'இரான் மீது கடற்படை முற்றுகை' - டிரம்பின் மிரட்டலால் அதிகரிக்கும் ஆபத்து

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை முற்றுகை, டிரம்ப் மிரட்டல்

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, ஏப்ரல் 12 அன்று, தெஹ்ரானின் புரட்சி சதுக்கத்தில், 'ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டே உள்ளது' என்று எழுதப்பட்டிருந்த ஒரு பிரமாண்டமான விளம்பரப் பலகைக்கு முன்னால், ஒரு பெண் இரானின் தேசியக் கொடியை அசைக்கிறார்.
    • எழுதியவர், ஆண்டனி ஜூர்ச்சர்
    • பதவி, வட அமெரிக்க செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சனிக்கிழமை, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு, இரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை முடிவு செய்ய வேண்டியிருந்தது.

அது ஞாயிற்றுக்கிழமை காலையில், அவருடைய ட்ரூத் சோசியல் பதிவுகளின் வாயிலாக வெளியானது.

அமெரிக்கா இரானின் மீது ஒரு கடற்படை முற்றுகையை நடத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். "சட்டவிரோதக் கட்டணம் செலுத்தும் எவருக்கும், ஆழ்கடலில் பாதுகாப்பான பயணம் கிடைக்காது," என்று அவர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்குப் பாதுகாப்பான வழித்தடத்தை உறுதி செய்யும் பொருட்டு, ஹோர்மூஸ் நீரிணையிலிருந்து கண்ணிவெடிகளை அகற்றும் பணியை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார். அமெரிக்க ராணுவம் "முழுமையாகத் தயார் நிலையில்" இருப்பதாகவும், "பொருத்தமான ஒரு தருணத்தில்" இரானுக்கு எதிரான தாக்குதல்களை மீண்டும் தொடங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்த போதிலும், தனது அணுசக்தி லட்சியங்களைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இரான் ஏற்பதாக தெரியவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வான்ஸின் பேச்சுவார்த்தைகள் குறித்து நன்கு அறிந்திருந்த அமெரிக்க அதிகாரி ஒருவர், அந்தக் கருத்தை ஓரளவுக்கு மறுத்தார்; அவர், ஹோர்மூஸ் நீரிணை மீதான இரானின் கட்டுப்பாடு மற்றும் ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள், லெபனான் ஹெஸ்பொலா போன்ற பிராந்திய ஆயுதக்குழுக்களுக்கு அளிக்கப்படும் ஆதரவு உள்ளிட்ட, முரண்பாடுகளின் மிக நீண்ட பட்டியலை விரிவாக எடுத்துரைத்தார்.

இரானிய நாகரிகத்தையே முடிவுக்குக் கொண்டுவருவோம் என்று கடந்த வாரம் விடுத்த அச்சுறுத்தலில் காணப்பட்ட பேரழிவு சார்ந்த ஆக்ரோஷத்தை, டிரம்பின் சமீபத்திய பதிவுகள் கொண்டிருக்கவில்லை என்ற போதிலும் அவை அமெரிக்கத் தரப்புக்குப் பல புதிய சவால்களையும் மற்றும் இடர்களையும் முன்வைக்கின்றன.

கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள், அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை இரானியத் தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடிய அதிகப்படியான ஆபத்தில் நிறுத்துமா? இரானுக்கு யார் 'கட்டணம்' (toll) செலுத்தினர் என்பதை அமெரிக்கா எவ்வாறு கண்டறியும்? இந்த முற்றுகையைப் புறக்கணிக்கும் வெளிநாட்டுக் கொடியிட்ட கப்பல்கள் மீது அமெரிக்கா பலத்தைப் பிரயோகிக்குமா? இரானிய எண்ணெயைச் சார்ந்திருக்கும் சீனா போன்ற நாடுகள் இதற்கு எவ்வாறு பதிலளிக்கும்? இரானின் முதன்மையான வருவாய் ஆதாரத்தை முடக்கும் நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கை, கச்சா எண்ணெய் விலையை இன்னும் உச்சபட்ச நிலைகளுக்கு உயர்த்துமா?

இவற்றுக்கு தெளிவான பதில்கள் இல்லை.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை முற்றுகை, டிரம்ப் மிரட்டல்

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில், இரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் அனைத்துக் கப்பல்களையும் கடற்படை முற்றுகை தடுத்து நிறுத்தும் என்று அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் அறிவித்தது, இது டிரம்பின் முந்தைய முன்மொழிவில் இடம்பெற்றிருந்த நிபந்தனைகளிலிருந்து மாறுபட்ட ஒன்றாகும்.

"நீரிணையை முற்றுகையிடுவது, இரானியர்களை அதைத் திறக்க வைக்கும் நிலைக்கு தள்ளிவிடும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை," என்று செனட் உளவுத்துறைக்கான குழுவில் உயர்நிலை ஜனநாயகக் கட்சி உறுப்பினராக உள்ள, விர்ஜீனியாவைச் சேர்ந்த செனட் உறுப்பினர் மார்க் வார்னர் ஞாயிற்றுக்கிழமை சிஎன்என்-யிடம் தெரிவித்தார்.

சிபிஎஸ்-இன் 'ஃபேஸ் தி நேஷன்' நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு வரை பிரதிநிதிகள் சபையின் உளவுத்துறை குழுவுக்குத் தலைமை வகித்த, ஒஹாயோவைச் சேர்ந்த குடியரசுக் கட்சிப் பிரதிநிதி மைக் டர்னர், ஹோர்மூஸ் பகுதியில் நிலவும் சூழலுக்குத் தீர்வு காணக் கட்டாயப்படுத்தும் ஒரு வழிமுறையாகவே இந்த முற்றுகை அமைந்துள்ளது என்று கூறினார்.

"யார் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் மட்டும் தீர்மானிக்க நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறுவதன் மூலம், அதிபர் நிச்சயமாக அனைத்து நட்பு நாடுகளையும், அனைவரையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைக்கிறார்," என்று அவர் கூறினார். "இந்த விவகாரம் கவனிக்கப்பட வேண்டும்."

கடந்த வாரம், இரானும் அமெரிக்காவும் இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கும் நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கும் ஒப்புக்கொள்வதற்கு முன்பு, டிரம்ப் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருந்தார்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை முற்றுகை, டிரம்ப் மிரட்டல்

பட மூலாதாரம், Jacquelyn Martin via Getty

படக்குறிப்பு, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்

அவர் இரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி, அந்நாட்டின் குடிமைசார் கட்டமைப்புகளுக்கு நீண்டகாலச் சேதத்தை ஏற்படுத்தக்கூடும்; இது மனிதாபிமான நெருக்கடியை மேலும் அதிகரிக்கவும், உலகப் பொருளாதாரத்தை இன்னும் அதிகமாகச் சீர்குலைக்கவும் வழிவகுக்கும்.

அல்லது, அமெரிக்கப் பொதுமக்கள் மத்தியில் எப்போதும் செல்வாக்கற்றதாகவும், நீண்டகால வெளிநாட்டு மோதல்களையும் மத்திய கிழக்குச் சிக்கல்களையும் தவிர்ப்பதாக டிரம்ப் அளித்த வாக்குறுதிகளை நம்பியிருந்த அவரது ஆதரவாளர்கள் சிலரையேகூட இப்போது சோர்வடையச் செய்யத் தொடங்கியுள்ள ஒரு போரிலிருந்து அவர் பின்வாங்கலாம்.

பெரும்பாலான அமெரிக்கர்கள் (59%), இந்தப் போர் அமெரிக்காவுக்குச் சற்று அல்லது மிகவும் மோசமாகச் சென்று கொண்டிருப்பதாக உணர்வதாக, ஒரு புதிய சிபிஎஸ் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

ஹோர்மூஸ் நீரிணையைத் திறந்த நிலையில் வைத்திருத்தல், இரானிய மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருதல் மற்றும் இரானின் அணுசக்தித் திட்டத்தை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருதல் போன்ற அமெரிக்காவின் முக்கிய நோக்கங்கள், இன்னும் நிறைவேறாமலே இருப்பதாகப் பலர் கருதுகின்றனர். இந்த இலக்குகளை அமெரிக்கா அடைவது மிக முக்கியம் என்று, இரு கட்சிகளையும் சார்ந்த பெரும்பான்மையினர் உறுதியாக உணர்கின்றனர்.

ஏறக்குறைய ஒரு வாரம் கடந்துவிட்டது; அமெரிக்கா வெற்றியடைந்துவிட்டதாக கூறினாலும், அதிபர் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழல்கள் எவ்வித மாற்றமும் அடையவில்லை.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை முற்றுகை, டிரம்ப் மிரட்டல்

பட மூலாதாரம், Reuters

ஞாயிற்றுக்கிழமை காலையில் ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய டிரம்ப், இரான் இறுதியில் அமெரிக்கா விரும்பும் "அனைத்தையும்" வழங்கும் என்று கூறினார். வரும் மாதங்களில் எண்ணெய் விலை தற்போதைய நிலையிலேயே நீடிக்கலாம் அல்லது உயரலாம் என்றாலும், அமெரிக்கப் பொருளாதாரம் உறுதியாகத் தாக்குப் பிடிக்கும் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதுகுறித்து குறைந்தபட்சம் சொல்வதானால், இதுவொரு சூதாட்டம்.

நவம்பர் மாத தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், அதிபரின் முடிவு தவறானதாக அமைந்துவிட்டால், அவரது குடியரசுக் கட்சி வாக்கெடுப்பில் பெரும் பாதிப்பை அடைய நேரிடலாம்.

சனிக்கிழமை இரவு, துணை அதிபர் வான்ஸ் பாகிஸ்தானில் இரானியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது, ​​டிரம்ப் மயாமிக்குச் சென்று, அங்கு யு.எஃப்.சி. போட்டிகளில் குத்துச்சண்டை வீரர்கள் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொள்வதைப் பார்த்தார்.

அங்கு உடனிருந்த பத்திரிகையாளர் குழுவின் உறுப்பினர்களின் கூற்றுப்படி, அது ஒரு விசித்திரமான காட்சியாக இருந்தது.

அமெரிக்க அதிபர், ரத்தம் தெறித்த ஒரு களத்தில் நடைபெற்ற வன்முறை மோதல்களைக் கண்டுகளித்ததுடன், பிரபலங்களுடன் உரையாடியும், அதே வேளையில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முழுமையாகப் பார்க்கும் வகையில், தனது வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பிற ஆலோசகர்களுடன் தீவிரமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

இத்தகைய குத்துச்சண்டை போட்டிகள் தீவிரத்தன்மை வாய்ந்ததாக இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட விதிகள் மற்றும் கால வரம்புகளைக் கொண்டுள்ளன; அவை ஒரு தெளிவான வெற்றியாளர் மற்றும் தோல்வியாளருடன் முடிவடைகின்றன.

இரான் போர் இரண்டாவது மாதமாக நீண்டுவரும் நிலையில், தற்போதைய இரண்டு வார போர் நிறுத்தம் முறிவடையும் விளிம்பில் இருப்பதாகத் தோன்றுகிறது.

இந்த மோதல் இரு தரப்புகளின் உறுதிப்பாட்டை சோதிக்கும் ஒரு களமாக உருவெடுத்துள்ளது, அதாவது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களைத் தாங்கி நிற்கும் இரானின் திறனுக்கும், இப்போர் விளைவித்துள்ள பொருளாதார மற்றும் அரசியல் வேதனையைச் தாங்கிக் கொள்ளும் டிரம்பின் பொறுமைக்கும் இடையிலான ஒரு சோதனையாக இது அமைந்துள்ளது.

இறுதியில், இந்த மோதலில் பங்கேற்ற அனைவரும் வலுவிழக்கக்கூடும்.

உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு