வெனிசுவேலாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

பட மூலாதாரம், Juan Barreto/AFP via Getty Images
வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் 7.2 அளவாக இருந்தது, இரண்டாவது 7.5 அளவாக இருந்தது.
நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச்சேதமும் பரவலான அழிவும் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின்படி (United States Geological Survey), உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடும் என்பதற்கான வாய்ப்பு 44% ஆக உள்ளது.
வெனிசுவேலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த உரையின்போது அவருடன் உள்துறை அமைச்சரும், தேசிய அவையின் தலைவரும் அவரது சகோதரருமான ஜார்ஜ் ரோட்ரிக்ஸும் உடனிருந்தனர். நிவாரண மற்றும் மீட்புப் பணிகளைக் கண்காணிக்க அதிபர் ஒரு ஜெனரலுக்குப் பொறுப்பு வழங்கியுள்ளார்.
ரோட்ரிக்ஸ் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இடைக்காலமாக நாட்டிற்குத் தலைமை தாங்கி வருகிறார். தனது உரையில், அவர் முதலில் வெனிசுவேலா மக்களிடம் ஒற்றுமையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
நிலநடுக்கத்தில் தங்களுக்குப் பிரியமானவர்களை இழந்த மக்களுக்கு அவர் தனது இரங்கலையும் தெரிவித்தார், இருப்பினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அவர் குறிப்பிடவில்லை.
ரோட்ரிக்ஸின் கூற்றுப்படி, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கடுமையான சேதம் காரணமாக வெனிசுவேலாவின் முக்கிய சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து வெளிவந்த ஆரம்பகட்ட வீடியோக்களில் மக்கள் பாதைகளில் ஓடுவதைக் காண முடிந்தது, அதே நேரத்தில் நிலநடுக்க அதிர்வுகளின் போது கூரைகளில் இருந்து பெரிய அளவில் தூசி துகள்கள் கீழே விழுவதைக் காண முடிந்தது.
இந்த நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்துள்ளனர். உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ காபெல்லோ மக்களைத் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது வெனிசுவேலாவில் தேசிய விடுமுறை கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது, எனவே பல மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்திருக்கலாம். நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 6:04 மணிக்கு ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் மையம்
நிலநடுக்கத்தின் மையம் கராகஸுக்கு மேற்கே அமைந்துள்ள மொண்டால்பான் பகுதியில் இருந்தது.
வெனிசுவேலாவின் பல மாநிலங்களிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன.
நாட்டின் பல மாநிலங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெனிசுவேலாவின் உள்துறை அமைச்சர் அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
"அனைத்து அறிகுறிகளும் இதன் தீவிரம் ஏழை விட மிக அதிகமாக இருந்ததைக் காட்டுகின்றன" என அவர் விடிவியுடன் தொலைபேசியில் பேசும்போது தெரிவித்தார்.
"இதன் அதிர்வுகள் ட்ருஜிலோ, யாராகுய், கராபோபோ, அராகுவா, மிராண்டா, கராகஸ் மற்றும் லா குவைராவில் தீவிரமாக உணரப்பட்டன" என்றார்.
தலைநகர் கராகஸில் உள்ள பாலோஸ் கிராண்டேஸ் மற்றும் அல்தாமிரா பகுதிகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொலம்பியா வரை உணரப்பட்ட அதிர்வுகள்

பட மூலாதாரம், Manaure QUINTERO/AFP via Getty Images
பிபிசியின் வட அமெரிக்கச் செய்தியாளர் வில் கிராண்ட் கூற்றுப்படி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில் சில கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதையும், பல கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதையும், சில இடிந்து விழுந்துள்ளதையும் காண முடிகிறது.
அதே நேரத்தில், நில அதிர்வுகளின் பயம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் தங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குத் திரும்பவில்லை.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கொலம்பியாவின் தலைநகரான பொகோடா வரை உணரப்பட்டன.
மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மதிப்பீடு தொடர்ந்து நடந்து வருவதால், சேதத்தின் உண்மையான அளவு இன்னும் முழுமையாகத் தெளிவாகத் தெரியவில்லை.

பட மூலாதாரம், Juan Barreto/AFP via Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Manaure QUINTERO/AFP via Getty Images
டிரம்ப், மோதி கூறியது என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் இந்த நிலநடுக்கம் குறித்துத் தங்கள் இரங்கலைத் தெரிவித்ததோடு, சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளனர்.
வெனிசுவேலாவுக்கு "தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள், மருத்துவ வளங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை உடனடியாக அனுப்பி வருவதாக" அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ரூபியோ, "தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து, தொடர்ந்து பணியாற்றி வரும் துணிச்சலான மீட்புப் பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் நாங்கள் துணை நிற்கிறோம்" என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா வெனிசுவேலா அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், "உதவிகளைத் திரட்டும்" பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவரது துணை வெளியுறவுத்துறை செயலாளர் கிறிஸ்டோஃபர் லண்டாவ் கூறியதைத் தொடர்ந்து இந்த பதிவு வெளியாகியுள்ளது.
வெனிசுவேலா மக்களுக்கு உதவத் தயாராக இருக்குமாறு அமெரிக்க முகமைகளைக் கேட்டுக்கொண்டதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அதிபர் டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வெனிசுவேலா மக்களைத் தாக்கிய இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்தியதோடு, கணிசமான உயிர் இழப்புகளையும் உண்டாக்கியுள்ளன. அமெரிக்கா உதவத் தயாராகவும் விருப்பமாகவும் உள்ளது" என்று கூறியுள்ளார்.
மேலும், "விரைவான நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்குமாறு எனது அரசாங்கத்தின் அனைத்து முகமைகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். எங்களின் புதிய மற்றும் நல்ல நண்பர்களுக்கு உதவி செய்ய நாங்கள் இருப்போம்"என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோதியும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோதி, "வெனிசுவேலாவில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கத்தால் உண்டான பேரழிவைக் கண்டு நான் மிகுந்த வருத்தம் அடைகிறேன். இந்திய மக்கள் சார்பாக, வெனிசுவேலா அரசாங்கத்துக்கும் மக்களுக்கும், குறிப்பாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும், "காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம். சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது"என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தெரிவித்த வெனிசுவேலா அதிபர்
வெனிசுவேலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், உதவிக்கரம் நீட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோதியின் பதிவைப் பகிர்ந்த அவர் , "நமது நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கங்களின் கடுமையான பாதிப்புகளுக்கு இரங்கல் தெரிவித்து, நிவாரணப் பணிகளுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதையும் தெரியப்படுத்திய பிரதமர் நரேந்திர மோதியின் கருத்துக்களை நாங்கள் மனதார வரவேற்கிறோம்"எனக் கூறியுள்ளார்.
"இந்த கடினமான காலகட்டத்தில் இந்தியா காட்டியுள்ள ஒற்றுமையானது, நமது மக்களிடையே நிலவும் ஒத்துழைப்பு உணர்வுக்கு இசைவானதாக உள்ளது. சர்வதேச சமூகத்தின் இந்த ஆதரவை நாங்கள் ஏற்றுக்கொள்வதோடு, எங்களுக்குக் காட்டப்பட்ட ஒற்றுமைக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
வெனிசுவேலாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது ஏன்?
வெனிசுவேலா மிக அதிக நிலநடுக்க அபாயம் உள்ள பகுதியில் அமைந்துள்ளது. கரீபியன் தட்டு மற்றும் தென் அமெரிக்கத் தட்டு ஆகிய இரண்டு புவித்தட்டுகள் இங்கு சந்திக்கின்றன.
அமெரிக்க நிலவியல் ஆய்வு மையத்தின்படி, புதன்கிழமை ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் இரண்டாவதும் மிகவும் சக்தி வாய்ந்ததுமான நிலநடுக்கம், இந்தத் தட்டுகளின் எல்லைக்கு அருகே ஏற்பட்ட அசைவினால் உண்டானது.
இதன் பொருள், புவித் தட்டுகளுக்கு இடையேயான பிளவு கோடுகள் கிடைமட்டமாக நகர்கின்றன என்பதாகும். இந்த இயக்கம் திடீரெனவும் வேகமாகவும் நிகழும்போது, நிலநடுக்கம் ஏற்படுகிறது.
"வரைபடங்களில் நிலநடுக்கங்கள் பெரும்பாலும் ஒற்றைப் புள்ளியாகக் காட்டப்பட்டாலும், இந்த அளவுள்ள ஒரு நிலநடுக்கத்தை, ஒரு பெரிய பிளவுப் பகுதியில் ஏற்படும் நழுவலாகவே கருதுவது மிகவும் பொருத்தமானது" என்று யு.எஸ்.ஜி.எஸ் கூறியது.
அந்த அமைப்பின் கூற்றுப்படி, இன்றைய இரண்டு நிலநடுக்கங்கள் "ஒரு சிக்கலான பிளவு தொடர்பு செயல்முறையை" சுட்டிக்காட்டக்கூடும்.
மேலும் அடுத்தடுத்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், அவற்றில் சில மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கக்கூடும் என்றும் யுஎஸ்ஜிஎஸ் எச்சரித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































