You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'சாம்சன் சதம், அகீல் 4 விக்கெட்டுகள்' – 103 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை சிஎஸ்கே வீழ்த்தியது எப்படி?
ஐபிஎல் 2026 சீசனின் 33வது போட்டியில் இன்று (ஏப்ரல் 23) மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ எனப்படும் இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
5 முறை ஐபிஎல் சாம்பியன்களாக இந்த இரு அணிகளும், இந்த சீசனில் இதற்கு முன் 6 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. அதனால் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்குமே முக்கியமானதாக இருந்தது
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப் பெரிய தோல்வி இதுதான்.
இதன் மூலம் இந்த சீசனில் தங்களுடைய மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சிஎஸ்கே அதிரடி தொடக்கம்
சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தப் போட்டியில் நல்ல தொடக்கம் கிடைத்தது. ஹர்திக் பாண்டியா வீசிய 2வது ஓவரில் 19 ரன்கள் கிடைத்தது. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அந்த ஓவரில் தலா 1 பவுண்டரியும், 1 சிக்ஸரும் அடித்தார்.
இந்தத் தொடரில் பெரிய ஸ்கோர் எடுக்க ருதுராஜ் கெய்க்வாட் தவறிவரும் நிலையில், இந்த தொடக்கம் அதை மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூன்றாவது ஓவரில் அல்லா கசன்ஃபர் வீசிய பந்தை தூக்கி அடித்து திலக் வர்மாவிடம் கேட்ச் ஆனார் கெய்க்வாட். அவர் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.
கெய்க்வாட் அவுட் ஆனாலும், சாம்சன் தன் அதிரடியைக் குறைக்கவில்லை. ஹர்திக் வீசிய ஆட்டத்தின் நான்காவது ஓவரிலும் 19 ரன்கள் வந்தது. அதன்பிறகு பும்ரா வீசிய 5வது ஓவரிலும் 13 ரன்கள் எடுக்கப்பட்டன. அதனால் 5 ஓவர்களிலேயே 64 ரன்கள் எடுத்துவிட்டது சிஎஸ்கே.
இந்நிலையில், மீண்டும் ஒரு ஸ்பின்னரை எடுத்துவந்து விக்கெட்டை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ். ஆறாவது ஓவரில் சர்ஃபராஸ் கான் விக்கெட்டை வீழ்த்தினார் சான்ட்னர். பவர்பிளேவை 73/2 என முடித்தது சிஎஸ்கே.
மும்பை கம்பேக்கும், சாம்சன் சதமும்
அந்த பவர்பிளேவுக்குப் பிறகு மெல்ல கம்பேக் கொடுக்கத் தொடங்கியது மும்பை இந்தியன்ஸ். மிடில் ஓவர்களில் வழக்கம்போல் விக்கெட்டுகளை இழந்து ரன்ரேட் சரிவதையும் கண்டது சூப்பர் கிங்ஸ். ஷிவம் துபே 5 ரன்களில் கசன்ஃபர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய டெவால் பிரெவிஸ் அதிரடியாகவே தன் இன்னிங்ஸை தொடங்கினார். சான்ட்னர் ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் விளாசிய அவர், அஷ்வனி குமார் வீசிய பவுன்சர்களையும் பவுண்டரிகளுக்கு அனுப்ப முயற்சி செய்தார். ஒரு பவுன்சரில் கேட்ச் வாய்ப்பு சென்றது. அதை நமன் திர் பயன்படுத்திக்கொள்ளத் தவறினார். அடுத்த பவுன்சரை பவுண்டரியாக்கினார் பிரெவிஸ். ஆனால், அந்த ஓவரின் கடைசி பந்தில் 'ஸ்லோயர் பவுன்சர்' வீசி பிரெவிஸை வெளியேற்றினார் அஷ்வனி. பிரெவிஸ் 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.
இதற்கு மத்தியில் 26 பந்துகளில் தன் அரைசதத்தை நிறைவு செய்தார் சாம்சன். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடி காட்டிய சாம்சன், மும்பை ஸ்பின்னர்கள் சற்று ஆதிக்கம் செலுத்தியம் சற்று நிதானம் காட்டினார். கடைசி வரை தான் ஆடுவது முக்கியம் என்பதை உணர்ந்து அவர் ஒரு முனையில் நிலைத்து நின்றார்.
சூப்பர் கிங்ஸின் மிடில் ஆர்டர் சற்று அனுபவம் குறைவாக இருந்ததால் சாம்சன் நிலைத்து நிற்பது முக்கியமானதாக இருந்தது. அதை உணர்ந்து ஆடியவர், வேகப்பந்துவீச்சாளர்கள் மீண்டும் பந்துவீச வந்ததும் அதிரடியைக் கையில் எடுத்தார். கடைசி கட்டத்தில் கிரிஷ் பகத் வீசிய 2 ஓவர்களில் தலா 3 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் விளாசிய அவர், கடைசிப் பந்தில் சதத்தை நிறைவு செய்தார். 54 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார் அவர்.
ஐபிஎல் தொடரில் சாம்சன் அடிக்கும் இரண்டாவது சதம் இது. இந்த சீசனில் விளையாடிய 7 போட்டிகளிலேயே 2 சதங்கள் அடித்துவிட்டார் அவர்.
மும்பை இந்தியன்ஸ் படுதோல்வி
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. அகீல் ஹொசைன் வீசிய முதல் ஓவரில் டேனிஷ் மலேவார் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்த ஓவரில் குவின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்தினார் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சவுத்ரி. சில தினங்களுக்கு முன்பு அவரது அம்மா இறந்திருந்த நிலையில், சூப்பர் கிங்ஸ் அணி அவருக்கு மரியாதை செய்யும் விதமாக இந்தப் போட்டியில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடியது. இப்படியொரு தருணத்தில் சிறப்பாகப் பந்துவீசி சூப்பர் கிங்ஸுக்கு நல்ல தொடக்கம் ஏற்படுத்திக்கொடுத்தார் முகேஷ்.
மூன்றாவது ஓவரில் மூன்றாவது விக்கெட்டையும் இழந்தது மும்பை. அகீல் பந்துவீச்சில் நமன் திர் போல்டாகி வெளியேறினார். அதனால் 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை இந்தியன்ஸ்.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா இருவரும் நிதானமாக விளையாடி ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். சிஎஸ்கே பௌலர்கள் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசியதால் அவர்களால் பெரிதாக ரன் சேர்க்க முடியவில்லை. அதனால், ஒருபக்கம் தேவைப்படும் ரன்ரேட் கூடிக்கொண்டே இருந்தது.
12வது ஓவரில் மீண்டும் பந்துவீச வந்த அகீல் ஹொசைன் அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். 37 ரன்கள் எடுத்திருந்த திலக் வர்மாவை அவர் வெளியேற்றினார்.
அடுத்த ஓவரில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட் இருவரையும் அடுத்தடுத்து பந்துகளில் வெளியேற்றினார் நூர் அஹமது. தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருக்க, சூர்யகுமார் யாதவும் பொறுமை இழந்து பெரிய ஷாட் அடிக்க நினைத்து 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் விக்கெட்டை அகீல் ஹொசைன் கைப்பற்றினார்.
இப்படி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் இறுதியில் 104 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் 103 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. சூப்பர் கிங்ஸ் பௌலர்களில் அதிகபட்சமாக அகீல் ஹொசைன் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்தப் போட்டியில் விளையாடிய வீரர்கள் யார்?
மும்பை இந்தியன்ஸ்
இந்தப் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸில் தெரிவித்தார்.
பிளேயிங் லெவன்: குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், மிட்செல் சான்ட்னர், அஷ்வனி குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, கிரிஷ் பகத், அல்லா கசன்ஃபர்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: வில் ஜேக்ஸ், ராஜ் பவா, ஷார்துல் தாக்கூர், டேனிஷ் மலேவார், மயங்க் ராவத்
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக டேனிஷ் மலேவார் இம்பேக்ட் வீரராகக் களமிறங்கினார். ஃபீல்டிங் செய்தபோது காயமடைந்த சான்ட்னருக்குப் பதிலாக ஷார்துல் தாக்கூர் 'கன்கஷன் சப்ஸ்டிட்யூட்' ஆகக் களமிறங்கி பேட்டிங் செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
கடந்த போட்டியில் காயமடைந்த ஆயுஷ் மாத்ரே இந்தத் தொடரிலிருந்தே விலகியிருக்கிறார். அந்த ஆட்டத்தில் விளையாடியிருந்த மேத்யூ ஷார்ட்டுக்குப் பதிலாக கார்த்திக் ஷர்மா சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கபப்ட்டிருக்கிறார்.
பிளேயிங் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), டெவால் பிரெவிஸ், ஷிவம் துபே, சர்ஃபராஸ் கான், கார்த்திக் ஷர்மா ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், நூர் அஹமது, முகேஷ் சவுத்ரி
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: அகீல் ஹொசைன், பிரஷாந்த் வீர், மேத்யூ ஷார்ட், மேட் ஹென்றி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அகீல் ஹொசைன் இம்பேக்ட் வீரராகக் களமிறங்கினார்.