அமெரிக்காவில் 10 விஞ்ஞானிகள் அடுத்தடுத்து கொலையுண்ட அல்லது காணாமல் போனதன் பின்னணி

பட மூலாதாரம், CalTech
- எழுதியவர், ஷீலா ஃபிளின்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
அமெரிக்காவில் முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிகளுடன் தொடர்புடைய குறைந்தது 10 பேர் காணாமல் போனது அல்லது மரணமடைந்தது சதிக் கோட்பாட்டாளர்களின் கருதுகோள்களுக்கு காரணமாகியுள்ளன. அத்தோடு அமெரிக்காவின் பெடரல் புலனாய்வாளர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது. ஆனால், துயரத்தில் இருக்கும் உறவினர்களுக்கு, இந்த ஆதாரமற்ற யூகங்கள் அனைத்தும் "அருவருப்பானவை".
கார்ல் கிரில்மேயர் தனது கொலை குறித்த சதி கோட்பாடுகளைக் கண்டு "சிரிப்பார்" என்கிறார் அவரது மனைவி.
"இது முற்றிலும் முட்டாள்தனம் என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் லூயிஸ் கிரில்மேயர். "அதாவது, உண்மைகள் வெளிப்படையாக உள்ளன."
அவரது 67 வயதான கணவர், கடந்த பிப்ரவரியில் கலிபோர்னியாவின் லியானோவில் உள்ள அவர்களது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கிரில்மேயரை கொன்றதாக கூறப்படும், 29 வயதான உள்ளூர் நபரான ஃப்ரெடி ஸ்னைடர் மீது கொலை மற்றும் கொள்ளை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
கொலையாளி கைது செய்யப்பட்ட போதிலும், அதி ரகசிய ஆய்வகங்கள் அல்லது அறிவியல் பணிகளுடன் தொடர்புடைய சுமார் 10 பேரின் இறப்புகள் மற்றும் காணாமல் போனது குறித்த சதி கோட்பாடுகளில் கிரில்மேயர் முக்கிய இடம் வகிக்கிறார்.
அவர்கள் பெரும்பாலும் "காணாமல் போன விஞ்ஞானிகள்" என்று ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறார்கள், ஆனால் இந்தப் பட்டியலில் ஒரு நிர்வாக உதவியாளர், ஒரு விமானப்படை ஜெனரல், ஒரு பொறியாளர் மற்றும் ஒரு காப்பாளர் ஆகியோர் அடங்குவர்; இது புறக்கோள்களை ஆராய்வது முதல் மருந்துத் தயாரிப்பு வரை பல துறைகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த வழக்குகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருக்கலாம் என்று 'இணையத் துப்பறிவாளர்கள்' கூறுகின்றனர். வேறு சில நிறுவப்பட்ட விளக்கங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகள் இருந்தபோதிலும், இது அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழுவை எஃப்.பி.ஐ விசாரணையை அறிவிக்கத் தூண்டியுள்ளது.
தவறான பழிவாங்கும் சதித்திட்டத்தில் தனது கணவர் குறிவைக்கப்பட்டதாக கிரில்மேயரின் மனைவி நம்புகிறார்.
கொலை நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, ஓநாய் வேட்டையாடுவதாகக் கூறி ஒருவர் "துப்பாக்கியுடன் [அவர்களுடைய நிலத்தில்] சுற்றித் திரிந்தார்". தனது கணவர் அந்த சந்தேக நபரை அங்கிருந்து வெளியேற்றி அருகிலுள்ள மேட்டை நோக்கி போகச் செய்ததாக அவர் கூறுகிறார்.
அந்த நபர் அருகிலுள்ள மற்ற வீடுகளிலும் தொல்லைகள் செய்து வந்ததாகவும், ஒரு குடியிருப்புவாசி 911-க்கு அழைத்ததாகவும் அவர் கூறுகிறார். கிரில்மேயர் அந்த அழைப்பைச் செய்யவில்லை, ஆனால் அந்த நபரின் நடத்தை "மோசமடைந்து வந்ததால்", அவர் தனது கணவர் மீது பழி சுமத்தியதாக அவரது மனைவி நம்புகிறார்.
கிரில்மேயர் கொல்லப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த நபர் ஒரு பேஸ்பால் மட்டையுடன் திரும்பி வந்ததாகவும், ஆனால் அன்று எந்தப் பிரச்னையும் செய்யாமல் சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார்.
பின்னர் அவர் பிப்ரவரி 16 அன்று திரும்பி வந்து, கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தின் (California Institute of Technology) வானியல் மற்றும் கோள் அறிவியலுக்கான IPAC (Infrared Processing and Analysis Center) அறிவியல் மற்றும் தரவு மையத்தில் பணியாற்றிய புகழ்பெற்ற வானியலாளரான கிரில்மேயரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
"கார்ல்தான் 911-க்கு அழைத்தார் என்று நினைத்து, அவர் பழிவாங்க வந்ததாக நாங்கள் நம்புகிறோம்," என்கிறார் லூயிஸ்.
"பூமியில் வாழ்ந்தவர்களிலேயே தனது மறைந்த கணவர் மிகவும் நல்ல மனிதராக இருந்திருக்கலாம்" என்றும் அவர் கூறுகிறார்.
இந்த மரணங்களைச் சுற்றியுள்ள ஆதாரமற்ற கோட்பாடுகளை ஒரு தரப்பினர் இன்னும் ஊக்குவிக்கின்றனர்.
"அமெரிக்காவின் உயர் ரகசிய அனுமதி பெற்ற விண்வெளி மற்றும் அணுசக்தித் துறைப் பணியாளர்கள் சுமார் 700,000 பேர்," என்று அறிவியல் எழுத்தாளரும், புலனாய்வாளரும், போலி அறிவியலை அம்பலப்படுத்துபவருமான மிக் வெஸ்ட் ஏப்ரல் 16 அன்று தனது சப்ஸ்டாக்கில் (Substack) எழுதினார்.
"22 மாதங்களுக்கான சாதாரண இறப்பு விகிதம் சுமார் 4,000 மரணங்கள், சுமார் 70 கொலைகள் மற்றும் சுமார் 180 தற்கொலைகளைக் கணிக்கிறது. இந்தப் பட்டியலில் 10 மட்டுமே உள்ளன... மரணங்கள் உண்மையானவை. குடும்பங்களின் துக்கம் உண்மையானது. ஆனால், இதில் கூறப்படும் போக்கு உண்மையானதல்ல." என்கிறார் அவர்.
லூயிஸ் கிரில்மேயர் கூறுகையில், இந்த மரணங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருக்கலாம் என்ற ஊகங்களைக் கேட்டுத் தன் கணவர் "சிரிப்பார்" என்றாலும், சதி கோட்பாடுகளை முறியடிப்பதற்காக அவர் "புள்ளிவிவரங்களைப் பற்றியும் பேசுவார்" என்றார்.
காணாமல் போனவர்களில் பிரபலமான ஒருவரான வில்லியம் நீல் மெக்கஸ்லாண்ட் ஓய்வுபெற்ற விமானப்படை ஜெனரல் ஆவார். இவரது மனைவி, நியூ மெக்சிகோவில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து பிப்ரவரி 27 அன்று அவர் காணாமல் போன ஒரு வாரத்திற்குப் பிறகு, "பரவி வரும் சில தவறான தகவல்களை நீக்கும்" நோக்குடன் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டார்.

பட மூலாதாரம், Bernalillo County Sheriff's Office
குறிப்பிட்ட நாளில் மருத்துவரைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பிய மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, தன் கணவர் காணாமல் போனதைக் கண்டறிந்த சூசன் மெக்கஸ்லாண்ட் வில்கர்சன், தனது 911 அழைப்பில்கூட, "அவரது கணவர், தான் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கத் திட்டமிட்டிருக்க வேண்டும் என்பதற்கான சில அறிகுறிகள்" இருப்பதாகக் கூறினார்.
அவர் தனது தொலைபேசியை அணைத்துவிட்டு அங்கேயே விட்டுவிட்டதாகவும், ஆனால் தனது துப்பாக்கியை எடுத்துச் சென்றதாகவும் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்தார்; அவர் "பொதுவாக" ஆயுதம் வைத்திருப்பதில்லை.
தனது கணவர் சமீபகாலமாக பதற்றம், குறுகிய கால நினைவாற்றல் இழப்பு மற்றும் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்ததாகவும், "தனது மூளையும் உடலும் தொடர்ந்து மோசமடைந்தால், அப்படி வாழ விரும்பவில்லை" என்று அவர் கூறி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு வாரம் கழித்து முகநூலில், மெக்கஸ்லாண்ட் தனது விமானப்படைப் பணியின் போது "மிகவும் இரகசியமான சில திட்டங்கள் மற்றும் தகவல்களை" அணுகும் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும், அவர் "கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார், அதன் பிறகு மிகவும் பொதுவான பாதுகாப்பு அனுமதிகளை மட்டுமே பெற்றுள்ளார். அவரிடமிருந்து மிகவும் காலாவதியான இரகசியங்களைப் பெறுவதற்காக அவர் கடத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது" என்று அவர் எழுதினார்.
பிளிங்க்-182 இசைக்குழுவின் முன்னணிப் பாடகர் டாம் டி லாங்கின் 'டு தி ஸ்டார்ஸ்' அமைப்பு, பறக்கும் தட்டுகள் மற்றும் பிற விஷயங்களை விசாரிக்க முயன்றபோது, மெக்கஸ்லாண்ட் ஊதியம் பெறாத ஆலோசகராகப் பணியாற்றினார் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
ஆனால், "ரைட்-பேட் (Wright-Patt) விமானப்படைத் தளத்தில் சேமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ரோஸ்வெல் விபத்தின் வேற்றுக்கிரகவாசிகளின் உடல்கள் மற்றும் சிதைவுகள் குறித்து என் கணவர் கூடுதலாக ஏதும் அறிந்திருக்கவில்லை," என்று சூசன் எழுதியிருந்தார்.
அவர் ஒஹாயோவில் உள்ள ரைட்-பேட்டர்சன் விமானப்படைத் தளத்தைக் குறிப்பிட்டார். 1947-ல் நியூ மெக்சிகோவின் ரோஸ்வெல்லில் ஒரு பண்ணையாளர் கண்டெடுத்த அசாதாரணமான குப்பைகளிலிருந்து கிடைத்த வேற்றுக்கிரகவாசிகளின் எச்சங்கள் அந்தத் தளத்தில்தான் இறுதியாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய கதைகள் ஊகிக்கின்றன.
சதி கோட்பாடுகளை வறட்டுத்தனமானவை என்று குறிப்பிட்ட சூசன், "அவரைப் பற்றிய எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், வேற்றுக்கிரகவாசிகள் அவரைத் தாய் விண்கலத்திற்கு இழுத்துச் சென்றிருக்கலாம் என்பதே சிறந்த கருதுகோளாக இருக்கலாம்" என்று விமர்சன தொனியுடன் எழுதினார்.
"இருப்பினும், மலைகளுக்கு மேலே ஒரு தாய் விண்கலம் வட்டமிட்டதாக எந்த தகவலும் பதிவாகவில்லை." என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.
மெக்கஸ்லாண்ட் காணாமல் போவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பு, நியூ மெக்சிகோவில் ஆனால் 135 மைல்கள் (220 கி.மீ) தொலைவில் உள்ள டாவோஸில், லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகத்தின் நிர்வாக உதவியாளர் ஒருவர் காணாமல் போனார்.
மெலிசா காசியாஸின் குடும்பத்தினரும் இந்த வழக்கு குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர் . ஆனால் மீண்டும் தங்கள் அன்புக்குரியவர் வேண்டுமென்றே பிரிந்து சென்றதாகக் குறிப்பிட்டனர். அவர்களின் கருத்துகள், அவரது வழக்கு மீதான சதிக் கோட்பாட்டாளர்களின் தீவிர ஆர்வத்தைக் குறைக்க சிறிதும் உதவவில்லை.
"நீ இல்லாமல் இந்த ஆறு வாரங்கள் எங்கள் வாழ்க்கையின் மிகவும் கடினமான வாரங்களாக இருந்தன," என்று அவரது கணவர் மார்க் காசியாஸ் ஆகஸ்ட் 2025-ல். ஃபேஸ்புக்கில் எழுதினார்.
"சியராவும் நானும் உன்னைப் பற்றி நாளுக்கு நாள் அதிகமாகக் கவலைப்படுகிறோம், நீ நலமாக இருக்கிறாய் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் நீ ஏன் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை." என அந்த பதிவு கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
கிரில்மேயரின் வழக்கைப் போன்ற மற்ற வழக்குகளுக்கும் தெளிவான விளக்கங்கள் இருந்தன.
எம்ஐடி இயற்பியலாளர் நூனோ லூரேரோ, தனது முன்னாள் வகுப்புத் தோழரால் கொலை செய்யப்பட்டார். அவர் பிரவுன் பல்கலைக்கழகத்தில் செய்த வேறு சில கொலைகளுக்காகவும் கைது செய்யப்பட்டார். அதிகாரிகளால் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட காணொளிப் பதிவுகளில் அந்த சந்தேக நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மற்றொரு ஆராய்ச்சியாளரின் தாயார் இறந்த உடனேயே, அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். சில மணி நேர இடைவெளியில் தனது தாய், தந்தை ஆகிய இருவரையும் இழந்த அடுத்த மாதமே, அவர் தனது வீட்டிலிருந்து காணாமல் போனார்.
பின்னர் அவரது உடல் ஒரு ஏரியில் கண்டெடுக்கப்பட்டது. ஒரே குழந்தையான தனது கணவர், பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு எவ்வளவு ஆதரவற்றவராக உணர்ந்தார் என்பதை அவரது மனைவி அமெரிக்க ஊடகங்களிடம் கூறினார்.
2023ஆம் ஆண்டின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, மற்றொரு விஞ்ஞானி 59 வயதில் "இதய நோயால்" இறந்தார்.
இந்த விளக்கங்கள் சதி கோட்பாட்டாளர்களுக்கு எந்தத் தடையையும் ஏற்படுத்தவில்லை என்று லூயிஸ் கிரில்மேயர் கூறுகிறார். தனது கருத்தைக் கேட்டு "அவர்களில் பலர் தன்னைத் தொடர்பு கொண்டதாகவும்" அவர் குறிப்பிடுகிறார்.
இந்த ஊகங்கள் "அன்புக்குரியவர்களின் நினைவுகளை இழிவுபடுத்துகின்றன" என்று அவர் கூறுகிறார்.
பிபிசியால் தொடர்பு கொள்ளப்பட்ட உயிரிழந்த அல்லது காணாமல் போன மற்றவர்களின் உறவினர்கள் இந்த ஊகங்களை "மோசமானவை" மற்றும் "அருவருப்பானவை" என்று அழைத்தனர், இது குடும்பங்களின் துயரத்தை மேலும் அதிகரித்தது - ஆனால், இந்தக் கதைகளுக்கு மேலும் நேரம் கொடுக்க விரும்பாததால், அவர்கள் அதிகாரப்பூர்வமாகப் பேச விரும்பவில்லை.
வானியற்பியல் வகுப்பில் தன் கணவரைச் சந்தித்த லூயிஸ் கிரில்மேயரைப் பொறுத்தவரை, உலகம் அவரது முன்னோடியான அறிவியல் பணிகளைப் பற்றி மட்டுமல்ல, அவரது கனிவான மற்றும் தாராளமான குணத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.
"உதவி தேவைப்பட்ட அனைவருக்கும் அவர் உதவினார்," என்று அவர் கூறுகிறார். "உதாரணமாக, அவர் மோசமான இரு கார் விபத்துகளில் சிக்கினார்... ஆனால் அவர் வழக்குத் தொடுப்பதில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அதாவது, அது மற்றவர்களின் தவறு, அதனால் அவர் வழக்குத் தொடுக்கவே மாட்டார்." என்கிறார்.
அவரது இரங்கல் செய்தியில், கிரில்மேயர் "ஒரு விமானியாக, தனது வீட்டில் சொந்தமாக வைத்துப் பராமரித்த சிறிய விமானங்கள் மற்றும் கிளைடர்களை ஓட்டினார்; அவருடன் பறக்கக் கோரும் அழைப்புகளை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்" என்று நினைவுகூரப்பட்டார்.
நண்பர்களும் சக ஊழியர்களும் அவர் வெளிப்புறச் சூழலையும், டிராக்டர் ஓட்டுவதையும், தனது வீட்டில் பழுதுபார்ப்பு மற்றும் பிற கட்டுமானப் பணிகளைச் செய்வதையும் விரும்பினார் என்றும், அங்கு அவர் பல தொலைநோக்கிகளுடன் ஒரு சிறிய வானியல் ஆய்வகத்தையும் வைத்திருந்தார் என்றும் நினைவு கூர்கிறார்கள்.
அவருக்கு "மிக உயர்ந்த ஒழுக்க நெறிகள் இருந்தன... அவர் சொன்னபடியே வாழ்ந்தார்" என்று அவரது மனைவி மேலும் கூறுகிறார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































