கால்வாய்க்கு வந்த பெண் சுறாவை எத்தனை முறை திருப்பி அனுப்பினாலும் மீண்டும் அங்கேயே வந்தது ஏன்? இப்போது எங்கே இருக்கிறது?

கடலில் இருந்து வழிதவறி கால்வாய்க்கு வந்த சுறா - தென் கொரியாவில் என்ன நடந்தது?
    • எழுதியவர், ஜேக் குவான்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தென் கொரியாவின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள, பரபரப்பான கப்பல் போக்குவரத்துக்கும் கடற்கரைகளுக்கும் பெயர்பெற்ற பூசான் நகரின் கால்வாய் ஒன்றில் பெரிய சுறா மீன் தென்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், அதைக் காப்பாற்றுவதற்காகக் கடல்சார் உயிரியலாளர் கிம் ஹியூன்-வூ அழைக்கப்பட்டார்.

செப்டம்பர் மாதத்தின் மத்தியில், மீன்பிடிப் படகுகளுக்கு உதவும் வகையில் கானாங்கெளுத்தி மீன்களின் கூட்டங்களைக் கண்காணித்துவிட்டு, அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த அழைப்பு வந்தது.

தென் கொரியாவின் முன்னணி சுறா மீன் நிபுணர்களில் ஒருவராக இருந்தபோதிலும், ஒரு சுறா மீனைக் காப்பாற்றுமாறு கடலோரக் காவல்படையினர் தன்னிடம் கேட்பார்கள் என்று அவர் ஒருபோதும் நினைத்ததில்லை.

தென் கொரியாவுக்குச் சுறா மீன்கள் புதிதல்ல. ஆனால், உலகின் ஏழாவது பரபரப்பான துறைமுகத்தின் அருகே, ஆழமற்ற கான்கிரீட் கால்வாயில் இவ்வளவு பெரிய சுறா மீன் சிக்கிக்கொண்டது இதுவரை கேள்விப்படாத ஒன்று.

கால்வாயின் கரையில் ஆர்வத்துடன் மக்கள் கூட்டம் கூடத் தொடங்கியிருந்த நிலையில், தேசிய மீன்வள அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த இவருடைய குழுவினர் விரைவாகச் செயல்பட வேண்டியிருந்தது.

முதலில், அது எந்த வகையைச் சேர்ந்த சுறா மீன் என்பதைக் கண்டறிய வேண்டும்.

சில சுறா மீன்கள் மற்றவற்றைவிட அதிக ஆபத்தானவை. 1975-ஆம் ஆண்டு வெளியான புகழ்பெற்ற ஜாஸ் திரைப்படத்தின் நாயகனான பெரிய வெள்ளைச் சுறா, மனிதர்களைத் தாக்கிக் கொல்லக்கூடியது.

பூசானில் காணப்பட்ட சுறா, பெண் டஸ்கி சுறா என அடையாளம் காணப்பட்டது. இந்த வகை சுறா மீன்கள் தாக்கியதில் இதுவரை இரண்டு உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளன. இருப்பினும், அங்கு கூடியிருந்தவர்களில் யாராவது கால்வாயில் குதித்துவிடலாம் அல்லது தவறி விழுந்துவிடலாம் என்று கிம் அஞ்சினார்.

அந்தச் சுறா மீன் மீண்டும் கடலுக்குத் திரும்ப வேண்டியிருந்தது.

செப்டம்பர் மாத நடுப்பகுதியில், அந்த வாய்க்காலில் டஸ்கி சுறா முதன்முதலில் காணப்பட்டது.
படக்குறிப்பு, செப்டம்பர் மாத நடுப்பகுதியில், அந்த வாய்க்காலில் டஸ்கி சுறா முதன்முதலில் காணப்பட்டது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சுறாக்கள் தவிர்க்கும் வகையில் மிதமான மின்சாரத்தை உருவாக்கும் மின் தடுப்பு சாதனத்தைப் பயன்படுத்தி, கடலோரக் காவல்படையின் சிறிய கப்பல் முதலில் அதை விரட்ட முயன்றது.

பிரபலமான கடற்கரைகளுக்கு அருகே சுறாக்கள் தென்படும்போது பொதுவாக இத்தகைய சாதனங்கள் பயன்படுத்தப்படும். இந்த முயற்சி, ஐந்து மணி நேரம் தொடர்ந்தது. அதன்பிறகு இந்தச் சுறா மீன் மிகப் பெரியதாகவும் வேகமாகவும் இருப்பதால் அந்தச் சாதனத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியாது என்று அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதையடுத்து, சுறா மீன் தானாகவே கால்வாயிலிருந்து வெளியேறும் வரை காத்திருக்கலாம் என்று கிம் முடிவெடுத்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

அதிகாரிகள் அதை வெளியேற்றுவதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, கால்வாயில் சிக்கியிருந்த அந்த உயிரினம் இணையத்தில் வைரலானது.

அந்தச் சுறா தென்பட்ட சில மணி நேரங்களிலேயே, நகராட்சி நிர்வாகம் நகரில் உள்ள அனைவருக்கும் அவசரக் குறுஞ்செய்தி அனுப்பியது. அதில், பாதசாரிகளும் குடியிருப்புவாசிகளும் தங்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

பொதுவாக, கால்வாயையொட்டியுள்ள பூங்காவுக்கு மக்கள் அதிகம் வருவதில்லை. ஆனால், அந்த எச்சரிக்கைச் செய்தியால் சுறாவைப் பார்ப்பதற்காக ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

அந்தச் சுறாவுக்கு மக்கள் அன்புடன் 'புகாங்கி' என்று பெயரிட்டனர். அருகிலுள்ள துறைமுகத்தின் கொரியப் பெயரான 'புக் ஹாங்' என்பதிலிருந்து இந்தப் பெயர் உருவானது.

சில நாட்களிலேயே, ஒரு நிறுவனம் அந்தப் பெயருக்கான வணிக முத்திரையைப் பதிவு செய்தது. புகாங்கியின் உருவம் பொறிக்கப்பட்ட ஊக்குகள், மென்மையான பொம்மைகள், டி-ஷர்ட்கள் உள்ளிட்ட பொருட்கள் இணையத்தில் விற்பனைக்கு வந்தன.

கடலில் இருந்து வழிதவறி கால்வாய்க்கு வந்த சுறா - தென் கொரியாவில் என்ன நடந்தது?
படக்குறிப்பு, தென் கொரிய கால்வாயில் சிக்கிய சுறாவை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

நகராட்சி நிர்வாகமும் இதில் இணைந்துகொண்டது. சுறா மீனின் நடமாட்டத்தை நேரலையில் ஒளிபரப்பியதுடன், அதைத் தனது அதிகாரப்பூர்வ சின்னமாகவும் அறிவித்தது.

கால்வாயின் நுழைவாயிலில் ஒரு பதாகை வைக்கப்பட்டது. கால்வாயின் அருகே 30,000 பேர் அமரக்கூடிய புதிய பேஸ்பால் விளையாட்டு அரங்கம் அமைக்க தேசிய அரசாங்கம் நிதியுதவி செய்ய வேண்டும் என்று கோரும் மனுவில், 'புகாங்கியின் சார்பாக' கையெழுத்திடுமாறு அதில் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

சுறாவைப் பார்ப்பது உள்ளூர் மக்கள் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஒரு குழு நடவடிக்கையாக மாறியது. குழந்தைகளுக்கு முன்வரிசையில் இடமளிப்பது எழுதப்படாத விதியாக இருந்தது. புகாங்கியைப் பார்த்தவர்கள், புதிதாக வந்தவர்களுக்கு அது இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது.

சிலர் தங்களைத் தாங்களே அதன் பாதுகாவலர்களாக நியமித்துக்கொண்டு, இரவு நேரங்களில் கால்வாயைச் சுற்றி ரோந்துப் பணியிலும் ஈடுபட்டனர். யாரும் புகாங்கியின் மீது டார்ச் விளக்குகளையோ லேசர் ஒளியையோ பாய்ச்சவில்லை என்பதை உறுதிப்படுத்துவதே அவர்களின் நோக்கம்.

புகாங்கி சார்பாக பேஸ்பால் மைதானத்திற்கு ஆதரவளிக்குமாறு ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, புகாங்கி சார்பாக பேஸ்பால் மைதானத்திற்கு ஆதரவளிக்குமாறு ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

இறுதியில், 16 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்தக் கால்வாயைப் பார்வையிட வந்தனர்.

இந்தச் சுறா, பல பில்லியன் டாலர்கள் செலவு செய்தாலும் கிடைக்காத விளம்பரத்தைத் துறைமுகத்துக்குப் பெற்றுத் தந்துள்ளதாக உள்ளூர் மேயர் தெரிவித்தார்.

"இப்போதெல்லாம் மக்கள் ஒன்றாகக் கூடுவது மிகவும் அரிதாகிவிட்டது," என்றார் கிம் ஜூ-உன். தனது இரண்டு உறவுக்காரச் சிறுமிகளுடன் சுறாவைப் பார்ப்பதற்காக அவர் வந்திருந்தார்.

"புகாங்கி நம் அனைவரையும் ஒன்றிணைத்து, அதற்காக மகிழ்ச்சியுடன் குரல் கொடுக்க வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது," என்றார் அவர்.

ஆனால், புகாங்கியை கால்வாயிலேயே அதிகாரிகளால் விட்டுவிட முடியவில்லை.

செப்டம்பர் மாத இறுதியில், அந்தச் சுறா பல நாட்களாக உணவு உட்கொள்வது தென்படவில்லை. மேலும், கான்கிரீட் சுவர்களில் மீண்டும் மீண்டும் மோதியதால் அதன் மூக்குப் பகுதியில் ரத்தம் கசியும் காயங்களும் காணப்பட்டன.

அந்தச் சுறாவின் கண் அருகே ஏற்பட்டிருந்த காயம் மிகவும் கவலைக்குரியது என்றும், அது தீவிரமான பாதிப்பாக இருக்கலாம் என்றும் புகழ்பெற்ற கடல்சார் உயிரியல் பேராசிரியர் சோய் யூன் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கிம் ஜூ-உன். தனது இரண்டு உறவுக்காரச் சிறுமிகளுடன் சுறாவைப் பார்ப்பதற்காக வந்திருந்தார்.
படக்குறிப்பு, கிம் ஜூ-உன். தனது இரண்டு உறவுக்காரச் சிறுமிகளுடன் சுறாவைப் பார்ப்பதற்காக வந்திருந்தார்.

செப்டம்பர் மாத இறுதியில், கிம்மின் குழுவினர் மீண்டும் ஒரு மீட்பு முயற்சியைத் தொடங்கினர்.

2004-ஆம் ஆண்டு அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில், ஆழமற்ற குளம் ஒன்றில் சிக்கிய பெரிய வெள்ளைச் சுறாவை நீர்த் தாரைகளைப் பயன்படுத்தி வெளியேற்ற முயன்ற சம்பவத்தை கிம் நினைவுகூர்ந்தார்.

ஆனால், புகாங்கியிடம் இதே முறையைப் பயன்படுத்தியபோது, அது மீண்டும் மீண்டும் அதே இடத்துக்குத் திரும்பியது.

அக்டோபர் 2-ஆம் தேதி, சுறா மீன் மீண்டும் கால்வாய்க்குள் வருவதைத் தடுக்க, அதன் குறுக்கே வலையை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால், அந்த வலையைச் சுற்றிச் சென்ற சுறா, சில மணி நேரங்களிலேயே மீண்டும் கால்வாய்க்குள் வந்துவிட்டது.

இந்தக் கட்டத்தில், சுறாவின் மூக்குப் பகுதியில் உள்ள மின்காந்த உணரிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கிம் சந்தேகிக்கத் தொடங்கினார். அந்த உணரிகளைப் பயன்படுத்தித்தான் சுறாக்கள் தங்கள் நகர்வையும் வழியையும் கண்டறிகின்றன. அப்படியில்லையென்றால் ,துறைமுகத்தில் செல்லும் கப்பல்களின் உரத்த சத்தத்தால் அது குழப்பமடைந்திருக்கலாம் என்றும் அவர் கருதினார்.

புகாங்கி ஏன் கால்வாய்க்குள் வந்தது என்பதற்கான காரணமே, கடல் வெப்பமடைந்து வருவதன் அறிகுறியாக இருக்கலாம் என்று கடல்சார் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏராளமான மீன்கள் கிடைப்பதால், அந்த சுறா வெப்பமான நீர்ப்பகுதிகளை நோக்கிச் சென்றிருக்கலாம் என்று அமைச்சகம் கருதுகிறது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், தென் கொரியாவின் கிழக்குக் கடற்கரைக்கு அருகே 50 பெரிய சுறா மீன்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகம்.

சுறா சிக்கிக்கொண்ட, புசான் துறைமுகத்திற்குச் செல்லும் கால்வாய்
படக்குறிப்பு, சுறா சிக்கிக்கொண்ட, புசான் துறைமுகத்திற்குச் செல்லும் கால்வாய்

ஒவ்வொரு மீட்பு முயற்சியும் தோல்வியடைந்தபோதும், புகாங்கியின் புதிய ரசிகர்களில் சிலர் அதைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட வேண்டும் என்று கோரத் தொடங்கினர்.

வியாழக்கிழமையன்று, சிலர் பதாகைகளுடன் அங்கு வந்து, "புகாங்கியைத் தனியாக விடுங்கள்", "வலையை அகற்றுங்கள்" என்று முழக்கமிட்டனர்.

ஒரு பாதுகாப்புக் காவலர் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, ஒருவர், "நான் உன்னை நேசிக்கிறேன், புகாங்கி!" என்று கூச்சலிட்டார்.

"அவள் மீது எனக்கு அளவுகடந்த ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது," என்றார் 40 வயதுகளிலிருந்த ஜியோங் யோ-வோன்.

புகாங்கியை "நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் ஓர் ஆதாரம்" என்று குறிப்பிட்ட அவர், "இப்படி இரக்கமின்றி அதை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று நான் நினைக்கவில்லை," என்றார்.

புகாங்கியை வெளியேற்றுவதற்கு எதிராக ஜியோங் போராட்டம் நடத்துகிறார். அவருடன் இருக்கும் ஒரு நபர், புகாங்கியின் "சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்க" அதிகாரிகளை வலியுறுத்துகிறார்.
படக்குறிப்பு, புகாங்கியை வெளியேற்றுவதற்கு எதிராக ஜியோங் போராட்டம் நடத்துகிறார். அவருடன் இருக்கும் ஒரு நபர், புகாங்கியின் "சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்க" அதிகாரிகளை வலியுறுத்துகிறார்.

ஆனால், மற்றவர்கள் அந்தச் சுறா தனது இருப்பிடமான கடலுக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கருதினர்.

மூன்றாவது முயற்சியில்தான் புகாங்கியைப் பார்க்க முடிந்த ஒரு பெண், "அதன் மீது எனக்கு அளவற்ற ஈர்ப்பு ஏற்பட்டதால், பல மணி நேரம் அதையே பார்த்துக்கொண்டிருப்பேன். புகாங்கி இங்கேயே இருக்க வேண்டும் என்று நான் விரும்பினாலும், அது நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதையே விரும்புகிறேன்," என்றார்.

"நகராட்சி நிர்வாகம் புகாங்கிக்கு அதிகாரப்பூர்வ அடையாள அட்டை வழங்கி, ஓய்வூதியமும் கொடுக்க வேண்டும் என்று சிலர் நகைச்சுவையாகக் கூறுகிறார்கள்," என்றார் ஷின் சியுங்மின்.

"அது இங்கு வந்ததால் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி கிடைத்தது. ஆனால், அது தனது இயல்பான சுறா வாழ்க்கையை வாழச் செல்ல வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

சுறா மீனைப் பார்க்க பல்வேறு தரப்பினரும் கூடினர்.
படக்குறிப்பு, சுறா மீனைப் பார்க்க பல்வேறு தரப்பினரும் கூடினர்.

கால்வாயிலேயே தங்கியிருந்தால், இலையுதிர்காலத்தில் வெப்பநிலை குறையும்போது புகாங்கியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கிம் விளக்குகிறார். பொதுவாக, இந்தக் காலகட்டத்தில் சுறாக்கள் வெப்பமான நீர் நிலவும் தெற்குப் பகுதிகளை நோக்கி இடம்பெயரும்.

"இந்தக் கால்வாயைச் சுறாவின் வாழ்விடமாகக் கருத முடியாது. மனிதர்களின் தேவைகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஓர் இடத்தில் காட்டு விலங்கு ஒன்று தொடர்ந்து வாழ முடியாது," என்கிறார் அவர்.

இறுதியில், பொதுமக்களின் கவனமும் அழுத்தமும் அதிகரித்ததைத் தொடர்ந்து, மீட்புப் பணியை தேசிய மீன்வள அறிவியல் நிறுவனத்திடமிருந்து கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.

பூசான் மீன்காட்சியகத்தின் நீர்மூழ்கி வீரர்கள் உள்பட சுமார் 40 பேர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சுறா மீன் நீர்மூழ்கி வீரர்களைத் தாக்கினால் அவசர உதவி வழங்குவதற்காக, மருத்துவக் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. ஒரு கால்நடை மருத்துவரும் அங்கு இருந்தார்.

புதன்கிழமையன்று, மீட்புக் குழுவினர் இரண்டு அடுக்கு வலைகளை அமைத்தனர். அதன் பின்னர், புகாங்கி அந்தக் குறுகிய கால்வாயிலிருந்து திறந்த கடல் பகுதிக்குள் வெற்றிகரமாக வழிநடத்தப்பட்டது.

ஆனால், இரவு நேரத்தில் அது மீண்டும் கால்வாய்க்குள் நீந்தி வந்தது. வெளிப்புற வலையின் அடிப்பகுதி வழியாகச் சென்று, இரண்டு வலைகளுக்கும் இடையில் சிக்கிக்கொண்டது.

இதையடுத்து, வியாழக்கிழமையன்று மீட்புக் குழுவினர் வெளிப்புற வலையை அகற்றினர். அதன்பின், புகாங்கி திறந்த கடலை நோக்கி மெதுவாக நீந்திச் செல்வது காணப்பட்டது.

அது அவ்வப்போது மீண்டும் கால்வாயை நோக்கித் திரும்பினாலும், மீட்புப் பணி நிறைவடைந்தது.

கால்வாய்க்குள் தங்கியிருப்பது புகாங்கிக்கு ஆபத்தானது என்று கடல் உயிரியலாளர் கிம் ஹியுன்-வூ கூறுகிறார்.
படக்குறிப்பு, கால்வாய்க்குள் தங்கியிருப்பது புகாங்கிக்கு ஆபத்தானது என்று கடல் உயிரியலாளர் கிம் ஹியுன்-வூ கூறுகிறார்.

கடந்த சில நாட்களாகப் புகாங்கி தென்படவில்லை. இது சாதகமான அறிகுறி என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

அது இப்போது விரிந்த, ஆழமான கடல் பகுதிகளுக்குப் பழகிக்கொண்டிருக்கலாம் என்று பேராசிரியர் சோய் நம்புகிறார்.

அதேவேளையில், அது வெகுதூரம் சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும், அடுத்த வாரத்தில் மீண்டும் தென்படக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால், மீட்புப் பணிகளின்போது அதற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய காயங்கள் குறித்தும் அவர் கவலைப்படுகிறார்.

கால்வாயில் சிக்கியிருந்தபோது, சுறா மீன் சுவர்களில் தொடர்ந்து உரசியதால், அதன் மூக்குப் பகுதியிலும் மார்புத் துடுப்புகளிலும்கூட தோல் உரிந்து காயங்கள் ஏற்பட்டதாக அவர் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தற்போது, புகாங்கி தனது உண்மையான வாழ்விடமான திறந்த கடலுக்குத் திரும்பி, அங்கு மீண்டும் தனது இயல்பான வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் தென் கொரிய மக்கள் காத்திருக்கின்றனர்.

சியோலில் இருந்து கூடுதல் செய்தி சேகரிப்பு: லீஹ்யூன் சோய்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு