வங்கதேசத்தை சேர்ந்த இருவருக்கு செளதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றம் - விடை தெரியாத முக்கியக் கேள்விகள்

பட மூலாதாரம், Fayez Nureldine / AFP via Getty Images
- எழுதியவர், தெற்காசியப் பிராந்திய இதழியல் பிரிவு மற்றும் பிபிசி பங்ளா
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
கடந்த வாரம் செளதி அரேபியாவில் வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மெக்காவில் உள்ள ஒரு மசூதியில் ஓர் ஆணும் பெண்ணும் "தகாத" அல்லது "ஒழுக்கக்கேடான" செயலில் ஈடுபட்டதாக செளதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்தச் செயல் என்ன என்பதை அவர்கள் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து தங்களுக்கு முன்கூட்டியே எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று வங்கதேச அதிகாரிகள் கூறுகின்றனர்.
செளதி அரேபியாவில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான வங்கதேசத்தவர்கள் வசித்தும் பணியாற்றியும் வருவதால், இந்தச் செய்தி வங்கதேசத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு ஒரு வாரம் கடந்துவிட்டபோதிலும், பல முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
அவர்கள் மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன?
மசூதியின் புனிதத்தன்மையை இரு வங்கதேசத்தவரும் மீறியதாகவும், இஸ்லாமியச் சட்டத்தின் ஒரு பிரிவான தஸீர் அடிப்படையில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் செளதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தஸீர் என்பது குற்றத்துக்கான தண்டனையை நீதிபதிகள் தீர்மானிக்க அனுமதிக்கும் இஸ்லாமியச் சட்டப் பிரிவாகும்.
குற்றத்தின் தீவிரத்தையும், புனிதத் தலத்தில் அந்தச் சம்பவம் நிகழ்ந்ததையும் கருத்தில்கொண்டு தண்டனை வழங்கப்பட்டதாக செளதி அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், வழக்கில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள், நீதிமன்ற விசாரணை நடைமுறைகள் அல்லது மேல்முறையீட்டு வழிமுறைகள் குறித்து எந்தத் தகவலையும் அவர்கள் பொதுவெளியில் வெளியிடவில்லை.
இருவருக்கும் தங்களைத் தற்காத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டதா என்பது உள்ளிட்ட நீதிமன்ற நடைமுறைகள் குறித்த விவரங்களை வங்கதேசம் செளதி அரேபியாவிடம் கோரியுள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images
அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படவிருந்தது வங்கதேசத்துக்குத் தெரியுமா?
செளதி அரேபியாவில் உள்ள வங்கதேசத் தூதரகப் பணிகளின் அதிகாரிகள், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைப் பற்றிய தகவல்களைச் செளதி ஊடகச் செய்திகளின் மூலமாகவே அறிந்ததாக பிபிசி பங்களாவிடம் தெரிவித்துள்ளனர்.
இருவரும் 2023-ஆம் ஆண்டு முதல் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது என்று வங்கதேச வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஷமா ஒபைத் தெரிவித்துள்ளார்.
செளதி அதிகாரிகள் அவ்வப்போது பகிர்ந்துகொள்ளும் கைதிகளின் பட்டியல்களில் இருவரது பெயர்களும் இடம்பெற்றிருந்ததாக வங்கதேசம் கூறுகிறது. ஆனால், அந்தப் பட்டியல்களில் அவர்களில் யாருக்காவது மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்பதற்கான எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்புகூட, வங்கதேசத்தைச் சேர்ந்த அந்த ஆண் சிறையிலிருந்து தனது உறவினர்களுடன் பேசியதாகக் குடும்ப உறுப்பினர் ஒருவர் பிபிசி பங்களாவிடம் கூறியுள்ளார். ஆனால், தனக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பது குறித்து அவர் எந்த குறிப்பையும் வெளிப்படுத்தவில்லை என்றும் அந்த உறவினர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Andrew Aitchison via Getty Images
மரண தண்டனை குறித்து வங்கதேசத்துக்குத் தகவல் தெரிவித்திருக்க வேண்டுமா?
தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா உடன்படிக்கையின்படி, வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டால், தனது நாட்டுத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளும் உரிமை இருப்பதை அவருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அந்த நபர் தனது நாட்டுத் தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்குமாறு கோரினால், அதிகாரிகள் தாமதமின்றி அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
ஆனால், மற்றொரு நாட்டின் குடிமகன் தொடர்பான குற்றவியல் வழக்கின் ஒவ்வொரு கட்டத்தையும் அந்த நாட்டின் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று இந்த உடன்படிக்கை அரசுகளை கட்டாயப்படுத்தவில்லை.
குற்றவியல் நடவடிக்கைகள் பொதுவாக அந்தந்த நாட்டின் உள்நாட்டுச் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டவை என்றும், ஒரு வழக்கின் ஒவ்வொரு கட்டத்தையும் மற்றொரு நாட்டு அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் செளதி அதிகாரிகளுக்கு இல்லை என்றும் வங்கதேசத்தின் முன்னாள் தூதர் எம். ஹுமாயூன் கபீர் பிபிசி பங்களாவிடம் தெரிவித்துள்ளார்.
கைது, வழக்கு விசாரணை அல்லது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து தங்கள் தூதரகத்துக்கும் துணைத் தூதரகத்துக்கும் எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை என்று வங்கதேசம் கூறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான சட்ட நடைமுறைகள் மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்து விளக்கம் அளிக்குமாறு செளதி அரேபியாவிடம் அது கோரியுள்ளது.
வங்கதேசத்தின் கோரிக்கைகளுக்கு செளதி அரேபியா இதுவரை பொதுவெளியில் பதிலளிக்கவில்லை.

வேறு ஏதேனும் செய்திருக்க முடியுமா?
வெளிநாடுகளில் வசிக்கும் வங்கதேசக் குடிமக்கள் அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள். இருப்பினும், தூதரகங்கள் அவர்களுக்குத் தூதரக உதவிகளை வழங்கவும், உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து தகவல்களைப் பெறவும், தங்கள் குடிமக்கள் தொடர்பான வழக்குகளைக் கண்காணிக்கவும் முடியும்.
சில வழக்குகளில், வெளிநாடுகளில் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தங்கள் குடிமக்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு அரசுகள் கோரிக்கை விடுக்கலாம்.
வங்கதேசத்தில், இலங்கை நாட்டவரான அனோஜன் சிவராசா தொடர்பான அண்மைய செளதி வழக்கு இதற்கு ஓர் உதாரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஃபேஸ்புக்கில் இஸ்லாமிய இறைநிந்தனையாகக் கருதப்பட்ட கருத்தைப் பதிவிட்டதற்காக சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இலங்கை அதிகாரிகள் அவருக்காகத் தூதரக மற்றும் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டனர்.
பின்னர், செளதி அரேபிய உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை ரத்து செய்ததாக இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
எனினும், அந்த வழக்கின் சூழல் தற்போதைய வழக்கிலிருந்து வேறுபட்டது. இங்கும் அதேபோன்ற முடிவு சாத்தியமாக இருந்திருக்கும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
ஆனால், இந்தச் சம்பவம் வங்கதேசத்தில் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது: மரண தண்டனையைத் தவிர்ப்பதற்கான அல்லது மன்னிப்பைப் பெறுவதற்கான வழிகள் ஏதேனும் இருந்தனவா?

பட மூலாதாரம், Fayez Nureldine / AFP via Getty Images
அடுத்து என்ன நடக்கும்?
தீர்ப்பின் நகலையும் அதிகாரிகளிடமிருந்து கூடுதல் விவரங்களையும் பெறுவதற்காக வங்கதேச அரசு இன்னும் காத்திருப்பதாக ஷமா ஒபைத் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு இந்த வழக்கு குறித்து வங்கதேசத்துக்கு ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், இரு வங்கதேசத்தவரும் நீதிமன்றத்தில் தங்களைத் தற்காத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டதா என்றும் செளதி அரேபியாவிடம் வங்கதேசம் கேட்டுள்ளது.
இறந்தவர்களின் உடல்களைத் தாய்நாட்டுக்குக் கொண்டுவருவதும் மற்றொரு முக்கியப் பிரச்னையாக உள்ளது. இருவரின் உடல்களையும் வங்கதேசத்துக்குத் திருப்பி அனுப்புமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அது எப்போது, எவ்வாறு நடைபெறும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந்த வழக்கு குறித்து கூடுதல் தகவல்கள் கிடைத்த பிறகு, செளதி அரேபியாவுக்கு வங்கதேசம் எவ்வாறு பதிலளிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































