கப்பல்கள் மீது தாக்குதல் எதிரொலி: ஹோர்மூஸ் நீரிணைக்கு இந்தியா போர்க் கப்பலை அனுப்பலாமா?

இரான் - அமெரிக்கா, ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை, இந்திய கப்பல்கள் மீது தாக்குதல், இந்தியா முன்னுள்ள வாய்ப்புகள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணை நெருக்கடி காரணமாகப் பல இந்தியக் கப்பல்கள் சிக்கியுள்ளன, அவை திரும்ப வருவதற்குத் தயார் நிலையில் காத்திருக்கின்றன
    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ஹோர்மூஸ் நீரிணையில் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இரண்டு இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் இந்தியாவுக்குச் சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள இரான் தூதர் முகமது ஃபதாலியை இந்தியா அழைத்து தனது கவலையைத் தெரிவித்தது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இரான் தூதருடனான சந்திப்பின் போது கடல்சார் பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வரும் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையில் பாதுகாப்பாகவும் தடையின்றியும் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று இரானுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

தனது கப்பல்களைப் பாதுகாப்பாகத் திரும்பக் கொண்டு வர இரான் மற்றும் பிற நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே சமயம், இந்தியாவில் உள்ள இரானின் அதி உயர் தலைவரின் பிரதிநிதியான அப்துல் மஜீத் ஹக்கீம் இலாஹி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "இரான் மற்றும் இந்தியா இடையிலான உறவு மிகவும் வலுவானது. இந்தச் சம்பவம் குறித்து எனக்குத் தகவல் இல்லை. எல்லாம் சரியாகிவிடும் என்றும், இந்த விவகாரம் தீர்க்கப்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம்," என்று கூறினார்.

சனிக்கிழமை வெள்ளை மாளிகையில் பிபிசியின் கூட்டாளியான சிபிசி நியூஸ் இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் பதிலளிக்கவில்லை.

ஹோர்மூஸ் நீரிணையில் என்ன நடந்தது?

இரான் - அமெரிக்கா, ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை, இந்திய கப்பல்கள் மீது தாக்குதல், இந்தியா முன்னுள்ள வாய்ப்புகள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இரானின் அதி உயர் தலைவரின் இந்தியாவில் உள்ள பிரதிநிதி டாக்டர் அப்துல் மஜீத் ஹக்கீம் இலாஹி, இரான் மற்றும் இந்தியா இடையிலான உறவு மிகவும் வலுவானது என்று கூறினார்.

சனிக்கிழமை டேங்கர் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் இணையதளமான 'டேங்கர் டிராக்கர்ஸ்', இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினர் (ஐஆர்ஜிசி) இரண்டு இந்தியக் கப்பல்களை ஹோர்மூஸ் நீரிணையில் இருந்து பின்வாங்கக் கட்டாயப்படுத்தியதாகக் கூறியது. இந்தச் சம்பவத்தின் போது 'துப்பாக்கிச் சூடு' நடந்ததாகவும் அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இருப்பினும், இந்தியக் கப்பல்கள் என்பதற்காகவே அவை குறிவைக்கப்பட்டன என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

பிபிசி வெரிஃபை செய்தியின்படி, ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்ட போது, இந்தியக் கொடி ஏந்திய 'ஜக் அர்னவ்' எனும் சரக்குக் கப்பல் மற்றும் 'சன்மார் ஹெரால்டு' எனும் எண்ணெய் டேங்கர் கப்பலைத் தங்களின் பாதையிலிருந்து விலகிச் செல்லுமாறு இரானின் ஐஆர்ஜிசி உத்தரவிட்டது.

பிரிட்டன் கடல்சார் வர்த்தகச் செயல்பாடுகள் (UK Maritime Trade Operations) தகவலின்படி, ஐஆர்ஜிசி ஒரு கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.

கடல்சார் போக்குவரத்தைப் பதிவு செய்யும் இணையதளங்களின்படி, இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இந்தியக் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையில் இருந்து பின்வாங்கின.

சன்மார் ஹெரால்டு எண்ணெய் கப்பல் இந்தியாவுக்கு எண்ணெயைக் கொண்டு வந்து கொண்டிருந்தது.

இந்தச் சம்பவத்திற்கு ஒரு நாள் முன்னதாகத்தான், ஹோர்மூஸ் நீரிணை போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டதாக இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இதை வரவேற்றிருந்தார்.

இருப்பினும், அமெரிக்கா தரப்பில் ஹோர்மூஸ் நீரிணையில் முற்றுகை தொடர்ந்தது. இதன் பிறகு இரான் ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக அறிவித்தது.

நெருக்கடிக்கு மத்தியிலும் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்த இந்தியக் கப்பல்கள்

இரான் - அமெரிக்கா, ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை, இந்திய கப்பல்கள் மீது தாக்குதல், இந்தியா முன்னுள்ள வாய்ப்புகள்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, மார்ச் 4 அன்று ஹோர்மூஸ் நீரிணையில் போக்குவரத்து முழுமையாக முடங்கியிருந்தது, இருப்பினும் பின்னர் அவ்வப்போது சில போக்குவரத்துகள் நடந்தன.

பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா-இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்திய பிறகு தொடங்கிய ஹோர்மூஸ் நெருக்கடிக்கு இடையே, இதுவரை குறைந்தது 10 இந்தியக் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்துள்ளன.

இந்திய ஊடகத் தகவல்களின்படி, வெள்ளிக்கிழமையும் இந்தியக் கொடி ஏந்திய எண்ணெய் கப்பல் ஒன்று ஹோர்மூஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்தது.

என்டிடிவி செய்தியின்படி, 31 ஊழியர்களுடன் 'தேஷ் கரிமா' என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் ஹோர்மூஸ் நீரிணையை கடந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தகவல்படி, இந்த நெருக்கடி காலத்தில் ஹோர்மூஸ் வழியாகச் சென்ற பத்தாவது இந்தியக் கப்பல் இதுவாகும்.

இருப்பினும், இந்தக் கப்பல்கள் அவ்வப்போதுதான் ஹோர்மூஸ் வழியாகச் செல்ல முடிகிறது. இந்த முக்கியமான கடல் பாதையில் இரான் கடுமையான முற்றுகையை வைத்துள்ளது.

மொத்த எண்ணெய் தேவையில் பெரும்பான்மையானதை வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு, அதனை கொண்டு வருவதற்கான முதன்மையான வழி ஹோர்மூஸ் நீரிணைதான்.

ஹோர்மூஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான, குறுகிய கடல் வழிகளில் ஒன்று. உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் இந்த வழியாகத்தான் செல்கிறது. இத்தகைய சூழலில், ஹோர்மூஸின் நிலைமை இந்தியாவின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவிடம் உள்ள அடுத்தக்கட்ட வாய்ப்புகள் என்ன?

இரான் - அமெரிக்கா, ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை, இந்திய கப்பல்கள் மீது தாக்குதல், இந்தியா முன்னுள்ள வாய்ப்புகள்

பட மூலாதாரம், Shady Alassar/Anadolu via Getty Images

படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்கா மற்றும் இரான் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது (கோப்புப் படம்).

சனிக்கிழமை நடந்த சம்பவத்திற்குப் பிறகு இரான் தூதரை அழைத்து இந்தியா தனது கவலையைத் தெரிவித்துள்ளது. ஆனால், இத்தகைய சூழலில் இந்தியாவிடம் வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன என்ற கேள்வி நீடிக்கிறது.

இரான் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியா மிகவும் யோசித்து, ஒரு சமநிலையான எதிர்வினையை அளித்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தற்போதைய நிலையில் இந்தியாவின் முன்னுரிமை எரிசக்தி பாதுகாப்பாகவே உள்ளது, எனவே இந்தியாவின் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

சர்வதேச விவகார நிபுணர் ஹர்ஷ் வி. பந்த் கூறுகையில், "ஹோர்மூஸ் நீரிணையின் தற்போதைய சூழலில் இந்தியா மட்டுமல்ல, உலகின் எந்த நாட்டிற்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. அமெரிக்கா மற்றும் இரானைத் தவிர உலகிலுள்ள மற்ற நாடுகளால் இங்கு பெரிய அளவில் எதையும் செய்ய முடியாது," என்கிறார்.

தற்போதைய மோதலில் அமெரிக்கா மற்றும் இரான் கைகளிலேயே அனைத்தும் உள்ளது என்றும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் இதன் பாதிப்பைக் குறைக்கவும் அல்லது இதைக் கட்டுப்படுத்தவும் கூடிய நிலையில் இல்லை என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பாதுகாப்பு ஆய்வாளர் உதய பாஸ்கர் கூறுகையில், ராஜதந்திரமே இந்தியாவின் சிறந்த வாய்ப்பு என்கிறார்.

"இந்தியாவிடம் உள்ள மிகச் சிறந்த வாய்ப்பு ராஜதந்திரமே. தற்போதைய ராணுவச் சூழலில் பேச்சுவார்த்தை ஒன்றே இந்தியாவுக்கு உள்ள ஒரே வழி," என்கிறார் உதய பாஸ்கர்.

கப்பல் போக்குவரத்து சுதந்திரத்திற்கான கோரிக்கை

இரான் - அமெரிக்கா, ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை, இந்திய கப்பல்கள் மீது தாக்குதல், இந்தியா முன்னுள்ள வாய்ப்புகள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சர்வதேச சட்டங்களின்படி கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லச் சுதந்திரம் உண்டு. ஆனால் போரின் போது இரான் ஹோர்மூஸை மூடியுள்ளது.

ஹோர்மூஸ் நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா தொடர்ந்து இரானுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்று வருகிறது. மேலும் 'கப்பல் போக்குவரத்து சுதந்திரம்' உரிமையையும் இந்தியா கோரியுள்ளது.

கப்பல் போக்குவரத்து சுதந்திரம் என்பது கடல்சார் சட்டத்தின் ஒரு அடிப்படை கொள்கையாகும். அதாவது ஒரு சுதந்திர நாட்டின் கப்பல், மற்ற நாடுகளின் தேவையற்ற தலையீடு இன்றி கடலில் பயணம் செய்ய முடியும். இந்தச் சட்டம் ஐக்கிய நாடுகள் கடல்சார் சட்ட உடன்படிக்கையின் (UNCLOS-1982) அடிப்படையில் அமைந்துள்ளது.

அந்த உடன்படிக்கையின்படி, கடல் பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 'பரந்த கடல்' எந்த நாட்டின் எல்லைக்கும் உட்பட்டது அல்ல, அங்கு அனைத்து நாடுகளுக்கும் முழுமையான சுதந்திரம் உண்டு. இதற்கு அடுத்ததாக 'தனித்துவமான பொருளாதார மண்டலம்' வருகிறது. இது கடற்கரையிலிருந்து 200 நாட்டிகல் மைல்கள் (Nautical Miles) வரை இருக்கும். இங்கே மீன்பிடிக்கவும், எண்ணெய்-எரிவாயு போன்ற வளங்களை எடுக்கவும் அந்தந்த நாட்டுக்கு உரிமை உண்டு.

அதேபோல், கடற்கரையிலிருந்து 12 கடல் மைல்கள் வரை உள்ள பகுதி அந்த நாட்டின் 'கடல் எல்லை' எனப்படும். இங்கே அந்த நாட்டின் அதிகாரம் இருந்தாலும், வெளிநாட்டுக் கப்பல்கள் 'இன்னோசென்ட் பேசேஜ்' அடிப்படையில் செல்ல உரிமை உண்டு.

இதன் பொருள், கடற்கரை உள்ள நாட்டின் சுதந்திரத்திற்கோ அல்லது இறையாண்மைக்கோ எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படுத்தாமல், கப்பல்கள் இந்த வழியாக அமைதியான முறையில் கடந்து செல்ல முடியும் என்பதாகும்.

ஆனால், ஹோர்மூஸ் நீரிணை போன்ற சர்வதேச நீரிணைகளுக்கு விதிகள் வேறு. இரண்டு பொருளாதார மண்டலங்களை இணைக்கும் நீரிணைகளில் 'டிரான்சிட் பேசேஜ்' (Transit Passage) விதி பொருந்தும். அதாவது அனைத்துக் கப்பல்களும் விரைவாகவும் தடையின்றியும் செல்ல உரிமை உண்டு.

ஹோர்மூஸ் நீரிணையைப் பொருத்தவரையில், சர்வதேச சட்டத்தின் கீழ், கடற்கரை நாடுகளான இரான் அல்லது ஓமனுக்கு எந்தவொரு கப்பலையும் நிறுத்தவோ அல்லது போக்குவரத்தை நிறுத்தி வைக்கவோ அல்லது தடை செய்யவோ உரிமை இல்லை.

ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில், சர்வதேச கடல்சார் அமைப்பு, சர்வதேச நீர்வழிகளில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை எந்த ஒரு நாடும் கட்டுப்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.

ஆனால் போர் தொடங்கியதிலிருந்து இரான் ஹோர்மூஸ் நீரிணையை மூடியுள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச எரிசக்தி சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சட்டத்தை அமல்படுத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்தாலும், அதை யார் அமல்படுத்துவார்கள் என்ற கேள்வி எழும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

உதய பாஸ்கர் கூறுகையில், "சர்வதேச சட்டத்தைப் பயன்படுத்த முயன்றால் எந்த முடிவும் கிடைக்காது. ஏனெனில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் போரின் போது சர்வதேச சட்டங்களை வெளிப்படையாக மீறியுள்ளன. அப்படியிருக்கும் போது இரான் மட்டும் சட்டத்தைப் பின்பற்றும் என எப்படி எதிர்பார்க்க முடியும்? தற்போது சர்வதேச சட்டத்தை அமல்படுத்தப் போவது யார்?" என்று கேள்வி எழுப்புகிறார்.

அதேநேரம், அமெரிக்கா-இரான் இடையிலான பதற்றத்தில் மற்ற நாடுகளின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஹர்ஷ் வி. பந்த் கூறுகையில், இந்த நெருக்கடியில் இந்தியா மட்டுமல்ல, உலகின் பிற நாடுகளாலும் பெரிய அளவில் எதையும் செய்ய முடியவில்லை என்கிறார்.

"அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான தற்போதைய மோதலில் மற்ற நாடுகளின் பங்கு பெரிதாகத் தெரியவில்லை. அமெரிக்காவும் இரானும் இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வரை, மற்ற நாடுகளுக்குச் சூழல் இப்படிச் சிக்கலாகவே நீடிக்கும்," என பந்த் கூறினார்.

இருந்தபோதிலும், இரானுடன் ராஜதந்திர ரீதியாக செயல்படுவதன் மூலம் இந்தியா சில முடிவுகளைப் பெற முடியும் என்று உதய பாஸ்கர் நம்புகிறார்.

பாஸ்கர் கூறுகையில், "இந்தியாவிடம் இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்தியா இரானுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கலாம் மற்றும் பதற்றத்தைத் தணிக்க பிரிக்ஸ் போன்ற தளங்களைப் பயன்படுத்தலாம். இந்தியா ராஜதந்திரப் பாதையிலேயே தொடர்ந்து பயணிக்க வேண்டும்," என்றார்.

ஹோர்மூஸ் நீரிணைக்கு இந்தியா போர்க்கப்பலை அனுப்பலாமா?

இரான் - அமெரிக்கா, ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை, இந்திய கப்பல்கள் மீது தாக்குதல், இந்தியா முன்னுள்ள வாய்ப்புகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் ஹோர்மூஸ் நீரிணையை மூடியுள்ளது, அதே சமயம் அமெரிக்காவும் முற்றுகையிட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா 'ஆபரேஷன் எரிசக்தி பாதுகாப்பு' (Operation Urja Suraksha) என்ற திட்டத்தைத் தொடங்கியது. இதன்படி இந்தியாவின் ஐந்துக்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவில் உள்ளன.

இரான் முகமைகளுடன் ஒருங்கிணைந்து, எல்பிஜி எரிவாயு ஏற்றிய கப்பல்களை இந்தியக் கடற்படையின் பாதுகாப்பில் இந்தியா ஹோர்மூஸ் நீரிணை வழியாக அழைத்து வந்துள்ளது. ஆனால் தற்போதைய சூழலில் ஹோர்மூஸ் நீரிணைக்கு இந்தியா போர்க்கப்பலை அனுப்பலாமா என்றால், 'முடியாது' என்பதே ஆய்வாளர்களின் பதில்.

உதய பாஸ்கர் கூறுகையில், "ஹோர்மூஸ் நீரிணையில் இருந்து கப்பல்களை ராணுவ பாதுகாப்புடன் அழைத்து வருவது சாத்தியமில்லை. ஹோர்மூஸ் நீரிணையை விட்டு வெளியேறிய சரக்கு கப்பல்களை அதன் பின்னர் இந்தியக் கடற்படை பாதுகாப்பாக அழைத்து வருவது நிச்சயமாக சாத்தியம்," என்கிறார்.

"ராணுவ வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பது மட்டுமல்லாமல், அவை மிகுந்த ஆபத்தானவையும் கூட. அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதன் விளைவுகள் எதிர்மறையாகவே இருக்கும்," என பாஸ்கர் தெரிவித்தார்.

பாஸ்கர் கூறுகையில், "இங்கே கடல் கண்ணிவெடிகளும் விதைக்கப்பட்டுள்ளன, எனவே இப்பகுதி சரக்குக் கப்பல்களுக்கு மட்டுமல்ல, போர்க்கப்பல்களுக்கும் கூட மிகவும் அபாயகரமானது," என்றார்.

அதே சமயம், தற்போதைய சூழலில் ஹோர்மூஸில் இரானின் பிடி மிகவும் வலுவாக இருப்பதால், உலகின் எந்தவொரு கடற்படையும் அதை உடைத்துக்கொண்டு வெளியே வருவது மிகவும் கடினம் என்று ஹர்ஷ் வி. பந்த் நம்புகிறார்.

"இரானின் பிடி மிகவும் வலுவாக உள்ளது, உங்கள் திறமைகள் எவ்வளவுதான் வலிமையாக இருந்தாலும், அவற்றின் எல்லைகள் அங்கு வெளிப்பட்டுவிடுகின்றன. எந்த ஒரு நாடும் அங்கு தன்னிச்சையாகச் செயல்பாடுகளை முன்னெடுக்க முடிவதில்லை," என்றார் பந்த்.

இதற்கு ஒரு காரணம் ஹோர்மூஸ் நீரிணையின் புவியியல் அமைப்பாகும். "அந்தப் பகுதியின் புவியியல் மற்றும் நிலப்பரப்பு அமைப்பு எப்படி இருக்கிறதென்றால், வெளிப்புறத் தலையீடு எதுவும் எளிதாக நடப்பது சாத்தியமற்றது. இரானின் பிடி மிகவும் வலுவாக இருப்பதால், உங்கள் ராணுவத் திறன்கள் எவ்வளவுதான் வலிமையாக இருந்தாலும், அவற்றின் எல்லைகள் அங்கே தெளிவாகத் தெரிந்துவிடுகின்றன," என்கிறார் பந்த்.

தற்போதைய சூழலில் விரைவான முன்னேற்றம் ஏற்படும் என்பதற்கான நம்பிக்கை குறைவாகவே உள்ளது. திங்கட்கிழமை, பாகிஸ்தானில் இரானுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்கா அறிவித்தது, ஆனால் இரான் அதிலிருந்து பின்வாங்கியது.

அமெரிக்கா மற்றும் இரான் இடையே ஒரு ஒப்பந்தம் அல்லது போர் நிறுத்தம் ஏற்படும் வரை நிலைமை இப்படியேதான் இருக்கும் என்று ஹர்ஷ் பந்த் நம்புகிறார்.

"அமெரிக்காவும் இரானும் ஒரு உடன்பாட்டை எட்டும் வரை, தனது பிடியைத் தளர்த்துவதற்கு இரானுக்கு எந்த காரணமும் இல்லை," என்கிறார் பந்த்.

தற்போதைய நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கை குறைவாகவே உள்ளது. "இரான் ஓரம் கட்டப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற இன்னும் பல சம்பவங்கள் நடக்கக்கூடும்," என்கிறார் உதய பாஸ்கர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு