கேகேஆர் எழுச்சி: கடைசி இடத்தில் இருந்த அணி தொடர்ந்து 4 வெற்றிகளை பெற்றது எப்படி?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இந்த சீசன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எளிதாக இருக்கவில்லை. தொடர் காயங்களால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அவர்கள் முதல் 6 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி மழையால் தடைபட்டதால் ஒரு புள்ளி கிடைத்தது. அந்த முதல் 6 போட்டிகளில் அவர்கள் பெற்றிருந்த ஒரே புள்ளி அதுதான். மற்ற 5 போட்டிகளிலுமே தோற்றிருந்தார்கள்.
ஆனால், தற்போது தொடர்ச்சியாக 4 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது அந்த அணி. ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிகளைப் பதிவு செய்த கேகேஆர், நேற்று (மே 8) டெல்லி கேபிட்டல்ஸ் அணியையும் வீழ்த்தியது.
டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 142 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. பின்னர் அந்த இலக்கை 14.2 ஓவர்களிலேயே சேஸ் செய்தது நைட் ரைடர்ஸ். அந்த அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் 10 போட்டிகளில் 9 புள்ளிகள் பெற்று 7வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது அஜிங்க்யா ரஹானேவின் அணி. நெருக்கடியான இந்த கட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற டாப் 4 இடத்தில் இருக்கும் அணிகளே அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கும்போது, கேகேஆர் தோல்விகளில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருப்பதன் காரணம் என்ன?

பட மூலாதாரம், ANI
வருண் சக்கர்வர்த்தியின் எழுச்சி
கொல்கத்தாவின் இந்த 4 வெற்றிகளிலும் இருக்கும் ஒரு பொதுவான விஷயம் அவர்களின் சிறப்பான பந்துவீச்சு. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 155 ரன்களுக்குக் கட்டுப்படுத்தியது கேகேஆர். அடுத்த போட்டியில் லக்னோவையும் அதே ஸ்கோருக்குக் கட்டுப்படுத்தி ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு எடுத்துச் சென்று வென்றார்கள். பின்னர், சன்ரைசர்ஸை 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஆல் அவுட் ஆனது அந்த ஒரு போட்டியில் தான். நேற்று டெல்லி கேபிட்டல்ஸ் 20 ஓவர்களில் எடுத்தது 142 ரன்கள் தான்.
இந்த 4 போட்டிகளில் ஒன்றில் கூட எதிரணி 165 ரன்களைக் கடக்கவில்லை. ஆனால், அதற்கு முந்தைய போட்டிகளிலோ அவர்களின் பௌலர்கள் பெரிதளவு தடுமாறினார்கள். முதல் போட்டியில் 220 ரன்கள் எடுத்தும், மும்பை பேட்டர்களை கேகேஆர் பௌலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. சன்ரைசர்ஸோ 226 ரன்கள் விளாசியது. லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராகவும் 180+ ஸ்கோர்களை அவர்களால் டிஃபண்ட் செய்ய முடியவில்லை.
எப்போது வருண் சக்கர்வர்த்தி தன் ஃபார்மை மீட்டாரோ அப்போது தான் கேகேஆர் பந்துவீச்சில் இந்த மாற்றம் எழுந்தது. டி20 உலகக் கோப்பையின் கடைசி கட்டத்தில் ஃபார்மை இழந்து தவித்த வருண், இந்த ஐபிஎல் சீசனின் ஆரம்ப கட்டத்திலுமே தடுமாறினார். சீசனின் முதல் இரு போட்டிகளில் வருண் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. காயம் என்று கூறி அடுத்த 2 போட்டிகளிலும் அவர் வெளியே அமரவைக்கப்பட்டார். அதன்பிறகு மீண்டும் களமிறங்கிய அவர், சேப்பாக்கத்தில் நடந்த முதல் போட்டியில் விக்கெட் வீழ்த்தவில்லை. ஆக, அவர் ஆடிய முதல் 3 போட்டிகளிலும் ஒரு விக்கெட் கூட இல்லை.
ஏப்ரல் 17ம் தேதி குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் இந்த சீசனில் தன்னுடைய முதல் விக்கெட்டை வீழ்த்தினார் வருண். அந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து அவர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்கள் (எகானமி - 3.5) மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார் வருண் சக்கரவர்த்தி. இந்த சீசனில் தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது கேகேஆர். வருண் ஆட்ட நாயகன் ஆனார்.
லக்னோவுக்கு எதிராக 33 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள். நைட் ரைடர்ஸ் வெற்றி.
சன்ரைசர்ஸுக்கு எதிராக 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள். இரண்டாவது ஆட்ட நாயகன் விருது. அவர் அணிக்கு 3வது வெற்றி.
மீண்டும் மிரட்டும் ஸ்பின் யூனிட்

பட மூலாதாரம், ANI
வருண் சிறப்பாக செயல்படத் தொடங்கியதால் தான் கொல்கத்தா வெற்றி பெறத் தொடங்கியது என்றில்லை. வருண் ஃபார்முக்குத் திரும்பியது, அவர்களின் ஸ்பின் யூனிட்டை முன்பைப் போல் பெரும்பலம் கொண்டதாக மாற்றியது. என்னதான் சுனில் நரைன் சிறப்பாகப் பந்துவீசிக் கொண்டிருந்தாலும் அவரால் தனியாக தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. அனுகூல் ராய் கூட பெரும்பாலும் பவர்பிளேவிலும், இரு வலது கை பேட்டர்கள் களத்தில் இருக்கும்போதுமே பயன்படுத்தப்பட்டார். அதனால், கேகேஆர் அணியால் ஆட்டத்தை அவர்களின் கைகளுக்குள் வைத்திருக்க முடியவில்லை.
வருண் ஃபார்முக்கு மீண்டதும் நரைன் - வருண் கூட்டணி தங்களின் வழக்கமான மாயாஜாலத்தை நிகழ்தத் தொடங்கியது. பேட்டர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி மிடில் ஓவர்களில் எதிரணிகளுக்கு வேகத்தடை போட்டார்கள். ரன்ரேட் குறையும் நெருக்கடியில் பெரிய ஷாட்கள் ஆடிய போது பேட்டர்கள் தங்கள் விக்கெட்டுகளை இழந்தார்கள். அது அந்த நெருக்கடியை மேலும் அதிகரித்தது. அவ்வப்போது அனுகூல் ராயும் அதில் இணைந்ததால், நீண்ட ஸ்பெல்களுக்கு ஸ்பின்னர்களை பயன்படுத்த முடிந்தது. அதனால், கடந்த காலங்களில் கொல்கத்தா அணியின் வெற்றி மந்திரமாக இருந்த அந்த 'ஸ்பின் சோக்' (Spin Choke) வேலை செய்யத் தொடங்கியது.
ஏப்ரல் 19-ஆம் தேதி ஈடன் கார்டனில் நடந்த போட்டியில், 8 ஓவர்களில் விக்கெட் ஏதும் இழக்காமல் 79 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 9வது ஓவர் - முதல் முறையாகப் பந்துவீச வந்தார் வருண் சக்கரவர்த்தி. நான்காவது பந்தில் சூர்யவன்ஷி அவுட். 11வது ஓவரில் ஜுரெல் விக்கெட்டையும் வீழ்த்தினார் வருண். 12வது ஓவரில் நரைன் ஜெய்ஸ்வால் விக்கெட்டைக் கைப்பற்றினார். 15வது ஓவர் வருண் பந்துவீச்சில் பராக் அவுட். அடுத்த ஓவரில் நரைன் பந்துவீச்சில் டானவன் ஃபெரீரா அவுட்.
8 ஓவர் இடைவெளியில் கேகேஆர் ஸ்பின்னர்கள் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். அந்த 8 ஓவர்களில் எடுக்கப்பட்டது 45 ரன்கள் மட்டுமே. அதில் 18 ரன்கள் வேகப்பந்துவீச்சாளர்கள் வீசிய 2 ஓவர்களில் வந்தது. இதுதான், ஃபார்மில் இருக்கும் கேகேஆர் ஸ்பின்னர்களால் என்ன செய்ய முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு.
நேற்று (மே 8) டெல்லிக்கு எதிராக நடந்த போட்டியிலுமே மிடில் ஓவர்களில் இப்படித்தா நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். 8 ஓவர்கள் முடிவில் டெல்லியின் ஸ்கோர் 74/2. அடுத்த 6 ஓவர்கள் முழுவதும் ஸ்பின்னர்களையே பயன்படுத்தினார் ரஹானே. வருண், நரைன், அனுகூல் மூவரும் இணைந்து அந்த 6 ஓவர்களில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள். அது அக்ஷர் - அஷுதோஷ் கூட்டணிக்கு நெருக்கடி ஏற்படுத்த அவர்கள் முற்றிலும் தங்கள் வேகத்தைக் குறைத்துக் கொண்டார்கள்.
பவர்பிளேவுக்கு பின்பான கம்பேக்

பட மூலாதாரம், ANI
இந்த ஐபிஎல் சீசனில் பவர்பிளேவில் சிறப்பாக செயல்படும் அணியே பெரும்பாலும் போட்டியையும் வெல்கின்றன. அதனால், பவர்பிளேவில் சிறப்பாக செயல்படவேண்டியது மிகவும் அவசியமானதாக மாறியிருக்கிறது. ஆனால், கேகேஆர் அணியின் நிலையோ முற்றிலும் மாறுபட்டது. அவர்கள் வென்றிருக்கும் 4 போட்டிகளில் ஒன்றில் கூட கொல்கத்தா அணி பவர்பிளேவில் பெரிதாக சாதிக்கவில்லை. மூன்றில் பின்னடைவையே சந்தித்திருந்தது.
கேகேஆர் அணியின் கடைசி 4 போட்டிகளில் இரு அணிகளின் பவர்பிளே செயல்பாடு:
- ஏப்ரல் 19: ராஜஸ்தான் ராயல்ஸ் - 63/0; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 51/3 - ராயல்ஸ் முன்னிலை
- ஏப்ரல் 26: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 31/3; லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் - 37/1 - சூப்பர் ஜெயின்ட்ஸ் முன்னிலை
- மே 3: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 71/1; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 71/1 - சமன்
- மே 8: டெல்லி கேபிட்டல்ஸ் - 55/1; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 43/2 - கேபிட்டல்ஸ் முன்னிலை
பவர்பிளேவில் பின்தங்கியிருந்தாலும், ஸ்பின்னர்களின் ஆதிக்கம் கொல்கத்தாவை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவந்துவிடுகிறது. அதனால், எதிரணிகளின் ரன்ரேட் பெரும் பின்னடைவை சந்தித்துவிடுகின்றன. அதனால் பவர்பிளேவில் வெற்றி பெறாவிட்டாலும், மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு கொல்கத்தாவால் அதன்பிறகு ஆட்டத்தை தங்கள் கைகளுக்குள் கொண்டுவர முடிகிறது.
அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் கார்த்திக் தியாகி, வைபவ் அரோரா இருவரும் டெத் ஓவர்களில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். மிடில் ஓவர்களில் ஏற்படுத்தப்படும் நெருக்கடியை அறுவடை செய்து விக்கெட்டுகள் வீழ்த்துகிறார்கள். சிக்கனமாகவும் பந்துவீசுகிறார்கள்.
ராயல்ஸுக்கு எதிரான போட்டியின் 19வது ஓவரில் ஜடேஜா, ஹெட்மெயர் உள்பட 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் கார்த்திக் தியாகி. டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியின் கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டும் கொடுத்தார் அவர். 1 ரன் அவுட் உள்பட, 2 விக்கெட்டுகள் அந்த ஓவரில் வீழ்ந்தன. இப்படி டெத் ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்கள் சோபிப்பதும் கொல்கத்தாவின் பந்துவீச்சு இப்போது முழுமையாகத் தெரிவதற்கான காரணம்.
கேகேஆர் பௌலர்களின் இந்த செயல்பாடு, அவர்களின் பேட்டர்களுக்குமே உதவி புரிந்திருக்கிறது. எதிரணிகள் 165-க்கும் குறைவான ஸ்கோர்களே எடுப்பதால், சேஸ் செய்யும்போது கேகேஆர் அணியால் பழைய பாணியைக் கடைபிடித்து வெற்றியை ஈட்ட முடிகிறது. அதாவது, ஆரம்பம் முதலே அதிரடியை வெளிப்படுத்தாமல், மெல்ல இன்னிங்ஸைக் கட்டமைக்க அவர்களால் முடிகிறது.
ரன்ரேட் நெருக்கடி இல்லாததும், தங்கள் ஸ்பின்னர்கள் அளவுக்கு மிடில் ஓவர்களில் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய வலுவான சுழல் கூட்டணி எதிரணிகளில் இல்லாததும் கேகேஆர் பேட்டர்கள் தங்கள் இன்னிங்ஸைக் கட்டமைக்க உதவுகிறது. அப்படியான தருணங்களில் பேட்டிங் செய்து நல்ல ஸ்கோர் எடுத்தது ஃபார்ம் இல்லாமல் தவிர்த்த கேமரூன் கிரீன், ரிங்கு சிங் போன்ற பேட்டர்கள் ஃபார்முக்குத் திரும்பவும் உதவிபுரிந்திருக்கிறது.
இப்படியாக வருண் சக்கரவர்த்தி ஃபார்முக்கு வந்து சிறப்பாக செயல்பட, அது கொல்கத்தாவின் ஸ்பின் யூனிட்டைப் பலப்படுத்த, அது எதிரணிகளை குறைந்த ஸ்கோர்களுக்குக் கட்டுப்படுத்த, அது கேகேஆர் பேட்டர்களும் நெருக்கடி இல்லாமல் விளையாடுவதற்கு வழிவகுக்க, அதனால் அவர்களும் ஃபார்முக்குத் திரும்ப... இப்போது ஒரு முழுமையான அணியாக வலம் வந்துகொண்டிருக்கிறது நைட் ரைடர்ஸ். அதனால் தங்களின் தொடர்ச்சியான நான்காவது வெற்றியையும் பதிவு செய்திருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























