ஆர்டெமிஸ்-2: நிலவில் நிரந்தர தளம் அமைக்க வலுவான அடித்தளம் போடப்பட்டதா?

நாசாவின் விரிவான ஆர்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட ஆர்டெமிஸ்-2 திட்டம், விண்வெளி ஆய்வில் ஒரு முக்கியமான வரலாற்றுப் புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 1960கள் மற்றும் 1970களின் அப்பல்லோ திட்டங்களைப் போலன்றி, ஆர்டெமிஸ் பயணங்கள் நிலவை அடைவது மட்டுமின்றி, விண்வெளியில் நிலையான ஓர் எதிர்காலத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட ஐந்து பயணங்களில் இரண்டாவதுதான் ஆர்டெமிஸ்-2. இந்தத் திட்டத்தின் கீழ் ஓரியன் விண்கலம், 10 நாள் விண்வெளிப் பயணமாகக் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியன்று புறப்பட்டு திட்டமிட்டவாறு பயணத்தை நிறைவு செய்து, இந்திய நேரப்படி ஏப்ரல் 11ம் தேதி அதிகாலையில் பூமிக்கு திரும்பினர்.
ஆர்டெமிஸ்-2 திட்டக் குழுவின் தலைவர் ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளோவர், மிஷன் சிறப்புப் பணியாளர் கிறிஸ்டினா கோக், மற்றொரு சிறப்புப் பணியாளர் ஜெரமி ஹான்சன் ஆகியோர் இந்த வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டனர்.
நாசாவின் சக்தி வாய்ந்த விண்வெளி ஏவுதல் அமைப்பான எஸ்.எல்.எஸ் ராக்கெட்டை பயன்படுத்தி ஓரியன் விண்கலம் ஏவப்பட்டது.
ஆர்டெமிஸ்-2 செய்த பரிசோதனைகள்
ஆர்டெமிஸ்-2 பயணத்தின் தனித்துவமான சாதனைகளில் ஒன்றாக, அதன் பயண தூரம் கூறப்படுகிறது.
ஓரியன் விண்கலம், பூமியில் இருந்து சுமார் நான்கு லட்சம் கிலோமீட்டர் அதிகமான தூரத்தை அடைந்து, மனித ஆய்வில் ஒரு புதிய எல்லையைக் குறித்துள்ளது.
இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மனிதர்களை விண்வெளியின் ஆழத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் நவீன விண்கலங்களின் திறனை பரிசோதிக்கிறது.
அரை நூற்றாண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட அப்பல்லோ பயணங்கள் பூமியில் இருந்து காணக்கூடிய நிலவின் மேற்பரப்பில் கவனம் செலுத்திய நிலையில், பூமியில் இருந்து ஒருபோதும் நேரடியாகக் காணப்படாத நிலவின் தொலைதூரப் பகுதியைக் காணும் அரிய வாய்ப்பு ஆர்டெமிஸ்-2 குழுவினருக்குக் கிடைத்தது.
இது நிலவின் நிலவியல் குறித்த மனிதர்களின் புரிதலை விரிவுபடுத்தி, எதிர்கால தரையிறங்கும் பயணங்களுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் தேவையான தரவுகளை வழங்குகிறது.
ஆர்டெமிஸ்-2 பயணத்தின் முக்கிய நோக்கம், எதிர்கால நிலவுப் பயணங்களுக்கு உதவும் வகையில், ஓரியன் விண்கலத்தின் செயல் அமைப்புகளை விண்வெளிச் சூழல்களில் பரிசோதிப்பதே என்று கூறுகிறார் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வாரன்.
ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டம் என்றழைக்கப்படும் எஸ்.எல்.எஸ் ஏவூர்தி அமைப்பு சரியாகச் செயல்படுகிறதா, ஓரியன் விண்கலம் சரியாக இயங்குகிறதா என்பன போன்றவற்றைச் சோதிப்பதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்று விளக்கினார் அவர்.
மேலும், ஓரியன் விண்கலத்தின் ஆக்சிஜன் வழங்கல் மற்றும் கார்பன் டை ஆக்சைடு நீக்கம், கதிர்வீச்சுப் பாதுகாப்பு, வெப்பக் கட்டுப்பாட்டு அமைப்புகள், பூமியுடனான தொடர்பு அமைப்புகள் அனைத்தும் சரியாகச் செயல்படுகின்றனவா என்பதைப் பரிசோதிப்பதே இந்தப் பயணத்தின் முதன்மையான நோக்கம் என்று கூறினார்.

பட மூலாதாரம், NASA/Reid Wiseman
ஆர்டெமிஸ் திட்டத்தின் ஐந்து கட்டங்கள்
ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் மொத்தமாக ஐந்து பயணத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டாவது பயணமாக ஆர்டெமிஸ்-2 குழுவினர் நிலவைச் சுற்றி வந்து, பூமியை நோக்கித் திரும்புகின்றனர்.
முதல் கட்டத்தில் எஸ்.எல்.எஸ் ஏவூர்தி அமைப்பு, ஓரியன் விண்கலம் ஆகியவற்றை மனிதர்கள் இல்லாமல் பரிசோதித்து, நிலவைச் சுற்றி வலம் வர வைத்து, அதன் செயல்திறனை உறுதி செய்வதாகும்.
"அது வெற்றிகரமாக முடிந்த பின்னர் ஆர்டெமிஸ்-2 முன்னெடுக்கப்பட்டது. அதில், மனிதர்களை நிலவைச் சுற்றிப் பயணிக்க வைத்து, ஓரியன் விண்கல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு அடுத்தபடியாக, ஓரியன் விண்கலம் ஏவப்படுவதோடு, மற்றுமொரு எஸ்.எல்.எஸ் ஏவூர்தி மனிதர்களற்ற ஒரு தரையிறங்கி கலனை ஏவும். அதை நிலாவுக்கு கொண்டு சென்று, விண்வெளியில் ஓரியன் விண்கலமும் தரையிறங்கி கலனும் வெற்றிகரமாக ஒன்றாக இணைவதை உறுதி செய்ய வேண்டும். அதுவே ஆர்டெமிஸ்-3 திட்டத்தில் பரிசோதிக்கப்படும்," என்று விளக்கினார் முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன்.
ஆர்டெமிஸ்-3 திட்டத்தில் தரையிறங்கி கலன் நிலவில் தரையிறக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அதற்குப் பின்னர் நான்கு மற்றும் ஐந்தாவது திட்டங்களில்தான் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதுகுறித்துப் பேசியபோது, "மூன்றாவது திட்டத்தில் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி, மீண்டும் விண்வெளிக்குத் திரும்பி, விண்கலத்துடன் இணைவது போன்ற செயல்பாடுகள் பரிசோதிக்கப்பட்ட பிறகு, நான்கு மற்றும் ஐந்தாவது பயணங்களில்தான் மனிதர்கள் நிலவில் தரையிறங்குவார்கள். அதுவும்கூட ஒரு பரிசோதனைப் பயணமாகவே இருக்கும்," என்றார் அவர்.

நிலவில் தளம் அமைப்பதற்கான முதல் படி
நிபுணர்களின் கூற்றுப்படி, ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் நாசா திட்டமிட்டுள்ள ஐந்து பயணங்களுமே ஒரு பரிசோதனை முயற்சிதான். அவற்றில் வெற்றி கிடைப்பதன் அடிப்படையில் அடுத்தகட்டமாக நிலவில் நிரந்தரமாக ஒரு தளம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அத்தகைய பரிசோதனை முயற்சிகளில் ஒன்றான ஆர்டெமிஸ்-2, தொழில்நுட்ப சோதனைகளுக்கு அப்பாற்பட்டு, அதில் பயணிக்கும் குழுவினரின் உடல்நிலை விண்வெளிச் சூழலுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதையும் ஆய்வு செய்யவும் நாசாவுக்கு உதவுகிறது.
நாசாவின் கூற்றுப்படி, எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கிய நீண்டகால விண்வெளிப் பயணங்கள், விண்வெளி வீரர்களை அதிக காலத்திற்கு மிகக் கடுமையான சூழ்நிலைகளில் இருக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளக்கூடும். அதற்கு மனித உடல் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதை அறிந்துகொள்வதில் இந்த ஆய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆர்டெமிஸ் திட்டத்தின் ஐந்து பயணங்களையும் 2028ஆம் ஆண்டுக்குள் முடிக்க நாசா திட்டமிட்டுள்ளது. "இவை ஐந்துமே சோதனைப் பயணங்கள்தான்" என்று கூறும் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், "அதற்குப் பிறகு ரோபோடிக் திட்டங்களும் மனிதர்களை அனுப்புவதும் எனப் பல கட்டங்களாக நிலவுப் பயணங்கள் மேற்கொள்ளப்படும். அதன் மூலம் நிலவில் நிரந்தரமாக ஒரு தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது," என்று விவரித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆர்டெமிஸ் என்பது நிலவில் தளம் அமைப்பதற்கான முதல் படியே என்று கூறும் அவர், "அதற்கு அடுத்த கட்டமாக அங்குள்ள கனிம வளங்களை எடுத்து பூமிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். முதலில் நேரடியாக நிலவில் தரையிறங்கும் திட்டம் இருக்கவில்லை. லூனார் கேட்வே என்ற பெயரில் பூமியைச் சுற்றி சர்வதேச விண்வெளி நிலையம் இருப்பதைப் போன்றதொரு விண்வெளி நிலையத்தை அமைப்பதுதான் திட்டமாக இருந்தது.
பின்னர், அதற்கு மாறாக, நேரடியாக நிலவில் தரையிறங்கும் வகையில் திட்டம் மாற்றப்பட்டது. இதன்படி, ஓரியன் விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நிலைகொண்டு சுற்றிக் கொண்டிருக்கும். தரையிறங்கி கலன் நிலவில் தரையிறங்கி, பின்னர் மீண்டும் விண்கலத்துடன் இணைந்து விண்வெளி வீரர்களை பூமிக்குக் கொண்டு வரும்," என்று விளக்கினார்.
நிலவில் நிரந்தர தளம் அமைக்கும் பணியை 2036க்குள் முடித்துவிட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஆர்டெமிஸின் அடுத்தடுத்த கட்டங்கள் எவ்வாறு செல்கின்றன என்பதைப் பொறுத்து அது அமையும் என்று கூறினார்.
ஆர்டெமிஸ் திட்டம் நிலவில் நீண்டகால மனித இருப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்குகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்களையும், மனித திறன்களையும் சோதிக்க ஆர்டெமிஸ்-2 பயணம் உதவுகிறது.
அதோடு, நாசாவின் கூற்றுப்படி, அறிவியல் மற்றும் பொருளாதார பயன்களுக்காக நிலவை விரிவாக ஆராயவும், மனிதர்களின் செவ்வாய் கிரக பயணங்களுக்கான அடித்தளத்தை வலுப்படுத்தவும் ஆர்டெமிஸ் திட்டங்கள் உதவக்கூடும்.
மனிதர்களால் நிலவைச் சென்றடைய முடியும் என்பதை அப்பல்லோ பயணங்கள் நிரூபித்தன. மனிதர்கள் நிலவுக்குத் திரும்பிச் செல்லவும், அங்கு தங்கவும், தயாராக இருப்பதை ஆர்டெமிஸ் பயணங்களின் மூலம் உறுதி செய்வதே நாசாவின் இலக்காக உள்ளது.
தற்போது, விண்கல அமைப்புகளை வெற்றிகரமாகச் சோதித்ததன் மூலமும், ஆழமான விண்வெளியில் மனித ஆரோக்கியத்தை ஆய்வு செய்ததன் மூலமும், ஆர்டெமிஸ்-2 பயணம் விண்வெளி ஆய்வின் அடுத்த சகாப்தத்திற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































