நேபாளம்: கோல்டிலாக்ஸ் மண்டலம் என்றால் என்ன? சுரங்கப் பாதை மீட்புப் பணியில் அது ஏன் முக்கியம்?

கபீர் மகர்ஜன்

பட மூலாதாரம், Prime Minister's Secretariat

படக்குறிப்பு, ஒன்பது நாட்கள் நிலத்தடியில் சிக்கியிருந்த கபீர் மகர்ஜன், திரிசூலி 3ஏ சுரங்கப் பாதையில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் சில தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம்.)

நேபாளம் திரிசூலி 3ஏ தளத்தில் இருந்து இருவர் உயிருடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, மூன்றாவது நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த நேபாள மின்சார வாரியத்தின் துணை மேலாளர் சுரேஷ் ராவத், சடலத்தின் நிலை மோசமாக இருப்பதால் அது யார் என்பதை அடையாளம் காண்பது கடினமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பிபிசியிடம் கூறுகையில், "சுரங்கப் பாதைக்குள் கண்டெடுக்கப்பட்ட சடலம் உப்பியுள்ளது, அதனால் அவர் யார் என்பதை அடையாளம் காண முடியவில்லை" என்றார்.

மேலும், "சுரங்கப் பாதையில் இருந்து தப்ப முயன்றபோது வெள்ள நீரில் சிக்கி அவர் உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது" என்றும் அவர் தெரிவித்தார். சுரங்கப் பாதையில் இருந்து குறைந்தபட்சம் வேறு 39 பேரையேனும் பத்திரமாக மீட்க முடியுமெனத் தாங்கள் நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணி அதிகாரிகள் கூறியது என்ன?

சுரங்கப் பாதையில் இருந்து நீர்மின் நிலையப் பணியாளர்கள் இருவர் உயிருடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, நேபாள ராணுவம் தற்போதைய மீட்புப் பணிகள் குறித்த நிலவரத்தை செய்தியாளர்களுக்கு விளக்கியுள்ளது.

ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, தனது குழுவினர் இதுவரை 400க்கும் மேற்பட்ட நேபாள நாட்டினரையும், 270 வெளிநாட்டினரையும் மீட்டுள்ளதாகக் கர்னல் ஜபிந்திர ரெஷ்மி தெரிவித்துள்ளார்.

கர்னல் ஜபிந்திர ரெஷ்மி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கர்னல் ஜபிந்திர ரெஷ்மி

"பள்ளத்தாக்கில் உள்ள 7 சுரங்கப் பாதைகளில் ராணுவத்தினர் களமிறக்கப்பட்டு இருப்பதாகவும், வேறு 19 பகுதிகளில் தரைவழிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும்" அவர் கூறினார்.

"முன்னதாக இருவர் உயிருடன் மீட்கப்பட்ட திரிசூலி 3ஏ சுரங்கப் பாதையில் மேலும் பல தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றும் கர்னல் ரெஷ்மி உறுதிப்படுத்தினார்.

"மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சுரங்கப் பாதைகளுக்குள் சேறும் பாறைகளும் தேங்கியிருப்பதால் உள்ளே நுழைவது கடினமாக இருப்பதாகவும், மீட்புப் படையினர் நிலத்தடிக்குச் செல்வதற்காகத் துளைகளைத் தோண்டி வழிகளை ஏற்படுத்தி வருகின்றனர்" என்றும் அவர் தெரிவித்தார்.

மீட்புப் படையினர் சந்திக்கும் சவால்கள் என்ன?

கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பல கனரக இயந்திரங்களை அடித்துச் சென்றுவிட்டதால், சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள அடைப்புகளை அகற்றுவது மீட்புப் படையினருக்கு மிகவும் கடினமாகி இருப்பதாக நேபாள மின் உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மழை எச்சரிக்கை மற்றும் கனரக இயந்திரங்கள் பற்றாக்குறையால் மீட்புப் படையினர் திணறல்

பட மூலாதாரம், Nepal Army Handout

படக்குறிப்பு, மழை எச்சரிக்கை மற்றும் கனரக இயந்திரங்கள் பற்றாக்குறையால் மீட்புப் படையினர் திணறல்

நேபாள சுதந்திர மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் உத்தம் ப்லோன் லாமா, பிபிசி நியூஸ்டே-வுக்கு அளித்த பேட்டியில், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) இருவர் மீட்கப்பட்டது "நல்ல செய்தி" என்றும், இது "மீட்புப் படையினருக்கு மேலும் ஊக்கமளிக்கும்" என்றும் கூறியுள்ளார்.

அதோடு, "வெள்ள நீர்மட்டம் இப்போதும் மிக அதிகமாகவே இருப்பதாகவும்" லாமா குறிப்பிடுகிறார். "மேலும்... வேறு கட்டங்களிலோ அல்லது அடுத்தடுத்த முறையோ வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால்தான் அனைத்துப் பணிகளும் தாமதமாகி வருகின்றன" எனவும் குறிப்பிட்டார்.

சுரங்கப் பாதைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழையால் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என்று நேபாள அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நிபுணர்கள் குறிப்பிடும் 'கோல்டிலாக்ஸ் மண்டலம்'

நேபாள அரசாங்கத்திற்கு மீட்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த ஆலோசனைகளை வழங்கி வரும் சுரங்கப் பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ், மீட்புக் குழுவினர் இதுவரை சுரங்கப் பாதையில் 60 மீட்டர் தூரத்தைக் கடந்துள்ளதாகவும், இன்னும் 150 மீட்டர் தூரம் செல்ல வேண்டி இருப்பதாகவும் பிபிசி நியூஸ் ஆசிய செய்தியாளரிடம் அவர் தெரிவித்தார்.

சுரங்கப்பாதைக்குள் 'கோல்டிலாக்ஸ் மண்டலத்தை' நோக்கி முன்னேறும் மீட்புப் படையினர்

பட மூலாதாரம், EPA/Shutterstock

படக்குறிப்பு, சுரங்கப் பாதைக்குள் 'கோல்டிலாக்ஸ் மண்டலத்தை' நோக்கி முன்னேறும் மீட்புப் படையினர்

சுரங்கப் பாதையின் முடிவில் "கோல்டிலாக்ஸ் மண்டலம்" என்று அவர் குறிப்பிடும் பகுதி உள்ளது, இது "உயிர் பிழைத்திருப்பதற்கு மிகவும் சாதகமான சூழலைக் கொண்டது."

இங்குதான் மேலும் பல உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். இன்னும் கிட்டத்தட்ட 40 பேர் வரை சுரங்கப் பாதையில் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மின் உற்பத்தி நிலையத்தின் மிக மேல் மட்டமே இந்த "கோல்டிலாக்ஸ் மண்டலம்". அங்கு உயிர் பிழைத்தவர்கள் இருப்பதற்கான சில வெற்றிடங்கள் உள்ளன.

"நாங்கள் இருவரை வெளியே கொண்டு வந்துள்ளோம். நாம் சூதாட்ட விடுதியில் விளையாடிக் கொண்டிருந்தால், சிலர் இப்போதே கிளம்பிவிடலாம் என்று கூறுவார்கள், ஆனால் நாங்களோ 'ஆட்டம் இன்னும் முடியவில்லை, களத்தில் இறங்கி அடித்துப் பார்ப்போம்' என்கிறோம்" என்று டிக்ஸ் கூறினார்.

நேபாள சுரங்கத்திற்குள் மீட்புப்பணிகளை மேற்கொள்ளும் மீட்புப்படையினர்.

பட மூலாதாரம், Prime Minister's Secretariat

படக்குறிப்பு, நேபாள சுரங்கத்திற்குள் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் மீட்புப் படையினர்

அழிவின் அளவு 'நம்ப முடியாதது' - நேபாளத்தின் ஐ.நா. தலைவர் கருத்து

நேபாள வெள்ளத்தில் தப்பியவர்களைச் சென்றடைவது மிகப் பெரிய சவாலாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

சாலைகள் சேதமடைந்துள்ளதால், தனிமைப்படுத்தப்பட்ட இமயமலை சார்ந்த மக்களைச் சென்றடைய சரக்கு ட்ரோன் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களைப் பயன்படுத்துவது குறித்து உதவி வழங்கும் அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன.

"பேரிழிவின் அளவும், அழிவின் அளவும் நம்ப முடியாத அளவுக்கு மிகப் பெரிதாக இருப்பதாக" நேபாளத்திற்கான ஐ.நா. தலைவர் லிலா பீட்டர்ஸ் யாகியா தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு