You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'திலக் வர்மா அதிரடி சதம்' – குஜராத்தை 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்தியது எப்படி?
குஜராத் - மும்பை இடையிலான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை அணி 199 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய குஜராத் அணி 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மும்பை அணிக்கு குயின்டன் டி காக், டேனிஷ் மாலேவார் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
ஆரம்பத்திலேயே மும்பை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 1.5 ஓவரில் டேனிஷ் மாலேவார் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு சரிவாக குயின்டன் டி காக் 13 ரன்களுக்கு அவுட் ஆனார்.
இதனால் அந்த அணி 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
ஒரு பக்கம் நமன் திர் நிதானமாக ரன்களை குவிக்க, மற்றொரு பக்கம் சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 15 ரன்களுக்கு ரபாடா பந்தில் போல்ட் ஆனார்.
நல்ல கூட்டணி கிடைக்காமல் தவித்த அணிக்கு நமன் திர், திலக் வர்மா சற்று ஆறுதல் அளித்தனர்.
இருவரும் சேர்ந்து 52 ரன்கள் எடுத்த நிலையில், நமன் திர் 45 ரன்களுக்கு அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மாவுக்கு பக்கபலமாக இருந்ததால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
இந்த கூட்டணியில் ஹர்திக் பாண்ட்யா அதிகம் ஆடாத நிலையில், பெரும்பாலான பந்துகளை திலக் வர்மா எதிர்கொண்டு பந்துகளை விளாசினார்.
இருவரும் சேர்ந்து 38 பந்துகளில் 81 ரன்கள் குவித்த நிலையில், அதில் ஹர்திக் பாண்ட்யா எடுத்தது வெறும் 15 ரன்கள் மட்டுமே.
ஹர்திக் பாண்ட்யா அவுட் ஆனபோதும் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டம் நிற்கவில்லை.
45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் குவித்த திலக் வர்மா, மும்பை அணி 20 ஓவர்களில் 199 ரன்கள் சேர்க்க உதவினார்.
குஜராத் ஆட்டம் எப்படி?
குஜராத் அணிக்கு சாய் சுதர்ஷன் மற்றும் ஜோஸ் பட்லர் களம் இறங்கினர். முதல் பந்திலேயே சாய் சுதர்ஷன் விக்கெட்டை வீழ்த்தி பும்ரா அசத்தினார்.
ஹர்திக் பாண்ட்யா வீசிய ஓவரில் ஜோஸ் பட்லர் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அடுத்து வந்த சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சற்று நிதானமாக ரன்களை சேர்த்த நிலையில், இந்த கூட்டணி அதிக நேரம் நீடிக்கவில்லை.
கில் 14 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 6 ரன்களுக்கு அவுட் ஆனதால், குஜராத் அணி நல்ல கூட்டணியின்றி திணறியது.
ராகுல் திவெட்டியாவும், ஷாருக் கானும் கூட்டணி அமைத்த நிலையில், அவர்கள் 24 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.
ராகுல் திவெட்டியா 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஷாருக் கான் 17 ரன்களுக்கு அவுட் ஆனார்.
இதனால் அந்த அணி 85 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்தது.
அதன் பிறகு வந்த ரஷித் கான், ரபாடா, சிராஜ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், குஜராத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு