சிஎஸ்கே அணியின் 'ஆச்சரிய' உத்தி தவறாக முடிந்ததா? வெற்றியை தடுத்த 3 விஷயங்கள்

இம்பேக்ட் வீரரைப் பயன்படுத்திய விதம் சரியா? சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி எழுப்பியிருக்கும் கேள்வி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த சீசனில் தங்களின் ஐந்தாவது தோல்வியை சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் (கோப்புப் படம்)
    • எழுதியவர், பாபா இந்திரஜித்
    • பதவி, கேகேஆர் முன்னாள் வீரர்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சேப்பாக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக எதிர்பாராத வகையில் ஒரு பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆடுகளம் அவர்கள் எதிர்பார்க்காத வகையில் இருக்க, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதை எவ்வித சிக்கலும் இல்லாமல் நிதானமாக 16.4 ஓவர்களிலேயே சேஸ் செய்துவிட்டது குஜராத் டைட்டன்ஸ்.

இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் பௌலர்கள் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார்கள். அதன்பிறகு தன் சொந்த மண்ணில் சாய் சுதர்ஷன் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து தன் அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஒட்டுமொத்தமாக பேட்டிங், பௌலிங் என அனைத்து ஏரியாவிலும் சூப்பர் கிங்ஸை எளிதாக வீழ்த்திவிட்டது டைட்டன்ஸ்.

மும்பைக்கு எதிராக ஒரு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டு இந்தப் போட்டிக்குள் வந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. ஆனால், இந்த செயல்பாடு எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்திருக்கிறது. மேலும், இந்தப் போட்டியை அவர்கள் அணுகியவிதம் கேள்வியை எழுப்பும் விதமாகவும் அமைந்திருக்கிறது.

இந்தப் போட்டியில் தாக்கம் ஏற்படுத்தியதாக நான் கருதும் ஒரு சில விஷயங்களைப் பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

ஆடுகளம் & டாஸ் தாக்கம் ஏற்படுத்தியதா?

இந்தப் போட்டி நடந்த ஆடுகளம் செம்மண் மற்றும் களிமண் கலந்ததுதான். ஆனால், செம்மண் சற்று கூடுதலாக இருந்தது. இப்படியான ஆடுகளங்களில் தான் சமீபமாக சிஎஸ்கே விளையாடிவருகிறது. பொதுவாகவே செம்மண் ஆடுகளங்களில் பவுன்ஸ் கூடுதலாக இருக்கும். ஆனால், இந்த ஆடுகளத்தில் சற்று கூடுதலாகவே பந்து பவுன்ஸ் ஆனது. அதுவும் மாலை நேரம் தொடங்கிய ஒரு போட்டியில் இப்படி கூடுதல் பவுன்ஸ் இருந்தது சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

இந்த ஆடுகளத்தின் தன்மையை குஜராத் டைட்டன்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். மொஹம்மது சிராஜ் மற்றும் ககிஸோ ரபாடா இருவரும் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார்கள். பந்தை நன்கு ஸ்விங் செய்தார்கள். பகல் நேரம் என்பதால் கடல் காற்றின் காரணமாக கூடுதல் ஸ்விங் கிடைத்தது.

அதுமட்டுமல்லாமல், அவர்கள் அதிவேகமாகவும் பந்துவீசினார்கள். அவர்கள் நன்கு உயராமனவர்களும் கூட. அதை நன்றாகப் பயன்படுத்தி கூடுதல் பவுன்ஸ் ஏற்படுத்தினார்கள். அது அவர்களுக்கு நல்ல பலன் கொடுத்தது. பவர்பிளேவில் சிக்கனமாகப் பந்துவீசியதோடு, 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸுக்கு பெரும் முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டார்கள்.

அதேபோல் இதை குஜராத் டைட்டன்ஸுக்கு டாஸில் கிடைத்த அதிர்ஷ்டம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. ஏனெனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றிருந்தாலும் அவர்கள் பேட்டிங் செய்யவே முடிவு செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஏனெனில், சிஎஸ்கே வெற்றி பெற்ற போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்துதான் வென்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஆடுகளம் இப்படி இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். (இதை போட்டிக்குப் பிறகு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடும் தெரிவித்தார்). நன்கு காய்ந்திருக்கும் என்று கருதியிருப்பார்கள். அந்த வெயிலில் முதலில் பேட்டிங் செய்துவிட்டால், பந்துவீசும்போது அது சற்று சாதகமாக இருக்கும் என்றே நினைத்திருப்பார்கள். அதனால், டாஸ் இந்தப் போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று நான் கருதவில்லை.

இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார் ககிஸோ ரபாடா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார் ககிஸோ ரபாடா

ஆச்சர்யம் ஏற்படுத்திய இம்பேக்ட் வீரர் முடிவு

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 'இம்பேக்ட் சப்ஸ்டிட்யூட்' பயன்படுத்திய விதம் ரொம்பவே ஆச்சர்யமாக இருந்தது. 2 விக்கெட்டுகள் விழுந்ததுமே சர்ஃபராஸ் கானை இறக்குவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அது ஒரு பௌலரை ஆட்டத்தில் இருந்தே எடுத்துவிட்டது.

சூப்பர் கிங்ஸ் இந்த முடிவை எடுத்ததன் காரணம் - பிரெவிஸ், துபே ஆகியோரை பவர்பிளேவில் களமிறக்கக்கூடாது என்பது. அவர்கள் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆடத் தேவை என்று நினைத்ததால் பவர்பிளேவில் சர்ஃபராஸைக் களமிறக்கியிருக்கிறார்கள். அதுதான் அவர்களின் திட்டமென்றால், இப்படியொரு சூழ்நிலை ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்து அவர்கள் அதற்கேற்ப திட்டமிட்டிருக்கவேண்டும். அப்படி திட்டமிட்டிருந்தால் கார்த்திக் ஷர்மாவை அவர்கள் தேர்வு செய்யாமல் இருந்திருக்கலாம். அது இன்னும் வேறு வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்திருக்கும்.

சிஎஸ்கே எடுத்த இந்த முடிவால் நல்ல ஃபார்மில் இருந்த ஒரு பௌலரை சூப்பர் கிங்ஸ் இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களின் 20வது ஓவர்களை முடிக்க பௌலர்கள் இருந்தார்கள். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பவர்பிளேவில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய, நல்ல ஃபார்மில் இருக்கும் ஒரு வீரரை இழக்கவேண்டிய நிலை அதனால் ஏற்பட்டது. வழக்கமாக 'வின்னிங் காம்பினேஷன்' மாற்றப்படக்கூடாது என்பார்கள். இங்கே சிஎஸ்கே அதைச் செய்திருக்கவேண்டாம் என்று நான் கருதுகிறேன்.

முகேஷ் செளத்ரி இல்லாததால், சூப்பர் கிங்ஸின் பௌலிங் 'டெம்ப்ளேட்' கூட மாறிவிட்டது என்று நான் நினைக்கிறேன். அன்ஷுல் கம்போஜ் பவர்பிளேவில் 3 ஓவர்கள் வீசினார். குர்ஜப்னீத் சிங்கை பவர்பிளேவிக்குப் பின்னரே பயன்படுத்திப் பழகிவிட்டதால், ஜேமி ஓவர்டனும் பவர்பிளேவில் பந்துவீசவேண்டிய நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே குறைந்த ஸ்கோர் டிஃபண்ட் செய்யவேண்டிய நெருக்கடியில் இருந்த பௌலிங் யூனிட்டுக்கு அது எந்த வகையிலும் உதவவில்லை.

இம்பேக்ட் வீரராகக் களமிறங்கிய சர்ஃபராஸ் கான் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இம்பேக்ட் வீரராகக் களமிறங்கிய சர்ஃபராஸ் கான் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்

கெய்க்வாட் வேறு மாதிரி ஆடியிருக்கலாமா?

இந்த சீசனில் இதுவரை பெரிய இன்னிங்ஸ் ஆடாத சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இந்தப் போட்டியில் அந்தக் குறையைப் பூர்த்தி செய்தார். கடைசி வரை களத்தில் நின்று 74 ரன்கள் எடுத்தார் ருதுராஜ். அவர் ஃபார்முக்குத் திரும்பியிருப்பது நல்ல விஷயம். இருந்தாலும், ருதுராஜ் அணுகுமுறை மீதும் சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அவர் ஆடிய வேகம் தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அவர் அப்படி ஆடியதற்குக் காரணம் இருக்கவே செய்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் விரைவாக விக்கெட்டுகளை இழந்ததால், ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் வேலையில் இறங்கிவிட்டார். சொல்லப்போனால் அவர் ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டுவிட்டார் என்றே நான் கருதுகிறேன். பவர்பிளேவிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தபின் அவரும் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்திருந்தால், அந்த 158 என்ற ஸ்கோரை கூட சூப்பர் கிங்ஸால் எடுத்திருக்க முடியாது.

இதற்கு முன் சிஎஸ்கே வெற்றி பெற்ற போட்டிகளில் கூட பார்த்தால் ஒரு 10 - 15 ரன் கூட எடுத்திருக்கலாமோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதனால் தான் முடிந்தவரை ஆட்டத்தை கடைசி கட்டத்துக்கு எடுத்துச்செல்லவேண்டும் என்று அவர் முடிவெடுத்திருக்கிறார்.

அதேசமயம், ருதுராஜ் கெய்க்வாட் இன்னும் சற்று விரைவாகவே தன் வேகத்தைக் கூட்டியிருக்கலாமோ? இன்னும் கொஞ்சம் 'இன்டென்ட்' காட்டி சில ஷாட்களை விரைவாகவே ஆடியிருக்கலாமோ? ஆம், செய்திருக்கலாம். பவர்பிளே சிக்கல்களுக்குப் பிறகு மிடில் ஆர்டரில் ஒரு சிறிய பார்ட்னர்ஷிப் உருவானபோது ருதுராஜ் தன் வேகத்தை சற்றுக் கூடியிருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.

ஆனால், அவர் அதை முன்னரே செய்ததற்கும் ஒரு காரணம் இருந்திருக்கும். அவருக்கு இந்த சீசனில் இதுவரை பெரிய ரன்கள் வரவில்லை. அவருக்கும் முழுமையான நம்பிக்கை இல்லை. அதனால் கொஞ்சம் முன்கூட்டியே எடுத்திருக்கவேண்டிய ரிஸ்க்கை அவர் சற்று தாமதமாக எடுத்தார்.

அணி மோசமான ஒரு சூழ்நிலையில் தவித்ததால், விரைந்து வேகத்தைக் கூட்டாமல், ஆட்டத்தை இன்னும் சில ஓவர்கள் எடுத்துச் செல்லலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

20 ஓவர் முழுமையாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்தார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 20 ஓவர் முழுமையாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்தார்

சிஎஸ்கே அடுத்து என்ன செய்யவேண்டும்?

அடுத்ததாக சூப்பர் கிங்ஸ் செய்யவேண்டியது அவர்களின் நிலையான ஒரு காம்பினேஷனை உறுதி செய்வதுதான். மஹேந்திர சிங் தோனி ஃபிட்டாகிவிட்டால் சற்றும் தாமதிக்காமல் அவரை பிளேயிங் லெவனுக்குள் எடுத்துவந்துவிடுவேன். கார்த்திக் ஷர்மாவுக்குப் பதில் தோனி அணிக்குள் வந்துவிடுவார்.

அடுத்ததாக தங்களின் நம்பர் 3 வீரர் யார் என்பதை சிஎஸ்கே உறுதி செய்யவேண்டும். அந்த வீரருக்கு அந்த இடத்தில் வாய்ப்புகள் கொடுக்கப்படவேண்டும். அது சர்ஃபராஸ் கானா அல்லது உர்வில் பட்டேலா என்பதை முடிவு செய்துவிட்டு, மற்றொரு வீரரை இம்பேக்ட் பட்டியலில் வைத்துக்கொள்ளலாம்.

இவர்கள் தான் என்னுடைய 12 வீரர்கள்: சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், உர்வில் பட்டேல்/சர்ஃபராஸ் கான், டெவால் பிரெவிஸ், ஷிவம் துபே, எம்.எஸ்.தோனி, ஜேமி ஓவர்டன், அகீல் ஹொசைன், அன்ஷுல் கம்போஜ், நூர் அஹமது, குர்ஜப்னீத் சிங், முகேஷ் செளத்ரி.

நம்பர் 3 ஆக தேர்வு செய்யப்படாத வீரரையும், கார்த்திக் ஷர்மாவையும் இம்பேக்ட் பட்டியலில் வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை நிறைய விக்கெட்டுகளை இழந்துவிட்டால், வேறு வழி இல்லை என்றால், சூழ்நிலைக்கு ஏற்ப அந்த இரு வீரர்களுள் ஒருவரைக் களமிறக்கலாம். ஆனால், அதுவும் கூட இவ்வளவு சீக்கிரம் இறக்கிவிடக்கூடாது. நான்காவது ஓவரிலேயே இம்பேக்ட் வீரரை இறக்குவது நிச்சயம் சரியான முடிவாக இருக்காது. அது எனக்கு இன்னும் ஆச்சர்யமளிப்பதாகவே இருக்கிறது.

(கட்டுரையாளர் பாபா இந்திரஜித், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரர். இந்தியா ஏ அணிக்காக அவர் விளையாடியிருக்கிறார். தற்போது தமிழ்நாடு அணிக்காக விளையாடிவரும் அவர் வர்ணனையாளராகவும் செயல்படுகிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு