ஜோடி தேடி 4,000 கி.மீ பயணித்த 3 ஆண் ஆப்பிரிக்க காட்டு நாய்கள் - வியக்க வைக்கும் பயணம்

ஆப்பிரிக்க காட்டு நாய்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்பிரிக்க காட்டு நாய்கள் அசாதாரணமாக நீண்ட தூரம் பயணிக்கின்றன.
    • எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ்
    • பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஆப்பிரிக்க காட்டு நாய்களின் ஒரு கூட்டம், ஜாம்பியா முழுவதும் 2,485 மைல்கள் (4,000 கி.மீ) தூரம் பயணித்துள்ளது.

துணை தேடி பயணிக்கும் ஆப்பிரிக்க நிலப்பரப்பு பாலூட்டி இனங்களில், இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள மிக நீண்ட தொலைவு இது தான் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வனவிலங்குகள் மிகப்பெரிய தொலைவுகளைக் கடந்து செல்ல முடியும் என்ற நம்பிக்கையை இது அளிக்கிறது.

அந்த மூன்று சகோதர ஆப்பிரிக்க காட்டு நாய்களும் ஜாம்பியா முழுவதும் பயணித்தன. மனிதர்களால் பெருமளவில் மாற்றமடைந்து வரும் நிலப்பரப்பைக் கடந்து, முக்கிய நகரங்கள் உள்ளிட்ட பல்வேறு தடைகளைத் தவிர்த்து அவை சென்றன.

இந்த ஆய்வில் ஜிபிஎஸ் காலர்கள் பொருத்தப்பட்டிருந்த மற்ற காட்டு நாய்கள் சட்டவிரோத கண்ணிகளில் சிக்கி உயிரிழந்தன. அவை எதிர்கொள்ளும் ஆபத்துகளை இது எடுத்துக்காட்டுகிறது.

இந்த ஆய்வில் ஜிபிஎஸ் காலர்கள் பொருத்தப்பட்டிருந்த மற்ற காட்டு நாய்கள் சட்டவிரோத கண்ணிகளில் சிக்கி உயிரிழந்தன. அவை எதிர்கொள்ளும் ஆபத்துகளை இது எடுத்துக்காட்டுகிறது.

பட மூலாதாரம், Education Images/Universal Images Group/Getty Images

படக்குறிப்பு, பரவிவரும் மனித சமூகம் ஒரு காலத்தில் பரந்து விரிந்திருந்த விலங்குகள் நடமாடும் நிலங்களைச் சிதைக்கின்றன.

மூன்று சகோதரி காட்டு நாய்களும் இதேபோன்ற மிகப்பெரிய பயணத்தை கிட்டத்தட்ட நிறைவு செய்தன. ஆனால், அவற்றில் ஒன்று பொறியில் சிக்கியதால் அந்தப் பயணம் நின்றுபோனது.

ஆப்பிரிக்க காட்டு நாய்கள், ஆப்பிரிக்காவின் மிகவும் அரிதான வேட்டையாடும் விலங்குகளில் ஒன்றாகும். காடுகளில் சுமார் 6,000 மட்டுமே எஞ்சியுள்ளன.

அவை மிகவும் ஒருங்கிணைந்த சமூகமாக, கூட்டமாக வாழ்கின்றன. ஒன்றாக வேட்டையாடுகின்றன. புதிய பிரதேசங்களையும், மற்ற கூட்டங்களுடன் இனப்பெருக்கம் செய்வதற்கான வாய்ப்புகளையும் தேடி மிகப்பெரிய தொலைவுகளுக்குப் பயணிப்பதற்காக அவை அறியப்படுகின்றன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அவை பிறந்த கூட்டத்திற்குள்ளேயே இனப்பெருக்கம் செய்ய முடியாது. எனவே, அவை தங்கள் கூட்டத்தை வழிநடத்தும் உரிமையை பெறும் வரை காத்திருக்க வேண்டும் அல்லது இரண்டு அல்லது மூன்று வயதில் துணை தேடி புறப்பட வேண்டும்.

அந்த சகோதர காட்டு நாய்கள் எட்டு மாத காலத்தில் நேர்கோட்டில் சுமார் 260 மைல்கள் பயணித்தன. ஆனால், துண்டிக்கப்பட்ட நிலப்பரப்பைக் கடந்து செல்லும்போது, ஒட்டுமொத்தமாக அதைவிட கிட்டத்தட்ட 10 மடங்கு தூரம் பயணித்தன.

இத்தகைய பயணங்கள் 'பரவல்கள் ' என அழைக்கப்படுகின்றன.

இதில், துணை தேடி விலங்குகள் ஒருவழியாகப் பயணிக்கின்றன. இது, விலங்குகள் உணவு அல்லது வாழ்விடத்தைத் தேடிப் பருவங்களுக்கு ஏற்ப முன்னும் பின்னுமாக நகரும் வலசைப் பயணங்களிலிருந்து வேறுபட்ட ஒரு நடத்தையாகும்.

ஐ.நா.வின் இடம்பெயரும் உயிரினங்கள் தொடர்பான மாநாடு (UN Convention on Migratory Species), ஆப்பிரிக்காவின் மிக நீண்ட இடம்பெயர்வுகளாக தான்சானியா மற்றும் கென்யா இடையே பருவகால அடிப்படையில் நகரும் காட்டெருமைகளின் பயணத்தை குறிப்பிடுகிறது. மேய்ச்சல் மற்றும் தண்ணீரைத் தேடி அவை 400 மைல்களுக்கும் அதிகமான தூரம் பயணிக்கின்றன.

உலக அளவில், எந்தவொரு விலங்கினத்திலும் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட ஒற்றை இடம்பெயர்வை காரிபு மான்கள் மேற்கொள்கின்றன. அவை முன்னும் பின்னுமாக 839 மைல்கள் பயணிக்கின்றன. அதேவேளையில், சாம்பல் ஓநாய்கள் ஓர் ஆண்டில் 4,350 மைல்களுக்கும் அதிகமான தொலைவு பயணித்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த தொலைவை விட, காட்டு நாய்கள் ஜாம்பியா வழியாக மேற்கொண்ட பாதையே இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம்.

அவை வனவிலங்குகளின் முக்கிய வாழ்விடங்களுக்கு இடையே பயணித்தன. தலைநகர் லுசாகா உள்ளிட்ட முக்கிய மனித தடைகள் உள்ள பகுதிகளையும், பெருமளவில் வளர்ச்சியடைந்த தொழில்துறை பகுதிகளையும் அவை தவிர்த்துச்சென்றன.

கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள காட்டு நாய்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு ஆர்வலர்கள் முன்பு நம்பியதை விட இன்னும் அதிக அளவில் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மொன்டானா ஸ்டேட் பல்கலைக்கழகப் பேராசிரியரும், இந்த ஆய்வுக் கட்டுரையின் முதன்மை ஆசிரியருமான ஸ்காட் க்ரீல், 1991-ம் ஆண்டு முதல் ஆப்பிரிக்க காட்டு நாய்களை ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வு எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கை அளிப்பதாக அவர் கூறினார்.

"கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் வேலியிடப்பட்ட பகுதிகளைத் தவிர, அனைத்து முக்கிய காட்டு நாய் இனக்குழுக்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருக்கக்கூடும் என்று நம்புவதற்கு முகாந்திரம் உள்ளது" என்று அவர் கூறினார்.

ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, "கண்ணாடி பாதி காலியாகவும், பாதி நிரம்பியதாகவும் உள்ளது" என்று கூறிய அவர், வேட்டையாடுவதற்காக வைக்கப்படும் கண்ணிகளால் ஏற்படும் அச்சுறுத்தலையும் சுட்டிக்காட்டினார்.

மூன்று ஆண் காட்டு நாய்கள் தங்களின் அசாதாரண பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த நிலையில், மூன்று பெண் காட்டு நாய்களில் இரண்டு உயிரிழந்தன.

உயிர் பிழைத்த கூட்டத்தின் உறுப்பினர்கள் மீண்டும் மீண்டும் ஒரே இடத்துக்குத் திரும்பிய ஒரு போக்கை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது பெரும்பாலும் கூட்டத்தில் இருந்த மற்றொரு விலங்கு உயிரிழந்ததற்கான அறிகுறியாகும்.

ஈகாலஜி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே இயற்கையான நிலப்பரப்பின் குறுகிய பகுதிகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. சாலைகள், நகரங்கள் அல்லது பண்ணைகளால் துண்டிக்கப்பட்ட தனித்தனி வனவிலங்கு பகுதிகளை இந்த நிலப்பரப்புப் பகுதிகள் இணைக்கும்.

இந்த ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியரும், சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனமான தி நேச்சர் கன்சர்வன்சி'யின் காஃபு பாதுகாப்பு இயக்குநருமான புரூஸ் எல்லெண்டர், காட்டு நாய்கள் மற்றும் யானைகள் போன்ற பெரிய பரப்பளவில் சுற்றித்திரியும் உயிரினங்கள் எதிர்காலத்தில் உயிர்வாழ வேண்டுமெனில், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நிலப்பரப்புகள் தேவை என்று கூறினார்.

"இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளைத் தனித்தனி தீவுகளாகப் பார்த்துக்கொண்டு, அவை நீண்ட காலத்துக்கு செயல்படும் என்று எதிர்பார்க்க முடியாது. இதைவிட பரந்த அளவில் நாம் சிந்திக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு