'அனைவரின் பெயரும் நினைவில் இருப்பதில்லை' – 58 குழந்தைகளின் தந்தையான முகமது சாதிக்கின் கதை

தனது குழந்தைகளுடன் முகமது சாதிக்
படக்குறிப்பு, தனது குழந்தைகளுடன் முகமது சாதிக்
    • எழுதியவர், தோர்பெகாய்
    • பதவி, கர்னி பிபிசி நியூஸ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஆப்கானிஸ்தானில் பெரிய குடும்பங்களையும் அதிக குழந்தைகளைக் கொண்ட தம்பதிகளையும் காண்பது வழக்கமானதுதான். ஆனால், உருஸ்கான் மாகாணத்தைச் சேர்ந்த முகமது சாதிக்கின் குடும்பம், அந்த நாட்டின் மிகப் பெரிய குடும்பங்களில் ஒன்றாக இருக்கக்கூடும்.

முகமது சாதிக்கிற்கு நான்கு மனைவிகள் மூலம் 58 குழந்தைகள் உள்ளனர். அவரது இளைய குழந்தை பிறந்து சில வாரங்களே ஆகின்றன. இவ்வளவு பெரிய குடும்பத்தைப் பராமரிப்பது அவருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் உணவு கிடைப்பதை உறுதிசெய்வதில்தான் தமது பெரும்பாலான நேரமும் முயற்சியும் செலவாகின்றன என்று அவர் கூறுகிறார். பொருளாதார நெருக்கடி காரணமாக, குடும்பத்தின் இளைய குழந்தைகள்கூட கடினமான சூழலில் வாழ வேண்டியுள்ளது.

இந்தக் குடும்பத்தின் நான்கு பெண்களும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கர்ப்பம், பிரசவம், குழந்தை வளர்ப்பு ஆகிய பொறுப்புகளைச் சுமந்துள்ளனர். முகமது சாதிக்கின் கூற்றுப்படி, அவரது நான்கு மனைவிகளுக்கும் இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது அவர்களுக்கு 13 முதல் 16 வயதுக்குள் இருந்தது.

தனது குழந்தைகளின் பெயர்கள்கூட சில நேரங்களில் நினைவில் இருப்பதில்லை என்று முகமது சாதிக் சிரித்துக்கொண்டே கூறுகிறார். ஒவ்வொரு இரவும் உறங்கச் செல்லும் முன், அனைவரும் வீட்டில் உள்ளனரா என்பதை உறுதிப்படுத்துவதற்காக குழந்தைகளை எண்ணிப் பார்ப்பதாகவும் அவர் கூறுகிறார்.

வீட்டில் திருவிழா போன்ற சூழல்

சிறு குழந்தைகள் தன்னைச் சுற்றி ஒன்றுகூடும்போது, தனது வீடு சத்தம், சிரிப்பு, கலகலப்பு என நிரம்பிவிடும் என்றும், அங்கு திருமண விழா நடைபெறுவதைப் போன்ற உணர்வு ஏற்படும் என்றும் முகமது சாதிக் கூறுகிறார்.

இருப்பினும், இந்தக் குடும்பத்தின் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் கடுமையான பொருளாதாரப் பிரச்னைகளும் நிறைந்துள்ளன. குழந்தைகளில் சிலர் இரவில் பசியுடனேயே தூங்க வேண்டிய அளவு சில நேரங்களில் வறுமை மோசமடைகிறது. குடும்பத்தில் தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகள் மட்டுமே உணவு சமைக்கப்படுகிறது. வீட்டில் உள்ள இரண்டு பெண்கள் சமைக்கும் பொறுப்பைக் கவனித்துக்கொள்கிறார்கள்.

57 வயதான முகமது சாதிக் கார் விற்பனை நிலையம் ஒன்றில் வேலை செய்கிறார். அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்குப் பின்னால், 'முகமது நபியைப் பின்பற்றும் இஸ்லாமிய சமூகத்தைப் பெருக்க வேண்டும்' என்ற நோக்கமே இருந்ததாக அவர் கூறுகிறார்.

தனது மகள் ஒருவரின் திருமணம் தொடர்பான சுவாரசியமான சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், "திருமணத்தை நடத்திவைத்த மௌலவி என்னிடம் என் மகளின் பெயரைக் கேட்டார். நான் சிறிது நேரம் யோசித்துவிட்டு, தவறுதலாக மற்றொரு மகளின் பெயரைக் கூறிவிட்டேன். இதைக் கேட்ட மௌலவி சிரித்துக்கொண்டே, 'வீட்டுக்குச் சென்று மீண்டும் விசாரித்துப் பாருங்கள். தவறான பெயரைக் கூறிவிட்டீர்களா என்று உறுதிசெய்துகொள்ளுங்கள்' என்றார்" என்று கூறுகிறார்.

பெயர்களைக்கூட நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை

முகமது சாதிக்கின் வீட்டில் பல அறைகள் உள்ளன. ஆனால், எந்த அறைக்கும் கதவுகள் இல்லை. கதவுகள் இருக்க வேண்டிய இடங்களில் திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அறைகள் அனைத்தும் வலதுபுறத்தில் அமைந்துள்ளன.
படக்குறிப்பு, முகமது சாதிக்கின் வீட்டில் பல அறைகள் உள்ளன. ஆனால், எந்த அறைக்கும் கதவுகள் இல்லை. கதவுகள் இருக்க வேண்டிய இடங்களில் திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அறைகள் அனைத்தும் வலதுபுறத்தில் அமைந்துள்ளன.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இவ்வளவு அதிகமான குழந்தைகள் இருப்பதால், அவர்கள் அனைவரின் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்வது பெரும்பாலும் கடினமாக இருப்பதாக முகமது சாதிக் கூறுகிறார். அதனால், பெரும்பாலான குழந்தைகளை 'மகனே' என்றே அழைப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், "ஒரு நாள் இரவு நாங்கள் அனைவரும் உணவு விரிப்பைச் சுற்றி அமர்ந்திருந்தோம். குழந்தைகளை எண்ணத் தொடங்கியபோது, ஒருவர் குறைவாக இருந்தார். வீட்டில் இல்லாத அந்தக் குழந்தை ஆணா, பெண்ணா என்பதுகூட எனக்குத் தெரியவில்லை. பின்னர் அவர்களின் தாய்மார்களிடம் கேட்டேன். அவர்களில் ஒருவர், தனது குழந்தையைப் பாட்டி வீட்டுக்கு அனுப்பியிருப்பதாகவும், அந்தக் குழந்தை அன்று இரவு அங்கேயே தங்கும் என்றும் கூறினார்" என்று தெரிவித்தார்.

முகமது சாதிக்குக்கு 20 வயதாக இருந்தபோது முதல் திருமணம் நடைபெற்றது. இளம் வயதுப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டதற்கான காரணம் குறித்து பிபிசி கேட்டபோது, ஒவ்வொரு திருமணத்துக்காகவும் மணமகளின் குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டிய 'துவியானா' என்ற தொகையைச் சேமிக்கப் பல ஆண்டுகள் தேவைப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இவ்வளவு பெரிய குடும்பத்தையும் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பையும் எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்டபோது, தனது மனைவிகளுக்குச் சிறு வயதிலேயே திருமணம் நடைபெற்றதாக அவர் கூறினார். குழந்தைப் பருவத்திலும் இளம்பருவத்திலும் இருந்தபோதே அவர்கள் திருமணம், கர்ப்பம், பிரசவம், குழந்தை வளர்ப்பு போன்ற பெரும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். இவை அவர்களது வாழ்க்கையின் நிரந்தர அங்கமாகிவிட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

முகமது சாதிக்கும் அவரது மனைவிகளும் தங்கள் வாழ்க்கையில் மற்றொரு பெரும் துயரத்தையும் எதிர்கொண்டுள்ளனர். பல ஆண்டுகளில் அவர்களது 14 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது எந்தவொரு பெற்றோருக்கும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

முகமது சாதிக்கின் சமையலறை. அதன் பின்புறத்தில் நீல நிற ஆடை அணிந்த பெண் ஒருவர் அமர்ந்திருக்கிறார். தரையில் வெள்ளை நிறச் சாக்குடன் பல மஞ்சள் நிற டிரம்கள், ஒரு பெரிய பாத்திரம், தேநீர்க் கெண்டி ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
படக்குறிப்பு, முகமது சாதிக்கின் சமையலறை

பொருளாதார நிலை

இளம் வயதில் திருமணம் செய்துகொள்வதும் கர்ப்பமடைவதும் தாய்மார்களுக்கும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கும் உடல்நல ஆபத்துகளை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதேபோல், அடிக்கடி கர்ப்பமடைவதால் பெண்கள் மேலும் பல உடல்நலச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

கர்ப்ப காலத்திலும் பிரசவத்தின்போதும் பெண்கள் உயிரிழக்கும் விகிதம் இன்னமும் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ள நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. குறிப்பாக, மேம்பட்ட மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ள கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இந்தப் பிரச்னை அதிகமாக உள்ளது.

மறுபுறம், வறுமையும் இந்தக் குடும்பத்தின் வாழ்க்கையை ஆழமாகப் பாதிக்கிறது. குளிர்காலத்தில் குடும்பத்தினர் அறைகளிலும், கோடைக்காலத்தில் முற்றத்திலும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துகின்றனர். ஆனால், அவர்களிடம் அடிப்படை வசதிகள்கூட மிகக் குறைவாகவே உள்ளன. குளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் அதே இடத்தில்தான் துணிகளும் பாத்திரங்களும் துவைக்கப்படுகின்றன. அந்த இடமே கழிப்பறையாகவும் பயன்படுத்தப்படுகிறது.

குடும்பத்தின் அதிகரித்துவரும் செலவுகளைச் சமாளிப்பதற்காக முகமது சாதிக் மட்டுமின்றி, அவரது குழந்தைகள் பலரும் வேலை செய்கின்றனர். சில குழந்தைகள் காகிதம், பிளாஸ்டிக் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிற பொருட்களைச் சேகரிக்கின்றனர். அவற்றை எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கோ, விற்று வீட்டுச் செலவுகளுக்குப் பங்களிப்பதற்கோ அவர்கள் முயற்சி செய்கின்றனர்.

எத்தனையோ சிரமங்கள் இருந்தாலும், அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக இந்தக் குடும்பம் தொடர்ந்து போராடி வருகிறது. இங்கு ஒவ்வொரு நாளும் உணவு, இருப்பிடம், குழந்தைகளின் பராமரிப்பு ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்வது புதிய சவாலாக உள்ளது.

முகமது சாதிக்கின் விருப்பங்கள்

குளிரான இரவுகளில் சில நேரங்களில் ஆறு அல்லது ஏழு பேர் ஒரே மெல்லிய போர்வையைப் போர்த்திக்கொண்டு உறங்குகின்றனர். சாதாரண மெத்தைகளைத் தவிர, இந்தக் குடும்பத்தினருக்கு உறங்குவதற்கென வேறு சிறப்பு வசதிகள் எதுவும் இல்லை. வீட்டின் அறைகளில் ஜன்னல்களோ உறுதியான கதவுகளோ கிடையாது. நுழைவாயில்களில் மெல்லிய திரைச்சீலைகள் மட்டுமே தொங்கவிடப்பட்டுள்ளன.

எரிபொருளுக்காகக் காகிதங்களையும் கிடைக்கும் பிற பொருட்களையும் எரித்து இந்தக் குடும்பத்தினர் அடுப்பை மூட்டுகின்றனர். இத்தகைய சிரமங்களுக்கு இடையிலும், தன்னால் படிக்க முடியாமல் போனாலும், தனது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு முழுமையாக முயற்சி செய்துள்ளதாக முகமது சாதிக் கூறுகிறார். இருப்பினும், குறைந்த வருமானத்தால் குழந்தைகளின் கல்விச் செலவுகளைச் சமாளிப்பது அவருக்கு எளிதாக இல்லை.

முகமது சாதிக் ஒரு கார் விற்பனை நிலையத்தில் பணியாற்றுகிறார். ஒரு கார் விற்பனையானால் தனக்கு 1,000 ஆப்கானி மட்டுமே 'கமிஷனாக' கிடைக்கும் என்கிறார்.

இருப்பினும், இவ்வளவு பெரிய குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்ய அவரது வருமானம் போதுமானதாக இல்லை. எனவே, தனது குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்வதற்காக அரசு, உதவி அமைப்புகள் மற்றும் பொருளாதார வசதி படைத்தவர்களிடம் முகமது சாதிக் உதவி கோருகிறார்.

தனது விருப்பங்களைப் பற்றிப் பேசும்போது, வாழ்க்கையில் தனக்கு இரண்டு முக்கிய ஆசைகள் மட்டுமே இருப்பதாக முகமது சாதிக் கூறுகிறார்.

"எனது முதல் ஆசை, என் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும்; மதத்தையும் உலகத்தையும் பற்றிய அறிவைப் பெற வேண்டும். இரண்டாவது ஆசை, அவர்கள் ஒருபோதும் பசியுடன் தூங்கக்கூடாது; அவர்களின் வயிறு நிறைந்திருக்க வேண்டும் என்பதுதான்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு