'காஸாவின் கடும் குளிரில் அரைநிர்வாணமாக்கி சித்ரவதை செய்தனர்' - ஒரு பாலத்தீன குடிமகனின் வாக்குமூலம்

இஸ்ரேல், பாலத்தீனம், இஸ்ரேல்-பாலத்தீனர்கள், போர்க் குற்றங்கள், மனித உரிமை
படக்குறிப்பு, இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன
    • எழுதியவர், ஈதர் ஷைல்பி, ஷிரீன் யூசுப்
    • பதவி, பிபிசி நிருபர், அரபு சேவை

22 வயதான பாலத்தீனர் ஒருவர் கடந்த வியாழனன்று பிபிசியிடம், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் (IDF) வடக்கு காஸாவில் தான் சிறைப்பிடிக்கப்பட்டதையும், அதன் பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

அவருடன் சேர்த்து காஸா பகுதியைச் சேர்ந்த பலரை இஸ்ரேலிய இராணுவம் கைது செய்தது. இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை பிபிசி உறுதி செய்தது. அதில் உள்ளாடை மட்டுமே அணிந்த பல ஆண்கள் தரையில் முட்டிபோட்டவாறு இருப்பதைக் காண முடிகிறது. அருகே நிற்கும் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் அவர்களது துணிகளை அப்புறப்படுத்துவதைக் காண முடிகிறது.

காஸா பகுதிக்கு வடக்கே உள்ள பெய்ட் லஹியாவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

"அவர்கள் எங்களை சாலையில் அமர வைத்தனர்," என்று ஒரு இளைஞர் தொலைபேசியில் பிபிசியிடம் கூறினார். பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மற்றும் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து அவர், "சுமார் மூன்று மணி நேரம் அங்கேயே அமர்ந்திருந்தோம். லாரிகள் வந்த பின்னர் எங்கள் கைகளையும் கண்களையும் கட்டினர். பின்னர் வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்," என்று விவரித்தார்.

அந்த வீடியோவில், ஏராளமான ஆண்கள் சாலையோரம் வரிசையாக அமர்ந்திருப்பதைக் காணலாம். காலணிகளைக் கழற்றச் சொன்னதாகத் தெரிகிறது. அவர்களது காலணிகள் எங்கும் சிதறிக் கிடக்கின்றன.

அந்த வீடியோவில் இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் கவச வாகனங்கள் அவர்களைச் சுற்றி இருப்பதையும், இராணுவ வீரர்கள் அந்த ஆண்களைக் கண்காணித்துக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது.

இஸ்ரேலிய இராணுவத்தால் கேட்கப்பட்ட கேள்விகள்

இச்சம்பவம் தொடர்பான மற்றுமொரு வீடியோவில் இவர்கள் இராணுவ ட்ரக் வண்டிகளில் எங்கோ அழைத்துச் செல்லப்படுவதைக் காணமுடிகிறது.

இவர்களை இஸ்ரேல் ராணுவத்திடம் சரணடைந்த ஹமாஸ் தீவிரவாதிகளாக இஸ்ரேல் ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன.

ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், தான் மிகவும் மோசமான முறையில் விசாரிக்கப்பட்டதாக அந்த இளைஞர் கூறினார். பாலத்தீன கிளர்ச்சிக் குழுவான ஹமாஸ் உடனான அவரது தொடர்பு குறித்து கேட்கப்பட்டது.

மற்றொரு புகைப்படம் (பிபிசி அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை) அவர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மண்டியிட்டு இருப்பதைக் காட்டுகிறது. இவர்கள் ஒரு மணல்மேடு அருகே அமர்ந்திருப்பதாகத் தெரிகிறது.

‘வெறும் காலில் உடைந்த கண்ணாடிமேல் நடக்க வைத்தனர்’

இஸ்ரேல், பாலத்தீனம், இஸ்ரேல்-பாலத்தீனர்கள், போர்க் குற்றங்கள், மனித உரிமை

பட மூலாதாரம், MOHAMMED LUBBAD

இந்த 22 வயது இளைஞரின் புகைப்படமே போதுமான ஆதாரமாக இருக்கிறது. சம்பவம் நடந்த இடம் குறித்து பிபிசியிடம் அவர் கூறியதும் சரியாக ஒத்துப் போகிறது. தானும், தன் தந்தையும், ஐந்து உறவினர்களும் அழைத்துச் செல்லப்பட்ட இடம் மணல் மேடுகளால் நிறைந்திருந்தது என்று அவர் கூறியிருந்தார்.

தான் அங்கு கிட்டத்தட்ட முழு நிர்வாணமாக விடப்பட்டதாகவும், இருப்பினும் இரவில் போர்த்துவதற்கு ஒரு போர்வை வழங்கப்பட்டது எனவும் அவர் கூறுகிறார்.

கேள்விகளுக்கு பதில் அளித்த பின் ஒரு புதிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

அவர் கூறுகையில், “எனது தந்தை மற்றும் எனது உறவினர் தவிர அனைவரும் விடுவிக்கப்பட்டோம். எனது தந்தை ஐக்கிய நாடுகளின் நிவாரண நிறுவனமான UNRWA உடன் பணிபுரிகிறார். எதற்காக அவரை அழைத்துச் சென்றார்கள் என்று எனக்கு புரியவில்லை," என்றார்.

அவர் தொடர்ந்து, "கற்கள் மற்றும் உடைந்த கண்ணாடிகள் சிதறிக் கிடந்த இருள் நிறைந்த சாலையில் வெறுங்காலுடன் நடந்தோம்," என்கிறார்.

சிறைபிடிக்கப்பட்ட 400 பேர்

இஸ்ரேல், பாலத்தீனம், இஸ்ரேல்-பாலத்தீனர்கள், போர்க் குற்றங்கள், மனித உரிமை

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பாலத்தீன குடிமகனான முகமது லுபாத் பெல்ஜியத்தில் வசித்து வருகிறார்.

அவர், 10 குடும்ப உறுப்பினர்களுடன் கைது செய்யப்பட்ட தனது சகோதரர் இப்ராஹிமைப் பற்றி சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஒரு புகைப்படத்தில், கைது செய்யப்பட்டவர்கள் மத்தியில் அமர்ந்திருந்த அண்ணன் இப்ராஹிமின் முகத்தை வட்டமிட்டு, 'இவர் என் சகோதரர்' என்று எழுதியுள்ளார். அந்த படத்தில், அவரது சகோதரர் தனது பெயர் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்துள்ளார்.

பின்னர் இது குறித்து பிபிசியிடம் பேச முகமது ஒப்புக்கொண்டார்.

"என் அண்ணன் இப்ராஹிமை கைது செய்து அழைத்துச் செல்வதற்கு முன், வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் இரண்டு மணி நேரம் பேசினேன். என் சகோதரர் ஒரு கணினிப் பொறியாளர்," என்று அவர் கூறினார்.

இப்ராஹிமுக்கு இரண்டு மகள்கள் இருப்பதாக அவர் பிபிசியிடம் கூறினார்.

தங்கள் வீடு மற்றும் பெய்ட் லஹியா கிராமம் முழுவதும் இஸ்ரேலிய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக சகோதரர் தன்னிடம் கூறியதை முகமது நினைவு கூறுகிறார்.

அவர் தொடர்ந்து கூறியது "இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு நான் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவைப் பார்த்தேன். அதில் என் சகோதரனை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டேன், மேலும் சில அண்டை வீட்டுக்கார்களையும் அந்த வீடியோவில் பார்த்தேன்."

இரண்டு உறவினர்களைத் தவிர அவரது மற்ற உறவினர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் 35 வயதான அஹ்மத் லுபாத், ஆசிரியர் வேலை பார்க்கும் அவர் நான்கு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். மனித உரிமை ஆர்வலரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமான அய்மன் லுபாத் என்ற உறவினரும் இதில் உள்ளார்.

தனது குடும்பம் மிகவும் சாதாரணமானது என்றும் இராணுவத்துடன் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறுகிறார் முகமது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் உறவினர் பிபிசியிடம் கூறுகையில், இஸ்ரேல் மொத்தம் 400 பேரை சிறை பிடித்தது, அதில் 250 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.

இஸ்ரேல் ராணுவத்தின் பதில் என்ன?

இஸ்ரேல், பாலத்தீனம், இஸ்ரேல்-பாலத்தீனர்கள், போர்க் குற்றங்கள், மனித உரிமை

பட மூலாதாரம், அல்-அரேபி அல்-ஜதீத்

படக்குறிப்பு, பாலத்தீன பத்திரிகையாளர் தியா அல்-கஹ்லூத்

வீடியோவைப் பற்றி கேட்டபோது, ​​இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம், பிடித்து வைக்கப்பட்ட அனைவரும் இராணுவத்தில் சேரும் வயதுடையவர்கள் என்றும், மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவர்கள் இவர்கள் என்றும் கூறினார்.

வடக்கு காஸாவில் தரைவழித் தாக்குதல்களை நடத்துவதற்கு முன், காஸாவின் சமவெளியில் இருந்து தெற்கே செல்லுமாறு இங்குள்ள மக்களை இஸ்ரேல் கேட்டுக் கொண்டது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் புகைப்படம் மற்றும் வீடியோ பற்றி நேரடியாகக் கருத்து தெரிவிக்காமல், "இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் வீரர்கள் மற்றும் ஷின் பெட் அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளை பிடித்து வைத்து விசாரித்தனர்," என வியாழனன்று கூறினார் இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி.

அவர் தொடர்ந்து கூறியது, "இவர்களில் பலர் 24 மணித்தியாலங்களுக்குள் எமது படைகளிடம் சரணடைந்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் அவர்களிடம் இருந்து பெறப்படும் புலனாய்வுத் தகவல்கள் யுத்தத்தைத் தொடரப் பயன்படுத்தப்படும்."

இஸ்ரேலிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் எலோன் லெவி வெள்ளிக்கிழமை பிபிசியிடம், வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா மற்றும் ஷெஜாயாவில் மக்கள் சிறை பிடிக்கப்பட்டதாகக் கூறினார். இந்த இரண்டு இடங்களும் "ஹமாஸின் கோட்டைகளாகவும் அவர்களின் முக்கிய சந்திப்பு பகுதிகளாகவும் கருதப்படுகின்றன," என்றார்.

இவர்களில் யார் ஹமாஸ் பயங்கரவாதிகள், யார் பொது மக்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.

'இஸ்ரேலிய இராணுவத்தின் அட்டூழியத்திற்கு இந்த படங்களே சாட்சி"

இங்கிலாந்திற்கான பாலத்தீன தூதர் தனது சமூக ஊடகப் பதிவில், "ஐ.நா. முகாம்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட சாதாரண குடிமக்களை இஸ்ரேலிய இராணுவம் நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியதை அறிவிக்கும் படங்கள் இவை," என்று கூறினார்.

"இந்த படங்கள் மனிதகுல வரலாற்றில் மிக மோசமான நினைவுகளுக்கு சாட்சியாக இருக்கும்," என்று தூதர் ஹுஸாம் ஸோம்லாட் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் பாலத்தீன ஊடகவியலாளரான தியா அல் கஹ்லூத்தும் அடங்குவார். அவர் அல்-அரபி அல்-ஜாதித் என்ற அரபு செய்தித்தாளின் காஸா பணியகத் தலைவர் ஆவார். இதை அந்த செய்தித்தாள் வியாழக்கிழமை அன்று உறுதிப்படுத்தியது.

தியா அல் கஹ்லூத்தின் உறவினர், முகமது அல்-கஹ்லூத், காஸாவில் பிபிசியில் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராகப் பணிபுரிகிறார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 24 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

"அவர்களில் 12 பேரை நான் வைரலான வீடியோக்கள் மற்றும் படங்களிலிருந்து அடையாளம் கண்டுக் கொண்டேன்," என்கிறார் 27 வயதான முகமது.

அதில் ஏழு நபர்கள் மட்டுமே வெள்ளிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டதாக அவர் கூறுகிறார்.

"விடுதலை செய்யப்பட்டவர்கள் காஸாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லைக்கு அருகில் விடுவிக்கப்பட்டனர். எனக்குத் தெரிந்தவரை, ஜிகிம் அருகே உள்ள எல்லையில் இஸ்ரேலிய இராணுவத்தால் விடுவிக்கப்பட்டனர்," என்கிறார் முகமது.

அவரது உறவினர்கள் வீட்டிற்கு செல்ல ஆறு கிலோமீட்டர்கள் நடக்க வேண்டியிருந்தது என முகமது கூறுகிறார்.

ஒரு அரபு மொழி செய்தி இணையதளம் (நியூ அரப் என்ற ஆங்கில மொழி இணையதளம் அதற்கு உள்ளது) அல்-கஹ்லூத்தின் கைது மிகவும் அவமானகரமானது என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

"பாலத்தீன பிராந்தியத்தில் நடக்கும் பத்திரிகையாளர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை சர்வதேச சமூகம், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைகளுக்காகப் பணியாற்றும் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் ஏஜென்சிகள் கண்டிக்க வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அந்த செய்தித்தாள் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தியா அல்-கஹ்லூத்தை கைது செய்ததாக கூறப்படும் ஐடிஎஃப்-யிடம் இது குறித்து பிபிசி கேள்வி எழுப்பியுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)