புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக மாற்றிய கும்பல் - இந்த வைரல் நடிகை மீண்டது எப்படி?

பட மூலாதாரம், Sarang Gupta/Hindustan Times via Getty Images
- எழுதியவர், ஷுபாங்கி மிஸ்ரா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
மராத்தி மொழி நடிகை கிரிஜா ஓக்கின் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்று வைரலான பிறகு, அவர் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானார். அவரை 'நேஷனல் க்ரஷ்' என இணையத்தில் பலரும் அழைக்கத் தொடங்கினார்கள்.
ஆனால், அதன் பிறகு அவருடைய புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட விதம் மற்றும் அதன் தீவிரம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மும்பையில் அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், கிரிஜா இது குறித்து விரிவாகப் பேசினார்.
இது குறித்து அவர் கூறுகையில், "எனக்கு ஒரு புகைப்படம் அனுப்பப்பட்டது. அதில் அரைகுறை ஆடையுடன் இருந்த ஒரு பெண்ணின் உடலில் எனது முகம் ஒட்டப்பட்டிருந்தது. அதேபோல் அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஒரு ஆணும் அருகில் அமர்ந்தது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. அதிலும் அந்த ஆணின் உடலில் எனது 12 வயது மகனின் முகம் பொருத்தப்பட்டிருந்தது. அது மிகவும் மோசமானது, அதைப் பார்த்ததும் எனக்கு மிகுந்த கோபம் வந்தது" என்று தெரிவித்தார்.
இந்த புகைப்படத்தைப் பார்த்த கிரிஜா, 2025 டிசம்பரில் ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பிறகு, அவருடைய பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நீக்கப்பட்டன.
கிரிஜா ஓக் கூறுகையில், "இந்த ஏஐ எனப்படும் கருவி யார் கைகளிலும் கிடைக்கக்கூடும், இது மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது" என்றார்.

பட மூலாதாரம், Areeba Ansari
மராத்தி திரையுலகின் பிரபல நடிகையான கிரிஜா ஓக், 'தாரே ஜமீன் பர்', 'ஷோர் இன் த சிட்டி', 'ஜவான்' போன்ற இந்தித் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
மும்பையின் கார்ட்டர் சாலையில் நாங்கள் அவரைச் சந்தித்தோம், அங்கு மக்கள் அவரை செல்ஃபி எடுக்க நிறுத்தினார்கள், கிரிஜாவும் புன்னகையுடன் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
2025 நவம்பர் மாதத்தில் சௌரப் திவேதியுடன் பாட்காஸ்ட் தொடரில் பங்கேற்ற பிறகு, கிரிஜா இணையத்தில் வைரலானார். நீல நிறப் புடவையில் அமர்ந்து தன்னம்பிக்கையுடன் கிரிஜா பேசியதை மக்கள் மிகவும் ரசித்தனர்.
கிரிஜாவிற்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், மறுபுறம் சிலர் அவரது புகைப்படங்களை திரித்து இணையத்தில் பதிவிட்டனர். இணையத்திற்கு புதிய முகம் ஒன்று கிடைத்துவிட்டது, அதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம் என கிரிஜா கூறுகிறார்.
"நான் புடவை அணிந்திருந்த சில புகைப்படங்கள் திடீரென்று பிகினி அணிந்திருப்பது போல மாற்றப்பட்டன அல்லது எனது மேலாடை நீக்கப்பட்டது போல சித்திரிக்கப்பட்டன. இதுபோன்ற புகைப்படங்களில் அனிமேஷன்களையும் சேர்த்துள்ளனர், உதாரணமாக நான் குனிந்து நாக்கைத் துருத்துவது போன்றோ, அல்லது திடீரென்று ஒரு ஆண் அந்தப் புகைப்படத்திற்குள் வந்து நாங்கள் முத்தமிடுவது போன்றோ என்னுடைய புகைப்படங்கள் மாற்றப்பட்டுள்ளது."
இதுபோன்ற பல பதிவுகளை கிரிஜா புறக்கணித்தார், ஆனால் தனது மகனுடன் இணைந்திருப்பது போன்ற ஒரு புகைப்படம் அவருக்கு வந்தபோது இதற்கு மேல் பொறுமையாக இருக்கக்கூடாது என்று முடிவு செய்த அவர், மும்பையின் ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பிறகு அவரது பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலிருந்து நீக்கப்பட்டன.
செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு

பட மூலாதாரம், Reuters
செயற்கை நுண்ணறிவு உதவியுடன், படங்களை மாற்றியமைக்க 'டீப்ஃபேக்' (deepfakes) போன்ற பல்வேறு கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இப்போது நம் அனைவரது வாழ்விலும் ஏஐ முக்கியமானதொரு அங்கமாகிவிட்டது. இது நமக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது என்று கருதப்பட்டாலும், அது தவறாகப் பயன்படுத்தப்படுவதையும், மக்கள் அனைவரும் அதன் இலக்காக இருப்பதையும் காண முடிகிறது.
குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆட்சேபனைக்குரிய மற்றும் ஆபாசமான வீடியோக்களை உருவாக்கவும், அவற்றை இணையத்தில் பரப்பவும் சிலர் ஏஐ கருவிகளை பயன்படுத்துகின்றனர். இதில் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் இயங்கும் டீப்ஃபேக் போன்ற பல கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
சமீபத்தில் தமிழ்நாட்டில் மாணவிகளின் போலி வீடியோக்கள் உருவாக்கப்பட்ட சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு மாணவன் சில மாணவிகளின் புகைப்படங்களை ஏஐ மூலம் உருமாற்றி இணையத்தில் பதிவிட்டிருந்தான். இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்த காவல்துறையினர் மாணவனைக் கைது செய்தனர்.
அதேபோல், பழிவாங்குவதற்காகவும் மக்கள் இதுபோன்ற வீடியோக்களை உருவாக்குகிறார்கள். அஸ்ஸாமில் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியது.
பிபிசி அறிக்கையின்படி, ஒரு பெண்ணின் முன்னாள் காதலன் பழிவாங்கும் நோக்கில், ஏஐ மூலம் அந்தப் பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக உருமாற்றி இணையத்தில் பதிவிட்டு பல லட்ச ரூபாய் சம்பாதித்தான்.
புகைப்படங்களை ஆபாசமாக மாற்ற உதவும் அப்ளிகேஷன்கள் தற்போது மிகவும் சாதாரணமாகிவிட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
2025-ஆம் ஆண்டில் தேசிய சைபர் குற்றப் பதிவேட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 76,657 வழக்குகள் பதிவாகியுள்ளன, இதுவே 2024-இல் 48,335-ஆக இருந்தது என்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
'ரதி ஃபவுண்டேஷன்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் உமா சுப்ரமணியனின் கருத்துப்படி, பெரிய நகரங்கள் மட்டுமின்றி சிறிய நகரங்களிலும் இந்தத் தவறான போக்கு பரவியுள்ளது. அந்த நகரங்களில் உள்ள பெண்களும் டீப்ஃபேக் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இந்த நிறுவனம் இணையவழி பாலின வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்காகப் பணியாற்றி வருகிறது.
உமா சுப்ரமணியன் கூறுகையில், 2024-2025 காலகட்டத்தில் அவர்களது உதவி மையத்திற்கு வந்த அழைப்புகளில், பத்தில் ஓர் அழைப்பு ஏஐ உள்ளடக்கங்கள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்வதற்காகவே வந்ததாகத் தெரிவித்தார்.
வாரணாசியில் இதுபோன்று ஒரு சமூக ஊடகப் பிரபலத்தின் புகைப்படங்கள் ஏஐ மூலம் ஆபாசமாக மாற்றப்பட்டு வைரலாக்கப்பட்டன. இது குறித்து பேசிய வழக்கறிஞர் ராகவ் அவஸ்தி, அந்தப் பிரபலம் தனது சமூக ஊடகப் பக்கத்தில் எதைப் பதிவிட்டாலும், உடனே அவருக்கு எதிராக ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசப் புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டன என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Areeba Ansari
பிபிசியிடம் பேசிய ராகவ் அவஸ்தி, "இந்த வழக்கில் எங்களுக்கு காவல்துறை அல்லது மாவட்ட நீதிமன்றத்திடம் இருந்து நிவாரணம் கிடைக்கவில்லை. அதன் பிறகு நாங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து 'டைனமிக் இன்ஜங்ஷன்' கோரினோம். டைனமிக் இன்ஜங்ஷன் என்பது, புகாரளிக்கப்பட்ட புகைப்படங்களின் இணைப்புகளை நீக்குவது மட்டுமல்லாமல், அதேபோன்ற புகைப்படங்கள் வேறு எங்கு இருந்தாலும் அவற்றை நீக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிடுவதாகும்" என்றார்.
புகைப்படங்களை நீக்குவதற்கு இந்த வழக்கில் பெரும் சட்டப் போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது என்றும், ஆனால் பாதிப்படைந்த ஒவ்வொருவருக்கும் இத்தகையப் போராட்டத்தை நடத்துவதற்கான துணிச்சலும் வசதிகளும் இருக்கும் என்று சொல்ல முடியாது என்றும் ராகவ் அவஸ்தி குறிப்பிடுகிறார்.
ஏஐ மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்கள் பல நேரங்களில் பெண்களுக்கு எதிரான தரம் தாழ்ந்த அல்லது பிற்போக்குத்தனமான சிந்தனைகளை ஊக்குவிக்க முயல்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, பெண்கள் முன்னேறுவதற்குத் தங்கள் உடல் அழகை பயன்படுத்துகிறார்கள் என்பது போன்ற தவறான எண்ணங்களை இத்தகைய உள்ளடக்கங்கள் பரப்ப முயல்கின்றன.
இந்திய சமூக ஆராய்ச்சிக்கான மையத்தை (Centre for Social Research India) சேர்ந்த ஜோதி வதேரா கூறுகையில், "நாம் பல ஆண்டுகளாகப் போராடி வரும் சமூகப் பிரச்னைகள் மீண்டும் ஊக்கம் பெற்று வருகின்றன. ஒருவரின் வெண்மையான தோல் நிறம் அல்லது ஒரு குறிப்பிட்ட உடல்வாகு மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது போன்ற கருத்துகள் உள்ளடக்கங்களில் சித்திரிக்கப்படுகின்றன. மிக இளம் வயதுப் பெண்களும் சிறுமிகளும் கூட இணையவழி பாலியல் சுரண்டலுக்கு இலக்காகி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
பெண்களை உரிய நிவாரணம் பெறுவது எப்படி?

பட மூலாதாரம், Areeba Ansari
இணையவழி பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, 'டிஜிட்டல் சஹேலி' என்ற பெயரில் உதவி மையம் ஒன்றைத் தொடங்கியுள்ளதாக குருகிராம் காவல்துறை தெரிவித்துள்ளது.
24 மணி நேரமும் செயல்படும் இந்த உதவி மையத்தில் நான்கு பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உதவி மையத்திற்கு, முதல் மாதத்திலேயே நாடு முழுவதிலும் இருந்து 373 அழைப்புகள் வந்தன.
குருகிராம் காவல் ஆணையர் விகாஸ் அரோரா கூறுகையில், "பெரும்பாலான புகார்கள் 'செக்ஸ்டார்ஷன்' (தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை கசிய விடுவதாக மிரட்டி பணம் பறிப்பது) மற்றும் 'ரிவெஞ்ச் போர்ன்' (ஒருவரை அவமானப்படுத்த அல்லது பழிவாங்க அவரது தனிப்பட்ட காட்சிகளைப் பகிர்தல்) தொடர்பானவையாக உள்ளன. சில சமயங்களில் குற்றவாளியின் நோக்கம் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும் வழக்குகளும் வருகின்றன" என்றார்.
அத்தகைய ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், "ஒரு மேடையில் ஒரு விவிஐபி நின்றுகொண்டிருந்தார், அவருக்கு அருகில் ஒரு பெண்ணும் நின்றிருந்தார். ஆனால் ஏஐ-ஐப் பயன்படுத்தி அவர்கள் முத்தமிடுவது போலச் சித்திரிக்கப்பட்டிருந்தது. விசாரணையில், பீகாரின் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் இந்த வீடியோவை உருவாக்கியது தெரியவந்தது" என்று கூறினார்.
உங்களைப் பற்றிய இத்தகைய ஆபாசமான அல்லது தவறான பதிவுகள் இணையத்தில் வெளியாவதைக் கண்டால் பயப்படத் தேவையில்லை என்றும், சட்டப்பூர்வ உதவியை நாடுவது குறித்து யோசிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய வழக்குகளில் ஆதாரங்களைத் திரட்டுவது மிகவும் முக்கியமானது என்று உமா சுப்ரமணியன் கூறினார். அத்துடன், பின்வரும் வழிமுறையை கடைபிடித்து நிவாரணம் பெறலாம் என்று அவர் தெரிவித்தார்.
- ஏதேனும் டீப்ஃபேக் அல்லது ஆபாச பதிவு கண்ணில் பட்டால், உடனே அதன் ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கொள்ளுங்கள்
- அத்துடன் அந்தப் பதிவுகளின் அனைத்து இணைப்புகளையும் சேகரிக்கவும்.
- இத்தகைய பதிவுகள் இன்ஸ்டாகிராம் அல்லது வாட்ஸ்அப் போன்ற தளங்களில் காணப்பட்டால், நீங்களே அந்த தளங்களில் புகார் அளிக்கலாம்.
- தேசிய சைபர் குற்றப் பதிவேட்டில் உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் புகார் அளிக்கலாம்.
- அத்துடன் 1930 என்ற எண்ணிற்கும் அழைக்கலாம்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































