நேரலை, பிகார் பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக சாம்ராட் சௌத்ரி தேர்வு
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
முக்கிய சாராம்சம்
ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களைத் தடுப்பதன் மூலம் இரான் அரசு 'பொருளாதார பயங்கரவாதத்தில்' ஈடுபட்டு வருவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.
யுரேனியம் செறிவூட்டலுக்கு ஐந்தாண்டு காலத் தடை விதிக்க இரான் முன்மொழிந்துள்ளது, ஆனால் அமெரிக்கா இந்த முன்மொழிவை நிராகரித்து, 20 ஆண்டு காலத் தடையைக் கோரியுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடரும் - இரான் அதிபர்
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர இரான் தயாராக இருப்பதாகவும், பிரச்னைகளை தீர்ப்பதற்கு ராஜீய முறையே விரும்பத்தக்க வழி என்றும் இரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் மக்ரோனுடனான உரையாடலில் அவர் இதைக் கூறியதாக, பல இரானிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச சட்டங்களையும் விதிகளையும் கடைப்பிடிக்குமாறு அமெரிக்காவை ஐரோப்பா வலியுறுத்த வேண்டும் என்றும் பெஷெஷ்கியன் கூறினார்.
விஜய் பரப்புரை கூட்டத்தில் பலர் மயக்கம்
பட மூலாதாரம், TVK
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று கோவை வந்தடைந்தார்.
அப்போது விஜயை வரவேற்க காத்திருந்த சூலூர் வேட்பாளர் திடீரென மயக்கமடைந்தார். பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
அதேபோல, திருப்பூரில் பரப்புரை கூட்டத்தில் காத்திருந்தவர்களில் குறைந்தது 10 பேர் மயங்கினர். அங்கிருந்த அவசர ஊர்திகளில் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
பிகார் பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக சாம்ராட் சௌத்ரி தேர்வு
பட மூலாதாரம், ANI
பிகார் முதலமைச்சர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் ராஜிநாமா செய்துள்ளார். தனது ராஜிநாமாவை ஆளுநரிடம் சமர்பித்துள்ளார்.
சாம்ராட் சௌத்ரி தற்போது பிகாரின் துணை முதல்வராக உள்ளார்.
'பதற்றத்தை அதிகப்படுத்தும்' - அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்
பட மூலாதாரம், EPA-EFE/Shutterstock
இரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை "ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது" என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த ஒரு நாளுக்குப் பிறகு, திங்களன்று இந்த முற்றுகை நடைமுறைக்கு வந்தது.
இந்த முற்றுகை "பதற்றத்தை அதிகப்படுத்தும் மற்றும் ஏற்கனவே பலவீனமாக உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கும்" என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் எச்சரித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை: ஸ்டாலின் - அண்ணாமலை கூறியது என்ன?
பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN
தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்துள்ளார். அதற்கு அண்ணாமலை பதில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளியில், தொகுதி மறுவரையறை குறித்த அரசியலமைப்பு சட்டத் திருத்தத்துக்காக ஏப்ரல் 16 அன்று “வலுக்கட்டாயமாக” நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படப் போகும் மாநிலங்களின் முதலமைச்சர்களை சென்னைக்கு வரவழைத்து கூட்டுக் குழு கூட்டம் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
அவசரஅவசரமாக தொகுதி மறுவரையறையை செய்ய நினைப்பது மத்திய அரசின் “அப்பட்டமான ஜனநாயக விரோத செயல்” என்றும், சட்டத்திருத்தம் குறித்து மத்திய அரசு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என்றும் ஸ்டாலின் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
”வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்கும் விதமாகவும் தமிழ்நாட்டுக்கு எதிராகவும் ஏதேனும் நடந்தால் தமிழ்நாட்டில் உள்ள நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். தமிழ்நாடு ஸ்தம்பிக்கும். கடுமையாக எதிர்ப்பை தெரிவிக்கும். மக்கள் தெருக்களில் இறங்கி போராடுவர்.” எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
”இதுவரை பார்க்காத தமிழகத்தை பார்ப்பீர்கள், 1950 மற்றும் 1960களில் இருந்த திமுகவை பார்க்க நேரிடும். நான் உங்களை எச்சரிக்கிறேன். இதனை மிரட்டலாக நினைத்தாலும் பரவாயில்லை.” என்று ஸ்டாலின் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எதிர்வினையாற்றியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, “மக்களவையில் ஏற்கெனவே உள்ள 543 இடங்களில் மகளிர் இடஒதுக்கீடு 33% என்பதை அப்படியே செயல்படுத்த முடியாது என்பதால், அந்த இடங்களை 816 ஆக உயர்த்தி செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தென் மாநிலங்கள் பாதிக்காத வகையில்தான் பிரதமர் தொகுதி மறுவரையறை செய்கிறார். ஏனெனில், மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யப்படவில்லை. மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் என்பது 31 ஆக குறையும். எனவே அவ்வாறு செய்யவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினின் எச்சரிக்கை ஏற்புடையதல்ல.” என தெரிவித்துள்ளார்.
நொய்டாவில் தொழிலாளர்கள் போராட்டம் குறித்து ராகுல் கூறியது என்ன?
பட மூலாதாரம், Anindito Mukherjee/Bloomberg via Getty Images
படக்குறிப்பு, ராகுல் காந்தி
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் தொழிற்பகுதியில் நடைபெற்ற போராட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எதிர்வினையாற்றியுள்ளார்.
தொழிலாளர்கள் ரூ. 20,000 ஊதியம் கோருவது பேராசை அல்ல என்றும் அது அவர்களின் உரிமை என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், ”நேற்று நொய்டா தெருக்களில் நடந்தது, நாட்டில் தங்களின் குரல் நிராகரிக்கப்பட்ட தொழிலாளர்கள் விடுத்த கடைசி அறைகூவல்” என பதிவிட்டுள்ளார்.
மேலும், “நொய்டாவில் பணிபுரியும் ஒரு தொழிலாளர் மாதம் ரூ. 12,000 சம்பாதிக்கிறார், இதில் வாடகை ரூ. 4,000-7,000 சென்றுவிடும். ஆண்டு வருமான உயர்வாக ரூ.300-ஐ பெறும்போது, வீட்டு உரிமையாளர் வாடகையை ரூ. 500 உயர்த்திவிடுவார்.” என பதிவிட்டுள்ளார்.
“ஊதியத்தை உயர்த்தாமல், அதிகரித்துவரும் பணவீக்கம் வாழ்க்கையை நெரித்து கடனில் ஆழ்த்துகிறது. இதுதான் இன்றைய வளர்ந்த இந்தியாவின் யதார்த்தம். ஒருநாளைக்கு 12 மணிநேரம் வேலை பார்க்கும் தொழிலாளர், தங்களின் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை செலுத்த கடன் வாங்குகிறார், அவருடைய கோரிக்கை நியாயமற்றதா? தினந்தோறும் அவர்களது உரிமைகளைப் பறித்துக்கொண்டிருப்பவரா வளர்ச்சியைக்கொண்டு வருகிறார்?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
”நாட்டின் முதுகெலும்பாக உள்ள, இந்த அரசாங்கம் சுமையாக கருதும் ஒவ்வொரு தொழிலாளருடனும் நான் உடன் நிற்கிறேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திங்களன்று, நொய்டாவின் சில இடங்களில் தொழிலாளர்கள் வன்முறையிலும் கல்வீச்சிலும் ஈடுபட்டதுடன், சில வாகனங்களுக்குத் தீயும் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டம் நடத்திய ஊழியர்கள் ஊதிய உயர்வைக் கோரி வருகின்றனர்.
யுரேனியம் செறிவூட்டல்: இரான் முன்மொழிவை அமெரிக்கா நிராகரித்ததாக தகவல்
பட மூலாதாரம், Burak Kara/Getty Images
படக்குறிப்பு, இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி
இரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை குறித்த ஊகங்கள் தொடர்கின்றன. இதற்கிடையில், யுரேனியம் செறிவூட்டலுக்கு ஐந்தாண்டு காலம் நிறுத்தி வக்க இரான் முன்மொழிந்துள்ளது, ஆனால் அமெரிக்கா இந்த முன்மொழிவை நிராகரித்து, 20 ஆண்டு காலத் தடையைக் கோரியுள்ளது.
இரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, அணுசக்தி நடவடிக்கைகளை நிறுத்த அமெரிக்காவும் இரானும் வெவ்வேறு முன்மொழிவுகளை வழங்கின, ஆனால் இரு தரப்பினருக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று அந்த செய்தி அறிக்கை கூறுகிறது.
இருப்பினும், ஓர் அமைதி ஒப்பந்தத்துக்கான சாத்தியம் இன்னும் உள்ளது என்பதையும், இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்பதையும் இந்த விவாதங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதுகுறித்து கருத்து கேட்பதற்காக வெள்ளை மாளிகையை பிபிசி தொடர்புகொண்டுள்ளது.
இரானின் அணுசக்தி லட்சியங்களே இந்த சர்ச்சைக்கு ஒரு முக்கிய காரணம் என்று அமெரிக்கா நம்புகிறது.
இரான் அணு ஆயுதங்களைப் பெறாமல் இருப்பதை அமெரிக்கா உறுதி செய்யும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார்.
ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களைத் தடுப்பதன் மூலம் இரான் அரசு 'பொருளாதார பயங்கரவாதத்தில்' ஈடுபட்டு வருவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.
"இந்த ஆட்டத்தை இரு வழிகளிலும் விளையாட முடியும் என்பதை அதிபர் டொனால்ட் டிரம்ப் காட்டியுள்ளார்," என்று ஜே.டி. வான்ஸ் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "இரான் பொருளாதார பயங்கரவாதத்தில் ஈடுபட்டால், எந்தவொரு இரானிய கப்பலும் வெளியே செல்ல முடியாது என்ற கொள்கையின் அடிப்படையில் அமெரிக்கா செயல்படும்," என்றார்.
இஸ்லாமாபாத்தில் இரானுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஜே.டி. வான்ஸ் கூறுகையில், "பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இப்போது பந்து இரானின் கையில் உள்ளது," என்றார்.
வான்ஸ் மேலும் கூறுகையில், "இரான் நெகிழ்வுத்தன்மையுடன் இருந்து, அமெரிக்காவின் அத்தியாவசிய கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டும். இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் மீது அமெரிக்கா கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். இரான் அணு ஆயுதங்களை உருவாக்க முடியாது என்பதை உறுதிசெய்யும் ஒரு கண்காணிப்பு அமைப்பும் இருக்க வேண்டும்," என்றார்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இரானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் ஜே.டி. வான்ஸ் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவை முடிவடையவில்லை, அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைப் பரிமாறிக்கொண்டன.
வணக்கம் நேயர்களே!
பிபிசி தமிழின் இன்றைய (ஏப்ரல் 14) நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.
இன்று பிற்பகல் வரையிலும் அண்மைச் செய்திகளை தொகுத்து அளிப்பவர் நந்தினி வெள்ளைச்சாமி.
இந்திய கப்பல்களிடம் சுங்கம் வசூலா? - இரான் அளித்த பதில்
பட மூலாதாரம், ANI
ஹோர்மூஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் செல்வது குறித்தும், அவற்றின் மீது சுங்க வரி விதிக்கப்படுவது குறித்தும் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், இந்தியாவிற்கான ,இரான் தூதர், இந்தியாவை இரானின் ஐந்து நட்பு நாடுகளில் ஒன்றாக வர்ணித்தார்.
இரான் தூதர் டாக்டர் முகமது ஃபத்தாலி இதுகுறித்துத் தெரிவிக்கையில், "இந்திய அரசாங்கத்துடன் நாங்கள் நல்லுறவைப் பேணி வருகிறோம். இந்தியக் கப்பல்களுக்குத் தேவையான சிறந்த ஏற்பாடுகளைச் செய்ய நாங்கள் விரும்புகிறோம்," என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோதிக்கும் எங்கள் அதிபர் மசூத் பெசெஷ்கியானுக்கும் இடையே இரண்டு தொலைபேசி உரையாடல்களும், எங்கள் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கு இடையே நான்கு முதல் ஐந்து உரையாடல்களும் நடைபெற்றுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள்," என்றார்.
"எங்களுக்குள் நல்ல தொடர்புகள் நிலவி வருகின்றன; ஏனெனில், எங்கள் வெளியுறவுத் துறை அமைச்சர், இரானின் நட்பு நாடுகளாகத் திகழும் ஐந்து நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.
ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் மீது இரான் சுங்க வரியை வசூலித்து வருகிறது. அமெரிக்கா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அந்த நீரிணையை முற்றுகையிட முயன்று வருகிறது.
ஹோர்மூஸ் முற்றுகை தொடங்கியது - இரானுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை
பட மூலாதாரம், Donald Trump
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியலில் விடுத்துள்ள பதிவு ஒன்றில், இரானின் கடற்படை முழுமையாக அழிக்கப்பட்டு, மொத்தம் 158 கப்பல்கள் கடலடியில் உள்ளன என கூறப்பட்டுள்ளது.
மேலும், “வேகத் தாக்குதல் கப்பல்கள்” என அழைக்கப்படும் சில சிறிய கப்பல்கள் மட்டுமே தாக்கப்படாமல் உள்ளதாகவும், அவை அமெரிக்கா அறிவித்துள்ள முற்றுகை நடவடிக்கைகளுக்கு அருகில் வந்தால் உடனடியாக “அழிக்கப்படும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இரான் துறைமுகங்கள் முற்றுகையிடப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், முற்றுகை நடவடிக்கை இந்திய நேரப்படி திங்கட்கிழமை இரவு 07:30 மணி முதல் தொடங்கியது.
இரான் துறைமுகங்களுக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்து நாட்டுப் போர்க்கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்களுக்கும் தடுக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.
அரை மணி நேரத்தில் அமெரிக்காவின் முற்றுகை - இரான் பதில் என்ன?
பட மூலாதாரம், Shady Alassar/Anadolu via Getty
இரான் துறைமுகங்கள் முற்றுகையிடப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், முற்றுகை நடவடிக்கை இந்திய நேரப்படி திங்கட்கிழமை இரவு 07:30 மணி முதல் தொடங்கக்கூடும்.
இரான் துறைமுகங்களுக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்து நாட்டுப் போர்க்கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்களுக்கும் தடுக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.
டிரம்ப் மிரட்டலுக்கு பதிலளித்த இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், இரான் அச்சுறுத்தல்களுக்குப் பணியாது என்று கூறினார். மேலும், "அவர்கள் போரிட்டால், நாங்களும் போரிடுவோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஹோர்மூஸ் நீரிணையை நெருங்கும் ராணுவக் கப்பல்கள் "கடுமையாக எதிர்கொள்ளப்படும்" என்று இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
ஹோர்மூஸ் முற்றுகை - அமெரிக்காவுக்கு இஸ்ரேல் ஆதரவு
பட மூலாதாரம், Reuters
இரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை இஸ்ரேல் ஆதரிப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் அமைச்சரவைக்கு அனுப்பிய காணொளிச் செய்தியில், இஸ்ரேலிய பிரதமர், "அவர்களுக்கு எதிராக கடற்படை முற்றுகையை விதிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இந்த கடுமையான நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம்," என்று கூறினார்.
இரானுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் பேசியதாகவும் அவர் கூறினார். "அனைத்து செறிவூட்டல் (அணுசக்தி) பொருட்களையும் அகற்றுவதும், மேலும் செறிவூட்டல் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதும்தான் முக்கிய விஷயம்," என்று வான்ஸ் கூறியதாக இஸ்ரேலிய பிரதமரின் காணொளிச் செய்தி தெரிவிக்கிறது.
பாகிஸ்தானிலிருந்து திரும்பும்போது தனது விமானத்திலிருந்து வான்ஸ் தன்னை தொலைபேசியில் அழைத்து, இரானுடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்த விரிவான தகவல்களை வழங்கியதாக நெதன்யாகு கூறினார்.
அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படுவது "முற்றிலும் பொய்யானது" என்றும் இஸ்ரேலிய பிரதமர் கூறினார்.
அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லேவின் உடல் தகனம்
பட மூலாதாரம், Gareth Cattermole/Getty Images for DIFF
பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் இறுதிச் சடங்குகள் மும்பையின் சிவாஜி பூங்காவில் நடைபெற்றன. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி விடை அளிக்கப்பட்டது. வெள்ளை மற்றும் மஞ்சள் நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஆஷா போஸ்லேவின் உடல் சிவாஜி பூங்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அவரது இறுதிப் பயணத்தின்போது, மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதைக் காண முடிந்தது.
ஆஷா போஸ்லே ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
"ஹோர்மூஸ் நீரிணை குறித்து மாநாடு" - பிரிட்டன் மற்றும் பிரான்ஸின் திட்டம் என்ன?
பட மூலாதாரம், Reuters
ஹோர்மூஸ் நீரிணையில் "கப்பல் போக்குவரத்துச் சுதந்திரத்தை மீட்டெடுப்பதை" நோக்கமாகக் கொண்டு, பிரான்சும் பிரிட்டனும் "வரும் நாட்களில்" ஒரு மாநாட்டை நடத்தவுள்ளதாக பிரான்ஸ் அதிபர் மக்ரோங் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், "நீரிணையில் கப்பல் போக்குவரத்துச் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான அமைதிசார் பல்தேசிய பணியில்" பங்களிக்க விருப்பம் தெரிவிக்கும் நாடுகளுடன் இணைந்து இந்த மாநாடு நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "இது முற்றிலும் தற்காப்பு சார்ந்த ஒரு பணியாகும்; மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகளிலிருந்து இது தனித்துச் செயல்படும். சூழல் சாதகமானதும், கூடிய விரைவில் இதைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது," என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் "இரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை ஆதரிக்கவில்லை" என்று பிரிட்டன் பிரதமர் கீயர் ஸ்டாமர் கூறியுள்ளார்.
"முடிந்தவரை விரைவாக எரிசக்தி விலைகளைக் குறைக்க, ஹோர்மூஸ் நீரிணையை திறப்பதில் பிரிட்டனின் கவனம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
பிரிட்டனின் எரிசக்தி கட்டணங்களில் ஏற்பட்ட தாக்கத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தனிப்பட்ட முறையில் பொறுப்பாக்குகிறீர்களா என்று கேட்கப்பட்டபோது, ஸ்டாமர் நேரடியான பதிலை அளிக்கவில்லை..
"பதிலடி கொடுப்போம்" - அமெரிக்காவுக்கு இரான் அளித்த பதில் என்ன?
பட மூலாதாரம், Morteza Nikoubazl/NurPhoto via Getty Images
அமெரிக்கா தனது துறைமுகங்களைத் முற்றுகையிட முயன்றால், தக்க பதிலடி கொடுப்போம் என்று இரானிய இராணுவம் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த மிரட்டல்கள் 'சட்டவிரோதமானவை' என்றும், இது ஒரு 'கடற்கொள்ளைச் செயல்' என்றும் இரான் குறிப்பிட்டுள்ளது. இரானின் ஐஆர்ஐபி செய்தி முகமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், போர் முடிவடைந்த பின்னரும் கூட, ஹோர்முஸ் நீரிணையின் மீதான தனது கட்டுப்பாட்டைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளப்போவதாக இரான் தெரிவித்துள்ளது.
இரானிய கடல் எல்லைகள் வழியாகச் செல்ல, எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை இரான் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
வளைகுடா நாடுகளை எச்சரிக்கும் வகையில் இரானிய இராணுவம், "இப்பிராந்தியத் துறைமுகங்களின் பாதுகாப்பு என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்; இல்லையேல், யாருக்குமே இல்லாத ஒன்றாகவே அது அமையும்," என்று கூறியுள்ளது.
"இரானியத் துறைமுகங்களை அமெரிக்க இராணுவம் குறிவைக்குமேயானால், பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடலில் அமைந்துள்ள எந்தவொரு துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது." என அந்த அறிக்கை கூறுகிறது.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களை இனிமேல் அமெரிக்கா முற்றுகையிடும் என்று கூறி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானை மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
'இரான் மீண்டும் பேசாவிட்டாலும் கவலையில்லை' - டிரம்ப் கூறியது என்ன?
பட மூலாதாரம், Julia Demaree Nikhinson - Pool/Getty Images
படக்குறிப்பு, இரானியத் துறைமுகங்களை திங்கட்கிழமை முதல் முற்றுகையிடத் தொடங்குவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. (புகைப்படம்: டொனால்ட் டிரம்ப்)
இரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லாவிட்டாலும், அது தனக்கு ஒரு பொருட்டல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் டி.சி.க்கு அருகிலுள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் தளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "இரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும், அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை," என்று கூறினார்.
"அவர்கள் மீண்டும் வருகிறார்களா, இல்லையா என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல. அவர்கள் வராவிட்டாலும், அது எனக்குச் சம்மதமே," என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
முன்னதாக, திங்கட்கிழமை முதல் இரானியத் துறைமுகங்களை முற்றுகையிட போவதாக அமெரிக்க ராணுவம் அறிவித்திருந்தது.
ஹோர்மூஸ் நீரிணைக்குள் நுழையவோ அல்லது அதிலிருந்து வெளியேறவோ முயற்சிக்கும் 'எந்தவொரு கப்பலையும்' அமெரிக்கா தடுக்கும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
"சட்டவிரோதக் கட்டணங்களைச் செலுத்தும் எவருக்கும், சர்வதேசக் கடற்பரப்பில் பாதுகாப்பான வழித்தடம் கிடைக்காது," என்று அவர் கூறினார்.
தேர்தலில் தோல்வி: ஹங்கேரியில் 16 ஆண்டு ஆர்பன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி
பட மூலாதாரம், Balint Szentgallay/NurPhoto via Getty Images
படக்குறிப்பு, ஆர்பனின் ஃபிடெஸ் கட்சி 55 இடங்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
ஹங்கேரியில் விக்டர் ஆர்பனின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. ஏறக்குறைய 98% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், திஸ்ஸா கட்சி (Tisza Party) 138 இடங்களை வென்றுள்ளதாக முதற்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 199 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், ஆர்பனின் ஃபிடெஸ் கட்சி (Fidesz Party) 55 இடங்களையும், தீவிர வலதுசாரி கட்சியான 'அவர் ஹோம்லேண்ட்' (Our Homeland) 6 இடங்களையும் பெற்றுள்ளன.
ஆர்பனைத் தோற்கடித்த திஸ்ஸா கட்சியின் தலைவரான பீட்டர் மாக்யார், டான்யூப் நதிக்கரையில் திரண்டிருந்த மக்களிடம் உரையாற்றுகையில், "நாம் அனைவரும் இணைந்து ஹங்கேரிய அரசாங்கத்தை வீழ்த்தியுள்ளோம்," என்று கூறினார்.
விக்டர் ஆர்பன் தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Ferenc ISZA/AFP via Getty Images
படக்குறிப்பு, அரசியலமைப்பைத் திருத்த பீட்டர் மாக்யாருக்கு 133 இடங்கள் தேவைப்பட்டன.
மறுபுறம், ஆர்பன் தனது ஆதரவாளர்களிடம் பேசுகையில், "தேர்தல் முடிவுகள் தெளிவாகவும், அதே சமயம் வேதனை அளிப்பதாகவும் உள்ளன. நமக்கு ஆதரவளித்த 2.5 மில்லியன் மக்களுக்கும் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். வரும் நாட்கள் நமது காயங்களை ஆற்றிக்கொள்வதற்கான நாட்களாக அமையும்," என்று கூறினார்.
ஆர்பனின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சில திட்டங்களை மாற்றியமைக்கப்போவதாக மாக்யார் அறிவித்துள்ளார். "கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை மேம்படுத்துவது, ஊழலைக் கட்டுப்படுத்துவது, நீதித்துறையைச் சுதந்திரமானதாக மாற்றுவது, அத்துடன் ஆர்பனின் ஆதரவாளர்களுக்கு மட்டும் பயனளித்து அரசு வளங்களை வீணடித்த NER எனப்படும் அமைப்பை ஒழிப்பது," ஆகிய வாக்குறுதிகளை அவர் அளித்துள்ளார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை தோல்வி ஏன்? இரான் விளக்கம்
பட மூலாதாரம், Noushad Variyattiyakkal/SOPA Images/LightRocket via Getty Images
படக்குறிப்பு, இரானின் வெளியுறவுத் துறை அமைச்சர், நல்ல நோக்கங்கள் நல்ல நோக்கங்களையே உருவாக்கும் என்றும், பகைமை பகைமையையே உருவாக்கும் என்றும் கூறினார்.
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒரு உடன்படிக்கையை எட்டுவதற்கு மிக அருகில் இருந்ததாக இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
"47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த மட்டத்தில் தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. போரை முடிவுக்குக் கொண்டுவரும் நல்ல நோக்கத்துடன் இரான் அமெரிக்காவுடன் பேசியது," என்று இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.
"ஆனால், 'இஸ்லாமாபாத் உடன்படிக்கையை' எட்டுவதற்கு நாங்கள் மிக நெருக்கத்தில் இருந்தபோது, எங்களுக்கு முன் மேலும் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன. புதிய நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் முன்வைக்கப்பட்டன."
"எந்தப் பாடமும் கற்கப்படவில்லை. நல்ல நோக்கங்கள் நல்ல நோக்கங்களையே உருவாக்கும். பகைமை பகைமையையே உருவாக்கும்," என்று அவர் பதிவிட்டுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன, ஆனால் அவை முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குப் பிறகு, ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் ஒவ்வொரு கப்பலையும் இனி அமெரிக்கா தடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வணக்கம் நேயர்களே!
பிபிசி தமிழின் இன்றைய (ஏப்ரல் 13) நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.
இன்று பிற்பகல் வரையிலும் அண்மைச் செய்திகளை தொகுத்து அளிப்பவர் நந்தினி வெள்ளைச்சாமி.