முதலமைச்சர் விஜய் அறிவித்த 3 திட்டங்களில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், TNDIPR
தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்றுள்ளார். அவருடன் ஒன்பது பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதும், விழா மேடையிலேயே முதலமைச்சராக அவர் தனது முதல் உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
குறிப்பாக, முதல் கையெழுத்தாக, தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.(500 யூனிட்டுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு)
அதைத் தொடர்ந்து, போதைப் பொருள் தடுப்புக்கு மாவட்டந்தோறும் சிறப்புப் படை அமைப்பது மற்றும் பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை அமைப்பது ஆகிய உத்தரவுகளையும் விஜய் பிறப்பித்தார்.
இந்த மூன்று உத்தரவுகளின் முக்கியத்துவம் என்ன? அவற்றை நடைமுறையில் அமல்படுத்துவதில் இருக்கும் சவால்கள் என்ன? இங்கு விரிவாகக் காண்போம்.
200 யூனிட் இலவச மின்சாரம் – நடைமுறையில் சாத்தியமா?
தமிழ்நாட்டில் இதுவரை அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அடுத்தடுத்த அரசுகளால் தொடரப்பட்டது. ஒவ்வொரு கட்டண சுழற்சியிலும், அதாவது ஒவ்வொரு இரு மாதங்களுக்கும், வீட்டு உபயோக நுகர்வோருக்கு 100 யூனிட் வரையிலான மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.
வாழ்வாதார செயல்பாடுகள், கல்வி, தகவல் தொடர்பு எனப் பல்வேறு விஷயங்களில் அத்தியாவசியமான ஒன்றாக மின்சாரம் இருக்கிறது. இதனால், சமூகக் கண்ணோட்டத்தில் இந்தத் திட்டம் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பல குடும்பங்களுக்கு உதவியுள்ளது.
பல தசாப்தங்களாக நலத்திட்ட அரசியல் மையப் பங்காற்றி வரும் தமிழக அரசியல் கலாசாரத்தின் பிரதிபலிப்பாக இருந்து வந்த இந்தத் திட்டம், தற்போது விஜய் தலைமையில் அமைந்துள்ள தவெக ஆட்சியில், மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய், அவரது முதல் கையெழுத்தின் மூலம், 500 யூனிட் வரையிலான மின்சாரத்தை நுகரும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தவெக தனது தேர்தல் வாக்குறுதியில், "தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்" என்று அறிவித்திருந்தது. ஆனால், அக்கட்சித் தலைவர் விஜய் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி பேசியபோது ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் என்று அறிவித்துள்ளது. இப்படியாக இருவேறு தருணங்களில் வெவ்வேறு விதமாக வாக்குறுதி அறிவிக்கப்பட்டதும், அது நிறைவேற்றப்படும் நேரத்திலும் அவை இரண்டுக்கும் மாறாக இருப்பதும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன.
அதேவேளையில், 500 யூனிட்டுகளுக்கும் அதிகமான மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு, 100 யூனிட் இலவச மின்சாரம் என்ற ஏற்கெனவே அமலில் இருக்கும் திட்டத்தின் பயன்கள் தொடர்ந்து இருக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், TNDIPR
இப்போது புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் நடைமுறையில் எந்த அளவுக்குச் சாத்தியப்படும் என்பதும் அது எவ்வளவு தூரம் நீடிக்கும் என்பதும் இன்னும் கேள்விக்குறியாகவே இருப்பதாக தமிழ்நாடு மின்வாரியத்தின் முன்னாள் பொறியாளர் சா.காந்தி கூறுகிறார்.
மேலும், "நூறு யூனிட் இலவசம் என்பதே தமிழ்நாடு மின் வாரியத்திற்குப் பெரிய நிதி நெருக்கடியை விளைவித்துள்ளது. இந்தச் சூழலில், இப்போது உள்ள விலை நிலவரத்தைப் பொறுத்துப் பார்த்தால், 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாகக் கொடுப்பது என்பது எதார்த்தமான அணுகுமுறையா என்று கேட்டால் இல்லை," என்று கூறினார் அவர்.
அதுமட்டுமின்றி, 200 யூனிட் என்பது தேவையற்றது எனக் கூறும் அவர், "பெருவாரியான மக்கள் அதற்கும் மிகக் குறைவான மின்சாரத்தையே நுகர்கின்றனர். இப்போது வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கே அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் 11,000 கோடி வரை செலவாகிறது.
அதுமட்டுமின்றி, நூறு யூனிட் இலவசமாக வழங்குவதால் ஏற்படும் நஷ்டத்தை தானே 100% ஏற்றுக்கொள்வதாகக் கூறி, 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு அதை ஏற்றுக்கொண்டு வருகிறது. இப்போது அதைவிட இரண்டு மடங்கு வழங்கும்போது அதற்கான செலவு மேலதிகமாகக் கூடும். அதை எப்படித் தொடர்ந்து கொடுக்கப் போகிறார்கள்?" என்று கேள்வி எழுப்பினார் காந்தி.
அதோடு, "இது இவர்கள் நினைப்பது போல் அவ்வளவு சாதாரணமானது இல்லை. இவ்வளவு அதிகமானம் மின்சாரத்தை இலவசமாகக் கொடுக்கும் அளவுக்குத் தற்போதைய நிதிநிலை இல்லை. இதன் காரணமாக, வேறு முதலீடுகளில் கவனம் செலுத்த முடியாத சிக்கலான நிலை ஏற்படலாம்," எனவும் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், TNDIPR
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை
முதலமைச்சராக விஜய் கையெழுத்திட்ட இரண்டாவது உத்தரவு, 'சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை' குறித்தானது.
அதாவது, "பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், போதுமான பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய 'சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை' மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும். இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று இது தொடர்பான தமிழ்நாடு அரசின் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
"பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் எந்தவொரு அரசும் மிகத் தீவிரமாகச் செயல்படவே முயல்கின்றது. யாருமே தங்களுடைய ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பின்றி இருப்பதை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், அதற்கான கண்காணிப்புப் பணிகள் எந்த அளவுக்குத் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன என்பதே இங்கு முக்கியப் பிரச்னையாக உள்ளது.
'சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை' என ஒரு தனிப் படையை உருவாக்கினாலும், அவர்கள் உள்ளூர் மட்ட அளவில் எவ்வாறு செயல்படப் போகிறார்கள், எந்த அளவுக்கு நேரடியாக மக்களிடம் செல்லப் போகிறார்கள் என்பதே இதன் செயல்திறனை முடிவு செய்யும்," என்று கூறினார் ஓய்வுபெற்ற காவல்துறை உயரதிகாரியான கருணாநிதி.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தரவுகளைப் பார்க்கையில், அதில் கணிசமான அளவில், குற்றம் சாட்டப்படுபவர்கள் கஞ்சா, மது போன்ற போதைக்கு அடிமையாகி இருப்பதைப் புரிந்து கொள்ள முடிவாதக் கூறிய கருணாநிதி, "இந்தப் புழக்கத்தின் விளைவாகவே பல வளரிளம் பருவத்தினர்கூட இத்தகைய குற்றங்களில் சிக்குகின்றனர். எனவே, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, போதைப் புழக்கத்தை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்" என்று குறிப்பிட்டார்.
அது மட்டுமின்றி, காவல் நிலையங்கள் ஒரு குற்றம் நடந்துவிட்டால் துரிதமாகச் செயல்பட்டு, குற்றம் புரிந்தவர்களைக் கைது செய்வதில் திறம்படச் செயலாற்றுவது மட்டுமின்றி, குற்றங்கள் நடப்பதற்கு முன்பே அதை முன்கணித்து தடுப்பதற்குரிய வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்துகிறார்.

பட மூலாதாரம், TNDIPR
அதற்கு அவர் கூறும் செயல்முறை 'சமூகக்காவல்பணி' ( Community Policing ). "தற்போது காவலர் பணிக்கு வருபவர்களே அதிகம் படித்தவர்களாகவும் திறமையானவர்களாகவும் இருப்பதால், அவர்களின் திறமை சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அவர்கள் பணியாற்றும் நிலையத்தின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனியே அவர்களால் கண்காணிக்கப்பட்டு தகவல் சேகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் குற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பது குறித்தான எந்தத் தகவலும் நிலைய பொறுப்பதிகாரிக்கு முன்னதாகத் தெரிந்து தடுக்க இயலும்."
அதுகுறித்து விரிவாக விளக்கிய அவர், "உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் சில இளைஞர்கள் தொடர்ச்சியாக மது, கஞ்சா போன்றவற்றைப் பயன்படுத்துவதும், பொது இடங்களில் பெண்களைத் தவறான கண்ணோட்டத்தில் நோட்டமிட்டுக் கொண்டிருப்பதும் நீடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஒருவேளை, காவல்துறை சீரான கண்காணிப்பில் ஈடுபட்டு வந்து, இவர்களின் நடவடிக்கைகளைக் கவனித்தால், உடனடியாகத் தலையிட்டு, அவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனைகள் கிடைப்பதையோ அல்லது தேவைப்படும் நடவடிக்கைகளையோ மேற்கொள்ளலாம்.
அதேபோல, தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப வன்முறை பிரச்னை இருப்பதாகத் தகவல் கிடைத்தால், உடனே அவர்களை அழைத்துப் பேசி, பிரச்னையை சரி செய்வதற்கான அணுகுமுறைகளைக் கையாளலாம். இவையெல்லாம், பெண்களுக்கு எதிராக ஒரு குற்றம் நடப்பதற்கான வாய்ப்பு இருந்தாலும், அது தவிர்க்கப்படுவதற்கான சூழலை சமூகத்தில் ஏற்படுத்திக் கொடுக்கும்," என்கிறார் கருணாநிதி.
எனவே, பல்வேறு மட்டங்களில் தனித்தனியாகப் பல பிரிவுகளை உருவாக்குவதைவிட, காவல்துறையில் ஏற்கெனவே இருக்கும் திறமை வாய்ந்த பணியாளர்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான் முதன்மையான தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், TNDIPR
மாவட்டந்தோறும் போதைப் பொருள் தடுப்புப் படை
"தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், 37 காவல் நிலையங்களும், 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்களும் என மொத்தம் 65 போதைப் பொருட்கள் தடுப்புப் படை அமைக்கப்படும்" என்று விஜய் பதவியேற்றவுடன் மூன்றாவது உத்தரவாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது நிலவும் சூழல் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் காவல்துறை உயரதிகாரி ஒருவர், "தமிழ்நாட்டில் கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி, பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள், மாணவர்கள் தங்குமிடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் கஞ்சா மற்றும் செயற்கை போதைப் பொருட்களின் சில்லறை விற்பனை தடையின்றி நடைபெற்று வருகிறது.
கூடுதலாக, 'டார்க் வெப்' உள்ளிட்ட சில சட்டவிரோத இணையவழி வர்த்தகம் மூலமாகவும் போதைப் பொருட்களின் விற்பனை மாநிலத்தில் நடக்கிறது," என்று குறிப்பிட்டார். இருப்பினும் இந்தத் தகவலை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
மறுபுறம், கடந்த 2025ஆம் ஆண்டில், சமூக கல்வி நிறுவனம் என்ற தன்னார்வ அமைப்பு தமிழ்நாட்டில் சென்னை, திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டது. அதில், மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்களின் பயன்பாடு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, 168 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களிடம் நடத்தப்பட்ட அந்தக் கணக்கெடுப்பில், 9% மாணவர்கள், மது, கூல்-லிப், புகையிலை, கஞ்சா ஆகியவற்றைப் பயன்படுத்துவது தெரிய வந்தது.

பட மூலாதாரம், TNDIPR
இத்தகைய சூழ்நிலையில், "போதைப் பொருட்களைத் தடுப்பதற்காக ஏற்கெனவே தமிழக காவல்துறையில் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. எனவே, புதிதாக ஒரு தனிப்பிரிவை உருவாக்குவது மட்டுமே போதைப் பொருட்களின் பரவலையும் பயன்பாட்டையும் தடுத்துவிடாது.
இதுவரை இருக்கும் அமைப்புகளிலேயே போதுமான ஒருங்கிணைப்பும் செயல்திறன் மிக்க தலைமைகளும் இல்லாமல் இருப்பதுதான், குற்றங்கள் தொடர்ந்து நீடிப்பதற்குக் காரணம். அதைச் சரிசெய்வதற்கு திறன்வாய்ந்த அதிகாரிகளை நியமித்து, அவர்களை முறையாக நிர்வகிக்க வைத்து, தீவிரமான செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வழிவகுக்க வேண்டும்," என்றும் அந்த முன்னாள் காவல்துறை உயரதிகாரி விளக்கினார்.
இது தொடர்பாகப் பேசிய ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான கருணாநிதி, "காவல்துறையில் பல்வேறு பிரிவுகளை உருவாக்குவதைவிட மிக முக்கியமானது, கீழ்மட்ட அளவிலான கட்டமைப்பை வலுப்படுத்துதான். அதுவே தலையாய பிரச்னை.
ஏனெனில், மாவட்டந்தோறும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு என ஒன்றை உருவாக்கி வைத்தாலும், நேரடியாக களத்தில் அதிகமாகச் செயலாற்றப் போவது அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்கள்தான். ஆகவே, அவற்றை முறையாக ஒழுங்குபடுத்தி, தங்கள் பகுதியில் எந்த வீட்டில் யார் இருக்கிறார்கள், எப்படிப்பட்ட செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பது வரை தகவல்களைச் சேகரிக்கும் வகையிலான வலுவான உளவுக் கட்டமைப்பை உருவாக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
அவரது கூற்றுப்படி, பல்வேறு தனிப்பிரிவுகளை உருவாக்குவதைவிட திறமை வாய்ந்த அதிகாரிகளின் தலைமையில் கீழ்மட்டத்தில் தொடங்கி அனைத்து மட்டங்களிலும் சீரான, வலுவான கட்டமைப்பு இருப்பதை உறுதி செய்வதே இப்போது மிகவும் அவசியமானது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































