புது செல்போன் வாங்க பழையதை எக்சேஞ்ச் செய்கிறீர்களா? கவனிக்க வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்

புது செல்போன் வாங்க பழையதை எக்சேஞ்ச் செய்கிறீர்களா? ஆபத்தை தவிர்க்க கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், கோடேரு ஸ்ராவணி
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் டியோ (iPhone Duo) உடன் ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் (18 Pro Max) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

தனது வாடிக்கையாளர்களுக்காக ஆப்பிள் நிறுவனம் 'டிரேட்-இன்' (trade-in) எனப்படும் பரிமாற்றத் திட்டத்தை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போனை மாற்றிக் கொண்டு, புதிய ஐபோனை வாங்கும் போது தள்ளுபடி அல்லது உடனடி கடன் (instant credit) பெறலாம்.

பழைய கைப்பேசியைக் கொடுத்து புதிதைப் பெறும் சலுகையை வழங்கும் ஒரே நிறுவனம் ஆப்பிள் மட்டும் அல்ல.

ஆனால், பழைய கைப்பேசியைத் திருப்பிக் கொடுக்கும்போது பயனர்கள் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும்?

உங்கள் பழைய மொபைல் போனை மாற்றுவதற்கு முன், உங்கள் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்துக் கவனத்தில் கொள்ள வேண்டும். மொபைல் போனில் நமது தனிப்பட்ட தகவல்கள் அடங்கியுள்ளன. நமது வங்கிக் கணக்குகள், கடன் மற்றும் பற்று அட்டை விவரங்கள், பிரவுசிங் வரலாறு, குக்கீ மற்றும் நமது இணையப் பயன்பாட்டுத் தகவல்கள் அதில் சேமிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தான நபர்களின் கைகளில் சிக்கினால், கடுமையான சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

அதனால்தான், பழைய போனை மாற்றும்போது உங்கள் தரவுகள் அனைத்தையும் நீக்கிவிட்டு போனை ஃபார்மேட் (format) செய்ய வேண்டும் என்று StellarInfo.co.in தனது வலைப்பதிவில் குறிப்பிடுகிறது.

இருப்பினும், நீக்கப்பட்ட மற்றும் ஃபார்மேட் செய்யப்பட்ட போனில் இருந்து தரவுகளை மீட்டெடுக்க முடியாததை உறுதி செய்ய அல்லது தரவுகளை முழுமையாகவும் நிரந்தரமாக நீக்கவும் தரவு நீக்குதல் மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

இதன் பொருள் என்னவென்றால், எந்தவொரு தரவு மீட்புக் கருவிகளையும் பயன்படுத்தி இந்தத் தரவை எப்போதுமே மீட்டெடுக்க முடியாது.

1. நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

புது செல்போன் வாங்க பழையதை எக்சேஞ்ச் செய்கிறீர்களா? ஆபத்தை தவிர்க்க கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்

பட மூலாதாரம், Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images

இந்தியாவில் பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் 'கேஷிஃபை' (Cashify) நிறுவனம், பழைய மொபைலை மாற்றும்போது பயனர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தனது இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது.

உங்கள் பழைய போனை பரிமாற்றத்திற்கு (exchange) வழங்குவதற்கு முன்பாகவோ அல்லது வேறு யாருக்காவது விற்பனை செய்வதற்கு முன்பாகவோ, உங்கள் மொபைலில் உள்ள அனைத்துத் தகவல்களையும் நகல் (backup) எடுப்பது மிகவும் நல்லது. நகல் எடுப்பது உங்கள் மொபைலில் வைரஸ் தாக்குதல்கள், மின் தடை மற்றும் பிற மனிதத் பிழைகளிலிருந்து உங்கள் தரவைப் பாதுகாக்கிறது. உங்கள் தொடர்புகள், குறுஞ்செய்திகள், அழைப்புப் பதிவுகள், புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் ஊடகக் கோப்புகளை நீங்கள் நகல் எடுக்க வேண்டும்.

நகல் எடுப்பதற்கு, மற்றொரு சாதனம் அல்லது வெளிப்புற ஹார்ட் டிரைவ் (external hard drive) மூலம் நீங்களே எடுக்கலாம். அல்லது கூகுள் டிரைவ் மற்றும் ஐகிளவுட் டிரைவ் போன்ற கிளவுட் சேமிப்பக சேவைகளைப் பயன்படுத்தலாம்.

2. ஃபேக்டரி ரீசெட்டிற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் போனை எக்சேஞ்ச் செய்யும் முன்பு செய்ய வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் ஃபேக்டரி ரீசெட் (factory reset) ஆகும். இதைச் செய்வதற்கு முன், உங்கள் மொபைலில் நீங்கள் உள்நுழைந்திருக்கும் அனைத்துக் கணக்குகளிலிருந்தும் வெற்றிகரமாக வெளியேறிவிட்டீர்கள் (log out) என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கடவுச்சொற்களை எங்கேனும் சேமித்து வைத்திருந்தால், அவற்றையும் நீக்கிவிட வேண்டும்.

உங்கள் போனை மீண்டும் விற்பனை செய்வதற்கு அல்லது மாற்றுவதற்கு முன்பு, கடவுச்சொற்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களின் அனைத்துத் தடயங்களும் அதிலிருந்து முழுமையாக அழிக்கப்பட வேண்டும்.

3. சிம் கார்டு மற்றும் மைக்ரோ-எஸ்டி கார்டை அகற்றுங்கள்

உங்கள் மொபைல் போனை விற்பனை செய்வதற்கு முன்பு, சிம் கார்டு மற்றும் எஸ்டி கார்டை கழற்றிவிட வேண்டும். எஸ்டி கார்டில்தான் உங்களது பல தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும் என்பதால், இது மிகவும் முக்கியமான ஒரு அம்சமாகும்.

சிம் கார்டில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் அடங்கியுள்ளன. எனவே அதை ஃபோனிலிருந்து அகற்றிவிட வேண்டும்.

எதிர்காலத்தில் அந்த சிம் கார்டைப் பயன்படுத்த நீங்கள் விரும்பவில்லை என்றால், அதை முழுமையாக அழித்துவிடுவது மிகவும் நல்லது.

4. தரவைப் பாதுகாப்பாக மறைத்தல் அவசியம்

பல பயனர்களுக்கு இந்த அம்சம் குறித்துத் தெரிவதில்லை. பொதுவாக, என்கிரிப்ஷன் எனப்படும் தரவு மறைப்பு முறை உங்கள் தரவுகளுக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.

இந்த என்கிரிப்ஷன் முறையானது உங்கள் கைப்பேசியில் உள்ள தரவுகளை எவராலும் படிக்க முடியாத வடிவமாக மாற்றுகிறது. ஒரு குறிப்பிட்ட பிரத்யேகத் திறவுகோல் உள்ளிட்டவற்றால் மட்டுமே அந்தத் தரவைப் பார்க்க முடியும். இது பயனர்கள் எந்தவொரு நிதிப் பரிவர்த்தனை மோசடிக்கும் ஆளாகாமல் தடுக்கிறது.

அங்கீகரிக்கப்படாத நபர்கள் உங்கள் தரவை அணுகுவதையும் இது தடுக்கிறது. சில சாதனங்களில் இந்த அம்சம் முன்னரே வழங்கப்பட்டிருக்கும், மற்ற சாதனங்களில் இந்த விருப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள உங்களை அனுமதிக்கிறது.

5. ஃபேக்டரி ரீசெட் (Factory Reset)

புது செல்போன் வாங்க பழையதை எக்சேஞ்ச் செய்கிறீர்களா? ஆபத்தை தவிர்க்க கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images

இத்தனை செயல்களையும் செய்த பிறகு, உங்கள் போனில் உள்ள அனைத்துத் தரவையும் நீங்கள் அழிக்க வேண்டியிருக்கும். சுருக்கமாகக் கூறுவதென்றால், அந்தச் சாதனத்தில் நீங்கள் செய்த அனைத்து நடவடிக்கைகளும் நீக்கப்பட்டுவிடும். இந்த அம்சத்தைச் செயல்படுத்துவது மிகவும் எளிதான மற்றும் விரைவான செயலாகும். இந்த வசதி போனின் அமைப்புகளில் கிடைக்கக்கூடியதாக உள்ளது.

  • உங்கள் சாதனத்தில் உள்ள செட்டிங்ஸ் (Settings) பகுதிக்குச் செல்ல வேண்டும்.
  • கூடுதல் செட்டிங்ஸில் உள்ள காப்புப் பிரதி (backup) அல்லது ரீசெட் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • 'அனைத்துத் தரவையும் அழி' (Erase All Data) மற்றும் 'அனைத்தையும் மீட்டமை' (Reset All Settings) என்பதைக் கிளிக் செய்யவும்.

6. தரவு நீக்கப்படவில்லை என்றால் என்ன ஆபத்து?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பழைய கைப்பேசிகளில், நீங்கள் சிம் கார்டைக் கழற்றாவிட்டாலும், தரவுகளை நீக்காவிட்டாலும் அல்லது போனை ஃபார்மேட் செய்யாவிட்டாலும் கூட பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

உங்களது புகைப்படங்கள், காணொளிகள், தொலைபேசி எண்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றவர்களின் கைகளில் சிக்கக்கூடும். இதனால் இணையவழி குற்றவாளிகள் பல்வேறு மோசடிகளிலும் அச்சுறுத்தல்களிலும் ஈடுபட வழிவகுக்கும். ஒவ்வொரு போனுக்கும் ஐஎம்இஐ (IMEI) எண் இருக்கும். ஏதேனும் சைபர் மோசடி நிகழும் போது, காவல்துறை அதற்கேற்பவே விசாரணை நடத்தும். அப்போது நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடலாம்.

அதனால்தான், பழைய போனை மாற்றிவிட்டுப் புதிய போனை வாங்கிய பிறகு, சிம் கார்டைப் புதிய போனுடன் இணைக்க வேண்டும் என்று தொழில்நுட்ப வல்லுநர் நல்லமுத்து ஸ்ரீதர் கூறியுள்ளார். அதன் பிறகு, நமது சிம் கார்டு பழைய ஐஎம்இஐ எண்ணுடன் இணைந்திருக்காது. சம்பவம் நடந்த காலத்தின் அடிப்படையில்தான் காவல்துறை விசாரணை நடத்தும் என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் எண் பழைய ஐஎம்இஐ எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைத் டிராய் இணையதளத்திலும் நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

7. முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும்?

புது செல்போன் வாங்க பழையதை எக்சேஞ்ச் செய்கிறீர்களா? ஆபத்தை தவிர்க்க கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images

பழைய போனை மாற்றும்போது ஃபேக்டரி ரீசெட் செய்த பிறகு, மெமரியை முழுமையாகக் காலியாக்க வேண்டும் என்று ஸ்ரீதர் கூறினார். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த மெமரியை எவராலும் மீட்டெடுக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

சிலர் தரவு மீட்பு மென்பொருளை (data recovery software) பயன்படுத்தி பழைய போன்களில் இருந்து தரவுகளை வெளியே எடுப்பதாகவும், ஆனால் ஜீரோ ஃபில்லிங் செய்தால் அவ்வாறு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

தரவு என்கிரிப்ஷன் (data encryption) விருப்பத்தைப் பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது.

சில மொபைல் போன்களின் செட்டிங்ஸில் இந்த அம்சம் இருக்கும் என்றும், மற்றவற்றில் அதனைச் சேர்த்துக்கொள்ள வேண்டிவரும் என்றும் அவர் கூறினார்.

போன் மாடலைப் பொறுத்து நிறுவனங்கள் இந்த தரவு என்கிரிப்ஷன் வசதியை வழங்குகின்றன என்றார். இதனைச் செய்யும்போது, ஃபேக்டரி ரீசெட்டிற்குப் பிறகு அனைத்தும் பயனற்றதாக (junk data) மாறிவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.

உங்கள் பழைய மொபைல் போனை யாருடன் பரிமாறிக் கொள்கிறீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும், நம்பகமான வழிகளில் (source) செய்தால் பழைய மொபைலுக்குச் சற்று குறைவான மதிப்பு கிடைக்கலாம், அதே நேரத்தில் சிறிய நிறுவனங்களிடம் செய்தால் சற்று அதிகமான மதிப்பு கிடைக்கலாம் என்றும் அவர் கூறினார். நம்பகமான வழிகளில் மட்டுமே உங்கள் போனைப் பரிமாறிக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு