செஃப் தாமு: கின்னஸ் சாதனைகள் முதல் மதிய உணவுத் திட்டம் வரை
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு, உடல்நலக் குறைவால் காலமானார். 72 வயதாகும் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , அக்டோபர் 25-ஆம் தேதி காலை உயிரிழந்தார்.
உணவக மேலாண்மை மற்றும் சமையல் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய சமையல் கலைஞர் என்ற பெருமைக்குரியவர் தாமு.
கடந்த 1986-ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் இணைந்த அவர், பல உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். அவர், ஏராளமான சமையல் புத்தகங்களையும் எழுதியுள்ளார். 22 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளை வழங்கிய அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராகப் பங்கேற்று ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.
தொடர்ந்து 24 மணி நேரத்துக்கும் மேலாகச் சமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்த அவர், உலகின் நீளமான தோசையை தயாரித்தது, உலகின் மிகப் பெரிய கறி உணவைத் தயாரித்தது என சமையல் துறையில் மூன்று கின்னஸ் சாதனைகளில் இடம்பெற்றுள்ளார்.
தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகளைப் பிரபலப்படுத்தியதுடன், பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்திலும் பங்களித்தார்.. 2008 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் மதிய உணவுத் திட்டத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்ட அவர், எட்டு வகையான சாதங்கள், ஆறு வகை முட்டை உணவுகளை அறிமுகப்படுத்த உதவியதாக குடியரசுத் தலைவர் மாளிகையின் ஆவணம் தெரிவிக்கிறது.
சமையல் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, 2025-ஆம் ஆண்டு மத்திய அரசு அவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



