You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நேரலை, ‘விஜய் பேச்சால் குழந்தைகளுக்கு உளவியல் சிக்கல்’- விசிக நிர்வாகி புகார்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ‘விஜய் பேச்சால் அடம் பிடிக்கும் குழந்தை’- விசிக நிர்வாகி புகார்

    கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி பாலகிருஷ்ணன் என்பவர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

    ‘பிஞ்சு குழந்தைகளின் மனநிலையை தேர்தல் ஆதாயத்திற்காக விஜய் தவறாகப் பயன்படுத்துகிறார்’ என அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த விசிக நிர்வாகி பாலகிருஷ்ணன் மாநகர காவல் ஆணையாளரிடம் அளித்துள்ள புகாரில், “கடந்த ஏப்ரல் 21ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற இறுதிக்கட்ட பரப்புரைக் கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய் ‘குழந்தைகள் சாக்லேட் கேட்டு அடம்பிடிப்பது போல, பெற்றோரிடம் அடம்பிடித்து தனக்கு வாக்களிக்கச் சொல்ல வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார்.”

    “அரசியல் முதிர்ச்சியற்ற இத்தகைய தூண்டுதல், பிஞ்சு குழந்தைகளின் மனநிலையை தேர்தல் ஆதாயத்திற்காக தவறாக பயன்படுத்துவதாகும். இதனால் எனது 5 வயது மகன் விஜய்க்கு வாக்களிக்குமாறு என்னிடம் அடம்பிடித்தான். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தபோது, மன உளைச்சலுக்கு ஆளாகி அழுதும், உணவைத் தவிர்த்தும் த.வெ.க-விற்கு ஓட்டு போடுமாறு பிடிவாதம் பிடித்தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், “இதனால் அக்கட்சிக்கு தான் ஓட்டு போட்டதாக பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், எனக்கு மிகுந்த மன வேதனை ஏற்பட்டது. ‘விஜய் மாமா ஜெயிக்கவில்லை என்றால் நான் சாப்பிட மாட்டேன்’ என எனது மகன் தொடர்ந்து அழுது வருகிறான்.” என்றும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

    “தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ள விஜயின் செயலால், பல குழந்தைகள் உளவியல் சிக்கல்களை சந்திக்கின்றனர். இது தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர் பேசிய வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும்” என்று பாலகிருஷ்ணன் தனது புகாரில் கூறியுள்ளார்.

    ‘இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அனுப்பியுள்ளேன். நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நீதிமன்றத்தை நாடுவேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

  2. தேனியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 பேர் மரணம்

    தேனி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தேனி மாவட்டம், கம்பம் நகர காவல்துறையினர் அளித்த தகவலின்படி, காட்டுப்பள்ளிவாசல் சாலையில் திருப்பதி என்பவருக்கு சொந்தமான லட்சுமி பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இன்று காலை வழக்கம் போல் பட்டாசு ஆலையில் பணிபுரிவதற்காக அய்யப்பன், நாகர்ஜுன், சூர்யா, தினேஷ் என்ற தீனா ஆகிய நான்கு பேர் வந்துள்ளனர்.

    தேர்தல் விடுமுறை காரணமாக இரண்டு நாட்கள் பணிக்கு யாரும் வராமல் தொழிற்சாலை மூடிய நிலையில் இருந்துள்ளது. இரண்டு நாட்களுக்குப் பிறகு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட வந்த தினேஷும் சூர்யாவும் அடைத்து வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள் உள்ள அறையை திறந்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக அந்த அறையில் கடும் சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதால் சூர்யாவும் தினேஷும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெடிச் சத்தம் கேட்டு ஆலையில் இருந்த மற்ற இரு ஊழியர்களும் வெளியில் ஓடி வந்துள்ளனர்.

    இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். வெடி விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  3. இரானியக் கொடி ஏந்திய கப்பலை தடுத்து நிறுத்திய அமெரிக்காவின் போர்க்கப்பல்

    இரானியத் துறைமுகத்தை நோக்கிச் சென்ற இரானியக் கொடி ஏந்திய கப்பலை, அமெரிக்காவின் போர்க்கப்பல் ஒன்று தடுத்து நிறுத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.

    "ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமையன்று, இரானியத் துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரானியக் கொடி ஏந்திய கப்பலை, யுஎஸ்எஸ் ரஃபேல் பெரால்டா (USS Rafael Peralta) என்ற போர்க் கப்பல் இடைமறித்தது," என்று சென்ட்காம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்த அறிக்கையுடன் ஒரு புகைப்படத்தையும் சென்ட்காம் பகிர்ந்துள்ளது.

    முன்னதாக வெள்ளிக்கிழமை வெளியான மற்றொரு அறிக்கையில், அமெரிக்கக் கடற்படை முற்றுகையின் போது இதுவரை 34 கப்பல்களைத் திசைதிருப்பியுள்ளதாக சென்ட்காம் குறிப்பிட்டிருந்தது.

    இரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் தீர்வுகள் காணப்படாமல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இரானியத் துறைமுகங்களை முற்றுகையிடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

    இந்த முற்றுகைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இரான், இது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று கூறியது. அதனைத் தொடர்ந்து ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் மூட இரான் முடிவு செய்தது.

  4. "ஊர் பெயரில் சாதி": பிபிசி செய்தியை சுட்டிக்காட்டி மாநில ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு ஊராட்சி அச்சந்தவிழ்த்தான், அதற்கு உட்பட்ட ஒரு சிறிய குக்கிராமம்தான் 'வடக்கு அச்சந்தவிழ்த்தான்'. இங்கு சுமார் 60க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    ஆனால், பல அரசு ஆவணங்களில் இந்த கிராமத்தின் பெயர் 'பரச்சேரி' என்று பதிவாகியுள்ளது. அது மட்டுமல்லாது, சுற்றியுள்ள பிற கிராம மக்கள் கூட 'பரச்சேரி' என்ற பெயரில் தான் இந்த குக்கிராமத்தை அழைக்கிறார்கள்.

    சாதிய அடையாளத்துடன் கூடிய ஊர் பெயர் காரணமாக தாங்கள் பெரும் மன உளைச்சலையும் அவமானங்களையும் எதிர்கொள்வதாகவும், இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் அதிகாரபூர்வமாக தங்களது ஊரின் பெயரை 'வடக்கு அச்சந்தவிழ்த்தான்' என மாற்றவில்லை என்பதால் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்பதாகவும் இந்த கிராம மக்கள் அறிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து பிபிசி தமிழ் குழு, இந்தக் கிராமத்திற்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து காணொளி மற்றும் கட்டுரையையும் பிபிசி வெளியிட்டது.

    இந்தக் கிராமத்தில் 113 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கிடையே சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக அரசு அதிகாரிகள் இந்த கிராமத்தினரைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தனர்.

    “தேர்தல் முடிந்து நிச்சயம் பெயர் மாற்றம் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தார்கள். அதை நம்பி ஏப்ரல் 23 அன்று இந்தக் கிராமத்தைச் சிலர் வாக்களித்துள்ளார்கள்” என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், பிபிசி வெளியிட்ட காணொளியின் எதிரொலியாக, 'வடக்கு அச்சந்தவிழ்த்தான்' கிராமம் 'பரச்சேரி' என்று பதிவாகி இருப்பதை நீக்காதது குறித்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு (மாவட்ட ஆட்சியர்) தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் விளக்கம் கேட்டு நேற்று (ஏப்ரல் 24) கடிதம் அனுப்பியுள்ளது. ஒரு வார காலத்திற்குள் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக கிராம மக்களின் கோரிக்கை தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசியிருந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, "அச்சந்தவிழ்த்தான் வருவாய் கிராமத்தில் உள்ள குக்கிராம மக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரமாகக் கவனித்து வருகிறது. அப்பகுதிக்கு மறுபெயரிடுவதற்கான முறையான முன்மொழிவு ஏற்கனவே உள்ளாட்சித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.

  5. பாகிஸ்தான் சென்ற இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி

    இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஒரு தூதுக்குழுவுடன் இஸ்லாமாபாத் வந்தடைந்துள்ளார். அவரது வருகை குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    ஆனால், இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சந்திப்பு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் எந்தக் குறிப்பும் இல்லை.

    முன்னதாக, “அராக்சியின் இஸ்லாமாபாத் பயணத்தில் இரான் மற்றும் அமெரிக்கா இடையே எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை" என்று இரானின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

    இருப்பினும், இரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் 'இரானின் கருத்துகள் பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்படும்' என்று கூறினார்.

    "வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான இரானிய தூதுக்குழு இன்று (ஏப்ரல் 25) இஸ்லாமாபாத் வந்தடைந்தது. அவரை பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் தார், ஃபீல்டு மார்ஷல் அசிம் முனீர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்" என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அந்த அறிக்கையில், "இந்தப் பயணத்தில், இரானிய வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானின் உயர்மட்டத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்துவார். இந்தச் சந்திப்புகளில் பிராந்தியத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தற்போதைய முயற்சிகள் குறித்து விவாதிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  6. ‘இரானில் அதிகாரத்தில் இருப்பவர்களுடன் பேசி வருகிறேன்’- அமெரிக்க அதிபர் டிரம்ப்

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசுகையில், 'இரான் ஒரு சலுகையை முன்வைக்கிறது, அதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்' என்று கூறினார்.

    இருப்பினும், அந்த சலுகை என்னவென்று தனக்கு இன்னும் தெரியவில்லை என்று அவர் கூறுகிறார்.

    தொலைபேசி உரையாடலின் போது, அமெரிக்கா யாருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்று டிரம்பிடம் கேட்கப்பட்டபோது, அவர் தெளிவான தகவலை அளிக்கவில்லை.

    ஆனால், "தற்போது அதிகாரத்தில் இருப்பவர்களுடன் நான் பேசி வருகிறேன்" என்று அவர் கூறினார்.

    அடுத்த வாரம் பிரிட்டனின் மன்னர் சார்லஸ் அமெரிக்காவிற்கு வரும்போது, அவருடன் இரான் குறித்து விவாதிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

    முன்னதாக, அமெரிக்க சிறப்பு தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாகிஸ்தான் செல்வார்கள் என்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது.

    இதற்கிடையில், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இஸ்லாமாபாத் செல்வார் என்பதை இரானிய அரசாங்கமும் உறுதிப்படுத்தியது. இருப்பினும், இந்த பயணம் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்காகவா என்பது குறித்த விவரங்களை அந்த அறிக்கை குறிப்பிடவில்லை.

  7. வணக்கம் நேயர்களே!

    நேரலைப் பக்கத்தில் இன்று (25-04-2026) பிற்பகல் வரையிலும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை சுருக்கமாக தருவது சிராஜ்.

  8. இரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இதுவே சரியான தருணம் - அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்

    இரான் "நல்ல மற்றும் புத்திசாலித்தனமான ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள" இது ஒரு வாய்ப்பு என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார்.

    மேலும், இரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படை முற்றுகை "வளர்ந்து வருகிறது மற்றும் உலகளாவிய அளவில் விரிவடைந்து வருகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.

    டொனால்ட் டிரம்பின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் வகையில் பேசிய ஹெக்செத், ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு அமெரிக்கா "எந்த அவசரத்திலும் இல்லை" என்றும், "இனி பந்து இரான் பக்கம் தான் இருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

    அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையின் அடுத்தகட்ட நிலை குறித்த தெளிவற்ற சூழலே தற்போதும் நீடிக்கிறது. இருப்பினும், இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று இரவு இஸ்லாமாபாத் செல்ல உள்ளார்.

  9. பாஜகவில் இணைந்த 3 ஆம் ஆத்மி எம்.பி.க்கள் - இன்னும் 4 பேர் சேர உள்ளார்களா?

    மாநிலங்களவை எம்.பி. ராகவ் சட்டா, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

    சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோருடன் வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகவ் சட்டா, "மாநிலங்களவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கான நாங்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார்.

    "மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் எங்களுடன் இருக்கிறார்கள். அவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்; இன்று காலை அந்த கையெழுத்திடப்பட்ட கடிதம் மற்றும் ஆவணங்களை மாநிலங்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்தோம். அவர்களில் மூவர் இதோ உங்கள் முன்னிலையில் இங்கு இருக்கிறோம். எங்களைத் தவிர, ஹர்பஜன் சிங், ராஜீந்தர் குப்தா, விக்ரம்ஜீத் சிங் சாஹ்னி மற்றும் சுவாதி மாலிவால் ஆகியோரும் இதில் அடங்குவர்," என்று தெரிவித்தார் ராகவ் சட்டா.

    ஆம் ஆத்மி கட்சி பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்ததோடு, இதனை 'ஆபரேஷன் லோட்டஸ்' என்றும் குறிப்பிட்டது.

    அதே சமயம், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ராகவ் சட்டாவின் பெயரைக் குறிப்பிடாமல், இது குறித்து எக்ஸ் தளத்தில், "பாஜக மீண்டும் பஞ்சாபிகளுக்குத் துரோகம் செய்துவிட்டது," என எழுதியுள்ளார்.

  10. இரான் வெளியுறவு அமைச்சர் இன்று இரவு இஸ்லாமாபாத் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரானிய பேச்சுவார்த்தைக் குழு ஒன்று இன்று இரவு இஸ்லாமாபாத்தை வந்தடையும் என பாகிஸ்தான் மற்றும் இரானிய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

    பிபிசி உருதுவின்படி , இரானிய குழுவின் வருகை குறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், இஸ்லாமாபாத்தில் ஏற்கனவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் அரசாங்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

    இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையில் இரானிய குழு வர உள்ளதாக பாகிஸ்தான் வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

    அதிகாரிகளின் கூற்றுப்படி, பேச்சுவார்த்தை செயல்முறைக்காக அமெரிக்கப் பாதுகாப்புக் குழு ஒன்று ஏற்கனவே இஸ்லாமாபாத்தில் உள்ளது.

  11. ராகவ் சட்டா ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்

    மாநிலங்களவை எம்.பி. ராகவ் சட்டா, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணையும் தனது முடிவை அறிவித்துள்ளார்.

    சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோருடன் வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகவ் சட்டா, "மாநிலங்களவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கான நாங்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார்.

  12. இஸ்ரேல் - ஹெஸ்பொலா இடையே தாக்குதல்

    இஸ்ரேல் ராணுவமும், ஹெஸ்பொலாவும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தியுள்ளன.

    லெபனானில் இருந்து ஏவப்பட்ட பல ஏவுகணைகளை இடைமறித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது. ஷ்துலா பகுதியிலும் எச்சரிக்கை ஒலிகள் ஒலித்தன.

    இதற்கிடையில், இந்தப் பகுதியை ராக்கெட் தாக்குதல் மூலம் குறிவைத்ததாக ஹெஸ்பொலா டெலிகிராமில் தெரிவித்துள்ளது.

    ''ஹெஸ்பொலா பயங்கரவாதிகள்" என விவரிக்கப்பட்ட மூன்று பேரைக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

  13. "வருமான வரி சோதனை நடந்தது உண்மை" - சிசிடிவி பதிவுகளை வெளியிட்ட செல்வப்பெருந்தகை

    தனக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாகக் கூறி காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை சிசிடிவி காட்சிகள் சிலவற்றை வெளியிட்டார்.

    முன்னதாக ஏப்ரல் 20ம் தேதி செல்வப்பெருந்தகை ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், வருமான வரித்துறையினர் என கூறிக் கொண்ட சிலர் தான் இருக்கும் இடங்களில் சீருடை அணியாமல் சோதனை நடத்தியதாக குறிப்பிட்டார். இவர்கள் தன்னை முடக்கி வைத்ததால் தேர்தல் பிரசாரத்திற்காக திருவனந்தபுரம் வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை தன்னால் நேரில் வரவேற்க முடியவில்லை என்றும் செல்வப் பெருந்தகை கூறினார்.

    ஆனால் செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டில் உண்மை இல்லை என வருமான வரித்துறை கூறியது. இதுதொடர்​பாக மத்​திய நிதி அமைச்​சகத்​தின் வரு​வாய்த் துறை மத்​திய நேரடி வரி​கள் வாரி​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு ஒன்றில், "கடந்த 20-ம் தேதி அன்றோ அல்​லது அதற்கு சமீபத்​திய தேதி​களிலோ செல்​வப்​பெருந்​தகைக்கு எதி​ராக வரு​மான வரித்​துறை​யின​ரால் எந்​த​வித​மான சோதனையோ ஆய்வோ அல்​லது அமலாக்க நடவடிக்​கைகளோ மேற்​கொள்​ளப்​பட​வில்லை என்​பதை தெளிவுபடுத்​துகிறோம்" என கூறப்பட்டது.

    மேலும்,"கணக்​கில் வராத பணம் கொண்டு செல்​லப்​படு​வ​தாகக் கிடைத்த குறிப்​பிட்ட உளவுத் தகவல்​களின் அடிப்​படை​யில் ஸ்ரீபெரும்​புதூரின் சில பகு​தி​களில் வரு​மானவரித் துறை​யின​ரால் மேற்​கொள்​ளப்​பட்ட வரம்​புக்​குட்​பட்ட சரி​பார்ப்​புப் பணி​கள் முறை​யான அதி​காரி​களு​டன் ஒருங்​கிணைந்து மேற்​கொள்​ளப்​பட்​டன." என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.

    கூடு​தலாக தவறான தகவல்​களைப் பரப்​பியது மற்​றும் அரசுத் துறை மீது அவதூறான குற்​றச்​சாட்​டு​களைச் சுமத்​தி​யது தொடர்​பாக செல்வப்பெருந்தகை மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணை​யரிடம் புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சூழ்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்ததோடு, தனக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடந்ததாகக் கூறி சிசிடிவி காட்சி பதிவுகளையும் வெளியிட்டார்.

  14. மத்திய கிழக்கில் மேலும் ஓர் அமெரிக்க போர்க்கப்பல்

    அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (CENTCOM) கூற்றுப்படி, அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் மத்திய கிழக்கை நெருங்கி, சென்ட்காமின் பொறுப்புப் பகுதிக்குள் நுழைந்துள்ளது.

    இந்தியப் பெருங்கடலில் இந்த அணுசக்தியால் இயங்கும் சூப்பர் கேரியர் பயணிப்பதைக் காட்டும் ஒரு புகைப்படத்தை சென்ட்காம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    சில ஊடக அறிக்கைகள் குறிப்பிடுவது போல, இந்த விமானம் தாங்கி கப்பல் ஏற்கனவே அப்பகுதியில் உள்ள கப்பல்களுடன் ராணுவ நடவடிக்கைகளில் சேருமா அல்லது ஏதேனும் ஒரு கப்பலுக்கு பதிலாக வருமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    முன்னதாக, உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு, "செங்கடலில் தொடர்ந்து இயங்கி, அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படையின் கீழ் கடல்சார் பாதுகாப்பிற்கு ஆதரவளித்து வருகிறது" என்று சென்ட்காம் மற்றொரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

  15. பிரதமர் மோதியை 'தீவிரவாதி' என விமர்சித்த கார்கே - தேர்தல் ஆணைய நோட்டீசுக்கு காங்கிரஸ் பதில்

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோதி குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது.

    அந்த பதிலில், கார்கேவுக்கு 'பதிலளிக்க மிகக் குறைந்த நேரமே வழங்கப்பட்டது' என்று காங்கிரஸ் கூறியுள்ளது. "நோட்டீஸில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க காங்கிரஸ் தலைவருக்கு வழங்கப்பட்ட நேரம் மிகவும் குறைவு. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் பல தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக இருக்கும்போது, ​​இந்த நேரம் நிச்சயமாகப் போதாது," என்று காங்கிரஸ் கூறுகிறது.

    இதனுடன், தேர்தல் ஆணையம் 'வெறும் சம்பிரதாயங்களை மட்டுமே பின்பற்றுகிறது' என்று குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ், பதிலளிக்க கார்கேவுக்கு ஒரு வார கால அவகாசம் கோரியுள்ளது. "காங்கிரஸ் தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒரு வழியைக் கண்டுபிடிப்பதற்காக, (கார்கேவின்) இந்த வார்த்தைகள் எந்தச் சூழலில் கூறப்பட்டன என்பதற்கான தெளிவான மற்றும் சந்தேகத்திற்கு இடமில்லாத விளக்கம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாகத் தெரிகிறது," என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

    மேலும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராகத் தங்கள் கட்சி பல புகார்களை அளித்திருந்தும், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோதியை 'தீவிரவாதி' என்று கார்கே கூறியதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு, 24 மணி நேரத்திற்குள் தனது தரப்பை முன்வைக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    கார்கேவின் இந்த அறிக்கையை பல பாஜக தலைவர்கள் எதிர்த்தனர், அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ஒரு விளக்கத்தை வெளியிட்டார். அவர் கூறியதாவது, "நான் பிரதமருக்கு எதிராகப் பேசவில்லை. பிரதமர் தலைவர்களையும் வேட்பாளர்களையும் அச்சுறுத்துகிறார், இந்தச் சூழலில்தான் 'வரிப் பயங்கரவாதம்' நடக்கிறது என்று நான் கூறினேன்."

    "அமலாக்கத்துறை சோதனைகளை நடத்துகிறது, வருமான வரித்துறை சோதனைகளை நடத்துகிறது, சிபிஐ சோதனைகளை நடத்துகிறது. இந்த 'தீவிரவாதத்தை' பிரதமரே மேற்கொள்கிறார்.நான் அவரை தீவிரவாதி என்று அழைக்கவில்லை, மக்களைப் பயமுறுத்துவதற்காக அவர் அத்தகைய சூழலை உருவாக்குகிறார்." என்றார் கார்கே.

    "சோதனைகள் மூலம் எதிர்ப்பாளர்களை அமைதியாக்கி, தேர்தலில் அவர்களைத் தோற்கடிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். இதைத்தான் நான் சென்னையில் கூறினேன்," என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.

  16. இந்தியா பற்றிய டிரம்ப் கருத்துக்கு அமெரிக்க எம்.பி. எதிர்ப்பு

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் பகிர்ந்த இந்தியா குறித்த ஆட்சேபனைக்குரிய கருத்துக்கு அந்நாட்டிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது.

    ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இது 'டிரம்ப் வகிக்கும் பதவியின் கண்ணியத்திற்கு எதிரானது' என்று குறிப்பிட்டுள்ளார்.

    ராஜா கிருஷ்ணமூர்த்தி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஆவார். "இந்தியா மற்றும் குடியேறிகள் குறித்த இனவெறிக் கருத்துகளைப் பரப்பும் டொனால்ட் டிரம்பின் பதிவு கண்டிக்கத்தக்கது மற்றும் அவரது பதவியின் கண்ணியத்திற்குக் குறைவானது" என்று அவர் ட்விட்டரில் எழுதியுள்ளார்.

    "அவரது மொழி, லட்சக்கணக்கான இந்திய அமெரிக்கர்களையும் நமது மிக முக்கியமான உலகளாவிய கூட்டாளிகளில் ஒருவரையும் அவமதிப்பது மட்டுமல்லாமல், அமெரிக்காவை வாய்ப்புகள் மற்றும் புதுமைகளின் பூமியாக மாற்றிய விழுமியங்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது."

    "அரசியல் ஆதாயத்திற்காக" பிளவுகளைத் தூண்டுவதற்குப் பதிலாக, அமெரிக்கா இந்தியாவுடனான தனது கூட்டாண்மையை வலுப்படுத்தி, அதன் பன்முகத்தன்மையை மதிக்க வேண்டும் என்று ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

    பழமைவாத எழுத்தாளரும் வானொலி தொகுப்பாளருமான மைக்கேல் சாவேஜ் எழுதிய சர்ச்சைக்குரிய கருத்தை டிரம்ப் பகிர்ந்திருந்தார். அதில் அவர் இந்தியாவை 'பூமியில் உள்ள நரகம்' என்று வர்ணித்திருந்தார்.

    இந்த அறிக்கை இந்தியாவில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகமும் வியாழக்கிழமை இரவு இது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டது.

    வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "நாங்கள் அந்த அறிக்கையையும், அதைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதரகத்தின் பதிலையும் பார்த்தோம். இந்தக் கருத்துகள் தெளிவாகத் தவறான தகவல்களைக் கொண்டவை மற்றும் பொருத்தமற்றவை. நீண்டகாலமாகப் பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில் அமைந்துள்ள இந்திய-அமெரிக்க உறவுகளின் உண்மையான தன்மையை அவை நிச்சயமாகப் பிரதிபலிக்கவில்லை" என்றார்.

  17. இரானுக்கு எதிராக அணு ஆயுதம்? - டிரம்ப் கூறிய பதில் என்ன?

    இரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த கேள்வியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "முட்டாள்தனமானது" என்று கூறியுள்ளார்.

    இரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டேன் என்றும், இதுபோன்ற 'முட்டாள்தனமான' கேள்விகள் கேட்கப்படக்கூடாது என்றும் அவர் கூறினார்.

    ஓவல் அலுவலகத்தில் ஊடகங்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ​​ஒரு பத்திரிகையாளர் அவரிடம், 'இரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவீர்களா?' என்று கேட்டார்.

    அதற்கு டிரம்ப், "இல்லை. ஏன் இப்படி ஒரு முட்டாள்தனமான கேள்வி கேட்கப்படுகிறது?" என்று பதிலளித்தார். மேலும் அவர், "அணு ஆயுதங்கள் இல்லாமலேயே இரானை முற்றிலுமாக அழித்துவிட்ட நிலையில், நான் ஏன் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும்?" என்றும் கூறினார்.

    'அணு ஆயுதங்களைப் பயன்படுத்த யாருக்கும் ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது' என்றும் டிரம்ப் கூறினார்.

  18. வணக்கம் நேயர்களே!

    நேரலைப் பக்கத்தில் இன்று (24-04-2026) பிற்பகல் வரையிலும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை சுருக்கமாக தருவது சங்கரநாராயணன் சுடலை