துப்பாக்கியால் சுட்டு இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை அமெரிக்கா நேரலையில் ஒளிபரப்புவது ஏன்?

பட மூலாதாரம், Bell County Sheriff's Office/Reuters
- எழுதியவர், சரீன் ஹபேஷியன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் மேஜர் ஒருவருக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைப் பொதுமக்கள் நேரலையில் பார்க்க முடியும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
2009-ஆம் ஆண்டு ஃபோர்ட் ஹூட் ராணுவத் தளத்தில் ஆயுதமின்றி இருந்த 13 அமெரிக்க ராணுவ வீரர்களைச் சுட்டுக் கொன்ற நிடால் ஹசனுக்கு நிறைவேற்றப்படும் மரண தண்டனை நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் நடைபெறும் முதல் பொதுமக்கள் பார்வையிடக்கூடிய மரண தண்டனை நிறைவேற்றமாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தத் தண்டனையை நேரலையில் ஒளிபரப்பும் முடிவு, "நவீன காலத்தில் இதற்கு முன்னெப்போதும் இல்லாத ஒன்று" என்றும், "சட்டரீதியாகத் தெளிவற்ற சூழலில் எடுக்கப்பட்ட முடிவு" என்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்காகப் பணியாற்றும் வழக்கறிஞர் ஜான் மில்ஸ் தெரிவித்துள்ளார்.
"மக்கள் இதைப் பார்க்க முடியும் என்பதை உறுதி செய்வோம்" என்று ஹெக்செத் கூறினார்.
"இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், ஹசானுக்கு மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அறிவித்தது. இது 60 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு அமெரிக்க ராணுவத்தில் மேற்கொள்ளப்படும் முதல் மரண தண்டனை நிறைவேற்றமாக இருக்கும்.

பட மூலாதாரம், AFP via Getty Images
எந்தெந்த நாடுகளில் நடந்துள்ளது?
பழமைவாதக் கருத்துகளைக் கொண்ட தொலைக்காட்சி ஊடகமான ரியல் அமெரிக்காஸ் வாய்ஸ்க்கு அளித்த பேட்டியில், ''ஹசனுக்கு ராணுவ வீரர்களைக் கொண்ட துப்பாக்கிச் சூடும் படையால் மரண தண்டனை நிறைவேற்றப்படும்'' என்று ஹெக்செத் தெரிவித்தார்.
ஹசன் இறுதியாக ஏதேனும் கோரிக்கைகளை வைத்துள்ளாரா அல்லது அதிபர் டொனால்ட் டிரம்ப்பைத் தொடர்புகொண்டுள்ளாரா என்று கேட்கப்பட்டபோது, "அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. டிசம்பர் 3-ஆம் தேதி அவரைப் பார்ப்போம்" என்று ஹெக்செத் கூறினார்.
அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல் திங்களன்று, பாதுகாப்புத் துறைச் செயலர் இந்தப் பரிந்துரையை முன்வைத்ததாகவும், அதற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
பொதுமக்கள் நேரலையில் பார்க்கும் வகையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை டிரம்ப் ஆதரிக்கிறாரா என்பது குறித்து கருத்துத் தெரிவிக்குமாறு வெள்ளை மாளிகையை பிபிசி தொடர்புகொண்டுள்ளது.
கடந்த ஆண்டு 17 நாடுகளில் 2,700-க்கும் மேற்பட்ட மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அவற்றில் இரண்டு நாடுகள் மட்டுமே பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனைகளை நிறைவேற்றின.
அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் தகவலின்படி, 2025-ஆம் ஆண்டு பொதுமக்கள் முன்னிலையில் இரானில் 11 மரண தண்டனைகளும், ஆப்கானிஸ்தானில் ஆறு மரண தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
டிசம்பர் 3-ஆம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் ஹூட் ராணுவத் தளத்தில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவச் செயலர் செவ்வாயன்று தெரிவித்தார். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததற்குப் பிறகு, துப்பாக்கிச் சூடும் படையின் மூலம் அமெரிக்க ராணுவம் நிறைவேற்றும் முதல் மரண தண்டனை இதுவாக இருக்கும்.
வர்ஜீனியாவைச் சேர்ந்த அமெரிக்க ராணுவ மனநல மருத்துவரான ஹசன், அமெரிக்க ராணுவத் தளத்தில் போர்ச் சூழலில் அல்லாமல் நடத்தப்பட்ட மிகக் கொடிய தாக்குதலில் துப்பாக்கியால் சுட்டது தான்தான் என்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
2009 நவம்பர் 5-ஆம் தேதி நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடு, ராணுவப் பணிக்குச் செல்லவிருந்த வீரர்கள் மருத்துவப் பரிசோதனைகளுக்காகவும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதற்காகவும் காத்திருந்த, ஒரு கூட்டம் நிறைந்த மருத்துவக் கட்டடத்தில் நடைபெற்றது.
நீதிமன்றத்தில் ஹசன், "ஏதேனும் தவறுகள் நடந்திருந்தால் அதற்காக" மன்னிப்புக் கோரினார். 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவ நீதிமன்ற விசாரணையின்போது, ஆப்கானிஸ்தானில் முஸ்லிம்களையும் தாலிபனையும் பாதுகாப்பதாகத் தான் நம்பியதாக அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
நடைமுறை என்ன?
அமெரிக்க ராணுவச் சட்டத்தின்படி, ராணுவ நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற அதிபரின் ஒப்புதல் தேவை. மேலும், மேல்முறையீட்டு விசாரணை மூலம் நீதிமன்றம் அந்த வழக்கை மீண்டும் பரிசீலிக்க வேண்டும். தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பு, அது சட்டப்பூர்வமானதா என்பது குறித்த இறுதி முடிவும் எடுக்கப்பட வேண்டும்.
ஹசனுக்கான மேல்முறையீட்டு நடைமுறைகள் இன்னும் முடிவடையவில்லை என்று வழக்கறிஞர் மில்ஸ் தெரிவித்தார். தனது தண்டனைத் தீர்ப்பையும் தண்டனையையும் எதிர்த்து அவர் கூட்டாட்சி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அவ்வாறு செய்தால், மரண தண்டனை நிறைவேற்றுவது ஒத்திவைக்கப்படலாம்.
இதனால், திட்டமிட்டபடி மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தமக்கு ஆச்சரியத்தை அளிக்கும் என்று மில்ஸ் கூறினார்.
"துப்பாக்கிச் சூடும் படையின் மூலம் மரண தண்டனையை நிறைவேற்றி, அதை நேரலையில் ஒளிபரப்ப முயல்வது, டிரம்ப் நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் செயலாகவே தெரிகிறது. இது நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்பும் குறைவு. மேலும் அது உண்மையான நீதி கிடைத்ததுபோல எந்த உணர்வையும் ஏற்படுத்தாது," என்று அவர் கூறினார்.
யேல் சட்டப் பள்ளியின் வருகைதரு விரிவுரையாளரான யூஜின் ஆர். ஃபிடெல், பிபிசியிடம் இது "மிகவும் வருத்தமளிக்கும் முடிவு" என்று தெரிவித்தார்.
"ஒரு மரண தண்டனையை நேரலையில் ஒளிபரப்புவது இடைக்காலத்தில் இருந்த நடைமுறையைப் போன்றது. ஒரு சமூகமாக நாம் அந்தக் காலத்தைக் கடந்து வந்துவிட்டோம் என்று நினைத்தேன். ஆனால் இன்று வரை அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்," என்று அவர் கூறினார்.
ஹசன் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், "இந்த வழக்கு விசாரணைகள் பல ஆண்டுகள் நீடிக்கும்" என்றும், அவை "அதிபர் டிரம்ப்பின் பதவிக்காலத்தைவிட நீண்ட காலம் நீடிக்கும்" என்றும் ஃபிடெல் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
'இதுவரை நேரலையில் ஒளிபரப்பப்பட்டதில்லை'
சில அமெரிக்க மாகாணங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. பல மாகாணங்களில், மரண தண்டனை நிறைவேற்றப்படும்போது செய்தியாளர்கள் அங்கு இருக்க வேண்டும். மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரும் தன்னைப் பார்வையிட சிலரை அழைக்கலாம். மற்ற சில மாகாணங்களில், பொதுமக்களும் சாட்சிகளாக இருக்க விருப்பம் தெரிவிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால், "மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவரை நேரலையில் ஒளிபரப்பப்பட்டதில்லை" என்கிறார் அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றும் முறைகள் குறித்து ஆய்வு செய்துள்ள ஃபோர்ட்ஹாம் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் டெபோரா டென்னோ.
"மரண தண்டனைக்கான ஆதரவு குறைந்து வந்தாலும், நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோர் அதை ஆதரிக்கின்றனர். 'மரண தண்டனை வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அது இந்த நாட்டில் எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது என்பதை உங்களுக்குக் காட்டுகிறோம்' என்று வாதிடலாம். அப்போது, பலரும் கவனிக்கத் தவறுகின்ற விஷயங்கள் உட்பட, உண்மையில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டியிருக்கும்," என்கிறார் டென்னோ.
நேரலையில் ஒளிபரப்புவது தொடர்பாக வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா, ஒளிபரப்பை வழங்கும் இணையத் தளத்தின் விதிமுறைகள் மீறப்படுமா என்பது உள்ளிட்ட முக்கியமான அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
இந்த நேரலை எங்கு ஒளிபரப்பப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பெரும்பாலான முக்கிய சமூக ஊடகத் தளங்கள், வெளிப்படையான வன்முறைக் காட்சிகளை நேரலையில் ஒளிபரப்புவதற்குத் தடை விதித்துள்ளன அல்லது கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
நேரலைக் காணொளிகளை ஒளிபரப்பும் வசதியைக் கொண்ட முக்கியமான, பரவலாகப் பயன்படுத்தப்படும் இணையத் தளங்களான மெட்டா, யூடியூப், டிக்டாக், எக்ஸ் ஆகியவை வன்முறைக் காட்சிகள் மற்றும் காணொளிகளை மட்டுமின்றி, ஒருவர் உயிரிழப்பதைக் காட்டும் காட்சிகளையும் தடை செய்துள்ளன.
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், த்ரெட்ஸ் ஆகியவற்றின் நிறுவனமான மெட்டா, மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை நேரலையில் ஒளிபரப்புவதற்குத் தெளிவாகத் தடை விதித்துள்ளது.
டிக்டாக்கிலும் இதேபோன்ற முழுமையான தடை உள்ளது. அதன் கொள்கையில், "மிகவும் கொடூரமான, வன்முறையான அல்லது மனதைப் பாதிக்கக்கூடிய உள்ளடக்கங்களை நாங்கள் அனுமதிப்பதில்லை. குறிப்பாக, அவை பார்வையாளர்களுக்கு உணர்வுபூர்வமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தால் அனுமதிக்க மாட்டோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு உள்ளடக்கக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள எக்ஸ் தளத்தின் கொள்கையின்படி, ஒருவர் உயிரிழப்பதைக் காட்டும் உள்ளடக்கம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி கோரிக்கை விடுத்தால், அந்த உள்ளடக்கம் நீக்கப்படும்.
இது குறித்து கருத்துத் தெரிவிக்குமாறு பிபிசி இந்த நிறுவனங்களைத் தொடர்புகொண்டுள்ளது.
டிரம்ப்புக்குச் சொந்தமான சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியலில், பயனர்கள் நேரலைக் காணொளிகளை ஒளிபரப்பும் வசதி இல்லை.

பட மூலாதாரம், Getty Images
அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் இரான், செளதி அரேபியா, ஏமன், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
டிரம்ப் பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியதில்லை. ஆனால், அவர் நீண்டகாலமாக மரண தண்டனையை ஆதரித்து வருகிறார்.
உதாரணமாக, 1989-ஆம் ஆண்டு தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் பெரிய விளம்பரங்களை வெளியிட்ட அவர், சென்ட்ரல் பார்க் ஃபைவ் என அழைக்கப்பட்ட ஐந்து பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று கோரினார். அவர்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்பட்டிருந்தனர். பின்னர், அவர்கள் அந்தக் குற்றங்களைச் செய்யவில்லை என்பது நிரூபிக்கப்பட்டு, குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டனர்.
இரானில் பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை டிரம்ப் முன்பு கண்டித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பும், அந்நாட்டு அரசு போராட்டக்காரர்களைக் கொல்லக்கூடும் என்பதை ராணுவத் தலையீட்டுக்கான சாத்தியமான காரணமாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
டிரம்ப்பின் முதல் அதிபர் பதவிக்காலத்தின் இறுதி ஆண்டு வரை, அமெரிக்க அரசு 17 ஆண்டுகளாக யாருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றவில்லை. ஆனால், அந்த இறுதி ஆண்டில் குறுகிய காலத்திற்குள் 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் மீண்டும் அதிபர் பதவியேற்றதும், ஜோ பைடன் அரசு மரண தண்டனைகளுக்கு விதித்திருந்த தடையை டிரம்ப் விரைவாக நீக்கினார். மேலும், மரண தண்டனையை "மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரவும்", "பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்" நோக்கமாகக் கொண்ட நிர்வாக உத்தரவு ஒன்றிலும் கையெழுத்திட்டார்.
அமெரிக்காவில் கடைசியாக ராணுவ மரண தண்டனை 1961-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 11 வயது ஆஸ்திரியச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட அமெரிக்க ராணுவ வீரருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அப்போதைய அதிபர் ட்வைட் டி. ஐசன்ஹோவர் இந்தத் தண்டனைக்கு ஒப்புதல் அளித்திருந்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர், அவருக்குப் பிறகு அதிபரான ஜான் எஃப். கென்னடியிடம் கருணை காட்டுமாறு கோரியபோதும் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
துப்பாக்கிச் சூடும் படையின் மூலம் அமெரிக்க ராணுவத்தில் கடைசியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது 1945-ஆம் ஆண்டு ஜனவரி மாதம். இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில், ராணுவத்திலிருந்து தப்பியோடிய இளம் வீரரான எடி ஸ்லோவிக் அப்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
குவாசி கியாம்ஃபி அசியேடு கூடுதல் தகவல்களை வழங்கினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































