஹோர்மூஸ் நீரிணையை நான் நிரந்தரமாக திறக்கிறேன் என்பதில் சீனா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதை அவர்களுக்காகவும், உலகத்திற்காகவும் செய்கிறேன்'' என ட்ரூத் சோஷியல்’ தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

    மேலும், “இப்படியான நிலைமை மீண்டும் ஒருபோதும் ஏற்படாது. இரானுக்கு ஆயுதங்கள் அனுப்பமாட்டோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  6. 'பாரசீக வளைகுடா, செங்கடல், ஓமன் வளைகுடாவில் கப்பல் போக்குவரத்து தடுக்கப்படும்' - இரான்

    அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்தால், பாரசீக வளைகுடா, செங்கடல் மற்றும் ஓமன் வளைகுடாவில் கப்பல் போக்குவரத்து தடுக்கப்படும் என இரான் ராணுவம் அச்சுறுத்தியுள்ளது

    இரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை திங்கள்கிழமை தொடங்கியது. இரான் துறைமுகத்திலிருந்து கிளம்பும் அல்லது வரும் கப்பல்கள் தடுக்கப்படும் என அமெரிக்கா கூறியிருந்தது.

    முதல் 24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் அந்த முற்றுகையைக் கடந்து செல்லவில்லை என்று புதன்கிழமை அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. கண்காணிப்பு தரவுகளின்படி, குறைந்தது ஒரு கப்பல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

  7. அமெரிக்கா இரான் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் வெளிநாடு பயணம்

    பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நான்கு நாள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார். அவர் செளதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளார்.

    இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறுகள் பேசப்பட்டு வரும் வேளையில் இந்தப் பயணம் நடைபெறுகிறது. ஏப்ரல் 15 முதல் 18 வரை இந்த பயணம் நடைபெற உள்ளது.

    இரான் மற்றும் அமெரிக்கா இடையேயான முந்தைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

  8. ‘இரானுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் செய்ய டிரம்ப் விரும்புகிறார்’ - ஜே.டி. வான்ஸ்

    அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுடன் ஒரு 'பெரிய ஒப்பந்தம்' செய்ய விரும்புவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், செவ்வாயன்று (ஏப்ரல் 14) அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வில் கூறினார்.

    சிபிஎஸ் நியூஸ் தகவலின்படி, ஜார்ஜியாவின் ஏதென்ஸில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய ஜே.டி. வான்ஸ், கடந்த வார இறுதியில் பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தைகளில் ‘குறிப்பிடத்தக்க முன்னேற்றம்’ ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

    “டிரம்ப் இரானுடன் ஒரு சிறிய ஒப்பந்தத்தை அல்ல, ஒரு பெரிய ஒப்பந்தத்தை செய்ய விரும்புவதாக”, அவர் கூறினார்.

    அதேசமயம், இரு நாடுகளுக்கும் இடையே ஒருவித நம்பிக்கையின்மை நிலவுவதையும் வான்ஸ் ஒப்புக்கொண்டார்.

    "இந்தப் பிரச்னையை ஒரே இரவில் தீர்த்துவிட முடியாது," என்றும் அவர் கூறினார்.

  9. பிகாரில் பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சௌத்ரி முதல்வரானார்

    பிகாரின் புதிய முதலமைச்சராக சாம்ராட் சௌத்ரி பதவியேற்றுக் கொண்டார். அவர் அந்த மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதல் முதலமைச்சர் ஆவார்.

    அவருடன், ஜனதா தளம் (ஐக்கிய) கட்சியைச் சேர்ந்த விஜய் குமார் சௌத்ரி மற்றும் விஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்தப் பதவியேற்பு விழாவில் நிதிஷ் குமாரும் கலந்து கொண்டார்.

    பதவியேற்பு விழாவிற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய விஜய் குமார் சௌத்ரி, "நிதிஷ் குமார் என் மீது நம்பிக்கை வைத்தார், அதன் விளைவுதான் இது. எங்களின் புதிய அரசாங்கமும் அவர் பிகாரை வழிநடத்திச் சென்ற அதே பாதையில்தான் பயணிக்கும்," என்று கூறினார்.

    விஜேந்திர பிரசாத் யாதவ் பேசுகையில், "நாங்கள் நிதிஷ் குமாரின் பணிகளை முன்னோக்கி எடுத்துச் செல்வோம்," என்றார்.

    விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மான்ஜி, "புதிய முதலமைச்சர் நியமனத்தால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அதற்குக் காரணம் நிதிஷ் குமார் தான். அவர் 2014-இல் என்னை முதலமைச்சராக்கினார். அவரால் தான் மகா தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சரானார்," என்று கூறினார்.

    சாம்ராட் சௌத்ரி முதலமைச்சராவதற்கான வாய்ப்பு நிதிஷ் குமாரின் ராஜினாமாவால் உருவானது. நிதிஷ், சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார்.

  10. 'தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களை பாதிக்கும்' - ப.சிதம்பரம்

    தொகுதி மறுவரையறையால் நாடாளுமன்றத்தில் தென்மாநில எம்.பி.க்களின் விகிதாச்சாரம் 24.3 சதவீதத்தில் இருந்து 20.7 சதவீதமாக குறையக்கூடும் என்று காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

    கோவை தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதி மறுவரைறைக்காக நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதை எதிர்க்கின்றோம் என்றார்.

    மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்திவிட்டு பின்னர் தொகுதி மறுவரையறை செய்வது என்பது மாயை என்று கூறிய அவர்," அவ்வாறு 50 சதவீதம் உயர்த்தும் போது தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்தாலும், தொகுதி மறுவரையறைக்குப் பின் 46 ஆக குறையும் என்றார்.

    அதேநேரத்தில், உத்தரபிரதேசத்தில் தற்போதுள்ள 80 மக்களவை தொகுதி 120 தொகுதிகளாக உயரும் எனவும், மறுவரையறைக்கு பின்பு அதுவே 140 ஆக உயரும் என்று கூறிய சிதம்பரம், இந்த தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களை மிகமிக பாதிக்கும் என்றார்.

  11. அந்தமான் கடலில் படகு கவிழ்ந்தது - 250 பேரின் நிலை என்ன?

    ஐக்கிய நாடுகளின் அகதிகள் மற்றும் குடியேற்ற முகமைகளின் கூற்றுப்படி, அந்தமான் கடலில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட சுமார் 250 ரோஹிஞ்சா மற்றும் வங்கதேச மக்கள் மாயமாகியுள்ளனர்.

    அந்த இழுவைப்படகு (மீன்பிடி படகு) வங்கதேசத்தில் இருந்து மலேசியாவிற்கு சென்று கொண்டிருந்தது. பலத்த காற்று, கொந்தளிப்பான கடல் மற்றும் அதிக பயணிகள் காரணமாக படகு மூழ்கியதாக அந்த முகமைகள் தெரிவிக்கின்றன.

    ஏப்ரல் 9-ஆம் தேதி படகில் இருந்த ஒன்பது பேரை தனது கப்பல்களில் ஒன்று மீட்டதாக ஏஎஃப்பி (AFP) செய்தி முகமையிடம் வங்கதேச கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இருப்பினும், படகு எப்போது கவிழ்ந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

    மியான்மரில் சிறுபான்மை சமூகமான ரோஹிஞ்சாக்கள், 2017-இல் நடந்த வன்முறை ஒடுக்குமுறைக்குப் பிறகு பெருமளவில் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றனர்.

    வங்கதேசத்தில் உள்ள மோசமான நிலைமைகள் காரணமாக, பல ரோஹிஞ்சாக்கள் தாங்கள் பாதுகாப்பான இடமாகக் கருதும் மலேசியாவை அடைய அபாயகரமான கடல் பயணங்களை மேற்கொள்ள முயல்கின்றனர்.

    தப்பிப் பிழைத்தவர்களில் ஒருவரான ரஃபிகுல் இஸ்லாம், ‘தாங்கள் மீட்கப்படுவதற்கு முன்பு சுமார் 36 மணி நேரம் கடலில் மிதந்து கொண்டிருந்ததாகக்’ கூறினார்.

    40 வயதான ரஃபிகுல் இஸ்லாம், மலேசியாவில் வேலை கிடைக்கும் என்ற வாக்குறுதியே இந்தப் பயணத்தை மேற்கொள்ளத் தன்னைத் தூண்டியதாகக் கூறினார்.

  12. 1993-க்குப் பிறகு லெபனான்- இஸ்ரேல் நேரடி பேச்சுவார்த்தை

    பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே நேரடி ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

    இந்த முயற்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, இதன் நோக்கம் இஸ்ரேலுக்கும் இரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலாவிற்கும் இடையே நடந்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதாகும்.

    பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இதை ஒரு "வரலாற்று முக்கியத்துவம் கொண்ட வாய்ப்பு" என்று விவரித்தார். இது ஹெஸ்பொலாவின் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு படியாக அமையும் என்று கூறினார்.

    அமெரிக்கா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இரு தரப்பினரும் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது, இருப்பினும் அதற்கான நேரமும் இடமும் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஹெஸ்பொலாவைக் குறிப்பிட்டு, அரசு சாரா ஆயுதக் குழுக்கள் அனைத்தும் ஆயுதங்களை கைவிடுவதை தாங்கள் விரும்புவதாக இஸ்ரேல் தெரிவித்தது.

    இதற்கிடையில், லெபனான் ஒரு போர்நிறுத்தத்தையும், நாட்டில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியைச் சரிசெய்ய உறுதியான நடவடிக்கைகளையும் கோரியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே முறையான ராஜதந்திர உறவுகள் இல்லை. இந்த அளவிலான நேரடிப் பேச்சுவார்த்தைகள் 1993இல் நடைபெற்றன.

    மார்ச் 2 அன்று லெபனானில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை தொடங்கியதில் இருந்து 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின், இரான் மீதான தாக்குதல்களுக்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை தொடங்கியது.

    செவ்வாயன்று (ஏப்ரல் 14), இரு தரப்பினரும் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது, இஸ்ரேல் மற்றும் லெபனானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய துருப்புகள் மீது நடத்தப்பட்ட குறைந்தது 24 தாக்குதல்களுக்கு ஹெஸ்பொலா பொறுப்பேற்றது.

    2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் காஸா போரின் போது இஸ்ரேலும் ஹெஸ்பொலாவும் மோதிக்கொண்டன. இந்நிலையில், ஹெஸ்பொலாவை பலவீனப்படுத்துவதையும் அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டு தனது தாக்குதல் இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.

  13. ‘தெஹ்ரானில் வெடிப்புச்சத்தங்கள்’- இரானிய ஊடகங்கள்

    தெஹ்ரானில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக இரானிய ஊடகங்களை மேற்கோள் காட்டி பிபிசி உருது சேவை தெரிவித்துள்ளது.

    இரானின் தலைநகரான தெஹ்ரானின் 10-வது மாவட்டத்தின் புரட்சிகர காவல் படையின் தளபதி முகமது பலிதே, ஒரு காணொளிச் செய்தியில், "தேசவிரோத சக்திகள் ஒரு சிறு வெடிப்பை" ஏற்படுத்தியதாகக் கூறினார். இந்த வெடிப்புக்குப் பின்னால் யார் இருந்தார்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

    நகரத்தில் நிலைமை 'கட்டுப்பாட்டில்' இருப்பதாக அவர் கூறுகிறார்.

    இந்தக் காணொளிச் செய்தியைத் தொடர்ந்து, புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி முகமை, 'திரவமாக்கப்பட்ட வாயுவால் செய்யப்பட்ட இரண்டு வெடிபொருட்களால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக’ ஒரு தனி அறிக்கையில் கூறியது.

    அறிக்கைகளின்படி, இந்த வெடிப்பில் மூன்று பேர் லேசாகக் காயமடைந்தனர். அதேநேரத்தில் மூன்று வீடுகளின் ஜன்னல்கள் உடைந்தன மற்றும் இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன.

  14. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய (ஏப்ரல் 14) நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.

    இன்று பிற்பகல் வரையிலும் அண்மைச் செய்திகளை தொகுத்து அளிப்பவர் சிராஜ்.

  15. 'அடுத்த இரண்டு நாட்களில் அமெரிக்கா - இரான் பேச்சு': டிரம்ப்

    அமெரிக்காவும் இரானும் இடையிலான பேச்சுவார்த்தைகள் “அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் தொடங்கலாம்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ''அடுத்த இரண்டு நாட்களில் ஏதாவது முன்னேற்றம் நடக்கலாம். மேலும், நாம் பாகிஸ்தான் செல்ல அதிகமாக சாத்தியம் உள்ளது” என்று அவர் நியு யார்க் போஸ்ட் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

    முன்பு பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கா - இரான் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

  16. அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடரும் - இரான் அதிபர்

    அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர இரான் தயாராக இருப்பதாகவும், பிரச்னைகளை தீர்ப்பதற்கு ராஜீய முறையே விரும்பத்தக்க வழி என்றும் இரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

    பிரான்ஸ் அதிபர் மக்ரோனுடனான உரையாடலில் அவர் இதைக் கூறியதாக, பல இரானிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    சர்வதேச சட்டங்களையும் விதிகளையும் கடைப்பிடிக்குமாறு அமெரிக்காவை ஐரோப்பா வலியுறுத்த வேண்டும் என்றும் பெஷெஷ்கியன் கூறினார்.

  17. விஜய் பரப்புரை கூட்டத்தில் பலர் மயக்கம்

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று கோவை வந்தடைந்தார்.

    அப்போது விஜயை வரவேற்க காத்திருந்த சூலூர் வேட்பாளர் திடீரென மயக்கமடைந்தார். பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

    அதேபோல, திருப்பூரில் பரப்புரை கூட்டத்தில் காத்திருந்தவர்களில் குறைந்தது 10 பேர் மயங்கினர். அங்கிருந்த அவசர ஊர்திகளில் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

  18. பிகார் பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக சாம்ராட் சௌத்ரி தேர்வு

    பிகார் முதலமைச்சர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் ராஜிநாமா செய்துள்ளார். தனது ராஜிநாமாவை ஆளுநரிடம் சமர்பித்துள்ளார்.

    இந்தநிலையில் பாஜகவின் சாம்ராட் சௌத்ரி பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    சாம்ராட் சௌத்ரி தற்போது பிகாரின் துணை முதல்வராக உள்ளார்.

  19. 'பதற்றத்தை அதிகப்படுத்தும்' - அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்

    இரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை "ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது" என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானில் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த ஒரு நாளுக்குப் பிறகு, திங்களன்று இந்த முற்றுகை நடைமுறைக்கு வந்தது.

    இந்த முற்றுகை "பதற்றத்தை அதிகப்படுத்தும் மற்றும் ஏற்கனவே பலவீனமாக உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கும்" என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் எச்சரித்துள்ளார்.

  20. தொகுதி மறுவரையறை: ஸ்டாலின் - அண்ணாமலை கூறியது என்ன?

    தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்துள்ளார். அதற்கு அண்ணாமலை பதில் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளியில், தொகுதி மறுவரையறை குறித்த அரசியலமைப்பு சட்டத் திருத்தத்துக்காக ஏப்ரல் 16 அன்று “வலுக்கட்டாயமாக” நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படப் போகும் மாநிலங்களின் முதலமைச்சர்களை சென்னைக்கு வரவழைத்து கூட்டுக் குழு கூட்டம் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

    அவசரஅவசரமாக தொகுதி மறுவரையறையை செய்ய நினைப்பது மத்திய அரசின் “அப்பட்டமான ஜனநாயக விரோத செயல்” என்றும், சட்டத்திருத்தம் குறித்து மத்திய அரசு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என்றும் ஸ்டாலின் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

    ”வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்கும் விதமாகவும் தமிழ்நாட்டுக்கு எதிராகவும் ஏதேனும் நடந்தால் தமிழ்நாட்டில் உள்ள நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். தமிழ்நாடு ஸ்தம்பிக்கும். கடுமையாக எதிர்ப்பை தெரிவிக்கும். மக்கள் தெருக்களில் இறங்கி போராடுவர்.” எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    ”இதுவரை பார்க்காத தமிழகத்தை பார்ப்பீர்கள், 1950 மற்றும் 1960களில் இருந்த திமுகவை பார்க்க நேரிடும். நான் உங்களை எச்சரிக்கிறேன். இதனை மிரட்டலாக நினைத்தாலும் பரவாயில்லை.” என்று ஸ்டாலின் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எதிர்வினையாற்றியுள்ளார்.

    செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, “மக்களவையில் ஏற்கெனவே உள்ள 543 இடங்களில் மகளிர் இடஒதுக்கீடு 33% என்பதை அப்படியே செயல்படுத்த முடியாது என்பதால், அந்த இடங்களை 816 ஆக உயர்த்தி செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தென் மாநிலங்கள் பாதிக்காத வகையில்தான் பிரதமர் தொகுதி மறுவரையறை செய்கிறார். ஏனெனில், மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யப்படவில்லை. மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் என்பது 31 ஆக குறையும். எனவே அவ்வாறு செய்யவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினின் எச்சரிக்கை ஏற்புடையதல்ல.” என தெரிவித்துள்ளார்.