தமிழ்நாட்டிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் 2வது பெண் - யார் இந்த நீதிபதி மோகனா?

பட மூலாதாரம், SCI
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான வி மோகனா இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார். இவரின் நியமனம் பல்வேறு வழிகளில் முக்கியத்துவம் பெறுகிறது.
இவருடன் சேர்த்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைந்த 5 பேரின் பெயர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியிருந்தது. கோவை அரசு சட்டக் கல்லூரி பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பார்.
முக்கிய விவரங்கள்
- தமிழ்நாட்டிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வாகும் 2வது பெண் இவர்.
- சுதந்திர இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் 12வது பெண் இவர்.
- உயர் நீதிமன்ற நீதிபதியாக அல்லாமல் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வாகும் 11வது நபரும், 2வது பெண்ணும் இவரே.

பட மூலாதாரம், SCI
தமிழ்நாட்டில் இருந்து இவருக்கு முன்பாக ஆர் பானுமதி என்பவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார்.
பார் அன்ட் பென்ச் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இவருக்கு முன்னதாக இந்து மல்ஹோத்ரா என்பவர் பெண் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இவரும் முன்னாள் நீதிபதி இந்து மல்ஹோத்ராவும் வழக்கறிஞர்களாக இருந்தபோது ஒன்றாக பணியாற்றியதாக பார் அன்ட் பென்ச் செய்தி தெரிவிக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் பிவி நாகரத்னா மட்டுமே பெண் நீதிபதியாக உள்ளார். தற்போது இவரின் நியமனத்துக்குப் பிறகு உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 2 ஆக உயர்கிறது.
வழக்கறிஞர்கள் நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகலாமா?
உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கான விதிகளை இந்திய அரசமைப்பு விளக்குகிறது.
அரசமைப்பு பிரிவு 124(3)-இன் படி
- குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்திருக்க வேண்டும் அல்லது
- குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்திருக்க வேண்டும் அல்லது
- குடியரசு தலைவரின் கருத்தில் புகழ்மிக்க சட்ட நிபுணராக இருக்க வேண்டும்

பட மூலாதாரம், SCI
இவரின் பின்னணி என்ன?
கோவை அரசு சட்டக்கல்லூரியில் 1988-ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்த இவர் கோவை மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.
அதன் பின்னர் டெல்லிக்கு குடிபெயர்ந்த இவர் முன்னாள் நீதிபதி இந்து மல்ஹோத்ரா உடன் இணைந்து பணியாற்றினார்.
1996-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்று அங்கு பணியாற்றத் தொடங்கினார். உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயங்களில் இவர் வாதாடியுள்ளார்.
பாதுகாப்பு படைகளில் பெண்களுக்கு நிரந்தர பணி, மூத்த குடிமக்கள் சொத்துரிமை மற்றும் கர்நாடகா ஹிஜாப் போன்ற பல முக்கியமான வழக்குகளில் இவர் ஆஜரானதாக பார்ச் அன்ட் பெஞ்ச் செய்தி தெரிவிக்கிறது.
உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறைக்கு மாற்றாக தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை உருவாக்கும் சட்டத்தை 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியிருந்தது.
இந்தச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தேசிய நீதித்துறை நியமன ஆணையம் அரசமைப்புக்கு விரோதமானது எனக் கூறி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பாக மோகனா ஆஜரானதாக தி லீஃப்லெட் இணையதளம் தெரிவிக்கிறது. வழக்கறிஞர்களுக்கு அறைகளை ஒதுக்கும் உச்ச நீதிமன்றத்தின் விதிகளுக்கு எதிராகவும் இவர் வாதாடியதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
நீதிபதி மோகனா உடன் பிறந்தவர்கள் 8 சகோதரர்கள், 4 சகோதரிகள் என மொத்தம் 13 பேர். 13 குழந்தைகளில் 11வது குழந்தையாக பிறந்தவர் நீதிபதி மோகனா.
அவரது இளைய சகோதரியும் வழக்கறிஞருமான ராஜேஸ்வரி பிபிசி தமிழிடம் பேசுகையில், "எங்கள் குடும்பத்தில் இன்று பல வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் முதல் முதலாக சட்டத் துறைக்குள் நுழைந்தது என் சகோதரிதான். அவரைப் பின் தொடர்ந்துதான் நான் வழக்கறிஞர் ஆனேன்." என்றார்.
கோவையில் சிறிய அளவில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய அவர் இன்று உச்ச நீதிமன்ற பதவியை அலங்கரிப்பார் என எதிர்பார்க்கவில்லை என கூறும் ராஜேஸ்வரி, "ஆனால் அவருடைய கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாகத் தான் இதைப் பார்க்கிறோம். நாங்கள் கல்வி பெற வேண்டும் என்பதில் எங்கள் பெற்றோர்கள், குறிப்பாக அப்பா உறுதியாக இருந்தார். அவருடைய உந்துதலில்தான் என் அக்கா சட்டம் படித்தார்." என்றும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Friday Group Seshagiri Rao
நீதிபதி வி மோகனாவின் கணவர் பத்மநாபன் மத்திய அரசுப் பணியில் இருந்ததால் திருமணத்துக்குப் பிறகு டெல்லிக்கு குடிபெயர்ந்தார் என்கிறார் அவருடைய உறவுமுறை சகோதரியான சுபஶ்ரீ.
"கல்லூரி படித்தபோது அவரின் குடும்பம் ஈரோட்டில் இருந்ததால் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதியில் தங்கி கல்லூரி படிப்பை மேற்கொண்டார். டெல்லியில் மிக இளம் வயதிலே மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அவர் மூத்த வழக்கறிஞர் ஆனதைப் பார்ப்பதற்கு முன்பாகவே அவரின் தாய் இறந்துவிட்டார். துறை ரீதியாகவும் சரி தனிப்பட்ட முறையிலும் சரி உதவும் மனப்பான்மை கொண்டவர். அவருடைய மகன் கார்த்திக்கும் தற்போது வழக்கறிஞராக உள்ளார்." என்றார்.
பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வாதாடிய அனுபவம் கொண்ட மோகனா கேரள அரசு வழக்கறிஞராகவும் இருந்துள்ளார் என்கிறார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞரான ஶ்ரீதர்.
"1988 முதல் 1992 வரை விசாரணை நீதிமன்றங்களில் சிவில் வழக்குகளை நடத்தி வந்தார். டெல்லி சென்ற பிறகு முதலில் சிஎஸ் வைத்தியநாதன் அலுவலகத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் இந்து மல்ஹோத்ரா உடன் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து சுயாதீனமாகவும் வழக்குகளை நடத்தினார்.
சிவில் வழக்குகள் தான் அவரின் நிபுணத்துவம் என்றாலும் கிரிமினல் மற்றும் அரசமைப்பு வழக்குகளிலும் ஆஜராகி வாதாடிய அனுபவம் அவருக்கு உண்டு. தமிழ்நாட்டில் இருந்தும் பல்வேறு வழக்குகளில் வாதாடியுள்ளார். அரசுப் பணியில் இருந்தாலும் அவருடைய கணவர் பத்மநாபன் மிகவும் உதவியாக இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரும் சட்டப்படிப்பை முடித்துள்ளார்," எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































