‘விஜய் பேச்சால் அடம் பிடிக்கும் குழந்தை’- விசிக நிர்வாகி புகார்

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி பாலகிருஷ்ணன் என்பவர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
‘பிஞ்சு குழந்தைகளின் மனநிலையை தேர்தல் ஆதாயத்திற்காக விஜய் தவறாகப் பயன்படுத்துகிறார்’ என அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த விசிக நிர்வாகி பாலகிருஷ்ணன் மாநகர காவல் ஆணையாளரிடம் அளித்துள்ள புகாரில், “கடந்த ஏப்ரல் 21ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற இறுதிக்கட்ட பரப்புரைக் கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய் ‘குழந்தைகள் சாக்லேட் கேட்டு அடம்பிடிப்பது போல, பெற்றோரிடம் அடம்பிடித்து தனக்கு வாக்களிக்கச் சொல்ல வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார்.”
“அரசியல் முதிர்ச்சியற்ற இத்தகைய தூண்டுதல், பிஞ்சு குழந்தைகளின் மனநிலையை தேர்தல் ஆதாயத்திற்காக தவறாக பயன்படுத்துவதாகும். இதனால் எனது 5 வயது மகன் விஜய்க்கு வாக்களிக்குமாறு என்னிடம் அடம்பிடித்தான். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தபோது, மன உளைச்சலுக்கு ஆளாகி அழுதும், உணவைத் தவிர்த்தும் த.வெ.க-விற்கு ஓட்டு போடுமாறு பிடிவாதம் பிடித்தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இதனால் அக்கட்சிக்கு தான் ஓட்டு போட்டதாக பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், எனக்கு மிகுந்த மன வேதனை ஏற்பட்டது. ‘விஜய் மாமா ஜெயிக்கவில்லை என்றால் நான் சாப்பிட மாட்டேன்’ என எனது மகன் தொடர்ந்து அழுது வருகிறான்.” என்றும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
“தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ள விஜயின் செயலால், பல குழந்தைகள் உளவியல் சிக்கல்களை சந்திக்கின்றனர். இது தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர் பேசிய வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும்” என்று பாலகிருஷ்ணன் தனது புகாரில் கூறியுள்ளார்.
‘இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அனுப்பியுள்ளேன். நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நீதிமன்றத்தை நாடுவேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
















